parai

இதனால சகலமானவங்களுக்குந் தெரிவிக்கிறது என்னன்னா... ஆகஸ்ட் மூனாந் தேதிய ஒங்க நாட்குறிப்புல குறிச்சி வச்சிக்கோங்க. ஏன்னா... எதிர்காலத்துல கிராமி விருது வாங்கப்போற ரெண்டு நாட்டுப்புற இசைக்கலைஞர்கள் உருவாகத் தொடங்குன நாள் அது.

அட...நானும் இலக்கியாவும் பறை கத்துக்கிட்டிருக்கோம்ல!

பறையாட்டம் பாக்கும்போதெல்லாம் கையும் காலும் பரபரன்னு வரும். ஒக்காந்த இடத்துலயே ஒடம்பு மொத்தமும் ஆட்டம் போடும். அப்படிப்பட்டக் கலையக் கத்துக்க ஒரு வாய்ப்புக் கெடச்சா விடமுடியுமா? முகநூல்ல அறிவிப்பப் பாத்துட்டு, உடனே சேர்ந்துட்டோம். புத்தர் கலைக்குழு மணிமாறன் தோழர்தான் எங்க வாத்தியார். ராஜாதான் உடனே அவர்ட்ட பேசி, எங்களுக்கு ‘அட்மிசன்’ வாங்கிக் குடுத்தாரு. ரூவா 1800 கட்டி, சொந்தமா ஆளுக்கொரு பறய வாங்கிட்டுக் களத்துல இறங்கிட்டோம்.

பெசன்ட் நகர் எலியட்ஸ் பீச்சுல இருக்குற, ஸ்பேஸ் அரங்கத்துலதான் பயிற்சிப் பள்ளி நடக்குது. ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும், காலைல 10 மணியில இருந்து 12 மணி வரைக்கும் பயிற்சி - ஓராண்டுக்கு. அதுக்குள்ள தேறிடுவோம்னுதான் நெனைக்கிறேன். இலக்கியா ஏற்கனவே நடனத்துல கெட்டிக்காரிங்கறதால, அடவு கட்டுறதுல அவளுக்கு அவ்வளவா சிக்கல் இல்ல. என்ன, அப்பப்ப பரதநாட்டியம் குறுக்க வந்துருது! எனக்கு எப்புடின்னுதான கேக்குறீங்க...அது...வருது...வந்துரும்...வராம எங்க போயிரும்!

பறய தோள்ல மாட்டிக்கிட்டு, அடிக்குச்சிய வலது கையிலயும், சிண்டுக்குச்சிய இடது கையிலயும் பிடிச்சி அடிக்கும் போது...சும்மா...அதிருது. ஆனா... அடி மட்டும்னா நல்லாவே வருது. ஆட்டத்தோட அடிக்கிறதுதான்...கொஞ்சம்....அப்பைக்கு இப்ப பரவால்ல...

சில சமயம் கையி அடிக்கும்போது, காலு ஆட வரமாட்டேங்குது. காலு ஆடுனா...கையி நின்னுருது. பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, அம்மா மாவு ஆட்டச் சொல்லுவாங்க. இடது கையால ஒரலச் சுத்திக்கிட்டே...வலது கையால மாவத் தள்ளிவிடனும். எழவு நமக்கு அது வரவே வராது. (இப்ப வருதான்னு கேக்கறீங்களா... வருது வருது...கிரைண்டர்க்கு நல்லாவே வருதுங்க...) அதனால, கொஞ்ச நேரம் ஒரல மட்டும் சுத்துவேன். அப்புறம் அத நிறுத்திட்டு, மாவ நல்லா தள்ளி ஒன்னுசேப்பேன். மறுபடி ஒரலு, அப்புறம் மாவு...மறுபடி ஒரலு, அப்புறம் மாவு....னு மாரி மாரி... கடசில திட்டிட்டே எங்கம்மா அரச்சி முடிச்சிடுவாங்க.

எத்தன வருசத்துக்கப்புறமா...எப்பிடிச் சிக்கிட்டேன் பாத்திங்களா....! இருந்தாலும் பாருங்க...ஒரு மாசமா எங்க வாத்தியாரு குடுத்த பயிற்சியில, கையும் காலும் ஒத்துமையா ஆயிட்டாங்க. முன்னப்பின்ன இருந்தாலும்... நமக்கும் பறயாட்டம் வந்துரும்னுதான் தோணுது. (இருங்க...இருங்க...ஒடனே தேதி கேக்க போன எடுக்காதீங்கப்பு... இன்னும் மேனேசருகூட போடல...)

அம்மாவும் பொண்ணுமா ஞாயித்துக்கெழமயானா...பறய தோள்ல மாட்டிட்டுக் கௌம்புறது நல்லாத்தான் இருக்கு-. பயிற்சி நடக்குற இடத்துக்கு தோழர் லீனா மணிமேகலதான் அனுமதி வாங்கிக்குடுத்திருக்காங்க. அவங்களும் பற கத்துக்குறாங்க. அப்புறம் நம்ம தோழமை குடும்பத்தோட, ‘கலைமகள்’ - ‘திரைமகள்’ - ‘வீரமகள்’(ரேவதி இவ்வளவு பிட்டு போதுமா...இல்ல இன்னும் கொஞ்சம்...சரி...சரி...) - ரேவதியும் பற கத்துக்குறாங்க-- தெரியுமா?

திடீருனு ஒரு நா.... அந்த எடத்தோட பொறுப்பாளர் வந்து... ‘சவுண்ட் ஜாஸ்தியா இருக்குன்னு புகார் வருது... கொஞ்சம் சத்தமில்லாம பழகுனா நல்லாருக்கும்’னு சொல்லிட்டுப் போயிட்டாரு. காதக் கிழிக்கிற சத்தந்தான் பறயோட சிறப்பே...அந்த சத்தத்தக் கேட்டாதான் அடிக்கவே கையி வருது... அடப் போங்கடான்னு... கோவமா வந்துச்சி...என்ன செய்ய... தியேட்டர்ல டிடிஎஸ் சத்தத்துல காது சவ்வு கிழிஞ்சதுன்னா.... வீட்டுக்குள்ள ஹோம் தியேட்டர் அதிர்ந்துச்சுன்னா... மார்கழி மாச பஜனைல விடிஞ்சும் விடியாம ஜிங் ச்சா அடிச்சா...ஒரு மண்ணும் டிஸ்டர்ப் ஆகாது... பெரிய எடத்து மனுசாளுக்குப் பற சத்தந்தான் சகிக்கல...!

மார்கழி மாச கான சபா கச்சேரியில அங்கிட்டும் இங்கிட்டும் தலய ஆட்டிக்கிட்டு, தொடயில வலிக்காம தட்டித்தட்டி ‘சங்கீதம்’ கேக்றவாளுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களோட பற ஒலி எப்புடிப் புரியும்?

அவாளுக்கு மட்டுமில்லீங்க, நம்மாளுங்களே பறய ஏதோ தீண்டத்தகாத பொருளாத்தான் பாக்குறாங்க. ஒரு ஞாயித்துக்கெழம, நானும் இலக்கியாவும் பறய தோள்ல மாட்டிக்கிட்டு கௌம்பற நேரம், அப்பாவோட நண்பர் வந்தாரு. ‘தோள்ல என்ன? எங்க கௌம்பிட்டீங்க?’ன்னு கேட்டாரு. இப்பிடி இப்பிடின்னு சொன்னோம். ‘நீங்க எழுதுறது, பேசறதோட நிறுத்திக்கக்கூடாதா? இதயெல்லாம் நாம அடிக்கலாமா?’னு கேட்கவும், நானும் இலக்கியாவும், ‘ஏன் கூடாது? பரதநாட்டியம் கத்துக்கலாம், இழுத்து இழுத்து பாட்டுக் கத்துக்கலாம், வீணை, கிடாரு, கீ போர்டுலாம்கூட கத்துக்கலாம். பற கத்துக்கக் கூடாதா’னு எகிறவும், அமைதியாயிட்டாரு.

சாவுக்கு அடிக்கிறது, அதுவும் ஒரு குறிப்பிட்ட சாதிக்காரங்க மட்டும் அடிக்கிறதுன்னு இருந்த நெலம இப்பத்தான் மாறிட்டே வருது. சாப்பாட்டுல கூட சாதி பாக்குற கேடுகெட்ட நாட்ல, கலைக்குள்ள சாதியப் பாக்குறது பெரிசா இல்லதான்... ஆனா, அத மாத்த வேண்டாமா? “எம் பறை ஒலி, சாவுக்கானது அல்ல - வாழ்வுக்கானது. எம் பறை முழக்கம், சாமிகள் ஆடுவதற்கல்ல - ஆதிக்கம் ஆட்டம் காண்பதற்கு. ஓங்கி அடிப்பதில் கிழியட்டும், பறைகள் அல்ல - இந்திய சாதிகள்”னு சத்தமா சொல்லித்தான், புத்தர் கலைக்குழு தன்னோட ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தொடங்குது!

இந்த இசை நம்ம மண்ணோட இசை. மக்களோட இசை. ஆட்டமும், அடியும், பாட்டும் கலந்து, சமூக விழிப்புணர்வுக்காக முழங்குற முழக்கம் இது. சபாக்களோட நாலு சொவத்துக்குள்ள ‘சவம்’ மாதிரி உக்காற வெக்கிற கர்நாடக இசய புனிதம்ங்கிறாங்க... மூடத்தனத்துல மூழ்கிக்கிடக்கிற மக்களை உசுப்பி எழுப்புற பறயத் தொட்டாலே தீட்டுங்கிறாங்க...

பறய யார் வேணுன்னாலும் எடுத்து அடிச்சிர முடியாது... தெரியும்ல? பெரிய பெரிய சங்கீத ரத்னாக்கள்லாம் சொல்றாங்களே...நோட்சு நோட்சுன்னு...பறைக்கும் நோட்டுசு இருக்கு ஆமா... பெண்ணும் ஆணும் சேந்து பறய அடிச்சி ஆடும்போது...அட..அட..அட... மனுநீதிய மல்லாக்கப் போட்டு மிதிக்கிற மாதிரியே இருக்கு போங்க... யாரு கண்டா... நம்ம ஆடுன சதிராட்டத்த, பரதம்னு பேரு வச்சி, பாரதக் கலாச்சாரம்னு கலாச்சேத்ராவுல இருந்து ஏற்றுமதி செய்யறமாதிரி, காலப்போக்குல பறயக்கூட... ‘பறையர் முனிவர்’ கண்டுபிடிச்சதுன்னு சொன்னாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல... அதனால, இருக்கிறதயாச்சும் காபந்து பண்ணிக்கிருவோம்.

ரெண்டாயிரம் ஆண்டுகளா கரடுதட்டிக் கெடக்கிற இந்த மண்ண நல்லா மிதிச்சி பக்குவமாக்க...பற இச மாதிரியான நம்ம கலை வடிவங்கள நாமதான கைதூக்கி விடனும்!

அதுக்கோசரந்தான்...சத்தமாவும், சத்தமில்லாமலும் பறய அடிச்சிப் பழகிட்டு இருக்கோம். வேற எடம் பாத்துட்டிருக்கோம். பறயாட்டம் பழக நல்ல எடமா இருந்தா...நீங்களும் பறயுங்களேன்!

Pin It