ஒரு சமூகத்தை அடிமை நிலையில் நிலைநிறுத்த, அறநெறிகளும், மதநெறிகளும் ஆன்மீகப் போர்வையில் திணிக்கப்பட்டு, அரசியல் கருவிகளாக எப்போதும் எங்கும் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு இது எந்தப் போர்வையுமின்றி வெளிப்படையாகவே நடைபெறுகிறது.

buddha 303அண்மைக்காலத்தில் தலித்துகள் ஒரு புதிய தெளிவோடும் புத்தெழுச்சியோடும், 'நாங்கள் இந்துக்கள் அல்லர்: யாருக்கும் அடிமைகள் அல்லர்" என்னும் முழக்கத்துடன், ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே இந்து மதத்தைவிட்டு விலகிக் கொண்டிருப்பதை நாமறிவோம்.

இப்படி விலகும் இவர்கள் அனைவரும் பவுத்தத்தை தழுவிக் கொள்கிறார்களே தவிர, கிறிஸ்துவத்தை தீண்டுவதில்லை. ஏனென்று கேட்டால் 'கொதிக்கும் எண்ணெயிலிருந்து தப்பித்து, எரியும் நெருப்பில் நாங்கள் ஏன் விழவேண்டும்? இந்து மதத்தை விட்டு நாங்கள் விலகக் காரணமாக சாதியமும் தீண்டாமையும் கிறிஸ்துவத்தில் அப்படியே உள்ளதே? என்று உண்மையைச் சொல்லி உள்ளத்தை உறுத்துகிறார்கள்.

1956இல் அறிஞர் அம்பேத்கரும் இதே காரணத்திற்காகத்தான் கிறிஸ்துவம் வேண்டாம் என்று பவுத்தத்தைத் தழுவினார். இது, நாம் அனைவரும் தலைகுனிவோடு ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அவலம்.

மேலும் மதஅடிப்படைவாதம் வெறித்தனமாகவும் இந்துத்துவம் பெரும் வீச்சோடும் விஷமாகவும் வளர்ந்து வரும் இக்காலச் சூழலில், மானுட ஒருமைப்பாட்டிற்கு விவேகாநந்தர் பவுத்தத்தை முன்மொழிந்ததை ஏபி. வள்ளிநாயகம் நூலாகத் தந்துள்ளார். இந்துத்துவ மோகத்தின் குறியீடாய் மட்டுமே அடையாளப்பட்டு வரும் விவேகாநந்தர். 'உண்மையான விவேகாநந்தர் அல்ல" என்ற உண்மையை வெளிச்சமாக்கியுள்ளது இக்கட்டுரை மேலும், மானுடம் வெல்ல விவேகாநந்தர் புத்தரிடம் ஆட்பட்டிருந்தார் எனும் உண்மை இதுவரை மூடிமறைக்கப்பட்ட செய்தியாக நவின ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மத, சாதி பண வெறிகளால் சூறையாடப்பட்டுவரும் சமுதாயத்தைக்காக்க, நாம் வரலாற்றுச் சூறையாடலையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது அதனால்தான் வடநாட்டுப் பெரியார் ஆன அம்பேத்கரும், தென்னாட்டு அம்பேத்கர் ஆன பெரியாரும் புத்தரை தங்கள் தலைவராக பாவித்து, பவுத்தத்தின் தொடர்ச்சியாகவே தங்கள் இயக்கத்தைப் பிரகடனப்படுத்தினர்.

பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் நடந்த போரே இந்தியத் துணைக்கண்ட வரலாறு என்றார் அம்பேத்கர். அந்த வரலாற்றின் தொடர்ச்சியே இன்றும் நீடிக்கிறது.

எதிரிகளால் வெல்ல முடியாதது பவுத்தம். இந்து ஆன்மீகத்துடன் தானுமாய்இ தன்னுடன் இந்து ஆன்மீகமுமாய் பொருந்திய முடிச்சுகள் இறுகிய நிலையிலும் விவேகாநந்தரால் பவுத்தத்தை மறுக்க மறைக்க முடியவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.

எரிந்து கொண்டேயிருந்த இந்த ஆன்மீக உணர்வுகளால் அமைதியடைய மறுத்து, மறுத்துச் சுழன்ற தன் அமெரிக்க உரை வீச்சுக்குள் பவுத்தத்திடம் அவர் சரணடைந்த பகுதிகள் எதிரிகளால் மறைக்கப்பட்டு விட்டது அந்த மறைக்கப்பட்ட உண்மைதான், ஏறத்தாழ 50 ஆண்டுகளைக் கடந்து தற்போது 'பவுத்த மார்க்கம் பற்றி விவேகாநந்தர்" எனும் நூல் வெளிவந்துள்ளது.

வரலாறென்பது அதனை பதிவு செய்வோரின் கண்ணொட்டத்திற்கொப்ப கட்டியெழுப்பப்படுகின்ற ஒவ்வொன்றாகும் என்று ஆகிவிட்ட இக்காலகட்டத்தில், பார்ப்பன 'சங்பரிவார்' கும்பல்கள் பொத்தி வைப்பதை புட்டுபுட்டு வைக்க வேண்டியவர்களாகிறோம்.

பூர்வீகம் பற்றிய பிரச்சினையில், பார்பனியம் இன்று உக்கிரமான அதன் முகத்தை வெளிக்காட்ட துவங்கியுள்ளதை முறியடிக்க, வரலாற்றை நம் அதிகாரத் தேடலுக்கான ஆயுதமாக்கிக் கொள்வோம் என்று நவின ஆய்வாளர்கள் சூழூரைக்கின்றனர்.

'பவுத்த மார்க்கம் அரசியல் சமூகவியலில் காட்டுகிற கவனமும் அக்கறையும் ஊக்கமும் அதன் கொள்கை – கோட்பாடுகளும் அதிமுக்கியமத்துவம் வாய்ந்தததாகும்.

முதன்முதலில் உலகத்தையே வெற்றி பெறும் மாபெரும் சக்தியாக பவுத்த மார்க்கம் தோன்றியதுதான் எல்லாவற்றையும் விடத் தனிச்சிறப்பு தரும் தன்மையாகும்."

'பவுத்த மார்க்க இந்தியா" என்பது இன்று இரவு பேசப் பட இருக்கும் பொருளாகும். அநேகமாக நீங்கள் யாவரும் புத்தருடைய வாழ்க்கையைப் பற்றி எட்வின் அர்னால்டு எழுதியுள்ள கவிதை நூலைப் பற்றி அறிந்து படித்திருப்பீர்கள். மேலும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் ஏராளமாக உள்ள 'பவுத்த தர்மம்" பற்றிய நூல்களை உங்களில் சிலர் அறிவுத் தாக உணர்ச்சியோடு படித்திருப்பீர்கள்.

பவுத்த மார்க்கமே எல்லாப் பொருள்களிலும் கவனமும், அக்கறையும், ஊக்கமும் ஊட்டும்; பொருளாகும். ஏனென்றால் அதுதான் முதன்முதலில் சரித்திரமுள்ள உலக மார்க்கமாக கிளம்பியது. இந்தியாவிலும், உலகின் ஏனைய பகுதிகளிலும் பவுத்த மார்க்கத்திற்குமுன் பெரிய பெரிய மதங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், அவைகள் யாவும் அந்தந்த பகுதி மக்களோடு அடங்கிவிட்டன.

பழங்கால இந்துக்கள், யூதர்கள், பாரசீகர்கள் பெரிய மதத்தைக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒரு இனத்தின் அமைப்பாகவே இருந்தது. ஆனால், பவுத்த மார்க்கத்திற்கு தான் உலகத்தையே ஆட்கொள்ளும் ஒரு மாபெரும் சக்தியாக தோன்றி, வளர்ந்திடும் வல்லமை இருந்தது.

பவுத்த மார்க்கம் அறிவுறுத்திய உண்மைகள், தத்துவங்கள் அது மானிடர்களுக்கு விடுத்த செய்திகள் புரட்சிகரமானது. இதனால் மனிதகுலம் ஒரு பெரிய புரட்சியின்முன், எழுச்சியின் முன் எழுந்த நிற்கிறது. பவுத்த மார்க்கம் பிறந்த ஒரு சில நூற்றாண்டுகளிலேயே உலகம் முழுவதும் பரவி விட்டது. பவுத்த மார்க்கம் மானிடர்களை மேலும் மேலும் ஊடுருவி நின்றது. இந்தியத் துணைத் கண்டத்தை எடுத்துக் கொண்டாலும் மூன்றில் இரு மடங்கு மக்களைக் கவர்ந்து விட்டது.

ஆனாலும், இந்தியத் துணைக்கண்டத்தில் பவுத்த மார்க்கம் வியாபிக்க பழைய இந்துக்கள் விடவில்லை. யூதர்களிடம் கிறிஸ்துவம் என்ன கதியை அடைந்ததோ அதேகதியைத்தான் பவுத்த மார்க்கம் இந்துக்களிடம் அடைந்தது. பெரும்பான்மை யூதர்கள் கிறிஸ்துவத்தை விட்டுத் தள்ளியே இருந்தார்கள், அதுபோலவேதான் இத்துணைக் கண்டம் பவுத்த தர்மத்தை விட்டுத் தள்ளி நின்றது. அதனால்தான் பழைய இந்துமதம் உயிரோடு இருக்க முடிந்தது.

கிறிஸ்துவம் யூதர்களையெல்லாம் தன்னகத்தே கொண்டு வரமுடியாவிட்டாலும், அது நாட்டையே கவர்ந்து விட்டது. யூதர்களுடைய பழைய மதம் கிறஸ்தவத்தால் குறுகிய காலத்தில் வெல்லப்பட்டு விட்டது. அது யூதர்கள் மதம் அங்குமிங்கும் உலகத்தில் உயிர்வாழ்கிறது. ஆனால், இந்தியத் துணைக்கண்டத்தில் சக்திவாய்ந்த பவுத்த மார்க்கம் இந்து மதத்தால் உறிஞ்சப்பட்டுவிட்டது.

இன்று புத்தர் என்றாலே இந்தியத்துணைக்கண்டம் முழுமைக்கும் தெரியாது. இந்தியர்களில் 99 சதவிகிதம் பேரைவிட உங்களுக்கு பவுத்த மார்க்கம் பற்றி அதிகமாகத் தெரியும். இந்தியர்களில் யாருக்காவது புத்தரைப் பற்றி மிக அதிகமாகத் தெரிந்திருந்தால், அது அவரது பெயர் மட்டுந்தான். 'ஓ! புத்தர் ஒரு பெரிய மகான்; கடவுள் அவதாரம்." அவ்வளவு தான்; அதோடு முடிந்துவிடும். ஆனால், பவுத்த மார்க்கம் ஆசியா கண்டத்தின் மற்ற நாடுகளில் எல்லாம் பரவி உள்ளது.

இன்றும் பவுத்த மார்க்கந்தான் அதிக எண்ணிக்கையில் தன்னைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு விளங்குகின்றது. எல்லா மதங்களின் போதனைகளையெல்லாம் மாற்றி அமைத்துள்ளது பவுத்த மார்க்கம்தான். பவுத்த மார்க்கம் அதிகமாகப் பரவியது ஆசியாமைனரில்தான்.

பவுத்த மார்க்கம் வாழ்வதா, அல்லது பின்னால் தோன்றிய கிறிஸ்துவப் பிரிவுகள் வாழ்வதா என்று ஒரு சமயம் சண்டையாகவே இருந்தது. முற்காலக் கிறிஸ்துவர்களில் மற்றப்பிரிவினர்கள் பவுத்த மார்க்கத்தையே தழுவி வந்தர்கள். எல்லாப் பிரிவினரும் அந்த வியப்புமிக்க நகரமாகிய அலெக்ஸாண்டிரியாவில் ஒரு சமூகம் போல் இணைந்தே விட்டார்கள். ரோமாபுரிச்சட்டத்தின் கீழ் ஏற்பட்ட இந்த இணைப்பிலிருந்துதான் கிறிஸ்துவம் உண்டாயிற்று.

பவுத்த மார்க்கம் அரசியல் சமூகவியலில் காட்டுகின்ற கவனமும், அக்கறையும் ஊக்கமும் அதன் கொள்கை – கோட்பாடுகளும் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். முதன்முதலில் உலகத்தையே வெற்றிபெறும் மாபெரும் சக்தியாக பவுத்த மார்க்கம் தோன்றியது தான் எல்லாவற்றையும் விடத் தனிச்சிறப்புத்தரும் தன்மையாகும்.

விவேகாநந்தர் சொற்பொழிவில் :

இந்தியா எப்படி பவுத்த மார்க்கத்தால் தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டது என்பதைக் கூற விரும்புவதோடு, அதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ளவும், பவுத்த மார்க்கம் எதனால் வளர்ந்தது என்பதை தெரிந்து கொள்ளவும் வேண்டுமென்ற உள்ளக்கிடக்கையும் எனக்கு இருப்பதால் புத்தர்பிரான் பிறந்தபோது இந்தியா எந்தநிலையில் இருந்தது என்பது பற்றி நாம் சில சங்கதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

'இந்துக்கள் கருத்துப்படி, வேதங்கள் எழுதப்படவில்லை. கடவுளோடு கூடவே இருப்பதாகும். கடவுள் எல்லை இல்லாதவர். அதுபோலவே அறிவுமாகும். இந்த அறிவு மூலம் தான் உலகமே உண்டாக்கப்பட்டதாகும். எல்லாம் வேதத்தால் பிணைக்கப்பட்டதாகும்; அதற்கும் அப்பால் ஒன்றுமில்லை. ஏனென்றால் கடவுள் பற்றிய அறிவுக்கும் அப்பால் நீங்கள் செல்ல முடியாது." இதுதான் இந்திய வைதீகத் தன்மையாகும்."
- விவேகாநந்தர்

முன்பே இந்தியாவில் வேதங்களைக்கொண்ட ஒரு விரிந்த மதம் இருந்தது. இந்த வேதங்கள் ஒரு இலக்கியக்குவியல் போன்று இருந்ததே தவிர பழைய பைபிள் போன்று நூல் வடிவத்தில் இல்லை; இப்பொழுது பைபிள் என்பது பல்வேறு காலங்களைச் சார்ந்த இலக்கியக் குவியல்களாகவே இருக்கிறது; ஏனென்றால் இதை எழுதினவர்கள் பலபேர். இதுபோலவே வேதங்களும் ஒரு இலக்கியக் குவியலே.

உண்மையில் யாராவது இந்த வேதக்குவியல்களை – நூல்களை - கண்டிருக்கிறார்களா என்பது தெரியாது. இந்தியாவில் கூட யாரும் பார்த்திருக்க முடியாது. ஒரு பெருங்குவியல் என்றே சொல்ல வேண்டும்.

இந்த வேத இலக்கியங்கள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இருந்து வருகின்றன. இவ்வேதங்களைப் பற்றிய கருத்து வைதீகம் நிறைந்ததாகும். நூல்களைப் பெரிதாகக் கருதுவதே வைதீக மனப்பான்மை என்று நீங்கள் புகார் செய்திறீர்கள். இந்துக்களுடைய வைதீக மனப்பான்மையை நீங்கள் அறிந்தால் என்ன சொல்லுவீர்களோ? வேதங்கள் கடவுளிடமிருந்து நேரே வந்தவை என்றே இந்துக்கள் நினைக்கிறார்கள். வேதங்கள் மூலம்தான் கடவுள் இந்த உலகத்தையே படைத்ததாக அவர்கள் நம்புகிறார்கள்.

'இன்று உலகம் இயங்குவதும் அந்த வேதங்களினால்தான்; அந்த வேதங்களில் இந்த உலகம் இடம் பெற்றிருப்பதே காரணம்" என்கிறார்கள். பசுமாடு இருக்கிறது என்றால் அதுவும் வேத்தில் சொல்லப்பட்டிருப்பதுதான் என்பது அவர்கள் நம்பிக்கை. இந்த இடத்தில்தான், கிறிஸ்துவர்கள் கூறியிருப்பது போல உலகத் தொடக்கத்தில் 'சொல்" இருந்தது என்றால் அது கடவுளிடம் தான் இருந்தது என்ற தத்துவம் இருப்பதை நாம் அறியமுடியும்.

இது பழங்கால இந்தியாவின் கற்பனையாகும். அதன் மீதுதான் வேதங்களைப் பற்றிய கருத்தே அமைந்துள்ளது. இதன் ஒவ்வொரு சொல்லும் கடவுளுடையதுதாம்! இதில் வேறு எவற்றுக்கும் இடமில்லை. இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தச் சொல்தான் உலக வெளித்தோற்றத்திற்கே காரணமாம். 'அந்தச்சொல்தான் வேதம்; வேதமொழி சமசுகிருதம்; கடவுள் ஒரு சமயம் பேசினார் ; அவர் சமசுகிருதத்தில் பேசினார் ; அதனால் சமசுகிருதம் தெய்வீக மொழி; மற்ற மொழிகளெல்லாம் மிருகக் கூச்சலாகும்; சமசுகிருதம் பேசாத நாடு மிலேச்ச காட்டுமிராண்டிநாடு. அவர்கள் பேசவில்லை; கழுதைகள் போன்று கனைக்கிறார்கள். ஆனால் சமசுகிருதம் தான் புனித மொழியாகும்," இவ்வாறெல்லாம் இந்துக்கள் கருதுகிறார்கள்.

ஆனால் எங்கள் பைபிள் இம்மாதிரி சொல்லவில்லையே, என்று ஒரு இந்துவிடம் சொன்னால் அவன் என்ன சொல்வான் தெரியுமா? 'ஓ! உங்கள் பைபிளா? அது சரித்திரம் பெற்ற ஒரு சிசு. வேதம் தவிர உலகத்தில் வேறு ஒரு பைபிள் ஏது? வேறு ஒரு வேத நூல் கூட இருக்க முடியுமா? எல்லா அறிவும் கடவுளிடம் உள்ளது; அவர் இரண்டு அல்லது அதிகமான பைபிள்கள் மூலம் போதிக்கிறார் என்றா கருதுகிறீர்கள்?

கடவுள் அறிவுதான் வேதத்தில் உள்ளது. கடவுள் தவறு செய்துவிட்டார் என்றா சொல்லுகிறீர்கள்? அதன்பிறகு நல்ல போதனைகளை செய்யும் பொருட்டு வேறு ஒரு பைபிளை உண்டாக்கினார் என்றா நினைக்கிறீர்கள்? வேதம் போன்ற ஒரு பழைய நூலை நீங்கள் காட்ட முடியாது; மற்ற எல்லாமே அதிலிருந்து எழுதப்பட்டது தான்." என்று கூறுவான். நீங்கள் எது சொன்னாலும் இந்துக்கள் கேட்கவே மாட்டார்கள். ஒரு கிறிஸ்துவர் ஒரு பைபிளைக் கொண்டு வந்து காட்டட்டும்! இந்துக்கள் உடனே, 'அது ஒரு பித்தலாட்டம்; கடவுள் ஒரு தரம் தான் பேசுவார் அவர் தவறு செய்யவே மாட்டார்" என்பார்கள்.

இப்பொழுது இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள். இந்த வைதீகம் பயங்கரமானது. ஒரு இந்துவை, 'நீங்கள் ஏன் சமூகத்தை சீர்திருத்தம் செய்யக்கூடாது? இம்மாதிரி காரியங்களையெல்லாம் ஏன் செய்யக்கூடாது?" என்று கேளுங்கள். அவன் உடனே இம்மாதிரி திருப்பிக் கேட்பான்; 'அம்மாதிரி செய்யும்படி வேதத்தில் இருக்கிறதா? இல்லாவிட்டால் அம்மாதிரி செய்ய நான் கவலைப்படவே மாட்டேன்."

நீங்கள் ஒரு 500 ஆண்டுகள் காத்திருங்கள். இப்போதுள்ள சமூக அமைப்பே சரி என்று உங்களுக்குத் தோன்றும். நீங்கள் மறுபடியும் 'உங்கள் சமூக அமைப்பு சரியில்லை என்று சொல்லிப் பாருங்கள். உங்களுக்கு எப்படித் தெரியும்? எங்கள் சமூக அமைப்பு மேலானது. 500 ஆண்டுகள் கழிந்தால் உங்கள் சமுதாய அமைப்பு தகர்ந்து விடும். இந்தப் பரிசோதனை என்பது தகுதிமிக்கதே பிழைத்திருக்கும் என்பதாகும்.

'நீங்களும்தான் வாழ்கிறீர்கள். ஆனால் உலகத்திலேயே 500 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த சமுதாயம் ஒன்றிருக்கிறதா? எங்கள் சமூகத்தைப்போல! நாங்கள் எல்லாக் காலத்திலும் சேர்ந்தே வாழ்ந்து வருகிறோம்." இம்மாதிரி இந்துக்கள் பதில் கூறுவார்கள். அப்பப்பா! பயங்கரமான வைதீகம். நான் அந்த வைதீகத்தைக் கடந்து விட்டேன்.

vivekananda 400'இயற்கையால் அருகிலேயே ஜீவ நதி ஒடிக் கொண்டிருந்தாரும் அத்தண்ணீரைத் தொட்டுக்குடிக்க வெகு மக்களுக்கு உரிமை இல்லாததால் தாகத்தால் மக்கள் மடிந்தனர். இந்தச் சமயத்தில்தான் அந்த மனிதர் - அந்த மாபெரும், புத்தர்பெருமாள் பிறந்தார்." - விவேகாநந்தர்

சமணர்கள் தங்கள் போதனையை செயல்முறையில் நடத்தினர். மேலும் மேலும் இந்த நல்ல கொள்கைப்படி செயலாற்றினர். இது மிகவும் வியக்கத்தக்க கொள்கையாகும். நாம் ஒழுக்கம் என்று எதையெல்லாம் கூறுகிறோமோ அதையெல்லாம் 'தீமை செய்யாதே, நல்லது செய்" என்னும் தத்துவத்தின் மூலம் மிகவும் எளிதாக வெளிப்படுத்துகின்றனர்.

இம்மாதிரிப் போதித்த துறவிகள் புத்தர் பிரானுக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னிருந்தார்கள். புத்தர் பெருமான் ஏசுநாதருக்கு 550 ஆண்டுகள் முன்பிருந்தார். சமணர்கள் பிராணி வர்க்கத்தை 5 பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். வளர்நிலை மிகக் குறைந்த பிராணிக்கு ஒரே ஒரு உறுப்புத்தான். அது, தொட்டால் உணர்ச்சி உண்டாவது; அடுத்த பிரிவுக்கு உணர்ச்சியும், ருசிபார்த்தலும்; மூன்றாவது பிரிவுப்பிராணிகள் உணர்ச்சி, ருசிபார்த்தல், கேட்கும் சக்தி - மூன்றும் பெற்றவை 4-ஆவது பிரிவைச் சேர்ந்த பிராணிகள் தொட்டால் உணரவும், ருசிபார்க்கவும், கேட்கவும், பார்க்கவும் முடியும்; அடுத்த பிரிவுக்கு அய்ந்து பொறிகள் உண்டு. முதல் இரண்டு இனங்களும் கண்ணுக்குத் தெரியாதவை. நீரில் எங்கும் இருப்பது. இவைகளைப் பற்றி கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் அறிந்துள்ளார்கள். அதற்கு முன் அவை பற்றி ஒன்றும் தெரியாது.

ஆனால் ஒருதுறவி உங்கள் வீட்டுக்கு வந்து நீங்கள் வெந்நீர் கொடுத்தால், நீரில் இருந்த உயிர்களைக் கொன்றபாவம் உங்கள் தலை மீதாம். அதனால், அத்தண்ணீரை அவர் பருகுவார். இந்த மாதிரி வினோதமான அளவுக்கு அவர்கள் தங்கள் கொள்கையைக் கையாண்டனர். ஒரு உதாரணம:; குளிக்கும்போது அழுக்குத் தேய்த்தால் கிருமிகள் கொல்லப்பட்டுவிடுமாம்! அதனால் இத்துறவிகள் குளிக்கமாட்டார்கள். தான் இறந்தாலும் பரவாயில்லை என்பது ஒரு துறவிகள் வாதம்! ஒரு உயிரைக் காப்பாற்ற அவர் தன்னையே கொன்று கொள்வார்.

சமணர்களைப் போல மற்றப் பிரிவுகளைப் சேர்ந்த துறவிகளும் இருந்தனர். இவர்கள் போக்கு இப்படி இருக்க, அரசர்களுக்கும் புரோகிதர்களுக்கும் இடையில் அரசியல் போட்டி, பூசல், பொறாமை இருந்து வந்தன. இன்னும் பெரியதொரு பிரச்சனையும் இருந்தது. அதாவது பொதுமக்கள், ஆரியர்களுக்குரிய உரிமைகள் தங்களுக்கும் உண்டு என்று வாதாடினர்.

இயற்கையால் அருகிலேயே ஜீவநதி ஓடிக்கொண்டிருந்தாலும் அத்தண்ணீரைத் தொட்டுக்குடிக்க அவர்களுக்கு உரிமை இல்லாததால் தாகத்தால் மக்கள் மடிந்தனர். இந்தச் சமயத்தில்தான் அந்த மனிதர் - அந்த மாபெரும் புத்தர் பெருமாள் பிறந்தார். உங்களில் அநேகம் பேருக்கு அவரைப் பற்றியும், அவர் வாழ்க்கையைப் பற்றியும் தெரியும்.

எந்த ஒரு பெரிய மனிதனைப் பற்றியும் அதிசயங்களும், கட்டுக்கதைகளும் இட்டுக்கட்டிக் கூறுவதைப்போல் இல்லாமல் புத்தர்பெருமாள் என்பவர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவர். உலக தத்துவ ஞானிகளில் ஒருவரும் ஆவார். ஒருவர் மிகப் பழங்காலத்தவர், அவர் புத்தர்; இன்னொருவர் பிற்காலத்தவர், அவர் முகமது நபி.

ஏனென்றால் அவர்களைப் போற்றுகிறவர்களும் சரி, அவர்களுக்கு எதிரிகளாய் இருப்பவர்களும் சரி, அவர்கள் சரித்திர மனிதர்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ஆகையால், அப்பேர்ப்பட்டவர்கள் இருந்தார்கள் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். மற்றவர்களைப் பற்றி அவர்கள் சிஷ்யர்கள் சொல்வதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. 'பூமியிலிருந்து ஒரு குரல் வந்தது. அந்தக்குரல், 'ஏன் இம்மாதிரி வீண் முயற்சி செய்கிறீர்கள்?" என்று கேட்டுவிட்டு, புத்தரை நோக்கி, 'உன்னை யார் பார்த்தாலும் அவன் புனிதமடைந்து விடுவான், அதனால் எங்களை யாரும் வணங்கப்போவதில்லை." என்றது. அதனால் அவர்கள் முயற்சி வீண் என்றும், தூய்மையை யாரும் கொல்லமுடியாது என்றும் சொன்னது.

'நீங்கள் புத்தரைப்போல் திறமையோடும், துணிவோடும் ஒருமணிநேரம் இருக்க முடியுமா? என்று உங்கள் மனதைக் கேளுங்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு நிமிடம் கூட என்னால் முடியாது. நான் ஒரு கோழையாகி விடுவேன். நான் பலக்குறைவானவன், ஒரு கோழை.- விவேகாநந்தர்

நினைவுகொள்ளத்தக்க புத்தருடைய வார்த்தைகள்:-

'ஒரு பழைய நூல் கூறுகிறது என்பதால் நம்பாதீர்கள்; உங்கள் பெற்றோர்கள் சொன்னார்கள், அதனால் நம்ப வேண்டுமென்று நம்பாதீர்கள். உங்களைப் போன்ற மற்றவர்கள் நம்புகிறார்கள் என்று நம்ப வேண்டாம். ஒவ்வொன்றையும் பரிசோதியுங்கள், ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்யுஙக்ள், அதன் பிறகு நம்புங்கள். பலருக்கு நன்மை தரும் என்றால் அதை எல்லோருக்கும் கொடுங்கள்." இவ்வார்த்தைகளோடு புத்தர் மரணமடைந்தார்.

இவருடைய சீரிய மனோநிலையைப் பார்த்தீர்களா? கடவுள்களா? தேவதைகளா? இப்படிப் போன்றவரல்லர் அவர். கண்டிப்பானவர். நிதானமான அறிவுள்ளவர். இறக்கும் தருவாயிலும் அவர் மூளையின் ஒவ்வொரு உயிர் அணுவும் முற்றிலும் பக்குவநிலையில் இருந்தது. எவ்வித ஏமாற்றத்துக்கும் இடமில்லை. என் கருத்து என்னவென்றால், ஆகா! அந்த பலத்தில் ஒரு சிறிது எனக்கிருந்தால்...!

மிகமிக நிதானமுள்ள தத்துவ ஞானி புத்தர். உலகம் கண்ட மிகத்திறமை வாய்ந்த, சார்ந்த சொரூபமான பேராசிரியர். கொடுமை மிக்க பார்ப்பனர்களின் அதிகாரத்திற்கு அவர் தலை வணங்கியதில்லை. இல்லை! இல்லை! நேர்மையானவர், எங்கும், எதிலும் அப்படியேதான்.

இன்னல் படுவோரைக் கண்டு அழுவார்; கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவார் இன்பமாக இருப்பவரோடு இன்பமாக இருப்பார் பலமிகுந்தரோடு பலமிக்கவர். எங்கும் புத்தர் ஒரேமாதிரியான தெளிந்த அறிவுடையவர்; திறமைசாலி.

இந்துக்கள் கருத்தில் ஆத்மா என்று கருதப்படும் ஒன்று மனிதர்களிடம் இருப்பதாகக் கூறுவதை புத்தர் மறுத்தார். ஆதி அந்தமில்லாத, நிரந்தமான ஒன்று இருப்பதாக நம்பப்படும் பிரம்மாவையும் மறுத்தார். நிரந்தரமாக எதுவும் இருப்பதற்கு ஆதாரமே இல்லை என்றார். எல்லாம் மாறும் தன்மை வாய்ந்த ஒரு பெருங்கூட்டமேயாகும். தொடர்ச்சியாக மாறுகின்ற எண்ணத்தொகுப்பைத்தான் நாம் 'மனம்" என்று அழைக்கிறோம்.

'தீப்பந்தம்தான் ஊர்வலத்தை நடத்திச் செல்கிறது. ஒரு வட்டம் என்பது ஏமாற்றும் உருவமே. ஒரு ஆற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அது எப்போதும் தொடர்ந்து ஒடிக் கொண்டேயிருக்கும். ஒவ்வொரு கணமும் புதிது புதிதாகச் செல்லுகின்ற தண்ணீர்க் கூட்டமே ஆறு. அதுபோலவே இந்த உயிர்; அதுபோலவே உடல்; அதுபோலவே மனம். புத்தரது நோக்கத்தை நான் புரிந்து இருக்கிறேன். ஆகா! அது மகத்தான நோக்கம்! இந்த உலகத்தின் சாபக்கேடு சுயநலமென்று கூறுகிறோம். நாம் சுயநலவாதிகளாக இருக்கிறோம்."

'நமது சுயநலத்தில்தான் அந்த சாபக்கேடு அடங்கியுள்ளது. சுயநலத்துக்கு எவ்வித உள்நோக்கமும் இருக்கக்கூடாது. எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆறுபோன்றவர்களே நீங்கள். உங்களுக்குக் கடவுள் தேவை இல்லை; ஆத்மா இல்லை; உங்கள் கால்கள் மீதே நீங்கள் நில்லுங்கள். நன்மைக்காகவே நன்மை செய்யுங்கள்;" தண்டனைக்குப் பயந்தோ, அல்லது எங்காவது செல்ல நேரிடுமென்றோ நன்மை செய்யவேண்டாம். நிதான அறிவோடும், உள்நோக்கம் இல்லாமலும் இருங்கள்."

புத்தருடைய மனோபலத்தை நினைக்கும்போது எனக்குப் பொறாமை ஏற்படுகிறது. நீங்கள் அவரைப்போல் திறமையோடும், துணிவோடும் ஒருமணிநேரம் இருக்க முடியுமா? என்று உங்கள் மனதைக் கேளுங்கள் என்னைப் பொறுத்தவரை அய்ந்து நிமிடம்கூட என்னால் முடியாது. பிறர் உதவியை விரும்புவேன். நான் பலக்குறைவானவன்; ஒரு கோழை.

அந்த மாபெரும் பலசாலியை நினைத்ததுமே என் உடம்பில் சூடேறுகிறது. அந்த பலத்தை நாம் அணுகவே முடியாது! இந்த உலகம் அப்படி ஒரு சக்தியைக் கண்டதே இல்லை! அது போன்ற சக்தியை நான் இன்னும் பார்த்ததே இல்லை. நாமெல்லாம் பிறப்பிலேயே கோழைகள். நம்மை நாம் காப்பாற்றிக் கொண்டால் போதும், வேறு எதற்கும் நாம் தகுதியில்லை. நம்முள்ளம் எப்போதும் மிக அதிகமான பயம் குடிகொண்டுள்ளது. நம்மிடம் உள்நோக்கம் இருக்கிறது. நம்முடைய சொந்த சுயநலம் நம்மை பெயர்போன கோழைகளாகச் செய்கிறது. இந்த நிலையில் நின்று புத்தர் கூறுகிறார்: நல்லது செய்யுங்கள்; ஏனென்றால் அதுநல்லது." மேற்கொண்டு கேள்விகள் கேட்கக்கூடாது; அதுபோதும்.

கட்டுக்கதை, மூடத்தனம் மூலம் நன்மை செய்ய முடியும் என்பவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துவிட்டால் அவர்கள் செய்வது தீமையே. நன்மைக்காகவே நன்மை செய்பவன்தான் நல்லவன். அதுதான்மனிதப் பண்பு. 

'மனிதனிடமிருந்து என்னதான் தங்குகிறது?" என்று புத்தரைக் கேட்டார்கள். அதற்கு, 'ஒவ்வொன்றும் - ஒவ்வொன்றும். ஆனால் மனிதனிடம் என்ன இருக்கிறது? உடல் இல்லை; ஆன்மா இல்லை, குணம்தான். முடிவில்லா காலத்திற்கு நிலைத்திருப்பது குணம்தான். காலத்தைக்கடந்து மறைந்துவிட்ட எல்லோரும் நமக்காக விட்டுச் சென்றுள்ளது அவர்களுடைய குணங்களேயாகும்."

'அவைகள் மனித வர்க்கத்திற்கு நிரந்தர செல்வங்களாகும். இந்த குணாதிசயங்கள் என்றென்றும் செயலாற்றிக் கொண்டிருக்கின்றன," என்றார். புத்தரைப் பற்றி, நாசேரேத்தைச் சேர்ந்த இயேசு பற்றி, என்ன மிச்சம்? இந்த உலகம் அவர்களுடைய குணாதிசயங்களை நிரம்பப் பெற்றுள்ளது. இது மகத்தான தத்துவம்.

புத்தர் மேற்கொண்டு என்ன செய்தார்? அவருடைய வேலைமுறை அமைப்பே அடுத்தவேலை. துறவிகளை ஒன்று சேர்த்து ஒரு சங்கமாக அமைத்தார். அவர் ஏற்படுத்திய சங்கம் ஒரு மகத்தான சக்தியாக வளர்ந்தது. அது இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெருந்தொண்டு செய்தது.

பார்வை நூல்கள்:

கிருஷ்ண தம்பட் பௌத்தம் வெளியீடு 49ஃ2 சோலையப்பன் தெரு மயிலாப்பூர் சென்னை-600 004 முதல்பதிப்பு 2007.

குளத்தூரான். க பௌத்தமும் கலைகளும் பதிப்பு சனவரி 2006 ராஜாமணி வெளியீட்டகம் 45, ஸ்ரீராம் நகர் மாதாக் கோட்டை சாலை தஞ்சாவூர்-613005

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுகள் நூற்றாண்டு விழா பதிப்பு ஸ்ரீராமகிருஷ்ண மடம் மயிலாப்பூர், சென்னை-4 

வள்ளிநாயகம் - ஏபி. பவுத்த மார்க்கம் பற்றி விவேகாநந்தர் முதல்பதிப்பு: ஏப்ரல் 14-2002 வெளியிட்டோர்: ஜீவசகாப்தன் பதிப்பகம் திருமூலர் வீதி, அலமேலு நகர் எஸ். ஆலங்குளம், மதுரை-17.

- மா.மாணிக்கம், முனைவர்பட்ட ஆய்வாளர், சைவ சித்தாந்தத் தத்துவத்துறை, சமயங்கள் தத்துவம் மற்றும் மனிதநேயச் சிந்தனைப்புலம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை – 625 021

Pin It