ஒரு பொய்யான வழக்கில், பொய்யான குற்றச்சாட்டில், பொய்யான தகவலை நீதிமன்றத்தில் கூறி கருநாடகக் காவல்துறையால்கைது செய்யப்பட்டவர் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இலக்கியத் துறையின் தலைவராகவும்,பேராசிரியராகவும் பணியாற்றிய பேராசிரியர் க.நெடுஞ்செழியன்.2002 நவம்பர் மாதத்தில் தொடங்கிய இந்த வழக்கு 12 ஆண்டுகள் நடந்தது.18 நீதியரசர்கள் வழக்கை நடத்தினர். 18ஆவதாக வந்த நீதியரசர் மாண்பமை எஸ்.எம்.பாலகிருஷ்ணா அவர்கள் குறுகிய நாள்களிலேயே வழக்கை நடத்தி,30.05.2013ஆம் நாள் மாலை ஐந்து மணி அளவில் அனைவரையும் விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.வழக்கில் விடுதலையான பேராசிரியர் க.நெடுஞ்செழியன் அவர்கள் நம் இதழுக்கு வழங்கிய செவ்வியை மகிழ்வோடு வெளியிடுகிறோம்.

நேர்காணல் : பொள்ளாச்சி மா.உமாபதி

ஐயா, இந்த வழக்கைப்பற்றிக் கூறுங்கள்.

பொய்யான இந்த வழக்கைப்பற்றி என்ன சொல்வது? தமிழ்நாட்டில் காவிரி நீர் தொடர்பான சிக்கல்கள் தோன்றும் போதெல்லாம் கருநாடகத்தில் வாழும் தமிழர்கள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள். ஈழ அகதிகள் போல், கருநாடகத் தமிழ் மக்களும் அகதிகளாகச் சொந்தமண் திரும்புவதை நாம் அறிவோம். 2002இல் அப்போதைய தமிழக முதல்வர் காவிரி நீர் பெறுதல் தொடர்பாகச் சில நடவடிக்கைகளை எடுத்தார் என்பதையும் நாம் அறிவோம்.

அப்போது கருநாடகத்தில் நடந்த நிகழ்வை,வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட தோழர்கள் சிறையில் என்னிடம் கூறியதை நான் இப்போது உங்களிடம் கூறுகிறேன்.தமிழக முதல்வர் அவர்களால் எடுக்கப்பட்ட முன் முயற்சிகளால் கருநாடகத்தில் ஒரு கலவரச் சூழல் உருவானதாம். தொலைக் காட்சியில் தமிழ்க்காட்சிகள் முடக்கப்பட்டுள்ளன. அங்கொன் றும் இங்கொன்றுமாகச் சில தாக்குதல்கள்.

அதன் விளைவாகத் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தோர்கள்,அங்குள்ள அதிகாரிகளி டம் பாதுகாப்புக் கோரியுள்ளனர்.நிறுத்தப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சிகளை மீண்டும் ஒளிபரப்பக் கேட்டுக் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் வெடிகுண் டுடன் இருந்ததாக இரு இளைஞர்கள் கைது சய்யப்பட் டுள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பலரையும் கைது செய்துள்ளனர்.

பெங்களூரில் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு நிகழ்வில் உங்களை எப்படி இணைத்தார்கள்?

அதற்கான விடையைத்தான் நான் இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன். இது பற்றி நான் சிறையில் இருந்தபோது,

இனமென்றும் உறவென்றும் சொல்லிக்கொள்ள

எவருமிலா நாட்டில்சிறை பட்ட தற்கே

முனம்செய்த பிழைதன்னைத் தேடித் தேடி

முயன்றுநான் பார்த்தாலும் விடைதான் இல்லை

என்று எழுதிய கவிதைதான் இதற்கான விடை.

உங்களை எப்படி, எங்கே கைது செய்தனர்? அந்த வழக்கில் உங்களை எப்படிச் சேர்த்தனர்?

அந்த வழக்கில் என் பெயர் இருப்பதை அறிந்ததும் அதிர்ச்சி யாகத்தான் இருந்தது. வழக்கறிஞர் அருமை நண்பர் சு.க.மணி அவர்கள் முன்பிணையலுக்குக் கூட முயற்சி செய்தார்.இதற்கிடையில் இது பற்றி அறிந்த என் கெழுதகை நண்பர் பேராசிரியர் அருணா இராசகோபால் அவர்களும்,கருநாடகத்தில் இருந்து வெளியான தலித் வாய்ஸ் என்னும் ஆங்கில இதழின் ஆசிரியரும், மனிதநேயச் சிந்தனையாளருமாகிய திரு இராசசேகர் ரெட்டி அவர்களும்,அப்போதைய கருநாடக அரசின் உள்துறை அமைச்சராக இருந்த திரு மல்லிகார்ச்சுன கார்கே அவர்களைச் சந்தித்து என்னைக் கைது செய்யக்கூடாது என்றும், காவல்துறை பொய்யான காரணங்களைக் கூறிக் கைது செய்ய முயல்வதையும் எடுத்துச் சொல்லியுள்ளனர்.

அதனைப் பொறுமையுடன் கேட்ட அமைச்சர்,பேராசிரியரைத் தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்;கருநாடகக் காவல்துறை இனி அங்கு வராது என்றும் உறுதி கூறியுள்ளார். அவரிடம் இந்த வழக்கின் கோப்பு இருந்தது வரையிலும் காவல்துறை என்னைக் கைது செய்ய முன்வரவில்லை.

உள்துறையிடமிருந்து சட்டத்துறைக்குக் கோப்பு சென்றபின்னர் என்னைக் கைது செய்தனர்.

வீட்டிற்கு எதிரேயுள்ள பூங்காவில் நீங்கள் பதுங்கி இருந்தபோது உங்களைக் கைது செய்ததாகக் கருநாடகக் காவல்துறை கூறியதே?

ஆம், முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது என்பார் களே, அது இதுதான்! காலை 7 மணிக்கு நான் நடைப்பயிற்சி முடித்து விட்டு வீடு திரும்பியபோது,வீட்டின் எதிரே நின்று கொண்டிருந்த சிலர் என்னைப் பின் தொடர்ந்து வீட்டிற்குள் வந்தனர்.பெரியார் கல்லூரியில் பி.காம்.,வகுப்பில் இடம் ஒன்று வேண்டும் என்றனர்.நான் அவர்கள் யாரென்று புரிந்து கொண்டு, ‘நீங்கள் கருநாடகக் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்தானே! கொஞ்சம் இருங்கள், உடை மாற்றிக் கொள்கிறேன்’என்றேன்.அதை அவர்கள் மறுத்துவிட்டுக் கட்டிய கைலியோடு கைது செய்து நேரே தஞ்சைக்கு இட்டுச் சென்றனர்.அங்கிருந்து நேராகப் பெங்களூருக்குக் கூட்டிச் சென்றனர்.

நீங்கள் எவ்வளவு நாள்கள் சிறையில் இருந்தீர்கள்?

நாள் கணக்கில் என்றால், 913 நாள்கள். அதாவது 2 ஆண்டுகள், 8 மாதங்கள்.

வழக்கில் எந்தத் தொடர்பும் இல்லாத நீங்கள் வழக்கிலிருந்து வெளிவரத் தொடக்கத்திலேயே எந்த முயற்சியும் எடுக்கவில்லையா?

அந்த வேதனை சொல்லிமாளாது!தொடக்கத்தில் பிணை யலுக்கு விண்ணப்பித்தோம். வழக்கறிஞர் சு.க.மணி அவர்கள்  தம் திறமையயல்லாம் காட்டி வாதிட்டார். பிணையலை மறுத்த நீதிமன்றம், விடுவிப்பு விண்ணப்பத்தைப் போடச் சொன்னது.பிணையலையே மறுத்த நீதிமன்றம் விடுவிப்பிற்கு மனுச் செய்யச் சொன்னதே பெரும் கொடுமை.அந்த முயற்சியிலும் தோல்வி.பின்னர் விடுவிப்பு விண்ணப்பத்தைச் சீராய்வு செய்ய உயர்நீதி மன்றத்தில் விண்ணப்பித்தோம். நம் வழக்கறிஞர் முன்வைத்த வாதத்திற்கு எந்த விடையும் இல்லை.குற்றம் சுமத்தப்பட்டுக் கைதான ஒருவரின் வாக்கு மூலத்தைக் கொண்டு, மற்றவரைக் கைது செய்ய முடியுமா என்றார் நம் வழக்கறிஞர்.அதன் விளைவு, தலைமறைவாக இருக்கும் ஒருவரும் வாக்குமூலம் கொடுத்துள் ளார் என்ற பொய்யான காரணத்தைக் கூறி, விடுவிப்பு விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன் பின்னர்,மிகப்புகழ் பெற்ற மூத்த வழக்கறிஞர் ஐயா நடராசன் அவர்கள் பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் பிணைய லுக்கு முயன்றார். பிணையல் மறுக்கப்பட்டது. பின்னர் அவரே உச்சநீதிமன்றத்திற்குச் சென்று பிணையலைப் பெற்றுத் தந்தார்.அதற்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்தவர் மதிப்பிற்குரிய ஐயா பழ.நெடுமாறன் அவர்கள்.

திருச்சியில்  குடும்பம், பெங்களூர் சிறையில் நீங்கள். இந்த நிலையில் இத்தனை நாள்கள் உங்களுக்கு யார் யார் எந்தெந்த வகையில் உதவினார்கள்?

அந்தப் பட்டியல் மிக மிக நீளமானது. அது பற்றி,

கரையை உடைத்துச் செல்லும்

ஆற்று வெள்ளம்

வயல்களில் வண்டலை

விட்டுச் செல்வதைப் போல

பல மாமனிதர்களை

எனக்கு உறவாக்கியது

என்ற என் கவிதை வரிகளே நினைவுக்கு வரு கின்றன.அவ்வளவு உதவிகளையும் ஒருங்கிணைத்தவர் அருமை நண்பர் தஞ்சை இரத்தினகிரி.அவருக்குத் துணைநின்ற அருமைத்தம்பி, தி.மு.க.வின் மாநிலத் தொண்டரணிச் செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதி, எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் இப்படி...விரிப்பின் பெருகும், தொகுப்பின் எஞ்சும். அவர்களைப் பற்றியயல்லாம் விரிவாகத் தனியே எழுத உள்ளேன். உறவு என்ற வகையில் என் சகலர் பேராசிரியர்கு.இரா.இளங்கோவன் அவர்கள் எல்லா நிலைகளிலும் உறு துçணாக இருந்துள்ளார்.மக்கள் கண்காணிப்பு இயக்க யஹன்றிடிஃபேன் அவர்களின் உதவியும் மகத்தானது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? அவர்களின் நிலை என்ன?

கைது செய்யப்பட்டோர் 13 பேர். இதில் ஒருவர் சிறையிலேயே இறந்துவிட்டார். ஒருவர் பிணையில் வந்த பின்னர் மாரடைப்பால் உயிரிழந்தார்.ஒருவர் கொலை செய்யப்பட்டார். பாதிப்பு என்பது ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையில் இருந்தது. என்றாலும், ஒரே குடும்பத்திலிருந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டு,பெருந்துன்பத்திற்குள்ளான வழக்கறிஞர் கீதாவின் குடும்பம் குறிக்கத்தக்கது.பெரிதான வருமானம் இல்லாத நிலையில், மூவருக்குமாக அவர் அலைந்து திரிந்து பெரும்பாடுபட்டார்.அந்த நிலையில்தான் பிணையலில் வெளிவந்த அவரின் கணவர் இரவி மாரடைப்பால் காலமானார்.சட்டியில் தப்பி அடுப்பில் விழுந்த கதை என்பார்களே,அந்தப் பழமொழி அவருக்கு மிகவும் பொருந்தும்.

உங்களின் சிறை வாழ்க்கை எப்படி இருந்தது?சிறை அனுபவங்களைப் பற்றிக் கூறுங்கள்.

சிறை வாழ்க்கை என்பது கொடுமையானதுதான்.எனினும் குற்றங்களின் தன்மை, அவரவரின் மனநிலை இவற்றிற்கேற்பவே அந்த அனுபவஙகள் அமையும்.என்னைப் பொறுத்தமட்டில், பொய்யான வழக்கில் இழிவுபடுத்தப்பட்டு , கைவிலங்கிட்டு, குற்றப்பிரிவுகளைக் கரும்பலகையில் எழுதி,அதை நான் பிடித்தபடி படம்பிடித்து,அப்படங்களை அனைத்துச் செய்தி ஊடகங்களிலும் வெளியிட்டு மகிழ்ந்தது கருநாடகக் காவல்துறை.

மாணவப் பருவத்திலிருந்து எத்தனையோ பரிசுகளையும் விருதுகளையும் பெற்ற என்னை, கொடும் குற்றவாளியாகச் சித்தரித்தது கருநாடகக் காவல்துறை. சிறை சென்ற, ஒரு வாரத்திற்குள் திருச்சியிலிருந்து வழக்கறிஞர் சு.க.மணி என்னைக் காண வந்திருந்தார். அத்தகைய சந்திப்புகள் சிறை அதிகாரி முன்பாகத்தான் நடைபெறும். அப்போது அந்த அதிகாரி என்னை, மற்ற கன்னட வழக்கறிஞர்களிடம், ‘இவன் ஒரு அயோக்கியன். நம் மாநிலத்தையே குண்டு வைத்து அழிக்க முயன்றவன்’ என்று அறிமுகம்(!) செய்து வைத்தார்.

இந்தச் சூழலில், மனத்தையும், உடம்பையும் நன்கு வைத்துக் கொள்வதென்று உறுதி பூண்டேன். சிறைவாழ்விலும், ஒரு பூஞ்சோலையாக, யோகப்பயிற்சிக்கென்று ஒரு தனியான பெரிய அறை இருந்தது. அங்கு நாளும் சென்று யோகப்பயிற்சி செய்வேன். இரண்டரை மணிநேரம்...நல்ல பயிற்சி... மனத்தில் கவலைகளுக்கு இடம் தரவில்லை. கவிதைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் நிறைய எழுதினேன். அவற்றை வெளியிட்டு என் இருப்பை உலகறியச் செய்த தென் செய்தி, தமிழர் கண்ணோட்டம் முதலான இதழ்கள் என் நன்றிக்கு உரியன.

சொல்லாய்வு அறிஞர் அருளி அவர்கள் தமிழர் கண்ணோட்டத்தில் எழுதிய கட்டுரை, பேரா.சுபவீ அவர்கள் புதியபாதை இதழில் ‘ஈரம் கசியும் பாறை’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை, பா.செயப்பிரகாசம் தென்செய்தியில் எழுதிய கட்டுரை, பழனி எழில்மாறன், கவிஞர் கு.ம.சுப்பிரமணியம் எழுதிய கவிதைகள் என்னை எனக்கு அடையாளம் காட்டின. சிறை வாழ்வு குறித்து விரைவில் எழுதுவேன்.

உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்குக் கருநாடக அரசும், காவல்துறையும் என்ன சொல்கிறார்கள்?

என்ன சொல்வார்கள்? ‘சிரமறுத்தல் வேந்தருக்குப் பொழுதுபோக்கும் சிறிய காதை’ என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் அடிகள் நினைவுக்கு வருகின்றன.

கருநாடக மாநிலத்தையே தகர்க்க வந்தவர்கள், கேரளா, கருநாடகம், ஆந்திரம் உள்ளிட்ட அகன்ற தமிழகத்தை உரு வாக்கப் படைதிரட்டியவர்கள், இந்திய இறையாண்மையோடு போர் தொடுக்க வந்தவர்கள் என்றெல்லாம் எங்களைப் பற்றிப் பூதாகாரமாகச் சொல்லிக் கைது செய்த காவல்துறை, அனை வருக்கும் விடுதலை என்று தீர்ப்பு வந்ததும், ‘விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை’ என்று ஊடகங்களுக்குச் செய்தி தருகிறது. பெரியார் மொழியில் சொன்னால், ‘எப்படிச் சிரிப்பது’ என்றுதான் தெரியவில்லை.

இப்படிப்பட்ட அரச பயங்கரவாதத்தால் அப்பாவிகள் இனியும் பாதிக்கப்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சமூகப் பொறுப்புமிக்க கேள்வி. ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு அப்பாவியைக் கைது செய்ய முடிவு செய்துவிட்டால், அந்த மனிதனைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது என்று வாசந்தி ஒரு புதினத்தில் கூறியுள்ளார். அக்கூற்று முற்றிலும் உண்மை. இத்தகைய பொய் வழக்குகளில் விடுதலை செய்யும் நேர்மையும், நெஞ்சுரமும் மிக்க நீதியரசர்கள் நினைத்தால்தான் இத்தகைய கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடியும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதில் உள்ள அறம், நீதிமன்றமே என்ற புரிதல் நீதியரசர்களுக்கு ஏற்படும் நாளில் அத்தகு கொடுமைகள் குறையலாம். ஆனால் அழியாது.

இந்த வழக்கினால் நீங்கள் துணைவேந்தராகும் நல்ல வாய்ப்பு பறிபோனதா? நல்ல தமிழறிஞரைத் துணை வேந்தராகப் பெறும் எங்கள் விருப்பமும், முயற்சியும் வீணானதாக நாங்கள் நினைக்கின்றோம். இது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?

உண்மைதான். இதில் பெரிய வியப்பு, நான் எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளாதிருந்த நிலையில், 2001 மார்ச்சு இறுதி வாக்கில், அப்போது கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் அவர்களின் தனிச்செயலர், ஐயாவைப் பாருங்கள் என்று கூறினார். எதற்கு என்று தெரியாமலேயே பேராசிரியர் அவர்களைச் சந்தித்தேன். அப்போது தலைவர் அவர்கள் உங்களைத் துணை வேந்தராக ஆக்க விரும்புகின்றார் என்று கூறினார். எனக்குப் பெரும் வியப்பு. ஆயினும் திடீரென வந்த தேர்தல் அறிவிப்பால் அந்த வாய்ப்புக் கிட்டாமல் போனது. எனினும் இந்தக் கைதாலும் வழக்காலும் பின்னர் எப்போதுமே அந்த வாய்ப்பு ஏற்படாமல் போனது என்பது உண்மைதான்.

ஆனாலும் அதற்காக நான் வருத்தப்படவில்லை.

ஐயனார் - ஆசீவகம் ஆகிய தமிழின அடையாள மீட்புக்குரிய உண்மைகள் வெளிவந்துவிடக்கூடாது என்பதற்காகவே ஒரு கூட்டம், எந்தச் சம்பந்தமும் இல்லாத இந்தச் சதி வழக்கைப் புனைந்திருக்கலாம் அல்லவா?

இருக்கலாம். என்னுடைய பிணையல் மனு விசாரணைக்கு வரும்போதெல்லாம், ஓர் ஆங்கில நாளிதழில் என்னைப் பற்றி எப்படி எப்படி எல்லாமோ செய்திகள் வரும். தொடர்ந்து அப்படிச் செய்திகள் வெளியிட்டதற்குரிய காரணங்கள் எனக்குப் புரியாத புதிராகவே இருந்தன. இப்போது அப்படியும் இருக்கலாமோ என்ற ஐயத்தை உங்கள் வினா தோற்றுவிக்கின்றது. ஆயினும் என்ன? புரட்சிக் கவிஞர் பாடியது போல,

காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ?

கரைச்சேற்றால் தாமரையின் வாசம் போமோ?

நேர்நிறுத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால்

நிறை தொழிலாளர் உணர்வு குன்றிப்போமோ!

என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

Pin It