கோவை மாவட்ட வழக்கறிஞர்களின் போராட்டம் ஏன்?

கடந்த 07.10.2011 வெள்ளிக்கிழமை வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் ஒரு வழக்கு தொடர்பாக துடியலூர் காவல் நிலை யத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இது இயல்பாக நடக்கக் கூடியதுதான். இதை சுமுகமாகக் கையாண்டிருக்க வேண்டியது காவல்துறைப் பணியாளர் கடமை.

மாறாக எதிர்த்தா பேசுகிறாய் என்று அதிகார அத்துமீறலைக் கையில் எடுத்தனர் காவலர்கள். உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி உள்பட ஏழு காவலர்கள், அங்கிருந்த ஹாக்கி விளையாடும் கம்பை எடுத்து மிகக் கடுமையாகச் சுற்றி வளைத்து அடித்திருக்கிறார்கள். வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

இதனால் வெகுண்டு எழுந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பிரச்சினை பெரிதாவதை அறிந்த கோட்டாட்சியர் வழக்கறிஞர்களுடன் பேசியிருக்கிறார். பின்  மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய 7 காவலர்களை (5ஆண்கள், 2 பெண்கள்) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை வலுவாக வைத்தார்கள்.

ஆனால் காவல் கண்காணிப்பாளர், 2 பெண் காவலர் உள்பட 5 காவலர்களை பணி இடைநீக்கம் செய்வதாகச் சொல்லி இருக்கிறார். இதை வழக்கறிஞர்கள் ஏற்கவில்லை. அடுத்து இதை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்துவதாகச் சொன்னதையும் வழக்கறிஞர்கள் ஏற்கவில்லை.

பேச்சு தோல்வியில் முடிய வழக்கறிஞரைத் தாக்கிய காவலர்கள் ஐவர் மீது 307ஆம் பிரிவில் கொலை முயற்சி என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனாலும் வழக்கறிஞர்கள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியரும் பேசினார். பேச்சு தோல்வியிலேயே முடிந்து போனது.

மாவட்டத் தலைமை நீதிபதி அவர்களும் அழைத்துப் பேசியிருக்கிறார். ஆனாலும் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்ந்தது.

அதன் பிறகு கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கியது.

மழை பெய்த போது அவர்கள் கலையவில்லை. அப்போது அங்கு உடைந்த கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட சுகாதாரப் பாதிப்பைத் தடுக்க, அவர்களே நீதிமன்றத் தூய்மைப் பணியாளர்கள் மூலம்  சரி செய்திருக்கிறார்கள்.

வன்முறைக்கு சிறிதும் இடம்தராமல் அறவழிச் சமூக ஒழுங்குப் போராட்டமாக அவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் அமைந்துள்ளது.

தாக்குதல் நடத்திய காவலர்களைக் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்களைக் கைது செய்யுங்கள் என்பது வழக்கறிஞர்களின் கோரிக்கை.

இது வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டம், நியாயமான கோரிக்கை.

வாச்சாத்தியில் வனத்துறையினருடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய அத்துமீறலுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தது.

இதை  ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளத் தெரியாத காவல்துறை, பரமக்குடியில் தன் அத்துமீறல்களை நடத்தி அம்பலப்பட்டுப்போனது.

இப்போது கோவையிலும் அதே அதிகார அத்துமீறலை நடத்தி, வழக்கறிஞர்களின் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது.

சாதாரண மக்கள் சிறு தவறு செய்தால்கூட விரட்டிப் பிடித்துக் கைது செய்யும் காவல்துறை, வழக்கறிஞர்களால் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்களை மட்டும் கைது செய்யாமல் இருப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்.

வழக்கறிஞர்களின் போராட்டத்தால் நீதிமன்ற வழக்குகள் நடைபெறவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மக்களே.

கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களின் வழக்கறிஞர்கள் ஆதரவும், சென்னை புதுவை வழக்கறிஞர்களின் ஆதரவும் இவர்களுக்கு வலிமை சேர்த்தது.

காவல்துறையும், அரசும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

 

Pin It