இந்திய அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளும் கொஞ்சம் சுறுசுறுப்பாகக்களத்தில் இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.யார் இந்தியாவின் அடுத்த பிரதமர், எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும், அது தனிப் பெரும்பான்மையா அல்லது கூட்ட ணியா போன்ற வினாக்களுக்கான விடை அடுத்த சில மாதங்களில் கிடைத்து விடும்.

அந்த விடை தத்தமக்குச் சாதகமாக இருக்கவேண்டும் என்று முட்டி மோதிக் கொண்டிருக்கும் கட்சிகள், காங்கிரசும், பா.ஜ.கவும்.

லஞ்சம் மலிந்து கிடக்கும் ஆட்சி, பொருளாதாரச் சீர்கேட்டைச் சரிசெய்ய முடியாத ஆட்சி, பொருள்களின் விலை யேற்றத்தைத் தடுக்க முடியாத ஆட்சி, உள் நாட்டு மற்றும் அயலுறவுக் கொள்கைகளில் தெளிவில்லாமல் தடுமாற்றத்தில் கிடக்கும் ஆட்சி, நிர்வாகத் திறன் அற்ற ஆட்சி என்பதைத் தொடர்ந்து உறுதி செய்து கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி ஆட்சியின் பலவீனங்கள், தனக்கு சாதக மான சூழலை உருவாக்கிவிட்டது என்று பா.ஜ.க. உச்சி குளிர்ந்திருந்தது.

இந்நிலையில்தான் காங்கிரசுக்கும், பா.ஜ.கவுக்கும் பேரிடியாய் உருவெடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால். நடந்து முடிந்த தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு அடுத்த இடத்தை ஆம் ஆத்மி கட்சி பெற்றது. இருந்தாலும் காங்கிரஸ் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் தில்லி முதல்வர் ஆனார்.

மோடிதான் அடுத்த பிரதமர், நாடெங்கும் மோடி அலை வீசுகிறது என்று ஒத்தூதிக் கொண்டிருந்த ஊடகங்கள் கூட, அப்போது ஆம் ஆத்மி கட்சியை - அரவிந்த் கெஜ்ரிவாலை முன்னிறுத்தின.

அரவிந்த் கெஜ்ரி வாலின் அரசியல், ஆட்சித் திறன், அதிரடி முடிவுகள் போன்றவைகளில் குழறுபடிகள் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதேசமயம் பெரும் அரசி யல் கட்சிகளுக்கு நடுவிலும் அவரின் அரசியல் அணுகுமுறைகள் மக்களை ஈர்க்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

தேர்தலின் போது, அவரால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவது அவருக்கு அரிதானதுதான். ஆனாலும் அவை குறித்துச் சர்ச்சைகள் எழும்போது அவரின் அரசியல் திசைதிருப்பல் மத்தியதர மக்களை நெருங்கிவரச் செய்கிறது-.

தில்லி மக்களுக்கு 700 லிட்டர் தண்ணீர், மின்சார கட்டணம் குறைப்பு போன்றவை குறித்து முதல்கட்ட நடவடிக்கையில் இறங்கிய கெஜ்ரிவால், அதைத் தொடர்ந்து செயல்படுத்துவது எளிதன்று என்பதை உணர்ந்திருந்த நிலை யில், திடீரென அண்மையில் ஒரு போராட் டத்தை அரங்கேற்றி, தன் ‘அரசியல் அணுகுமுறையை’க் காட்டிவிட்டார். தில்லியில் ஒரு பெண் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட பகுதியில், ஆப்பிரிக்கப் பெண்கள் போதைப் பொருள், பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும், டென்மார்க் நாட்டுப் பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது போன்ற சம்பவங்களைத் தன்னிச்சையாக விவாதிக்கப்போன தில்லி அமைச்சர்கள் சோம்நாத் பார்தி, ராக்கி பிர்லா ஆகியோரின் உத்தரவுக்கு தில்லி காவல்துறையினர் உடன்படவில்லை என்பது ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டு.

இக்குற்றச்சாட்டுக்கு உரிய சம்பவங்கள் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதுவும் கூறவில்லை. அது குறித்து உடனடி நடவடிக்கைகூட எடுக்கவில்லை.

ஆனால் தில்லி காவல்துறை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அது மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதனால் தில்லி காவல்துறை மாநில் அரசை, அமைச்சர்களை மதிப்ப தில்லை என்று கூறிய முதல்வர் காவல் துறையை மாநில அரசின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

காவல்துறை மாநில அரசின் கட்டுப் பாட்டில் வரவேண்டும் என்பது சரியானதே. ஆனால் அதற்கென்று ஒரு நடைமுறை இருக்கிறது. அதைவிட்டுவிட்டு முதல்வர் போராடலாமா என்று ஒரு சாரரும், போராடலாம் என வேறொரு சாரரும் பேசுமளவிற்குப் பிரச்சினையை உருவாக்கிவிட்டார்.

இப்பொழுது எந்த ஊடகங்கள் கெஜ்ரிவாலை பூதாகரமாகக் காட்டிப் பேசியதோ, அதே ஊடகங்கள் அவரைச் சரிவுக்குக் கொண்டு செல்லும் வேலையைத் தொடங்கிவிட்டன.

இதனால் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருப்பது பா.ஜ.க.தான். காரணம் ஆம் ஆத்மியின் வளர்ச்சியால், மோடியின் பிரதமர் கனவு தகர்ந்துவிடும் என்ற அச்சம் அக்கட்சிக்கு இருக்கிறது.

2014 நாடாமன்றத் தேர்தலில் 50 முதல் 100 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்ற ஒரு கருத்துக் கணிப்பு பா.ஜ.க.வின் கவனத்தில் இருக்கத்தானே செய்யும்.

சென்னையில் பேசிய துக்ளக் சோ, ஒருவேளை மோடி பிரதமராக வரவில்லை யானால், ஜெயலலிதாவையாவது பிரதமராக்க வேண்டும் என்று பேசிய குரலில் மோடி அலை என்ற வாய்வீச்சின் குரல் தொங்கிக்கிடந்ததைப் பார்க்க முடிந்தது.

அரவிந்த கெஜ்ரிவால் தான் முதல்வராக இருந்தாலும், தன்னை ஒரு சாமானியனாக, மக்களில் ஒருவனாக காட்டிக் கொள்ள முனைவதும், அதைப் போராட்ட வடிவமாக மாற்றுவதும் காங்கிரஸ் - பா.ஜ.க.வுக்குப் பெரும் தலைவலியாய் போய்விட்டது.

இப்படிப்பட்ட நேரத்தில் குடியரசு நாள் விழாவின் போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஜனரஞ்சக அராஜகம் அரசாட்சிக்கு மாற்றாக இருக்க முடியாது என்று தன் உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

இக்கருத்தை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் உடனடியாக வரவேற்றுக் கருத்து கூறியுள்ளார். அதாவது ஜனரஞ்சக அராஜகம் என்பது, மக்களைத் திரட்டி நடத்தும் கெஜ்ரிவாலின் போராட்டம் என்பது அவரது வரவேற்பில் இழையோடி இருக்கும் செய்தி.

அதென்ன ஜனரஞ்சக அராஜகம், ஜனரஞ்சகம் இல்லாத அராஜகம். அராஜகம் என்றால் அராஜகம்தான். கெஜ்ரிவால் நடத்தியது போராட்டம். குஜராத்தில் 2002ஆம் ஆண்டு மோடியின் பின்பலத்தால் நடந்தது அராஜகம். 1984ஆம் ஆண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு அராஜகம்.

காங்கிரஸ்கூட ஜனரஞ்சக அராஜகம் என்ற சொல்லை குடியரசுத் தலைவர் மூலம் வெளியிடச்செய்தது ஒரு வகையில் ஆம் ஆத்மியை நோக்கித்தான்.

arvind-kejriva karuchettaithamilar feb14ஆனால் கெஜ்ரிவால் வேறுவகையாகச் சிந்திப்பதாகத் தெரிகிறது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு காங்கிரசைச் சீண்டினால், அதன் விளை வால் அக்கட்சி தன் ஆதர வைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட் டால், மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தர முயன்ற ஆம் ஆத்மி ஆட்சியை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால்தான் ஆட்சி கவிழ்ப்பைக் காங்கிரஸ் செய்துவிட்டது என்ற பழியைப் போட்டு மக்களி டம் சென்று, அனுதாபத்தைப் பெறலாம் என்று கணக்குப் போடுகிறது ஆம் ஆத்மி.

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க உட்பட யாருடனும் கூட்டு இல்லை. தனித்து போட்டியிட ஆம் ஆத்மி முடிவெடுத்து அறிவித்து இருப்பது பா.ஜ.க.வை மேலும் சலனப்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

ஏனெனில் ஆம் ஆத்மியிடம் பறிகொடுக்க இருக்கும் பெரும்பான்மை வாக்குகள் பா.ஜ.கவிடம் இருந்து என்பது அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸ் வாக்குகளும் பறிபோகும் என்றாலும், பா.ஜ.க. ஆட்சி வராமல் தடுக்க வேண்டும் என்பது காங்கிரசின் உள்ளார்ந்த விருப்பம்.

நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி பெரும் வளர்ச்சி பெறவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், தென்னகத்தைத் தவிர்த்துப் பார்த்தாலும் வட மாநிலங்களில் ஆம் ஆத்மியைப் புறம் தள்ளிவிட முடியாது.

பா.ஜ.க. அல்லாத, காங்கிரஸ் அல்லாத அரசு அமையுமானால் யாரைப் பிரதமராக வருவார் என்ற ஒரு கருத்துக் கணிப்பில் 2013ஆம் ஆண்டு 1 விழுக்காடு பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால் 2013ஆம் ஆண்டில் 37 விழுக்காடு பெற்றிருக்கிறார் என்றால் பா.ஜ.க. வயிற்றில் புளி கரையாமல் வேறென்ன செய்யும்.

மோடியோ, ராகுலோ அடுத்த பிரதமர் இல்லை. அரவிந்த் கெஜ்ரிவால் அந்த இடத்திற்கு வர வாய்ப்பில்லை. அமையப் போகும் மத்திய கூட்டணி அரசுக்கு கெஜ்ரிவாலும் துணை செய்கிறார் என்பது தான் இப்போதைக்குச் சொல்ல முடியும்.

Pin It