அன்னா அசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு அதாவது இரண்டாவது சுதந்திரப் போருக்கு, "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் தன்னுடை முழு ஆதரவினைத் தெரிவித்திருக்கிறார். இப்போது, ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் சென்னைக் கிளை சார்பில்,  டிசம்பர் 27முதல் மூன்று நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதத்திற்குத் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை இலவசமாக வழங்கியிருக்கிறார் ரஜினி. நிகழ்ச்சி ஏற்பாடுகளையும் நேரில் சென்று பார்வையிட் டிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 2ஆவது உண்ணா விரதத்திற்குப் பாராட்டுக் கடிதம் அனுப்பியவர், சென்னை வந்த அசாரேவிடம், தொலைபேசியில் பேசி, ஊழலுக்கு எதிரான தன்னுடைய ஆதரவினை நங்கூரம் போட்டு நச்சென நிலைநாட்டியிருக்கிறார்.

ஜனவரி மாதம் ரஜினிக்கு உடல் நலமில்லை என்று செய்தி வந்தபோது, அவரது ரசிகர்கள் ‡  தமிழ்நாட்டு இளைஞர்கள், ஏதோ தங்களுடைய எதிர்காலமே இருண்டுவிட்டது போன்று சோகத்தில் ஆழ்ந்தனர். ஏறத்தாழ 6 மாதங்கள் சிகிச்சை முடிந்து, சிங்கப்பூரில் இருந்து தங்கள் தங்கத் தலைவர் சென்னை திரும்பியது வரை, எவ்வளவு வேண்டுதல் கள், எத்தனை மொட்டைகள், தீ மிதிகள், காவடிகள், அலகு குத்தல்கள்...அடேயப்பா ! ரஜினியும் சளைத் தவரா என்ன, "என் உடல் பொருள் ஆவி தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறை யல்லவா' என்றெல்லாம் பாடி ஆடினாரே !

இன்று அன்னா அசாரேவுக்கு வலியப்போய் ஆதரவுக் கரம் நீட்டும் ரஜினி, பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது "படுக்கையில் பேச்சு மூச்சற்று'க் கிடந்தாரா? முல்லைப் பெரியாறு பிரச்சினையில் அப்பாவித் தமிழர்கள் அடிபட்டு, இரவோடு இரவாக அகதிகளாக வந்தபோது வாயைத் திறக்கவில்லையே சூப்பர் ஸ்டார். கூடன்குளம் போராட்டம் 3 மாதங்களைத் தாண்டி நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைகளில் எல்லாம், "கோமா நிலை'யில் இருப்பது போல் இருந்த  ரஜினி, அன்னா அசாரேவுக்கு வலியப் போய் ஆதரவு தருகிறார். இதை உணர முடியாத அளவுக்கு, ரசிகர்களின் அறிவைத் திரைப்பட மோகம் மறைக்கிறது. இதுபோன்ற தவறான முடிவுகள், அவரோடு நின்று போய்விடாது. அவரைக் கண்மூடித்தனமாகக் கொண்டாடும், இலட்சக்கணக்கான இளைஞர்களும் இதே வழியில், தவறானவர்கள் பின்னால் அணிவகுக்கும் ஆபத்து இருக்கிறது.

கருப்புப் பணம் அதிகமாகக் குவிந்து கிடப்பது திரைப்படத் துரையில்தான். அதனால்தான் அவர்களால் அதைப் பற்றி விலாவாரியாகப் படம் எடுக்க முடிகிறது. கூட்டத்தோடு கூட்டமாக ஓடித் தப்பித்துக் கொள்ளும் தந்திரம்தான், இவர் போன்றவர்களின் ஊழலுக்கு எதிரான ஆதரவு. ஏற்கனவே ஒருவர் விமானத்தில் பறந்து சென்று அன்னாவின் மேடையில் முழங்கி, தன்னுடைய தூய்மையை நிலைநாட்டினார். ரஜினிக்கு வயதாகி விட்டதாலும்,  நோயாளியாகி விட்ட காரணத்தாலும், இ‡மெயிலிலும், தொலைபேசியிலும் ஊடகக் காந்திக்கு ஆதரவினைத் தந்திருக்கிறார் போலும். இதே இமெயிலில், தமிழ்நாட்டுப் பிரச்சினைக்காக பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பினாலும் போய்ச்சேரும் என்றுதான் ... நம்முடைய அறிவுக்கு எட்டுகிறது. "நல்லவன்' ரஜினி  ரசிகனின் அறிவு நிலை எப்படியோ?

Pin It