பவுத்தம்: ஆரிய திராவிடப் போரின் தொடக்கம் - 12

கொல்லாமை, துன்புறுத்தாமை போன்ற (அகிம்சை)கொள்கைகளைப் பெரிதும் வலியுறுத்துகிறது பவுத்தம்.அப்படியானால், பவுத்தர்களை, பவுத்தத் துறவிகளை  இறைச்சி உண்ண புத்தர் அனு மதித்தாரா அல்லது மறுத்தாரா?

“கொல்லான் புலாலை மறுத்தான் ஐ” இந்த மூன்று சொற்களில், இரண்டு செய்திகளைத் தெளிவாகத் தருகிறார் திருவள்ளுவர்.ஒன்று, உயிர்களைக் கொல்லாதவன். மற்றொன்று இறைச்சி உண்ணாதவன். உயிர்க்கொலை செய்யாத ஒருவன் இறைச்சி உண்ணலாம், உண்ணாமலும் இருக்கலாம்.இவ்விரண்டையும் அகிம்சைப் போர் வையில் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்தப் பார்வையில் தான் பவுத்தத் தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பிரம்மஜல சுத்தா சொல்கிறது, “புத்தர் வேகவைக்காத இறைச்சியை ஏற்கமாட்டார். மறுத்துவிடுவார்”யுவான்சுவாங் சொல்கிறார், “தேரவாத (ஈனயான)ப் பிரிவைச் சேர்ந்த துறவிகள் மூன்று விதமான இறைச்சியை உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்”“மீனும் இறைச்சியும் மூன்று வகையில் உண்பதற்குத் தகுதியானவை. தனக்காகக் கொல்லப்படுவதைப் பார்க்காமலும், கேள்விப்படாமலும், அதை அறியாமலும் இருந்தால் அந்த இறைச்சி உண்பதற்குத் தகுதியானவையாகும்” என்கிறது வினய பிடகம்.

டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார், “பவுத்தத் துறவிகள் (இறைச்சி, மீன் அல்லாத) சைவ உணவு உண்பவர்கள் அல்லர். இவ்வாறு சொல்வது பலரை வியப்ப டையச் செய்யலாம். அகிம்சைக்கும் பவுத்தத் திற்கும் இடையே உள்ள தொடர்பு பிரிக்க முடியாதது. அடிப்படையானது, இன்றிய மையாதது என்று மக்களிடையேநிலவும் ஆழமான நம்பிக்கையே இதற்குக் காணரம். பவுத்தத் துறவிகள் இறைச்சி உணவைத் தொடுவதில்லை, அதனை அவர்கள் தவிர்த்து வந்தார்கள் என்று பொதுவாகக் கருதப்பட்டு வந்தது. இது தவறாகும். பவுத்தத் துறவிகள் மூன்று வகையான இறைச்சியை உண்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்”

யுவான்சுவாங், அம்பேத்கர், வினயபிடகம் ஒரே குரலில் சொல்வது மூன்று வகையான அனுமதிக்கப்பட்ட இறைச்சி உண்பதற்குரியன. அது என்ன மூன்று வகையான இறைச்சி?

1. ஒரு பவுத்தத் துறவி தான் உண்ணும் இறைச்சிக்கு உரிய விலங்கு கொல்லப் படுவதை நேரில் பார்க்காமல் இருக்க வேண்டும்.

2. அந்த இறைச்சிக்கு உரிய விலங்கு தனக்காகத்தான் கொல்லப்பட்டது என்ப தைக் கேள்விப்படாமல் இருக்க வேண்டும்.

3. அந்த இறைச்சிக்கு உரிய விலங்கு தனக்காகத்தான் கொல்லப்பட்டிருக்குமோ என்ற ஐயம் இல்லாமல் அதாவது அறியாமல் இருக்க வேண்டும்.

இந்த மூன்று வகைப்பட்ட இறைச்சி பவுத்தத் துறவிகளுக்கு அனுமதிக்கப்பட்ட உணவு என்கிறது பவுத்தம். இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட மூன்று வகை இறைச்சி என்பதில் ஏதோ நெருடல் இருப்பது போலத் தெரிகிறது.

ஓர் இறைச்சிக் கடையில் இருக்கும் விற்பனைக்கான இறைச்சி, எந்த ஒரு தனிமனிதனின் உணவுக்கான இறைச்சி என்று சொல்லிவிட முடியாது.ஒரு குடும்பத்தில் இருக்கும் நான்கு பேருக்காக ஒரு கோழி கொல்லப்பட்டது என்றால், அந்த இறைச்சி அக்குடும்பத் தலைவ னுக்காகக் கொல்லப்பட்டது அல்லது தலை விக்காகக் கொல்லப்பட்டது என்று கருத முடியாது. அது பொதுவாகக் கொல்லப்பட்ட இறைச்சி.

தவிர, உணவுக்கான இறைச்சிக்குரிய விலங்கை, உண்பவர்கள் முன்னிலையில் அவர்கள் பார்க்கக் கொல்லப்படுவதும் இல்லை.காணாமை, கேள்விப் படாமை, அறியாமை என்ற மூன்றும் இங்கே ஒரே தன்மை யைக் குறிக்கும் முன்று சொற்கள். இதை ஒரு பெரிய சித்தாந்தம் என்று சொல்லமுடியாது.ஆகவே அனுமதிக்கப்பட்ட மூன்று வகை உணவு என்பது ஆரிய மகாயானத்தின்  திருகு வேலையாகத்தான் இருக்க முடியுமே ஒழிய, பவுத்தத்தில் இறைச்சி உண்பது அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதுதான் வரலாற்று உண்மை.

புத்தர் தம் 80ஆம் வயதில் மல்லர் என்ற இனக்குழுவினர் வாழும் பாவா என்ற இடத்திற்கு வருகிறார். பாவாவில் சுந்தா என்ற ஒரு கொல்லர் புத்தரை வரவேற்று, புத்தருக்கும் அவருடன் வந்த துறவிகளுக்கும் உணவு அளிக்கிறார். அந்த உணவின் பெயர் “சாகரமதவ” அது என்ன?

மகா பரிநிர்வாண சுத்தத்தில் வரக்கூடிய இந்தச் சொல்லை “இளம் பன்றிக் கறி ” என்று ராபர்ட் வாண்டே வேயர் மொழிபெயர்த் துள்ளதாகப் பேராசிரியர் அருணன் கூறுகி றார். கோசாம்பியும், இதை உறுதிசெய்திருக் கிறார். புத்தகோசர் மட்டுமின்றி அங்குத்ர நிகாயம், பஞ்சக நிபாதத்திலும் இதே செய்தி உறுதி படுத்துவதைக் காணலாம்.

புத்தரும், துறவிகளும் மாட்டிறைச்சி உண்டதற்கான சான்றுகளும் இல்லாமல் இல்லை.
மகத நாட்டின் அரசனாகவும், பவுத்தத் துறவியாகவும், பவுத்த சங்கத்தின் தலைமைத் துறவியாகவும் இருந்தவர் அசோகர். அவர் தன் கல்வெட்டுகளின் மூலம் பல செய்திகளை உலகுக்குத் தந்துள்ளார்.இதில் நமக்குத் தேவையான செய்தியை, ஸ்பாஸ்கரி என்ற இடத்தில் கிடைத்துள்ள பாறைக் கல்வெட்டு 1 தருகிறது.

“இங்கு வேள்விக்காகவோ, கேளிக்கை நிமித்தமாகவோ எந்த உயிரும் பலியிடக் கூடாது... மேன்மை தங்கிய மன்னரின் அரண்மனை சமையல் அறையில் நூற்றுக் கணக்கான உயிர்கள் கறி சமைப்பதற்காகக் கொல்லப்பட்டன. தற்போது இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும் இறைச்சி சமைப்ப தற்காக தினம் மூன்று உயிர்கள் மட்டுமே கொல்லப்படுகின்றன. அதாவது இரண்டு மயில்களும் ஒரு மானும். இதில் மான் ஒவ் வொரு நாளும் என்று கூறமுடியாது” இது தான் அந்தச் செய்தி.

இந்த ஆணையில் “இங்கு” என்று தொடக்கத்தில் வரும் சொல், இந்த ஆணை யின்படி என்றும், தலைநகரில் மட்டும் என் றும், தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் என்றும் மூன்று வகையில் பொருள் தருகிறது என்று சொல்லும் பேராசிரியர் வின்சன்ட் ஏ.ஸ்மித் தன் முடிவை இப்படித் தெளிவாகத் தருகிறார். “தலைநகரில் இறைச்சி சாப்பிடு வது தடை செய்யப்பட்டு இருந்தது என்பதை முதல் ஆணையிலேயே காணலாம். ஆனால், தலைநகர் தவிர மற்ற எல்லா இடங்களிலும் இறைச்சி உணவு இருந்தது”

அது மட்டுமல்லாமல் தன் அரண்மனை யில், தன் உணவு வகைகளில் மயிலும், மானும், இறைச்சிக்காகக் கொல்லப்படுவதை  அசோகர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள் ளார்.
ராம்பூவா என்ற இடத்தின் தூண் கல்வெட்டு 5இல் கிளிகள், குருவிகள், வாத்துகள், வவ்வால்கள், பெண் ஆமைகள், ஆற்று ஆமைகள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள், எலும்பு இல்லாத மீன்கள், மான்கள், எருதுகள், குரங்குகள், காண்டா மிருகங்கள், புறாக்கள், பெண் வெள்ளாடு கள், பெண் செம்மறி ஆடுகள், பெண் பன்றிகள் ஆகிய விலங்குகள் உணவுக்காகக் கொல்லக்கூடாது என்று அசோகர் ஆணை யிட்டு இருக்கிறார்.

கவனிக்க வேண்டிய செய்தி என்ன வென்றால், இந்தப் பட்டியலில் பசுக்கள், ஆண் ஆடுகள், ஆண் செம்மறி ஆடுகள், ஆண் பன்றிகள் போன்ற முக்கியமான, பரவலாக, அதிகமாக இறைச்சிக்கு உணவாகும் விலங்குகள் இடம் பெறவில்லை. இவை தடையின்றி பவுத்தர்களின் உணவாகியுள்ளன.ஆண்டுக்கு 56 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்கவும் விற்பனைக்கும் தடை செய்தார் அசோகர். ஒரு வேளை இது இனவிருத்தி காலமாக இருக்கலாம். எனவே மீன் உணவும் பவுத்தர்களின் உணவாக இருந்திருக்கின்றன தடையில்லாமல்.

ராம்பூவா தூண் கல்வெட்டுக் குறித்து வின்சென்ட் ஸ்மித், “மன்னர், விலங்கினங்கள் உணவுக்காகக் கொல்லப்படுவதைத் தடை செய்யவில்லை. சில கட்டுப்பாடுகளை மட்டுமே விதித்திருக்கிறார்” என்று கூறும் கருத்து மிகத் துல்லியமானது. இன்னொரு செய்தியையும் சொல்கிறார், “அசோகர், பசுவைக் கொல்லத் தடைவிதிக்காதது வியப்பாக இருக்கிறது”. இதில் வியப்பொன்றும் இல்லை.

பவுத்தம், ஆரியத்தை எதிர்த்தது. ஆரியம் பவுத்தத்தை ஒழித்துக்கட்ட முனைந்தது. யாகங்களில், வேள்விகளில் உயிர்கொலை செய்வதை பவுத்தம் எதிர்த்தது. பவுத்தத்தை எதிர்க்க ஆரியர், பூரண சைவப் பிரியர்கள் ஆனார்கள்.ஆரியர்கள் பசுவை வழிபடத் தொடங்கினார்கள். புத்தர் பசுவிடம் மட்டும் தனிப் பரிவு எதையும் காட்டவில்லை. பசுவின் இறைச்சியை தடை செய்யவில்லை. பவுத்தர் கள் பசுமாட்டு இறைச்சியையும் உண்டார்கள்.

பசுமாட்டு இறைச்சியை சாப்பிட்டவர்கள் கீழானவர்கள், தீண்டாத்தகாத சூத்திரர்கள் என்றது ஆரியம் மனு ஸ்மிருதி. அதனால் பவுத்தர்களும், கீழானவர்கள், தீண்டத்தகா தவர்களாக ஆக்கப்பட்டார்கள்.

வாசேத்தர் என்ற ஆரியர் புத்தரிடம் கேட்டார், “இறைச்சி தின்பது தீயது ஒழுக்கக்கேடு அல்லவா?”
புத்தர் சொன்னார், “நிர்வாணமா யிருத்தல், குடுமி வைத்தல், மொட்டையடித் தல், உரோமத் தோலாடை அணிதல், யாகத்தீ வளர்த்தல், எதிர்காலப் பேரின்பத்தை வாங்கித் தரப் புதிய வழிகளைக் கூறுதல் இவைதான் தீமை தருவது, ஒழுக்கக் கேடானது. வாசத்தரே, இறைச்சி உண்பது தீயதும் அல்ல ஒழுக்கக் கேடும் அல்ல”
                                                                                                                                                                               - தொடரும்

Pin It