“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் வள்ளுவர் கூற்றினைக் காலம் காலமாக இச்சமுதாயம் வாயளவில் மட்டுமே பேசிக்கொண்டு, செயலளவில் மறுதலித்துக் கொண்டே வருகிறது. காரணம் ஏணிப்படி போன்ற ஏற்றத்தாழ்வான இந்து சமூகம் உருவாக்கப்பட்டதுதான். இதன் உயரத்தில் பார்ப்பனர்கள் அமர்ந்து கொண்டு நாட்டாமை செய்தனர்.

பின்னாளில் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வருணத்தார் மட்டுமே இருபிறப்பாளர் என்ற உயர் தகுதி நிலை பெற்றிருந்தனர். இவர்கள் மட்டுமே ‘காயத்திரி மந்திரம்’ சொல்லும் தகுதி பெற்றவர்கள். மேலும் வேதங்களை ஓதி யாகங்களை நடத்தும் உரிமை காரணமாகப் பார்ப்பன வருணம் உயர்வாக மதிக்கப்படும் போக்கு உருவாகியது.

வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் விளக்கங்கள் புதிது புதிதாக அளித்தனர். நாரதஸ்மிருதி, யக்ஞவல்கியஸ்மிருதி, மனுஸ்மிருதி, பராசரஸ்மிருதி முதலிய நூல்கள் பார்ப்பனர்களால் எழுதப்பட்டன. இந்நூல்கள் சமூக முழுமைக்குமான ஒழுக்கத்தையோ , அறநெறியையோ கூறவில்லை. மாறாகப் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற நான்கு வருணப் பிரிவின ருக்கான உரிமைகளும் கடமைகளும் இந்நூல்களில் வரையறுக்க பட்டன.

மனுதர்ம முறையை நிலை நிறுத்த, திராவிட இனத்தாரை உணர்ச்சியற்ற, சொரணை கெட்ட மக்களாக உழலச் செய்துள்ளனர் என்று எண்ணி, அதை மாற்றுவதே தமது பணி, வாழ்க்கையின் லட்சியம் என்று போராட முன்வந்தார் தந்தை பெரியார் - இறுதி வரை போராடினார். குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம், வைக்கம் போராட்டம், கோயில் நுழைவுப் போராட்டம் போன்று சாதியை ஒழிக்கப் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வெற்றியும் கண்டார்.

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் 1928 ஆம் ஆண்டு தம்மை இணைத்துக் கொண்டு, பகுத்தறிவுப் பாடல்களாலும், சமூகத் தளை உடைக்கும் சாட்டை வரிகளாலும் இச்சமூகத்திற்குத் தொண்டாற்றி வந்தவர் பாரதிதாசன். பெண் குழந்தைத் தாலாட்டுப் பாடலிலேயே தன்மானக் கருத்துகளைப் புகுத்தியவர் இவர்.

“புண்ணில் சரம்விடுக்கும் பொய்மதத்தின் கூட்டத்தைக், கண்ணில் கனல்சிந்தி கட்டழிக்க வந்தவளே” என்றும்,

“இருட்டறையில் உள்ளதடா உலகம் - சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே” என்றும் ஆத்திரம் கொண்டு சாடினார் பாவேந்தர்.

புரட்சிக் கவிஞர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது, புதுவைப் பள்ளிகளில் நூற்றுக்குப் பத்து விழுக்காடு தாழ்த்தப்பட்டோர் மாணவர்களாக இருக்க வேண்டும் என்று புதுவை அரசு ஆணை பிறப்பித்தது. நெட்டப்பாக்கம் எனும் சிற்றூரில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே சென்று பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு வற்புறுத்தினார்.

சிலர் வந்து சேர்ந்தார்கள். பின்னர் சில நாட்களில் ஒருவர் பின் ஒருவராக நின்று போகத் தொடங்கினர். காரணம் வறுமையில் சிக்கித் தவிக்கும் தாழ்த்தப்பட்டோர் தன் குடும்பத்தோடு வயலில் உழைத்தால்தான் உயிர் வாழ முடியும் என்ற நிலையை அவர்களுக்கு மேட்டுக்குடி மக்கள் உருவாக்கினர்.இந்த நிலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பினால் வயிறு காயுமே என்ற அச்சம்தான். இதை அறிந்த புரட்சிக் கவிஞர் மேட்டுக்குடியினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தினார்.

அப்போது ஊரில் காலரா, அம்மை பரவியிருந்தன. மருத்துவர்கள் வருதில் தாமதம் ஏற்பட்டது. இக்காரணத்தை வைத்து, “கல்வித் துறை பிறப்பித்த ஆணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து செயல்படாமல் தடுக்கும் சிற்றூருக்கு அரசு மருத்துவக் குழுவினர் வரமாட்டார்கள், சாதி நோயை விரட்டினால்தான் மீதமுள்ள தொற்று நோய்களும் வராமல் தடுக்க முடியும்” என்று எச்சரித்தார்.

பின்னர் பள்ளியில் பழையபடி தாழ்த்தப்பட்டவர்கள் சேர வழி உருவானது. இவ்வாறு சமூக நலிவுகளைக் கண்டு கொதித்தெழுந்து ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்தார் பாரதிதாசன்.

பாட நூல்களில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. ‘வ’ என்ற எழுத்துக்கு ‘வண்ணான்’ என்றும் ‘ஐ’ என்ற எழுத்துக்கு ‘ஐயர்’ என்றும் படமும் எழுத்தும் இருந்ததை மாற்றிச் சாதி வேறுபாட்டைக் காட்டாத சொல்லைப் பயன்படுத்தினார். முதல் வகுப்புக் குழந்தைகளுக்குத் தானே பாட நூல்களை இயற்றினார்.

இதுபோல் வடக்கே ஒரு பெரியார் டாக்டர் அம்பேத்கர்.

தாழ்த்தப்பட்டவர்கள் தெருவில் நடக்கும்போது தூசி கிளம்பும். இந்த தூசி உயர் சாதி இந்துக்கள் மீது பட்டால் தீட்டுப் பட்டுவிடும். எனவே பொது வீதியில் நடக்கும் பொழுது, தாழ்த்தப்பட்டவர் முதுகில் ஒரு விளக்குமாற்றைக் கட்டிச் செல்ல வேண்டும். அவர்கள் நடக்கும் போது பெருக்கிக் கொண்டே செல்லும் விளக்குமாறு தூசியை எழுப்பாது. இதைச் சட்டமாக்கினர் பேஷ்வா பரம்பரையினர்.

தெருவில் செல்லும் போது எச்சில் உமிழக் கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள் எச்சில் உமிழ்ந்தால், அது சாதி இந் துக்கள் மீது பட்டால் தீட்டாகி விடும். எனவே அவர்கள் நடக்கும் போது, கழுத்தில் ஒரு மண்சட்டியைக் கட்டிக் கொள்ள வேண்டும் எச்சில் துப்ப.

இவற்றை எல்லாம் கண்டு மனம் குமுறிய அம்பேத்கரின் பேச்சும் , மூச்சும் சமூக நீதி கேட்டு, சாதிக் கொடுமைகளை எதிர்த்துத் தாழ்த் தப்பட்டவர்களுக்காகப் போராடுவதாகவே இருந்தது.

சாதியை ஒழிக்கப் போராடிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்ற சிந்தனையாளர்கள் இன்று நம்மிடையே இல்லை என்றாலும், எதற்காக அவர்கள் தங்கள் வாழ்நாளை இச்சமூகத்திற்கு வழங்கினார்களோ, அந்தச் சாதிக் கொடுமை இன்றும் ஒழிந்த பாடில்லை.

சாதிவாரியான ஊர்கள், பள்ளிகள், அரசியல் கட்சிகள், சங்கங்கள், அடிதடி எனத் தொடர்ந்து சாதிவழிப் பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துத் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்றன இன்னமும்.

‘சாதி இரண்டொழிய வேறில்லை’ என்ற அவ்வையின் வாக்கை மாற்றி, “சாதி என ஒன்றும் இங்கில்லை” என்ற நிலைமையை உருவாக்கும் அந்த நாள் எந்த நாளோ!

- கவிஞர் கவியன்பன்