thirumavalan 350சட்டமன்றத்தில் திருமாவளவன்

ஆசிரியர் : தொல். திருமாவளவன்

விலை : ரூ. 200/-

வெளியீடு : கரிசல் பதிப்பகம்

ஆர்.62, 2ஆவது நிழற்சாலை.

த.வீ.வ.வா.குடியிருப்பு

வேளச்சேரி, சென்னை - 42

தொ.பேசி : 044 - 2245 1444

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பேச உரிய வாய்ப்புகளை அளித்தும், அவர்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பளித்தும், பேரவையின் மரபு கெடாமல், கண்ணியம் காத்து வழிநடத்தியவர்கள் முன்னாள் முதல்வர்கள் பெருந்தலைவர், காமராசர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்கள்.

விவாதங்கள் சூடேறும்போது, விவாதப் பொருள் திசை திரும்பி விடாமல் நகைச்சுவைப் பேச்சாலும், இனிமையான குறுக்கீட்டுக் கேள்வி அல்லது பதில்களாலும் பேரவையைக் கலகலப்பூட்டிய அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி, டி.என்.அனந்த நாயகி, பி.ஜி.கருத்திருமன், வினாயகம் போன்றவர்களின் அருமையான செயல்பாடுகளுக்குச் சொந்தமான இடம் தமிழக சட்டப்பேரவை - இது அன்று!

110ஆம் விதியின் கீழ் அறிக்கை வாசிக்கப்படும். அவ்வப்பொழுது மேசைகளைத் தட்டவேண்டும். கேள்வி கேட்க முடியாது. விவாதிக்கக் கூடாது - இது இன்று.

இங்கேதான் சட்டமன்றத்தில் திருமாவளவன் என்னும் நூலிலுள்ள உரைகள், விவாதங்கள், கட்டுரைகளைப் பார்க்கிறோம்.

இது தலித் அரசியலுக்கான வரலாற்று ஆவணம். சாதனை அறிவிப்பல்ல, சட்டமன்ற உரைகள், விவாதங்கள், பதவி விலகல், கட்டுரைகள், அட்டவணைகள் என்று ஆறு நிலைகளில் அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திருமாவைப் பார்க்க முடிகிறது.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஓர் உறுப்பினர் பேசும் பேச்சைக் கன்னிப் பேச்சு என்பார்கள். நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் கன்னிப் பேச்சில் சொக்கிப் போனார் நேரு என்பது வரலாறு.

இதோ திருமாவின் கன்னிப்பேச்சு, “கண்ணதாசன் பாட்டு எழுதி, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து, டி.எம்.சவுந்திரராசன் பாடிய பாடலை, எம்.ஜி-.ஆர். பாட்டு, சிவாஜி பாட்டு என்று சொல்வது போல், நிதித்துறைச் செயலாளரால் எழுதப்பட்டு, முதல்வரால் வழங்கப்பட்டு, ஆளுநரால் படிக்கப்பட்ட உரையை, ஆளுநர் உரை என்று நாம் இந்த அவையில் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.... இந்த அறிக்கை முதல்வர் அவர்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ‘என்றே நம்பி’, முதல்வர் அவர்களை நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன்” என்று அங்கதத்தைக் கையில் எடுக்கும் திருமா&

“மக்களுக்கிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்கக் கூடிய, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்களால் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராட்டப்பட்ட பிரச்சினையான சாதியப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு, தீண்டாமை ஒழிப்புப் பற்றி எந்தக் குறிப்பும், ஆளுநர் உரையில் பதிவு செய்யப்படவில்லை என்ற கருத்தை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று ஒரு பகுத்தறிவாளராக, ஒரு சமூக நீதிப் போராளியாக தன்னை உறுதி செய்கிறார் திருமா - தன் கன்னிப்பேச்சில், சட்டமன்றத்தில்.

13.03.2002 அன்று சட்டப்பேரவையில், இராமனின் செருப்பே இந்த நாட்டை ஆளுகிறபோது, அந்தச் செருப்பைத் தைப்பவர் ஊரை ஆளக்கூடாதா என்ற கேள்வியை எழுப்புகிறார்.

முதல்வர் ஜெயலலிதா பதில் சொன்னார், “இராமரின் செருப்புகள் நாட்டை ஆண்டன என்று சொன்னார். அவை தைக்கப்பட்ட செருப்புகள் அல்ல. மரத்தால் செய்யப்பட்ட பாதுகைகள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.

“மரத்தால் செய்யப்பட்ட பாதுகைகளாக இருந்தாலும், அதை ஒரு நபர்தான் செய்திருக்க முடியும். அதைச் செய்தவன் இப்பொழுது தோலால் தைத்துக் கொண்டிருக்கிறான். அப்படிப்பட்ட கடைசி மனிதனுக்கு அதிகாரம் போய்ச் சேர வேண்டும், ஜனநாயகம் போய்ச் சேரவேண்டும்...” என்றார் திருமா.

இலங்கை அரசு பிரபாகரனைக் கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை 16.04.2002 அன்று முதல்வர் ஜெயலலிதா பேரவையில் கொண்டு வருகிறார்.

அந்தத் தனித் தீர்மானம், “ஸ்ரீலங்கா அரசினால் எல்.டி.டி.இ இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதியோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா உதவிக்கு அனுப்பி, பிரபாகரனைச் சிறைபிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசைத் தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது” என்று அமைகிறது.

இத்தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாகப் பேரவைத் தலைவர் அறிவித்தார். இத்தீர்மானத்தை ஏற்காமல், புறக்கணித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சி, பா.ம.க. உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

ஏன் இந்த வெளிநடப்பு, இப்பிரச்சினையில் அ.தி-.மு.க.வின் உண்மை முகம் என்ன என்பது குறித்து இந்தியா டுடே - தமிழ், 08.05.2002 நாளிதழின் திருமாவின் விளக்கப் பதிலை இந்நூல் கட்டுரையாகப் பதிவு செய்திருக்கிறது. ஈழப்பிரச்சினையில் என்றும் திருமா தடுமாறியதில்லை!

09.03.2002 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆளுநர் உரையில் படிப்படியாகப் போக்குவரத்துத் துறையைத் தனியார் மயமாக்குவோம் என்று அ.தி.மு.க. அரசு அறிவித்தது. இதனைப் பேரவையில் எதிர்த்தார் திருமா.

மைய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சேலம் உருக்காலையைத் தனியார் மயமாக்குவதற்கு, எதிர்க்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க. எதிர்த்தது. சேலத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பங்கு கொண்டது.

ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்துத் துறையைத் தனியார்மயமாக்க முயல்வதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் சட்டப்பேரவையில் திருமா பேசிய பேச்சின் விரிவான செய்திகள் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன. அ.தி-.மு.க.வின் இரட்டைவேட, தனியார் மயக் கொள்கை குறித்துக் கனவுகள் - கற்பனைகள் - காகிதங்கள் என்று தலைப்பிலான கட்டுரை விளக்கம் தருகிறது.

தாழ்த்தப்பட்டவர்கள் மேம்பாட்டுக்கான தனிவங்கி, பாப்பாபட்டி, கீரிப்பட்டி குறித்த பிரச்சினைகள், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கென தனி பட்ஜெட், ஈழப்பிரச்சினை, இந்து அறநிலையத் துறை, இப்படிப் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவையில் திருமாவின் பேச்சை இந்நூல் அருமையாகப் பதிவு செய்திருக்கிறது.

இவை தவிர, ஊடகங்களில் பதிவாகி வெளிவந்துள்ள கட்டுரைகளும், பேரவையின் செய்திகள் குறித்த அட்டவணைப் பின் இணைப்பும் பயன் உள்ளனவாக அமையப் பெற்றுள்ளன.

இந் நூல் விடுதலைச் சிறுத்தைகளின் ஆவணம் மட்டுமன்று, ஒடுக்கப்பட்டவர்களின் அறைகூவலும் கூட.

வாங்குங்கள், படியுங்கள், படிக்க வையுங்கள்!

Pin It