பவுத்தம்: ஆரிய - திராவிடப் போரின் தொடக்கம் - 15

புத்தர் மீது ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டு வருகிறது.

பெண்கள் துறவு ஏற்றுப் பவுத்த சங்கத்தில் சேர்வதைப் புத்தர் ஏற்கவில்லை மறுத்து விட்டார்.எனவே அவர் பெண்களைப் புறக்ணித்தார் என்பது அந்தக் குற்றச்சாட்டு.இது சரியா, தவறா பார்ப்போம்.

கபிலவஸ்துவுக்கு மிக அண்மையில் நிக்ரோதரம என்ற இடத்தில் தன்னைச் சந்தித்த வளர்ப்புத்தாய் மகாபிரஜாபதி கவுதமி,மனைவி யசோதாவை,துறவு ஏற்று சங்கத்தில் சேர்ப்பதற்கு முதலில் மறுத்த புத்தர், பின்  எட்டு நிபந்தனைகளை விதித்து, அவர்களைச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டார்.

1. நூறு வயதுடையவராக இருந்தாலும் ஒரு பெண் துறவி, தன்னைவிட மிக மிக இளைய வயதுடைய ஆண் துறவியைக் கண்டால், உடனே எழுந்து நின்று வணங்க வேண்டும்.

2.மழைக்காலத்தில் எந்த ஒரு இடத் திலும், ஒரு ஆண் துறவி கூட இல்லை என்றால், அங்கே பெண் துறவி தங்கக் கூடாது.

3.ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை ஆண்துறவிகளிடம் பெண் துறவிகள் தரும உபதேசம் பெற வேண்டும்.

4.பெண் துறவிகள் மீது ஆண் துறவிகள் குற்றம் குறை கண்டாலோ, கேள்விப்பட் டாலோ அல்லது அப்பெண் துறவிகள் சந்தேகத்திற்கு உட்பட்டாலோ,இவைகளுக்காக அப்பெண் துறவிகள் மழைக்காலம் முடிந்து கூடுகிற முதல் சங்கக் கூட்டத்தில் அனைத்துத் துறவிகள் முன்பும் விசாரணைக்கு உட்பட வேண்டும்.

5.பெண் துறவிகள் தவறு ஏதும் செய்தால், அவர்கள் ஒரு மாத காலம், சங்கத் துறவிகள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று, பணிவிடை செய்து நல்ல பெயர் எடுக்க வேண்டும்.

6. பெண் துறவிகள் இந்த ஆறு விதிகளையும், வினய விதிகளையும் இரண்டு மாதங்கள் சரியாகக் கடைப்பிடித்து வந்தால்,பின்னரே அவர்கள் முழுமையான துறவிக ளாக ஏற்றுக்கொள்ளப் படுவார்கள்.

7. எந்தக் காரணம் கொண்டும் ஒரு பெண் துறவி ஆண் துறவியை எதிர்த்துப் பேசக்கூடாது. கடுமையாகவும் பேசக்கூடாது.

8. பெண் துறவிகள் எக்காரணம் கொண்டும் ஆண் துறவிகளிடம் பேசக் கூடாது. ஆனால் ஆண் துறவிகள் பெண் துறவிகளிடம் பேசலாம்.

இதுதான் துறவு ஏற்கும் பெண்களுக்குப் புத்தர் விதித்த எட்டு நிபந்தனைகள் என்கிறது வினயபிடகம்.

வினயபிடகம் ஒரு பவுத்த நூல். திரிபிட கத்தின் ஒரு பகுதி. அதில் கூறப்பட்டுள்ள இந்த எட்டு நிபந்தனைகள் பெண்ணுரி மையை அழிக்கும் ஆரியத்தின் அடிமைச் சாசனமாக அமைந்திருக்கிறது.

இது குறித்துக் கருத்துச் சொல்லும் உ.வே.சாமிநாதர்,“இந்த எட்டு நிபந்தனை களையும் ஆராய்ந்து பார்த்தால், பவுத்த மதத்தில் சந்நியாசத்தால் பெண்பாலார்க்கு ஸ்வதந்திரியம்(சுதந்திரம்) அதிகமாகக் கிடைத்த தென்று நினைக்க இடமில்லை” என்று கூறுகிறார்.

“சந்நியாச வழியில் இருப்பதற்கு “இயற்கையான தகுதி” பெண்பாலார்க்கு இல்லை யயன்றும்,அந்த நிலைமைக்குரிய ஸ்வதந்திரி யத்தைக் குற்றமில்லாமல் பாதுகாத்து வருவ தற்கு அவர்களால் இயலாதென்றும்,இத்தே சத்தில் தொன்று தொட்டுப் பெரியோர்கள் அபிப்பிராயம்”என்று விளக்கம் தரும் உ.வே.சாவின் குரலில் மனுஸ்மிருதி ஒன்பதாம் அத்தியாயம் ஊலாலாடுவதைக் காண முடிகிறது.

பெண்கள் துறவு ஏற்க “இயற்கையான தகுதி”இல்லை என்கிறார் உ.வே.சா.ஆனால் “நடைமுறைத் தகுதி”தான் காரணம் என்று புத்தர் ஆனந்தரிடம் சொன்னதாகக் குறிப்பு இருக்கிறது.

சூத்திரர்களும் பெண்களும் மோட்சம் அடைய முடியாது. முக்திபெற முடியாது. ஏனென்றால் அவர்கள் தீட்டானவர்கள்,தூய்மையற்றவர்கள் அதனால் கீழானவர்கள் என்பது ஆரியக் கருத்தியல்.

பிறப்பும், மாதவிடாயும் தீட்டு என்கிறது மனுஸ்மிருதி. குழந்தை பேறு பெற்ற தாய்மையின் உடலில் இருந்து இயற்கையாய் வெளியேறும் உதிரம் தீட்டு.மாதவிடாய் காலங்களில் இயற்கையாய் வெளியேறும் உதிரம் தீட்டு. இது காமத்தின் முன் அறிகுறி.

ஆகவே பெண்களிடம் இயற்கையாய் இருக்கும் இந்தத் தகுதி, நடை முறையில் இருக்கும் இந்தத் தகுதி, தீட்டுத் தகுதி - புனிதமான மோட்சம் - முக்திக்குத் தடையாகி வருகிறது என்று கூறிப் பெண்களை ஒதுக்கிவிடும் ஆரியப் பண்பாட்டுக் கருத்தத்தைத்தான் உ.வே.சா தன் பாணியில் கூறி இருக்கிறார்.

பெண்கள் துறவு ஏற்கத் தடையாய் இருக்கும் நடைமுறைத் தகுதியை ஆனந்தரிடம் சொன்ன புத்தர்,பெண்களைப் பார்க்கவே கூடாது என்றும்,பார்த்தால் பேசவே கூடாது என்றும்,பெண்கள் பேசினால் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் உபதேசம் செய்வதை மகா பரிநிர்வாண சூத்திரம் கூறுகிறது.

அங்குத்ர நிகாயம் சொல்கிறது ஆண்களை நெறிதவறச் செய்யும் கருப்புக் காமப் பாம்புகள் பெண்கள் என்று.

“தங்களது முக்தி இலக்கினை மனிதர்கள் தாங்களே தேடவேண்டும் என்று எதிர் பார்க்கப்படும் மடத்திற்குரிய நெறியில்,கற்பு நெறி தேவைகளுக்கு ஏற்ப இருப்பதற்கான அவசியத்திற்காகப் பெண்கள் மாபெரும் தடையாகப் பார்க்கப்பட்டனர்.அவர்களது பெண்மையே பிக்குகளுக்கு அபாயமாகப் பிரநிதித்துவப்படுத்தப்பட்டது. எனவே அவர்களது வருகை வரவேற்கப்படவில்லை”உமாசக்ரவர்த்தியின் இந்தப் பதிவு முழுக் குட்டையும் அவிழ்த்துவிட்டது.

இயற்கையாகப் பெண்களிடையே நிகழும் உடலியல் மாற்றங்கள்,தாய்மை,மாதவிடாய் இவை தீட்டாக்கி தூய்மையற்றதாகக் ஆக்கப்படுகிறது.அதனுடன் காமம் இணைக்கப் படுகிறது.காமத்தையும்,கற்பையும் ஆண் களுக்கு அபாயகரமாகக் காட்டிப் பெண்களை ஒதுக்குவது, தீட்டு, மோட்சத்துக்குத் தடை என்று கூறிப் பெண்களை ஒதுக்குவது, இவை பெண்ணின் மீதான ஆரியத்தின் ஒடுக்குமுறை.

இதைத்தான் புத்தரைக் கைகாட்டி,பவுத்தத்தில் கொண்டுவந்து நிறுத்துகிறது ஆரிய பவுத்தமான மகாயான பவுத்தம்.

திராவிட தேரவாத பவுத்தத்திற்கும்,மேற்சொன்ன ஆரிய சிந்தனைக்கும எந்த ஒரு தொடர்பும் இல்லை.

உ.வே.சா தன்னையும் மறந்து ஓர் உண்மையைச் சொல்லிவிட்டார்.“புத்தர் தமது செவிலித்தாயின் (கவுதமி)சொல்லை மறுத்தற்கு மனமில்லாதவராய்ப் பெண்பாலர்க்கும் சந்நியாச அதிகாரத்தைக் கொடுத் தார்.” இது தேரவாத பவுத்தச் செய்தி.

துறவி ஆனந்தர்தான்,பெண்கள் சங்கத்தில் சேர புத்தரிடம் அனுமதி பெற்றார் என்பது இங்கே பொய்த்துப் போய்விட்டது.

“எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள் நான். தெருக்கூட்டுவது என் தொழில். நான் மனிதர்களால் இழிவு படுத்தப்பட்டேன்.இகழ்ச்சியாகப் பார்க்கப்பட்டேன்.தாழ்வாக மதிக்கப்பட்டேன். பணிவுடன் நான் பலருக்கு மரியாதை காட்டி வந்தேன். ஒருநாள் பிக்குகள் புடைசூழ புத்தர் என்ற பெருந்தலைவர் மகதத்தின் முக்கிய வீதி வழியாக வருவதைக் கவனித்தேன். என் சுமைகளை உதறிவிட்டு, அவர் முன் சென்று வணங்கினேன். என்மேல் இரங்கி என்னைச் சங்கத்தில் ஏற்கும்படி வேண்டினேன்.அத்தலைவர் உடனே வா துறவியே  என்றார். நான் துறவியானேன்” துப்புரவுப் பெண் சுனிதாவின் தன்கூற்று இது.

சுமங்கல மாதா என்ற பெண் சொல்கி றார், “அடுப்பங்கரை அசிங்கத்தில் இருந்து விடுபட்ட பெண்நான். கருப்பானேன் சமையல் கூடப் புகையால். கொடுமையான என் கணவன், அவன் தங்கும் மரநிழலைவிட என்னைக் கேவலமாக நடத்தினான்.இன்று என் பழைய விருப்பு வெறுப்பு எல்லாம் தொலைந்து போய்விட்டன.ஆலமரநிழலில் (பவுத்தத்தில்) இளைப்பாறுகிறேன். அது எனக்கு நலமே செய்யும்.”

இரண்டாம் தடவையாகத் திருமணம் செய்விக்கப்பட்ட ஒரு பெண்,கணவன் குடும்பத் தாரால் விரட்டப்பட்டவள்.அவள் சொல்கிறாள்,“இரண்டாம் தடவையாக என் தந்தை என்னை மணமகள் ஆக்கினார். ஒரு மாதம்தான். குறை யின்றி, அடிமையின் தகுதியோடு பணியாற்றி சேவை செய்த போதும், திருப்பி அனுப்பப் பட்டேன் கணவன் வீட்டில் இருந்து.”விரக்தி அடைந்த அப்பெண் தற்கொலை செய்ய முயன்ற போது,அவள் பவுத்தத் துறவிகளால் தடுக்கப் பட்டுப் பவுத்தத் துறவி ஆக்கப்பட்டாள்.

திரிபிடகத்தின் ஒன்றான தேரிகாதை தருகின்ற இச்செய்திகள் பெண்களைப் புத்தர் துறவு ஏற்க மறுத்ததாகவோ வெறுத்ததாகவோ சொல்லவில்லை.

மகாபிரஜாபதி, யசோதரா, மாதங்கியின் மகள் பிராக்ரதி, ஆம்ரபாலி என பெண்கள் பலரையும் தடையின்றி பவுத்த சங்கத்தில் சேர்த்துள்ள செய்தியை மறைத்துவிட்டு,ஆரியக் கருத்துகளை நுழைத்துப் பெண்ணுரிமையை புத்தர் மறுத்தார் என்று திசை திருப்பவே, எட்டு நிபந்தனைகள்,பெண்கள் சந்நியாசம் பெறத் தகுதி அற்றவர்கள் என்றெல்லாம் கதை அளந்துள்ளது மகாயான ஆரிய பவுத்தம். காரணம்...

தீட்டுள்ள பெண்கள் முக்தி அடைய,துறவு ஏற்க முடியாது என்ற ஆரியத்தைத் திருப்பித் தாக்கிப் பெண்களைத் துறவிகளாக்கி அவர்களை உயர்த்தி,சமத்துவத்தை அவர்களுக்கு வழங்கி விட்டார் புத்தர் என்ற காழ்ப்புணர்ச்சியைத் தவிர வேறென்ன இருக்க முடியும்? ஆண் என்றும், பெண் என்றும் பவுத்தமும், புத்தரும் வேறுபடுத் திப் பார்த்ததில்லை.

முதன் முதலில் பெண்ணுரிமையைப் பேசியவர் புத்தர்;பேசியது தேரவாதத் திராவிடப் பவுத்தம்!

 - தொடரும்

Pin It