கண்கள்
வானத்து நட்சத்திரங்களை
ரசித்துக் கொண்டிருந்தாலும்
கைகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்!

பெண்களின் நிலையை பளிச்சென சொல்லும் கவிஞர் மேத்தாவின் கவிதை.

பெண் விடுதலை, பெண்ணுரிமை போன்ற சொற்களைக் காதில் கேட்ட மா(ஆ)த்திரத்தில், ‘காலம் மாறிப் போச்சிங்க. . . முன்ன மாதிரி இல்ல. நெலம தலைகீழா மாறிடிச்சி. ஆண் உரிமைக்குப் போராட சங்கம் வைக்கிற அளவுக்கு ஆகிப்போச்சி. . . ’ என்று பல கிரகங்கள் புலம்பித் தள்ளுவதைக் காணலாம்.

எது மாறியிருக்கிறது? காலம் மாறியிருக்கிறது; காட்சிகள் மாறியிருக்கின்றன; திணிக்கப்பட்ட கருத்தாக்கங்கள் மாறவில்லை. வீட்டிற்குள் அடைந்துகிடந்த பெண் வெளியில் வந்திருக்கிறாள். அதுவும், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக. மற்றபடி, அவள் மீதான் சாதியக் கட்டுப்பாடுகளும், ஆணாதிக்க போக்குகளும், முடை நாற்றம் வீசும் மனு நீதிகளும் அப்படியேதான் இருக்கின்றன. அவற்றையும் சுமந்து கொண்டுதான் இன்றும் பெண்ணானவள் கரடுமுரடான பாதையில் தனது தடத்தைத் தேடிப் பயணிக்கிறாள்.

கணினிக்குள் புகுந்து புறப்பட்டு, விண்கலத்தில் ஏறிப் பறந்து, நிலவில் நடைபோட்டாலும் அவள் இருக்க வேண்டிய இடத்தையும், நிற்க வேண்டிய எல்லையையும் நால் வருணமும், சாதியும், அவற்றின் சடங்குகளால் வரையறை செய்து வைத்துள்ளன. மண்மூடிப் போகவேண்டிய இந்த மடமைகளை கண்மூடித் தனமாக பெண்களின் மீது சுமத்துகின்றது இந்தச் சமூகம்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ - என்பதுதான் தமிழரின் வாழ்வியல் நெறி.  ‘ஒரு குலத்துக்கொரு நீதி ; ஒரு இனத்துக்கு ஒரு நீதி ’ - என்பது ஆரியரின் மனு நீதி.  அதன் அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்துகின்ற சடங்குகளும், சாத்திரங்களும் ஏராளமாகவும், தாராளமாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். அவற்றில் உச்சகட்டமான கொடுமைகளைக் கொண்டது கணவனின் மரணத்திற்குப் பிறகு அந்தப் பெண்ணிற்குச் செய்யப்படும் சடங்குகள்தான்.

இந்தச் சடங்குகள் மதத்திற்கு மதம், சாதிக்குச் சாதி வேறுபடுகின்றனவே அன்றி, எந்த மதத்திலும், சாதியிலும் இவை இல்லை என்று சொல்வதற்கில்லை.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிப் பகுதியிலுள்ள தெலுங்கு பேசும் கம்மவார் நாயுடு சமூகத்தில். . . இப்படி. . . கட்டிய சேலையுடன் குளிக்க வைத்து, தலை நிறைய பூச் சூடி, நெற்றியில் அகலப் பொட்டிட்டு, கைகளில் கண்ணாடி வளையல்களைப் பூட்டி, இறுதியாக முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒருமுறை தன்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, அடுத்த நொடியில் பூவைப் பிய்த்து எறிந்து, பொட்டை அழித்து, இரண்டு கைகளையும் ஒன்றோடொன்று மோதி கைவளையல்களை உடைத்து. . . . கைகளிலும், கண்களிலும் இரத்தம் வடிய கற்சிலையாய்ச் சமைந்து போகிறாள். அவளுக்கென்று ஒரு மனம் இருப்பதை கற்பனை செய்யக் கூட கல்நெஞ்சக்காரர்கள் தயாராக இல்லை.

இந்தக் கொடுமையின் உச்சம் எது தெரியுமா? இந்தச் சடங்குகளைச் செய்கின்றவர்கள் அத்தனை பேரும் பெண்கள் என்பதுதான். படிக்காத பெண்களுக்குத்தான் இந்த அவலங்கள் நடக்கின்றன என்று எண்ணிவிடவேண்டாம். படித்துப் பதவியில் இருக்கும் பெண்களுக்கும் இதே நிலைதான்.

நகரத்தார் சமூகத்தில். . . இப்படி. . 

இறந்தவரின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் முடித்துவிட்டு, அந்தப் பெண் வீட்டிற்குள் நுழைவதற்கு முன், இப்படி ஓர் அறிவிப்பு செய்கின்றனர், “புருசனைப் பறிகொடுத்த ஆச்சி வர்றாங்க. அவங்க மொகத்தோட மொகம் யாரும் பாக்காதீங்க”

அறிவிப்பையடுத்து, வீட்டிற்குள் இருக்கும் அத்தனைபேரும், அந்தப் பெண்ணிற்கு முதுகைக் காட்டியபடி, சுவர்ப் பக்கமாகத் திரும்பிக் கொள்கின்றனர். அதற்குப் பிறகே, ஒரு வயதான பாட்டி, அந்தப் பெண்ணை முகத்தை முக்காடிட்டு மூடியபடி வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்.

துணையை இழந்து துடிதுடித்துக் கொண்டிருக்கும் பெண்ணை, அரவணைத்து, ஆறுதல் சொல்லவேண்டிய உறவுகள், முகத்தைப் பார்ப்பதே தீட்டு என்று சொல்லி விலகி நின்று வேதனை தருவது எந்த விதத்தில் நியாயம்?

அதுவரை அந்தப் பெண்ணிற்கு இருந்த ‘சமூகத் தகுதிகள்’ கணவன் இறந்தவுடன் இல்லாமல் போய்விடுகின்றன. ‘சுமங்கலியாய்’, ‘மகாலட்சுமியாய்’ இருந்தவள், ஒருசில மணித் துளிகளில் அமங்கலியாய், சகுணத்தடையாய் மாறிவிடுகிறாள். மீதம் இருக்கின்ற வாழ்க்கை அவளுக்கானது இல்லை. ஆனால், மனைவியை இழந்த ஆணுக்கு எந்தத் தடைகளும் இல்லை. மனைவியின் மரணத்திற்குப் பிறகும் அவனுக்கான வாழ்க்கைத் தொடர்கிறது.

கணவன் இறந்தால் மனைவி விதவை; மனைவி இறந்தால் கணவன் புதுமாப்பிள்ளை.

‘தனியாக இருந்துகொண்டு குழந்தைகளை எப்படி வளர்க்க முடியும்? பொம்பள துணையில்லாம எத்தனை நாளைக்குத் தனியா காலந்தள்ள முடியும்? கடைசிக் காலத்துல ஒத்தாசைக்குப் பொண்டாட்டின்னு ஒருத்தி இருக்குற மாதிரி வருமா? ’

நூற்றுக்கு நூற்றிஅய்ம்பது சதவீதம் நியாயம் இருக்கிறது இந்தக் கேள்விகளில். ஆனால் இந்த நியாயங்களைப் பெண்ணுக்கும் பொருத்திப் பார்க்கத் தவறுகின்ற இடத்தில்தான் சமூகம் குற்றவாளியாகிறது.

“மாண்டவன் மாண்ட பின்னர்- அவனின்
மனைவியின் உளத்தை
ஆண்டையர் காண் பதில்லை- ஐயகோ,
அடிமைப் பெண் கதியே! “

என்கிறார் பாரதிதாசன்.

பெரியாரின் எழுத்துக்களும், பேச்சுக்களும் பெண்களுக்கு மீட்டுத் தந்த பல உரிமைகளில் விதவை மறுமண உரிமை குறிப்பிடத்தக்கது. இப்பொழுது, விதவை மறுமணங்கள் பரவலாகி வருகின்றன என்றபோதும், கட்டுகள் முழுமையாக உடைபடவில்லை என்பதே உண்மை.

படித்துப் பட்டங்கள் பெற்றாலும், நாடாளும் பெண்ணாக இருந்தாலும் சடங்குகளும், சாத்திரங்களும் அவர்களைக் கட்டி இழுத்துவந்து ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் நிறுத்தி விடுகின்றன. இன்று பெரும்பாலும் மொரமொரத்த மொட்டைத் தலையும், உப்பில்லாத வேளைக்கீரை பத்தியமும், கட்டாந்தரை கல் படுக்கையும் இல்லை என்றாலும், வேறு வடிவங்களில் மூடத்தனங்கள் தொடரத்தான் செய்கின்றன. என்ன செய்வது,

கண்கள்
வானத்து நட்சத்திரங்களை
ரசித்துக் கொண்டிருந்தாலும்
கைகள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்!

Pin It