சடங்குகளும், சம்பிரதாயங்களும் எப்போதும் பெண்களை இழிவுபடுத்தியே வந்திருக்கின்றன.  பெண்ணின் உடலில் இயல்பாக நிகழும் உடற்கூறு மாற்றத்தை, விளம்பரப்படுத்தி அவளின் தன்மானத்தை அவமதிக்கும் பூப்பு நீராட்டு விழா போன்ற சடங்குகள் தேவையா என்ற வினாவையே தலைப்பாகக் கொண்டு, ஆக்கப்பூர்வமான படைப்பாக வெளிவந்திருக்கிறது, ' பூப்பு நீராட்டு விழா தேவையா? ' என்னும் தொகுப்பு நூல்.

தமிழர் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் விழாக்கள் முக்கிய இடம் பிடித்தே வந்திருக்கின்றன. தொடக்கத்தில் உழைப்பு, வீரம், வெற்றி சார்ந்த கொண்டாட்டங்களாக, மகிழ்ச்சியின், பெருமிதத்தின் வெளிப்பாடாகத் தமிழர்களின் விழாக்கள் அமைந்திருந்தன. காலப்போக்கில், ஆரியத்தின் ஆதிக்கத்தினால் அவைகள் சடங்குகளாலும், சம்பிரதாயங் களாலும் நிரப்பப்பட்டன. விளைவு, ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு விதமான சடங்குகள், சம்பிரதாயங்கள் என்றாயிற்று. எத்தனை சடங்குகள் உள்ளனவோ அத்தனையும் பெண்களை ஒதுக்குகின்ற, இழிவுபடுத்து கின்ற விதத்திலேயே அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அப்படிப்பட்ட சடங்குகளில் ஒன்றுதான் இந்தப் பூப்பு நீராட்டு விழா.

இந்நூலில் மொத்தம் 18 கட்டுரைகள் இடம்பெற்றிருக் கின்றன.  ' ஏன் இந்த வெளியீடு? ' என்னும் நூல் விளக்கப் பகுதியில், தொகுப்பாசிரியர் பி.இரெ. அரசெழிலன், கட்டுரைகள் எல்லாம் பெண்ணியம் தொடர்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களிடம் பெறப்பட்டவை எனக் குறிப் பிட்டிருக்கிறார். ஆனாலும் ஒரு சில கட்டுரைகள் பெண்ணியப் பார்வையிலிருந்து சற்று விலகிச் சென்றிருப் பதைப் பார்க்க முடிகிறது. இதைத் தன்னுடைய அணிந்து ரையில் பேரா. சரசுவதி அவர்களும் சுட்டிக்காட்டி யிருக்கிறார். இதைத்தவிர, மற்ற அனைத்துக் கட்டுரைகளும், பெண்ணியம் குறித்த தீர்க்கமான கருத்துகளைச் சரியான புரிதல்களோடு பேசுகின்றன.

மஞ்சள், உளுந்தக் களி, நல்லெண்ணெய் என உணவே மருந்தாக, பெண்ணின் உடல்நலத்தை மையமாகக் கொண்டிருந்த ஒரு நடைமுறை, தமிழர் வாழ்வில் ஏற்பட்ட ஆரியத்தின் தாக்கத்தினால் எப்படி வெற்றுச்சடங்காக, இழிந்ததாக மாற்றப்பட்டது என்ற உண்மைகளை ஒவ்வொரு கட்டுரையும் பெண்ணிய நோக்கில் தெளிவுபடுத்துகின்றது.

முதல் கட்டுரையாக இடம்பெற்றுள்ள புதிய மாதவியின் கட்டுரை ஆய்வுக் கண்ணோட்டத்தில் பல செய்திகளைச் சொல்கிறது. இந்தச் சடங்கு இங்கு மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கிறது. நேபாளத்தில், ஆப்பிரிக்காவில், ரஷ்யாவில் எனப் பல நாடுகளில் இச்சடங்குகள் வேறுவேறு வடிவங்களில் இடம்பெறும் செய்தியை அவர் சொல்லும் போது, ஆணாதிக்கம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை அறியமுடிகிறது. அறிவியல் முன்னேற்றத் திற்கும், கடின உழைப்புக்கும் நாம் தலைசிறந்த உதாரணமாகச் சுட்டிக் காட்டுகின்ற ஐப்பானில், பூப்படைதலைப் பெருமையாகக் கொண்டாடுகின்றனர் என்ற செய்தி நமக்கு அதிர்ச்சி தருவதாக இருக்கிறது. அறிவியல் அறிவு வேறு, அறிவியல் பார்வை வேறு என்பதையே இது காட்டுகிறது.

தாய் மாமன் உரிமையை விட்டுக்கொடுத்துவிடக் கூடாது என்பதும், தாய்மாமன் வீட்டுச் சீர்வரிசை தன்னுடைய பிறந்தவீட்டின் பெருமையைச் சொல்லும் என்பதும் இவ்விழா நடத்தப்படுவதன் மற்றொரு காரணமாகும். பெண் திருமணத்திற்குத் தகுதியானவள் ஆகிவிட்டாள் என்பதை உறவுகளுக்கு உணர்த்தும் விதமாகவும் இச்சடங்கு செய்யப்பட்டுள்ளது. இணையத்தில் திருமணம் உறுதி செய்யப்படும் இந்தக் காலத்திலும் இதுபோன்ற சடங்குகள் தேவைதானா என்று கேள்வி எழுப்புகின்றன கட்டுரைகள்.

தமிழ்க் கலாச்சாரத்தைத் தூக்கி நிறுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் திரைப்படங்களில் இச்சடங்குகளும், அது தொடர்பான உரிமைச் சண்டைகளும் சித்தரிக்கப்படும் விதத்தைக் கடுமையாகச் சாடுகிறது ஓவியாவின் கட்டுரை.  ' மாறிவரும் மா       ற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல் இந்தச் சடங்கைப் பெருமைப்படுத்திப் படமெடுக்கும் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஐந்தாண்டு காலம் கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்க வேண்டும் ' என்கிறார்.   உலகத்தரத்திற்குப் போய்க்கொண்டு இருக்கிறது தமிழ்ச் சினிமா என்று பெருமைபேசிக்கொண்டு, உலுத்துப்போன சாத்திரங்களையும், சடங்குகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓவியா பரிந்துரைத்திருக்கும் தண்டனை குறைவுதான்.

'பெண்ணடிமைத்தனத்தையும், ஆணாதிக்கத்தையும் வளர்த்தெடுக்கும் இதுபோன்ற சடங்குகளை எதிர்த்து ஒரு பண்பாட்டியக்கம் கண்டிப்பாக நாம் நடத்திட வேண்டும் ' என்றொரு ஆலோசனையையும் முன்வைக்கிறார் அவர். இந்துத்துவ ஒற்றைப் பண்பாட்டைக் கட்டிக் காப்பாற்ற ஒரு கூட்டமே தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், நமக்கான பண்பாட்டியக்கம் கண்டிப்பாகத் தேவை. இதுபோன்று பெண்களை இழிவுபடுத்தும் சடங்குகள் சட்டப்படி தடைசெய்யப்பட வேண்டும் என்றும் தன்னுடைய கட்டுரையில் வலியுறுத்துகிறார்.

தென்மாவட்டங்களில் பல இடங்களில், பார்ப்பனரை அழைத்து இந்த சடங்குகளை செய்கின்ற வழக்கம் இருக்கிறது. பார்ப்பானை அழைத்து வந்து, அந்தப் பெண்ணின் தலையில் தண்ணீரை ஊற்றச் செய்து, பிறகே அப்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர். அப்படிச் செய்தால்தான் தீட்டு கழியுமாம். எவன் நம் பெண்களைத் தனக்கு வைப்பாட்டிகள் என்றும், சூத்திரச்சிகள் என்றும் சொல்லி இழிவுபடுத்தினானோ, அவன் வந்து தண்ணீர் ஊற்றினால்தான் நம் வீட்டுப்பெண் புனிதமடைவாள் என்னும் இழிவை, நம்மையே ஒத்துக்கொள்ளச் செய்த பார்ப்பனியச் சூழ்ச்சி எப்படி இருக்கிறது பாருங்கள் என்கிறது இரா. உமாவின் கட்டுரை. ஆனால் இந்தச் சடங்கு பார்ப்பனர் வீடுகளில் இல்லை என்னும் செய்தியையும் சொல்கிறார்.

ஈழத்துக் கவிஞர் தமிழ்நதியின் கட்டுரை புலம் பெயர்ந்த தமிழர்கள் இடையிலும் இச்சடங்கு தொடர்வதை வேதனையோடு சுட்டிக்காட்டுகிறது. புதிதாய்ப் பூப்படைந்த பெண்கள், மாத விலக்கான பெண்கள் சிங்களவனின் குண்டுவீச்சுக்குத் தப்ப, கால்களின் வழியாக உதிரம் வழியப் பதுங்குகுழிகளை நோக்கி ஓடிச்செல்லும் அவலத்தை நினைவுகூர்கிறார். இரவிலும் கண்விழித்துக் காடுகளில் களமாடும் பெண் போராளிகளுக்கும் மாதவிடாய் நாட்கள் உண்டு என்பதைச் சொல்லி, வாழ்வதற்கான போராட்டத்தில் மனிதம் செத்துக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இந்தச் சடங்குகள் என்ன பயனைத் தந்துவிடப்போகின்றன என்னும் தமிழ்நதியின் கேள்வி எத்தனை நியாயமுடையது என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மருத்துவர் சாலினியின் கட்டுரை நல்ல பல மருத்துவத் தகவல்களுடன் இடம் பெற்றிருக்கிக்கிறது. பெண்கள் மட்டுமன்றி வீட்டிலுள்ள ஆண்கள் உள்பட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. எவ்வளவு எழுதினாலும், எத்தனைபேர் பேசினாலும், சமூகத்திற்கு இது பற்றி விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதற்கு ஓவியா தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல பண்பாட்டு இயக்கம் ஒன்று கட்டமைக்கப்பட்டு, மக்களிடையே செயலாற்ற வேண்டும். பெண்கள் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது. இதுபோன்ற தேவையற்ற சடங்கு மூட்டைகளை மண்ணில் போட்டுப் புதைக்காமல், அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாது.

Pin It