பகத்சிங் தன் நண்பன் சுகதேவிற்குத் தான் கைதாவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு 05.04.1929 அன்று எழுதிய கடிதம்.

இந்தக் கடிதத்தை நீ பெறும்போது, நான் தொலைதூர முடிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பேன். வேறு எந்த நாளையும் விட இன்று நான் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை உறுதியோடு சொல்கிறேன். என் வாழ்க்கையில் எல்லா அழகையும் தாண்டி, இனிமையான எல்லா நினைவுகளையும் தாண்டி, என் பயணத்தை நோக்கி நான் தயாராகி விட்டேன். இன்றைய நாள் வரையில் என் சகோதரன் - என் சொந்த சகோதரன், என்னை பலவீனமானவன் என்று தவறாகப் புரிந்து கொண்டு, குற்றம் சாற்றிவிட்டானே என்னும் ஒரு விசயம்தான் என் நெஞ்சைக் கிள்ளிக் கொண்டிருக்கிறது. இன்று நான் மிக நிம்மதியாக இருக்கிறேன். அது வெறும் தவறான புரிந்துகொள்ளுதலும், தவறான கணிப்புமே என்று என்னுடைய மிக வெளிப்படையான குணம், என்னுடைய வாயாடித் தனமாகவும் என் ஒப்புதல் வாக்குமூலங்கள், என் பலவீனமாகவும் மொழிபெயர்க்கப்பட்டுவிட்டன. இப்போது அவை எல்லாம் புரிந்து கொள்ளுவதில் மட்டுமே ஏற்பட் ட தவறென்று நான் உணருகிறேன். நான் பலவீனமானவனோ, நமக்குள் யாரையும் விட பலவீனமானவனோ இல்லை சகோதரா. தெளிந்த மனதோடு நான் விடைபெறுகிறேன் ; நீயும்கூட தெளிவு பெற்றிருப்பாய் அல்லவா. ......

வாழ்க்கையில் எல்லா ஆசைகளும், நம்பிக்கைகளும் உடையவன்தான் நானும். ஆனால் தேவையான நேரத்தில் அவற்றை என்னால் உதறிவிட முடியும். அதுதான் உண்மையான தியாகத்திற்கும், மனிதனின் வாழ்க்கைப்பாதையில் அந்த விசயங்கள் எல்லாம் ஒரு நாளும் குறுக்கே நிற்க முடியாது, அவன் நிஜமாகவே மனிதனாக இருக்கும் பட்சத்தில். மிக விரைவில் அதற்கான நடைமுறை உதாரணத்தை நீ பெறப்போகிறாய். எந்த ஒரு மனிதனின் குணநலத்தைப் பற்றி விவாதித்த போதும் “ காதல் எந்த மனிதனுக்காவது உதவியாய் இருந்தது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதா? ” என்று நீ கேட்டிருக்கிறாய். இதற்கு நான் பதில் சொல்கிறேன், ‘ஆம்’. அது மாசினிக்கு உதவியிருக்கிறது. அவன் காதலித்த ஒரு பெண்ணின் கடிதம் இல்லாவிட்டால் அவன் பைத்தியமாகியிருப்பான். அவன் எல்லோரையும் போல - இல்லை - எல்லோரையும் விட வலிமையானவன்தானே.

காதலின் சமூகத் தகுதியைப் பொறுத்தவரையில் அது மிக ஆழ்ந்த உணர்ச்சி நிலைதான் என்றாலும், விலங்குகளைப் போல் அல்லாமல் மனித நிலையை ஒத்தது என்றும், மிக இனிமையானதென்றும் நான் கூறுவேன். காதல் என்பது ஒரு நாளும் விலங்குணர்ச்சி ஆகாது. காதல் எப்போதும் மனிதனின் பண்பை உயர்த்துவதாகவே அமைகிறது. அது அவனை என்றும் கீழ் நிலைக்குத் தள்ளுவதில்லை. காதல் உண்மையான காதலாகவே இருக்கும் வரையில், காதலை யாரும் உருவாக்க முடியாது. அது தன் விருப்பப்படி தானாகவே வரும், எப்போது என்று யாராலும் கூறமுடியாதபடி. அது இயற்கையைத் தவிர வேறொன்றும் இல்லை. 

ஒரு இளைஞனும் கன்னிப்பெண்ணும், தங்கள் உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் தங்களின் தூய்மையைக் காத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் காதலிக்க முடியும் என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன்.

நான் என் கருத்துகளைத் தெளிவாக்கி விட்டேன்.

நீ இனிய வாழ்வையும், எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன்

மேற்காணும் கடிதம், தான் கைதாவதற்கு முன்பு வெளியில் இருந்து பகத்சிங் சுதந்திரமாக எழுதிய கடைசிக் கடிதம். இதற்குப் பின், தன் சாவுக்கு முதல் நாள் வரையில் அவர் எழுதிய மற்ற கடிதங்கள் எல்லாம், சிறை அதிகாரிகளின் பார்வையில் பட்டு வந்தவை. ஆகவே, மனம்திறந்து தன் நண்பனுக்கு, அதுவும் நெருங்கிய நண்பனுக்கு அவர் எழுதிய இக்கடிதம் ஒரு புரட்சியாளனுக்குள்ளும் இருக்கக் கூடிய மென்மையான இதயத்தை நமக்குக் காட்டுகிறது.

- பேரா.சுப.வீரபாண்டியன் எழுதிய பகத்சிங்கும் இந்திய அரசியலும் என்ற நூலிலிருந்து