அன்புள்ள அய்யா நெடுமாறன் அவர்களுக்கு,

வணக்கம். ஜுனியர் விகடன் இதழில் (28.04.13), “அதிகாரம் போனபின்பு கருணாநிதி ஆவேசம் காட்டுவது ஏன்?” என்னும் உங்கள் கட்டுரையைப் படித்தேன். எந்தச் சிக்கலாக இருந்தாலும், அதில் எப்படியேனும் கலைஞரை உள்ள கொண்டு வந்து அவரைத் தாக்காமலும், அவர் மீதான உங்களின் தனிமனிதப் பகையைக் காட்டாமலும் நீங்கள் ஒரு கட்டுரை எழுதினால்தான் அது வியப்பிற்குரியது. எனவே இந்தக் கட்டுரை வழக்கமான ஒன்றுதான்.

எனினும், மரணதண்டனை நாட்டைவிட்டே, ஏன் உலகை விட்டே ஒழிய வேண்டும் என்று கருதுபவனும், ‘மரணதண் டனை ஒழிப்புப் பரப்புரைப் பயணத்தில்’ சென்னை முதல் கன்னியாகுமரி வரை உங்கள் தலைமையில் முழுமையாகக் கலந்துகொண்டவனும் நான் என்னும் உரிமையிலும், அக்கோரிக்கையின் மீதுள்ள உறுதியிலும் இத்திறந்த மடலை உங்களுக்கு எழுதுகின்றேன்.

மரணதண்டனைக்கு எதிரான மனிதநேயக் குரல்கள் இன்று வலிமைபெறத் தொடங்கியுள்ளன. மாற்றுக் கருத்துடையவர் களிடமும், மரணதண்டனை ஒழிப்பில் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்லி, அவர்களையும் நம்பால் ஈர்த்துவிட வேண்டும் என்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும். கட்சி எல்லைகளைத் தாண்டி, இத்தகைய பொதுக் கோரிக்கைகளில் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்துவதே, கோரிக்கைக்கு வலுசேர்க்கும்.

ஆனால், ஈழச்சிக்கல், மரணதண்டனை ஒழிப்பு என எதனை எடுத்துக் கொண்டாலும், ஏற்பட்டு வருகின்ற ஒருமித்த கருத்தை, ஒற்றுமையைக் குலைப்பதே தங்கள் கட்டுரைகளின் போக்காக உள்ளது. பொதுச் சிக்கல்களைக் கையிலெடுத்து, சமூக நன்மைக் காகப் போராட வேண்டும் என்று விரும்புகின்றவர்கள், ஒருபக்கச் சார்பின்றி அனைவரையும் அணைத்துச் செல்லும் பெருந்தகைமை உடையவர்களாக இருக்க வேண்டும்.

ஆனால், அ.தி.மு.க.வின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளர் போலச் செயல்படும் நீங்கள், அங்கே பரப்புவதற்குக் கொள்கை ஏதும் இல்லை என்பதால், கலைஞரைத் தாக்குவதையே உங்கள் வாழ்நாள் அரசியலாக வரித்துக் கொண்டுள் ளீர்கள். உங்களின் சொந்த அரசியலுக்காகத் தூக்கு மேடையில் நிற்கும் பிள்ளைகளைப் பகடைக் காய்களாக ஆக்காதீர்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

உங்கள் கட்டுரையில் நீங்கள் எழுப்பியிருக்கும் ஒரே வினா, நளினியின் தண்டனையைக் குறைத்தது போல, கலைஞர் தன் ஆட்சிக் காலத்தில், மற்ற மூவரின் தண்டனையை ஏன் குறைக்கவில்çல் என்பதுதான். இதற்கான விடையை, 31.08.2011 அன்றே, முரசொலியில், கலைஞர் விரிவாக எழுதியுள்ளார். இப்போது மீண்டும் 14.04.2013ஆம் நாள் முரசொலியில் அதனை விளக்கியுள்ளார். அந்த விடைகளும், விளக்கங்களும், தூங்குகின்ற வர்களைக் கண்டிப்பாக எழுப்பும். தூங்குவதுபோல் நடிப்பவர் களை எழுப்புவது கடினம்தான்.என்றாலும், அது குறித்த செய்திகளை இங்கு நாம் நினைவு படுத்திக் கொள்ளலாம்.

(1) மரணதண்டனை சட்டப் புத்தகத்தை விட்டே அகற்றப்பட வேண்டும் என்னும் கருத்தில் கலைஞர் உறுதியாக உள்ளார். இதனைப் பலமுறை எழுதியும் பேசியும் உள்ளார். நீங்களே உங்கள் கட்டுரையில், 1999 அக்டோபர் இறுதி வாரத்தில், செய்தியாளர்களிடையே கலைஞர் பேசும்போது, “தூக்குத் தண்டனை தேவையற்றது என்பதே எனது கருத்தாகும். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினால், குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தும் வாய்ப்பு உண்டு. ராஜீவ் கொலை வழக்குக்கும் இது பொருந்தும்” என்று கூறியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆதலால், ராஜீவ் கொலை உள்ளிட்ட எந்த வழக்கிலும் மரணதண்டனை தேவையில்லை என்பதே கலைஞரின் கருத்தாக உள்ளது என்பது உறுதிப்படுகின்றது.

(2) வெறும் கருத்தாக மட்டும், அதனைக் கொண்டிராமல், தான் ஆட்சியில் இருந்தபோது, அதற்குச்  செயல் வடிவமும் கொடுத்தவர் கலைஞர். அந்த வகையில்தான், ராஜீவ் கொலை வழக்கில், நளினியின் தூக்குத் தண்டனை வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டது. 1970களிலேயே, புலவர் கலியபெருமாளின் தூக்குத் தண்டனையை மாற்றி அவரைக் காப்பாற்றினார் கலைஞர். இன்று நம்மிடையே எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், இயக்கம் ஒன்றின் பொறுப்பாளராகவும் செயல்பட்டு வரும் தோழர் தியாகுவின்  மரணதண்டனை யைக் குறைத்தவர் கலைஞர்தான். தியாகுவிற்கு மட்டுமின்றி, அவருடன் அதே கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பெற்றுத் தூக்குமேடையில் நின்ற தோழர்கள் இலெனின், குருமூர்த்தி ஆகியோருக்கும் மரணதண்டகளைக் குறைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

(3) இவ்வளவு பேர்களின் மரணதண்டனைகளை மாற்றிய கலைஞர், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை மட்டும் ஏன் குறைக்கவில்லை என்பதற்கு, அவரே விளக்கம் கொடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை 1999இல் எழுந்தது. அப்போது அவர்கள் சிறை சென்று ஏழெட்டு ஆண்டுகளே ஆகியிருந்தன. அப்போது தண்டனையைக் குறைப்பது, அவசரப்பட்ட செயலாக மக்களால் கருதப்பட்டுவிடலாம். ஆனால் 2011இல், அவர்கள் கைது செய்யப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவுபெற்று விட்டன. அன்று, பெண் என்ற அடிப்படையில் நளினியின் தண்டனை மட்டும் குறைக்கப்பட்டது. இன்று,  வாழ்நாள் தண்டனையையே அனுபவித்து விட்டார்கள் என்ற அடிப்படையில், தமிழ்நாடு அமைச்சரவை கூடி, இவர்களின் தண்டனையைக் குறைத்துவிடலாம் என்பதும், அதற்கான முன் மாதிரிகள் தன் ஆட்சியில் உள்ளன என்பதும் கலைஞரின் வாதம்.

மேற்காணும் மூன்று வாதங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, அனைவரையும் ஓரணியில் இணைத்து, ராஜீவ் கொலை வழக்கிலும், வீரப்பன் வழக்கிலும் தூக்கு மேடையில் நிற்கும் அனைவரையும் காப்பாற்றுவதற்கான அரிய வாய்ப்பு இது! இதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிடா வண்ணம், குதர்க்கமான கட்டுரைகளை முன்வைப்பதன் மூலம், மரண தண்டனை பெற்று நிற்கும் தமிழர்களுக்கு நாம் துரோகம் செய்துவிடக் கூடாது.

என் கடிதத்தை முடிக்குமுன், உங்களோடு பேச வேண்டிய இன்னொரு முதன்மையான செய்தி உள்ளது.

எப்போது பார்த்தாலும், கலைஞரின் கடந்த காலம் பற்றி விமர்சனம் செய்து கொண்டே இருக்கும் நீங்கள், என்றைக்காவது உங்களின் கடந்த காலத்தைத் தூசி தட்டி எடுத்துப் பார்த்ததுண்டா? இன்று  தமிழ்த் தேசியத்திற்காகவே வாழ்வதுபோல் காட்டிக் கொள்ளும் நீங்கள், கடந்த காலத்தில் தமிழ்த்தேசியத்திற்கும், தமிழ்மொழிக்கும் எதிராக நின்ற தருணங்களை என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா?

நீங்கள் மறந்து போயிருக்கலாம்! ஆனாலும், மறக்க முடியாத உங்களின் சில கடந்த கால நினைவுகளை இங்கே நினைவுபடுத்த வேண்டியுள்ளது.

1965ஆம் ஆண்டு, இங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்ததே, அப்போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? தீயிலே வெந்து போன சின்னச்சாமி, குண்டுக்கு மார்பு காட்டிய இராசேந்திரன், நஞ்சருந்திச் செத்த நற்றமிழர்கள் என்று அன்றைய தியாகிகளின் பட்டியல் விரிகிறதே. அந்த நாள்களில் நீங்கள் அவர்களின் பக்கம் இருந்தீர்களா, அவர்களின் சாவுக்குக் காரணமாக இருந்த அரசின் பக்கம் நின்றீர்களா? உங்கள் மனசாட்சியை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.

1970 நவம்பர் 30 அன்று, தமிழ் வழிக் கல்விச் சட்ட முன்வடிவைத் தலைவர் கலைஞர் முன்மொழிந்தார். அதனை எதிர்த்து, டிசம்பர் 10ஆம் நாள் மதுரையில் மாணவர்களைக் கூட்டி, தமிழ்வழிக் கல்விக்கு எதிராகப் போராடத் தூண்டிய ‘தமிழ்த்தேசியத் தலைவர்’ யார் என்பதை அறிய வரலாற்றின் பக்கங்களை ஒரு முறை புரட்டிப் பாருங்கள்!

பெருந்தலைவர் காமராசர் எதிர்த்த நெருக்கடி நிலைக்கு ஆதரவாக, அவர் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியை இந்திரா காந்தியின் தலைமையின் கீழ் இணைத்தவர் யார் என்று உங்கள் இதயத்தைக் கேட்டுப்பாருங்கள். கொடுமையான நெருக்கடி நிலைக்காலத்தை எதிர்த்துப் போராடிய போராளி யார், அதற்கு உறுதுணையாக இருந்த ‘காந்தியவாதி’ யார் என்பதை ஒருமுறை கண்மூடிச் சிந்தித்துப் பாருங்கள்!

1977அக்டோபர் 30 அன்று, மதுரையில் இந்திரா காந்திக்குக் கறுப்புக் கொடி காட்டிய போராட்டத்தை, இந்திரா காந்தி கொலை முயற்சி வழக்காக அரசு பதிவு செய்தது. அப்போது நீதிமன்றத்தில் நேரடி சாட்சியாக  சாட்சியம் அளித்து, உங்கள் ‘உயிர் நண்பர்’ வைகோவிற்கே இரண்டு ஆண்டுகாலம் சிறைத்தண்டனை பெற்றுத் தந்தவர் யார்?

        இந்திரா காந்திக்கும் ‘மகன்’ நீங்கள், இந்திரா காந்தியைக் கொல்ல முயன்றதாக நீங்கள் சாட்சியம் அளித்த வைகோவிற்கும் நண்பர் நீங்கள். இந்த நிலையில்தான், கலைஞரைப் பார்த்துக் கபட நாடகம் ஆடுகிறார் என்று நீங்கள் சொல்கின்றீர்கள்.

அய்யா நெடுமாறன் அவர்களே, ஒன்றே ஒன்றை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். “உலகிலேயே மிக மிக எளிமையானது, பிறரிடம் குறை காண்பது; உலகிலேயே மிக மிகக் கடினமானது, தன் குறை  உணர்வது”.

அருள்கூர்ந்து, கலைஞர் மீது உங்களுக்கிருக்கும் தனி மனிதப் பகையை விட்டொழியுங்கள்! ஈழ மக்களையும், தூக்கு மேடையில் நிற்போரையும் காப்பாற்ற முன் வாருங்கள்!

அன்புடன்,
சுப. வீரபாண்டியன்

Pin It