நடுவண் ஐந்திணை என்றும் அன்பின் ஐந்திணை என்றும் சிறப்பு அடைமொழியோடு குறிக்கப்படும் ஐந்திணைகளின் வரிசையை நோக்கினால், அதில் முதலிடத்தில் வைத்து எண்ணப்படுவது முல்லைத்திணை. இதற்கு உரையாசிரியர்கள் கூறும் காரணம் யாதெனின், "கற்பு நெறி பிறழாது மகளிர் இல்லில் ஆற்றியிருந்து நல்லறம் செய்தலே ஒழுக்கங்களில் தலைசிறந்தது; ஆகவே, தொல்காப்பியர் முல்லைத்திணையை முதலில் வைத்தார்" என்பதாகும்.aindhinaiஅகவொழுக்கத்தில் ஆற்றியிருத்தல், புணர்தல், ஊடல், இரங்கல், பிரிதல் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் உரிப்பொருளாகச் சுட்டப்படுகின்றன. முதற்பொருளின் உரிப்பொருள்கள் சங்க காலத்தில்தான் முகிழ்த்தன என்று சொல்ல முடியாது. ஐந்திணைப் பிரிவுகளும் பாடல்களும் சங்க காலத்தில் பாடப்பட்டிருக்கின்றன என்றாலும், அப்பாடல்களின் உரிப்பொருள்களில் பல சங்க காலத்திற்கு முந்தைய சமூகத்தின் பாடுபொருளாக இருந்திருத்தல் வேண்டும். நிலப்பாகுபாடும் அதைச் சார்ந்தே நிலத்திற்கான ஆண்பெண் உறவு நிலையும் அறிவியல் பார்வைக்குப் பொருந்தாது.

காரணம், முல்லையிலும் ஊடலும் கூடலும் இருந்திருக்கும். ஆண்பெண் உறவில் ஊடல், கூடல், பிரிதல் ஆகியவை நிலப்பாகுபாடின்றி இருப்பது வாழ்வின் நியதியாகும். ஆதலால், ஒவ்வொரு நிலத்திற்கும் இதுவே உரிப்பொருளாகும் என்று கூறுவது இலக்கியக் கொள்கையாகவும் கோட்பாடாகவுமே அமையுமே தவிரச் சமூகவியல் கொள்கையாக அமையாது. அப்படியானால், இதன் அடிப்படை என்ன? இந்தக் கேள்வியின் ஊடாகவே "இருத்தலும் இருத்தல் நிமித்தமும்" பெண் ஒழுக்கமாக, கற்பு நெறியாக, குறிப்பாகப் பெண்ணுக்கு மட்டுமேயான கற்பு நெறியாக மாற்றம் பெற்ற காலத்தின் மனித வரலாறு புலப்படுகிறது. இன்னொரு வகையில் சொல்லப்போனால், ஆண்வழித் தலைமையின் தொடக்கம் முல்லையில் ஆரம்பம்.

"ஆதிகாலத்துக் கூட்டுச் சமுதாய வாழ்க்கை குறிஞ்சி நிலத்தில் நிலவியிருந்தது. அதனை அடுத்து முல்லை நிலத்தில் உருவான வாழ்க்கை, முதல் வர்க்கப் பிரிவினையை வெளிப்படுத்திய வாழ்க்கை. அது அடிமைச் சமுதாயத்தை விளக்குவது. அச்சமுதாயம் சிதைந்து மருத நிலத்தில் மிக விரிவான அளவில் உருவான சமுதாயம் நிலப்பிரபுத்துவ சமுதாயமாக அமைந்தது" என்பார் கு.மா. பாலசுப்பிரமணியன்.

எனவே, உலகில் தொன்மைச் சமூகத்தில் பொதுவுடைமை நிலவியதையும், அங்கு வரன்முறையற்ற ஆண்பெண் புணர்ச்சி நிலவியது என்பதையும், இதில் தமிழ் நிலமும் விதிவிலக்கல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இக்கருத்து மனித இனத்தின் ஆதிக்குடிகள் அனைவருக்கும் பொதுவானது. ராகுல சாங்கிருத்யாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' நினைவுக்கு வருகிறது.

ஆதி தமிழ்ச் சமூகத்தில் நிலவிய வரன்முறையில்லா ஆண்பெண் உறவை, புணர்வுகளையே தொல்காப்பியர் குறிஞ்சி உரிப்பொருளாகிய புணர்தலும் புணர்த்தல் நிமித்தமும் என்று உணர்த்தி இருக்க வேண்டும். எனவே, குறிஞ்சித் திணை தமிழரின் தொன்மையான சமூகத்தின் ஆண்பெண் உறவை விளக்குவதாகக் கருதலாம். ஆனால், சங்க காலத்தின் குறிஞ்சித் திணைப் பாடல்களில் காட்டப்படும் ஆண்பெண் உறவு இவ்வாறாக இருக்கிறதா என்று கேட்டால் 'இல்லை' என்பதுதான் உண்மை. குறிஞ்சித்திணைப் பாடல்கள் விவரிக்கும் ஆண்பெண் உறவு தொன்மைச் சமூகத்தின் அதே உறவு நிலையைப் பிரதிபலிக்கவில்லை. தொன்மைக்காலப் புணர்ச்சியே குறிஞ்சியின் பாடுபொருளாக இருந்தாலும், காலப்போக்கில் நிகழ்ந்துவிட்ட நிகழ்காலப் பண்பாட்டிலிருந்து விலகாமல் புணர்ச்சியைப் பாடுகிறது.

நிகழ்காலக் கற்பு நெறி சமூகத்தின் வழியாகவே ஆதித்தொல் சமூகத்தைப் பிரதி எடுத்திருக்கிறது. எனினும், தொன்மையான ஆதிச் சமூகத்தின் எச்சங்களைக் குறிஞ்சிப் பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன. "தாய்வழித் தலைமை, சுதந்திரத் திருமணம் & களவு மணம், உடன்போக்கு & பெற்றோர் தலையீடு இல்லாத கற்பு மணம் ஆகிய இக்கூறுகள் ஆதிச் சமூகத்திற்கும், ஒருதார மணமுறை மற்றும் கற்பு நெறி கொண்ட ஆநிரைச் சமூகத்திற்கும் இடைப்பட்ட சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளாகும்" என்பார் பேரா. சிலம்பு நா. செல்வராசு.

மனித சமூகத்தின் தொடக்க கால வாழ்விடமாக மலைகளும் குகைகளுமே இருந்தன. குறிஞ்சி நில மக்களே உலகின் ஆதிக்குடிகள். மக்கள் தொகை பெருகப் பெருக அவர்கள் காட்டுப்பகுதியில் குடியமறத் தொடங்கினார்கள். அங்குதான் மனித நாகரிகத்தின் இரண்டாம் படிநிலை ஆரம்பமாகிறது. மலையை விடக் காட்டுப்பகுதி உணவுக்குத் தட்டுப்பாடின்றி வாழ வழிவகுத்தது. காட்டுப்பகுதி வாழ்க்கையில்தான் மனிதன் ஆடு மாடுகளை வளர்க்கத் தொடங்கினான். தமிழ்க்குடி “ஆயர்கள்" என்று பெயர் பெற்ற இடம் முல்லை. பசு வளர்க்க ஆரம்பிக்கும்போது பால் விற்பனை தொடங்கியது; செல்வப்பெருக்கு ஏற்படுகிறது. அதனால்தான் 'பசு' என்றால் செல்வம் என்றும் பொருள்படும். 'மாடல்ல மற்றையவை’ என்று திருவள்ளுவர் சொல்வதும் இதைத்தான். ஆநிரைகள் தனிஉடைமையின் முதல் சொத்துடைமையாக வரலாற்றில் இடம்பெறுகின்றன. 'கோ' என்ற சொல் உணர்த்திய பசு என்பது, பசுக்கள் அதிகமுடையவனைக் 'கோ' என்றழைக்கும் மக்களின் வேந்தனாக மாற்றுகின்றது. சொத்துடைமை அறியாத பொதுவுடைமை கொண்ட குறிஞ்சிச் சமமூகமானது, சொத்துடைமை மற்றும் தனிஉடைமையாக முல்லையில் மாற்றம் பெறுகிறது.

மருத நிலத்திற்கான அதிகார வெளி முல்லையில்தான் திறக்கிறது. அதிகாரமும் சொத்துடைமையும் இரண்டும் சேரும்போது தனிஉடைமையின் இன்னொரு பக்கமான வாரிசுரிமைக் கருத்தாக்கம் தோன்றுகிறது. இந்த வாரிசுகளை உருவாக்கும் விளைநிலமாக, ஆண்மகனின் சொத்துடைமையாகப் பெண் மாறுகிறாள். வாரிசுரிமையை நிலைநாட்டக் குறிஞ்சி நிலத்தின் புணர்தல் என்பது கட்டுப்பாட்டுக்குரியதாகி, பெண் தன் கணவன் தவிரப் பிற ஆண்களுடன் பாலுறவு கொள்வது என்பது தடை விதிக்கப்பட்டு, அது மட்டுமே பெண்ணின் சிறப்பாகவும் பெண்மையின் அடையாளமான 'கற்பு' என்பதாகவும் கற்பிக்கப்படுகிறது. அதாவது, தொன்மைச் சமூகத்தில் நிலவிய ஆண்பெண் உறவில் மாபெரும் மாற்றத்தை முல்லையின் ‘இருத்தல்' என்ற உரிப்பொருள் உணர்த்துகிறது.

“இருத்தல்” என்பது ஆற்றியிருத்தல். கணவன் பொருள்வயின் பிரிதல் அல்லது ஆநிரை மேய்க்கப் பிரிதல் அல்லது பிற कारणोंங்களுக்காகப் பிரியும்போது, அவன் மனைவி காதல் உணர்வுகளை (காமத்தை) அடக்க வேண்டுமே தவிர, அவள் தன் உணர்வுகளுக்கு வடிகால் தேடுவது குற்றம். அப்படி ஆற்றியிருத்தலே அறம், ஆற்றியிருத்தலே கற்பு நெறி என்று பெண் வாழ்க்கையில் பெண்ணுடல் மீது இச்சமூகம் முதல்முறையாகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகிறது. இக்கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ளும் பெண்கள் மட்டுமே போற்றுதலுக்குரியவர்கள் ஆகிறார்கள். ஆனால், இக்கட்டுப்பாடுகள் அனைத்தும் பெண்ணுக்கானவை மட்டும்தானே தவிர ஒழுக்கம், அறம், குடும்பம், தனிஉடமை, சொத்துடைமை, அதிகாரம் என்று எதன் பெயராலும் எந்தவோர் ஆண்மகனையும் பாதிக்காது என்பதையும் இதே கட்டுப்பாடுகளின் மறுபக்கம் உணர்த்தியது. அதிகாரத்தின் உச்சத்தில் மருத நிலத் தலைவன் பல பெண்களுடன் உறவு கொள்கிறான். அப்பொழுதெல்லாம் அவன் மனைவி "ஊடல்" கொள்வது மட்டும்தான் மருதத்திணையின் உரிப்பொருளாக்கி, அந்த ஊடலையும் கூடலில் கொண்டு முடிக்கிறது மருதத்திணையின் பெண் வாழ்வு.

இவ்வாறு குறிஞ்சி வாழ்க்கையும் அதை அடுத்து முல்லை, மருத நில வாழ்க்கையும் தோன்றி இருக்க வேண்டும். இக்கருத்துச் சமூகவியல் அறிஞர்களின் கருத்துகளுடன் ஒத்துப் போகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம் கடந்து உற்பத்திப் பெருக்கம் நிகழ்கிற காலத்தில் மனித சமூகத்தில் ஆண் நிலவழிப் பிரிதலுடன் நீர்வழிப் பிரிதலும் செய்கிறான். இந்தப் பிரிதல் முன்னைய பிரிவுகளைக் காட்டிலும் கால நீட்டிப்புக் கொண்டது. எனவேதான் நெய்தல் பிரிவின் உரிப்பொருள் 'இரங்கல்" என்றாகிறது.

கற்பு என்று சொல்ல வரும்போது 'முல்லை சார்ந்த கற்பு' என்று சொல்வது ஏன்? பிற நிலங்களில் அப்பெண்களிடம் கற்பு நெறி இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. இதனால் கற்பு நெறி என்ற கருத்தாக்கம், முல்லை நில வாழ்க்கையில் உருவானது என்பதன் வரலாற்றை உய்த்துணர முடியும்.

  • முல்லை சான்ற கற்பின் மெல்லியள்” - சிறுபாணாற்றுப்படை 30
  • முல்லை சான்ற கற்பின் மெல்லியற் குறுமகள்” - அகநானூறு 274 & நற்றிணை 142

கற்பைச் சுட்டும்பொழுது முல்லை மலரையும் சேர்த்தே அடையாளப்படுத்துகிறார்கள். கற்பாகிய இருத்தலை, இருத்தலின் தூய்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட முல்லை மலர், பிற்காலத்தில் இருத்தலை வலியுறுத்திய சமூகத்திற்குக் குறியீடாக மாறி, 'முல்லை சான்ற கற்பு' என்று கற்பின் அடையாளமாக, புனிதமாக மாறி இருக்கிறது. இன்றும் வெள்ளை நிறத்தைப் பயன்படுத்துவது வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளமாகக் கருதப்படுவதால்தான்.

சங்க காலப் படைப்புகளின் ஆழ்மனங்களில் இருந்த கற்பு மூலபடிவம் முல்லை மலரின் வழியாக வெளிப்பட முயன்றுள்ளது. ஷேக்ஸ்பியரின் (Shakespeare) கற்பு மூலபடிவம் வெண்பனி வழி வெளிப்பட முயன்றுள்ளமை எண்ணத்தக்கது. முல்லை மலரும் வெண்பனியும் ஒரே நிறத்தைக் கொண்டவை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது என்பார் நலங்கிள்ளி (1988, தமிழிலக்கியத்தில் மூலப்படிவ மாதிரிகள் தேடல்).

முல்லை நில உரிப்பொருளான இருத்தல்தான் தமிழ்ச் சமுதாயத்தில் ஆண் தலைமையைப் பெண் மீது சுமத்திய முதல் கற்புக் கோட்பாடாகும். இதிலிருந்துதான் பெண், பெண்ணுடல், கற்பு, ஆண்பெண் உறவில் பெண்ணின் ஒழுக்கம், குடும்பத்தில் பெண்ணுடல் என்று பல கருத்துருவாக்கங்கள் உருவாகி இன்றுவரை பெண் வாழ்க்கையில் பல வடிவங்களில் இடம்பெற்றிருக்கின்றன.

- புதிய மாதவி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.