தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக ஆக்கிக்காட்டுவேன் என்று, முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது ஜெயலலிதா கூறினார். ஆனால் அவருடைய அகராதியில், ‘முதலிடம் ’ என்பதற்கு என்ன பொருள் என்பதை,தமிழகத்தின் இன்றைய வளர்ச்சிப்போக்கைப் பார்க்கும்போது தெரிகிறது.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் மொத்த உற்பத்தி 7.3விழுக்காடாக இருந்தது. இன்றைய அ.தி.மு.க.வின் ஜெயலலிதா ஆட்சியில் அது 4.6விழுக்காடாக சரிந்து போய்விட்டது.

தி.மு.க.ஆட்சியின் போது,மின்தடையை ஊதிப்பெருக்கிய ஊடகங்கள்,இன்றைய அ.தி.மு.க.ஆட்சியில் மிகக் கடுமையான மின்தடை இருந்தும்,எந்த ஊடகமும் இதைப்பற்றிப் பேசுவதே இல்லை.

மின்சாரம் பற்றாக்குறை என்றால், அதை மாற்று வழிகளில் சரிசெய்து மக்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

ஆனால் இந்த அரசு அதைப்பற்றியயல்லாம் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மின்சாரத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் மின்தடை இனிமேல் குறையும் என்று பேசிக்கொண்டு இருக்கும்போதே, இரண்டு முறை மின்தடை ஏற்பட்ட கூத்தும் நடந்தது.

மின்தடையால் தொழில்கள் நசிந்து போயின.குறிப்பாக சிறுதொழில்கள் அழிந்து போயின என்றே சொல்லாம்.விளைவு தொழிலாளர்களின் குடும்பங்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கின்றன.

சோறுடைத்த சோழநாட்டில் நெல் விளையும் வயல்கள் எல்லாம்,தண்ணீரைப் பார்க்க முடியாமல் வறண்ட நிலங்களாக மாறிவிட்டன.

விவசாயத்திற்குத் தண்ணீர் இல்லைமின்சாரமும் இல்லை.மேட்டூர் அணையின் கொள்ளளவு 120 அடி. இப்போதிருக்கும் தண்ணீரின் அளவு, 17.9 அடி மட்டுமே. ஒவ்வோர் ஆண்டும் சூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்குத் திறந்துவிடப்படும் மேட்டூர் அணை, இன்றுவரை திறக்கப்படவில்லை.

காவிரி ஆணையத்தின் தீர்ப்பு அரசிதழில் வெளிவந்ததற்கு, ஜெயலலிதாவுக்கு 26 கோடி ரூபாய் செலவில் பாராட்டுவிழா,காவிரித்தாய் பட்டத்துடன் பதாகைகள் என எல்லாம் நடந்தேறின. ஆனால் காவிரித் தண்ணீரைத்தான் காணோம்!அரசிதழில் தீர்ப்பு வெளிவந்தால் மட்டும் பயிர் விளைந்துவிடுமா,காவிரிநீர் வயல்களில் பாய வேண்டாமா‘பொன்னியின் செல்வி’யின் ஆட்சியில்,பொன்னி அரிசியைக் கண்ணால்கூடப் பார்க்க முடியவில்லை, அவ்வளவு விலை.

சட்டம் ஒழுங்கு பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அ.தி.மு.க. ஆட்சி தொடங்கிய சில நாள்களிலேயே,அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவின் வீட்டிற்குள் புகுந்த திருடன், அவருடைய மனைவியை அடித்து, நகையைப் பறிக்க முயன்றது முதல் அச்சாரம்.

அதைத் தொடர்ந்து, வங்கிகளில் கொள்ளை, வீடு புகுந்து கொள்ளை, வெளியிடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு,நகைகளுக்காகக் கொலைகள் என்று,தமிழகம் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறிக்கொண்டு வருகிறது.

அதைவிடக் கொடுமை, காவலர் குடியிருப்பிற்குள்ளும் கொள்ளை நடந்தது.நாகர்கோயில் அருகிலுள்ள வள்ளியூரில்நீதிமன்றத்திற்குள்நிலைப்பேழையை (பீரோ)உடைத்துப் பணத்தைத் திருடிச் சென்றிருக்கின்றனர்.

தருமபுரி வன்முறைக்குத் தக்க நடவடிக்கை எடுத்திருந்தால்,மரக்காணம் நடக்காமல் தடுத்திருக்கலாம்.அதையும் செய்ய இயலாமலோ,விரும்பாமலோ அமைதி காத்தார் முதல்வர் ஜெயலலிதா.

காவல்துறை ஜெயலலிதா அம்மையாருக்குச் செல்லப்பிள்ளை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.ஆனால் அந்தப் பிள்ளை,அவருடைய ஆட்சியில் எப்போதும் சவலைப்பிள்ளையாகத்தான் இருக்கிறது.இத்தனை சீரழிவுகளும் இந்த ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கும்போது, முதலிடத்திற்குக் கொண்டு செல்வேன் என்று முதல்வர் தொடர்ந்து சொல்வதுதான் நமக்குக் கொஞ்சம் அச்சத்தைத் தருகிறது.

Pin It