கதவைத் திற, காற்று வரட்டும் என்று பக்தர்களுக்குச் சொன்ன நித்யானந்த சுவாமி தன் மனதில் மட்டும் புழுக்கத்தை வைத்துக் கொண்டார். சாமியார்களின் அட்டகாசத்தில் நடிகைகள் அம்பலப்படுத்தப்படுவது இரண்டாவது முறை. எத்தனை நாளைக்குத் தான் நல்லபிள்ளை போல் நடிப்பது என்று பொங்கி எழுந்த சாமியார்களின் லீலைகள் பட்டிதொட்டி எல்லாம் சிரிக்கிறது. இதை எழுதி எழுதிப் பகுத்தறிவாளர்களின் பேனாவுக்கே புளித்துப் போய்விட்டது. முன்பெல்லாம் எழுதி விளக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் செயல்முறை விளக்கமே காட்டப்படுகிறது. அன்றைய நிலையில் சாமியார்களின் யோக்கியதை பற்றி எழுதுவதைப் படித்தவர்கள் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். இன்றைய நிலையில் அ, ஆ தெரியாதவர்கள் கூட தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்துவது தவறு என்றாலும், போலிச்சாமியார்களின் முகத்திரையை கிழிக்க உதவுவதை வேறுவழியின்றிப் பார்க்க வேண்டியுள்ளது.

சாமியார்களின் தில்லுமுல்லுகள் பலதடவை அம்பலமான பிறகும் மன இறுக்கத்தைப் போக்க அவர்களிடம் செல்வது ஏன்? இது போன்ற சொகுசு சாமியார்களுக்கு உணவு 5 நிமிடம் தாமதமானாலே கோபம் வந்துவிடும். அப்படித்தான் அவர்கள் உடம்பைப் பாதுகாக்கின்றனர். அவர்களிடம் எப்படி நாம் மன இறுக்கத்துக்கு நிவாரணம் தேட முடியும்? மனத்தை இறுக்குவதே ஆன்மிகம்தான். அதனிடமே போய் மன இறுக்கத்திற்கு வழி தேடுவது எவ்வளவு புரியாத்தனம். மனத்தில் இருந்து ஆன்மிகத்தைத் தூக்கி எறியுங்கள். அதனோடு இறுக்கமும் ஓடி விடும். மனத்தைச் செம்மைப்படுத்த நல்ல இலக்கியங்கள் நல்ல நூல்கள், நல்ல மனிதர்களின் சொற் பொழிவுகள், உயர்ந்த சாதனையாளர்களின் வரலாறுகள் போன்றவைகளைத் தெரிந்து கொண்டாலே போதும். நம் கடமைகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கக்கூடாது என்ற தெளிவு வந்துவிட்டாலே நம் மனம் இலகுவாகிவிடும். இதற்குச் சாமியார்களிடம் எந்த மருந்தும் இல்லை.

பகுத்தறிவாளர்கள்தான் சாமியாரின் உருவப் படத்தை எரிக்கிறார்கள். பக்திமான்கள் ஏன் சாமியார்களின் படங்களை எரிக்கிறார்கள். அவர்கள் எரிக்க வேண்டியது எல்லாம், மனத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை, சாமியாரின் போலித்தத்துவங்களை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகைகளை. பக்திமான்கள் எல்லாம் புத்திமான்கள் ஆகிவிட்டால் சாமியார்கள் உருவாக வாய்ப்பில்லை.

சராசரி மனிதர்கள் போல் கூட எங்களால் வாழ முடியாது என்று சாமியார்கள் வெளியில் வந்து விட்டார்கள். மூடநம்பிக்கையாளர்கள்தான் முடிவுகளை மாற்றிச் சமுதாயத்தை இன்னும் செம்மையாக மாற்ற முன்வர வேண்டும்.

- மு.தணிகாசலம்

Pin It