தேசியம் பேசும் காங்கிரஸ் அரசானாலும் சரி, சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்ட் அரசானாலும் சரி, தேசியமும், சர்வதேசியமும் கேரளத்துக்காரர்களுக்கு ஒரு நாடகம், அரசியல் பிழைப்பு.

படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாநிலம் கேரளா என்றாலும், குற்றப்பின்புலத்தில் மராட்டியத்திற்கு அடுத்த இடம் கேரளாவுக்குத்தான் என்கிறது ஒரு செய்திக்குறிப்பு.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நியாயமான முடிவுக்கு வராமல், டேம் 999 படத்தைத் தயாரித்து மக்களை வன்முறைக் களத்துக்குக் கொண்டுவர முயன்றது கேரளாவின் குற்றச் செயல். நீதிபதி ஆனந்த் குழுவினரின் தீர்ப்பை ஏற்காமல், முல்லைப் பெரியாறு அணையில் போடப்பட்ட துளைகளை அடைக்க விடாமல், அணையைப் பலவீனப்படுத்த முயன்றதும் கேரளாவின் குற்றச் செயல். இப்பொழுது சிறுவாணி அணைப் பிரச்சனையிலும், கேரளா தனது குற்றச் செயல்களை முன்னெடுத்துக் கொண்டு இருக்கிறது.

சிறுவாணி அணையின் அதிகப்படியான நீரும், அதைத் தொடர்ந்து 15 கிலோ மீட்டர் வரையும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கிடைக்கின்ற மழைநீரும் சிறுவாணி ஆற்றின் வழியாகத் தமிழகத்தின் மேற்கு மாவட்ட பவானி அணைக்கு வந்து சேர்கின்றது.

32 ஆண்டுகளுக்கு முன்னால், சிட்டூர் பள்ளத்தாக்கில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடியில் ஓர் அணைகட்ட முயன்றது கேரளா. ஆனால், அது தேவையற்றது என்று அத்திட்டத்தைக் கிடப்பில் போட்டது அவ்வரசு.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், கேரள மாநிலக் காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா இப்பொழுது சிறுவாணி அணைக்குக் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்று வெடிக்கத் தொடங்கி இருக்கிறார்.

அப்படிக் கட்டினால், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் வேளாண்மை பாதிப்பும், குடிநீர் தேவைக்கான பாதிப்பும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிடும்.

தற்போது 4.5 டி.எம்.சி தண்ணீர் கொள்ளவு கொண்ட அணையைச் சிறுவாணி அணையின் குறுக்கே கட்ட கேரள அரசு முயன்று வருகிறது. அட்டப்பாடி பாசனத் திட்டத்திற்காக, கேரள அரசு காவிரி நதிநீர் ஆணையத்திடம் முறையிட்டு, முயன்றதன் பயனாக அதற்கு 2.88 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கப்பெற்றது. 5.2.2007ஆம் நாள் இதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

எனவே இப்பொழுது முன்சொன்ன அதே 4.5 டி.எம்.சி. தண்ணீரைக் கொள்ளவு செய்ய, புதிய அணையைச் சிறுவாணி அணையில் கட்ட முயல்வது அத்துமீறிய செயல் ஆகும். இரு மாநிலங்களுக்கும் இடையே பாய்கின்ற நதியின் நீரை, ஒரு மாநிலம் மட்டும் பயன்படுத்தவோ, அன்றி அணைகட்டி நீரைத் தேக்கிவைக்கவோ முடியாது.

 மத்திய அரசு தமிழகத்தைப் பொறுத்த வரையில், தமிழர்களைப் பொறுத்தவரையில் இதுவரை நியாயமாக நடந்து கொள்ளவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் முல்லைப் பெரியாறு அணையின் பாதிப்பால் தென்தமிழ்நாட்டின் தேனி, மதுரை, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை பகுதி விவசாயிகளும்; காவிரி நதி நீரால் வேளாண்மையில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளும்; சிறுவாணி அணையினால் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகளும் கிளர்ந்தெழ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

அப்பொழுது தமிழர்கள் அனைவரும், தமிழ்நாடே இணைந்து போராட முன்வரும் நிலை ஏற்படும். அப்பொழுது தேசியம் என்னாகும்? சிந்திக்க வேண்டும் மத்திய அரசு.

எனவே சிறுவாணி ஆற்றில் மத்திய அரசு அணை கட்டுவதற்கு, தொழில் நுட்ப அனுமதியோ, வேறு எந்தவொரு அனுமதியோ, மத்திய அரசும், மத்திய நதிநீர் ஆணையமும் வழங்கக்கூடாது.

Pin It