தி.மு.கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, பெண்களின் முன்னேற்றத்தில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்றது. அதற்கு மகுடமாக அமைந்த ‘புதுமைப் பெண்’ திட்டம் செப்டம்பர் 5ஆம் நாள் தொடங்கப்பட்டது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்விக்குச் செல்லும் மாணவியர்களுக்கு மாதம் ரூபாய் 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

stalin and gejriwalஇளங்கலைப் படிப்புகள், உயர் தொழிற்கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்தப் படிப்புகள் என அனைத்து உயர் கல்விகளுக்கு மட்டுமல்லாமல் பட்டயப்படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகள் போன்றவற்றிர்க்கும் இத்திட்டம் பொருந்தும். இந்த நிதியாண்டில் 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள மாதங்களுக்காக ரூபாய் 698 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 6,00,000 மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் சரிப்பார்க்கப்பட்டு, சரியான பயனாளர்களை உறுதிச்செய்துள்ள அரசு, மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவியர்கள் படிப்பைத் தொடர்வதை உறுதி செய்ய உயர் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுக் கல்வியை உறுதி செய்கிறது.

கொரோனா பெருந்தொற்று முடிந்து, மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப முயலும் காலத்தில், கல்வி இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டு அரசு, இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இடைநிற்றலுக்கு முக்கியக் காரணம் இப்பெருந்தொற்று மட்டுமன்று, ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளும், நடவடிக்கைகளும்தான். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட வருமானம் மற்றும் வேலையிழப்பை மறுக்க முடியாது. மேலும் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் சமூகத்தில், பெண்களின் கல்வி முதலியவை பாதிக்கப்படும்.

இத்தகையப் பாதிப்பைக் கணித்தும், கருத்தில் கொண்டும், அதிலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு மிகத் தேவையான நேரத்தில் கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது தமிழ்நாடு அரசு. வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு அரசு துணைநிற்கும் என்று மக்களுக்குச் சொல்லும் அதே வேளையில், கைமாறாக உங்கள் பெண்குழந்தைகளைப் படிக்க வையுங்கள் என்றும் வழிகாட்டுகிறார் நம் முதலமைச்சர். பெண்கள் பொருளாதாரச் சுகந்திரத்தை அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்தி, பாலினச் சமத்துவத்தை நோக்கி மேலும் ஒருபடி முன்னே அழைத்துச் செல்கிறார் அவர். மேலும் இது பெண்களின் திருமண வயதை அதிகப்படுத்தவும் உதவும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)

இறையென்று வைக்கப் படும். (குறள் 388)

என்ற குறளுக்கு ஏற்பப் பலரின் போற்றுதலையும், பாராட்டுகளையும் பெற்று வருகின்றார் நம் முதல்வர் தளபதி அவர்கள். முன்னதாகப் பெண்களுக்குப் பேருந்துப் பயணத்தை இலவசமாக்கி, பெருந்தொற்றால் வீடுகளுக்குள் முடங்கிய பெண்களை மீண்டும் பொதுவெளிக்கு அழைத்து வந்தவர். பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் சமபங்கு என்று சட்டம் இயற்றிய கலைஞரின் மகன் அல்லவா அவர்.

அதே வேளையில் பெண்களின் முன்னேற்றப் பாதையைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிற்போக்காளர்கள், அவதூறுகளை வீசாமல் இல்லை. முக்கியமாக நாம் தமிழர் கட்சியின் சீமான் மாணவிகளைக் கையேந்த வைக்கும் திட்டம் என்று இத்திட்டத்தை இழிவுபடப் பேசியுள்ளார்.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும், சென்னை மாநகராட்சிப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தைத் தியாகராயர் கொண்டு வந்து, குழந்தைகளைக் கல்விக்கூடங்களில் அமரச் செய்தார். இதனைப் பெருந்தலைவர் காமராஜார் சென்னை மாநிலம் முழுமைக்கும் விரிவுபடுத்திக் கொண்டு சென்றார். அப்பொழுதும் இத்திட்டம் பிற்போக்குவாதிகளால் இகழப்பட்டதுதான். ஆனால் அதன் பயன் பெருகப் பெருக, அது குறித்தச் செய்திகள் வெளிவரத் தொடங்கும் நிலையில், பிற்போக்கு வாதிகளால் புறக்கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது என்பது வரலாறு. இதுவெல்லாம் சீமான் போன்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

அதுபோல முதல்வர் ஸ்டாலின் அவர்களால் கொண்டு வரப்பட்ட இப் ‘புதுமைப்பெண்’ திட்டமும் எதிர்காலங்களில் யாரும் மறுக்க முடியாத பெரும் பயன்களை விளைவித்து, மாணவியர், கல்விக்குப் பெரும் புரட்சியை விளைவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

- மதிவாணன்

Pin It