அண்மையில் மத்திய அரசு ‘மூத்த குடிமக்களைப்’ பாதுகாக்க ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது. பெற்றோர் மற்றும் முதியோர் பொருளுதவி நலச்சட்டம் 2007 மற்றும் விதிகள் 2009 - இதுதான் அந்தச் சட்டம். இச்சட் டத்தின்படி, பெற்றோரை பராமரிக்காமல் தவிக்கவிடும் பிள்ளகளுக்கு அல்லது வாரிசுகளுக்கு ரூ.10,000 வரை தண்டமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்க இடமுள்ளது. இதற்காக மாவட்டந்தோறும், மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது துணை ஆட்சியர் தலைமையில் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட உள்ளன. பாதிக்கப்பட்ட முதியோர், இலவச தொலைபேசி எண்ணில் (1253) தொடர்புகொண்டு புகார் தெரிவிக்க, ‘யஹல்ப்லைன்’ வசதியைத் தமிழக அரசின் சமூக நலத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

old_coupleஇச்சட்டத்தின் கீழ், முதல் வழக்கு நாமக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செங்கோடு வட்டம் சூரியம்பாளையம் பகுதியைச் சார்ந்த 77 வயது முதியவர் மாணிக்கம், தன் வாழ்வாதாரமாக இருந்த தறிகளைப் பறித்துக்கொண்டு, தன்னை வீட்டைவிட்டும் வெளியேற்றிய தன்னுடைய மகன் சாமிநாதன் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்.

உலக நாடுகளிடையே இந்தியாவின் பண்பாடும் கலாச்சாரமும் உச்சத்தில் வைத்துப் போற்றப்படுவதற்கு அடிப்படையாகச் சொல் லப்படும் செய்தி, இங்குள்ள குடும்ப அமைப்பு முறை. அதிலும் குறிப்பாகக் கூட்டுக்குடும்ப அமைப்பு முறைதான். அப்படி குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு புனித கட்டுகளைக் கொண்டு கட்டிக் காத்து வருகின்ற ஒரு நாட்டிற்கு, இது போன்ற சட்டத்தின் தேவை இருக்கிறதா என்று பார்த்தால், ‘ஆம்’ என்று விடை தருகிறது மேற்சொன்ன நிகழ்வு. வேடிக்கையான முரண் இல்லையா?

வழக்காகப் பதிவானது இது ஒன்று. செய்தியாகாமல் இருப்பது ஓராயிரமாக இருக்கலாம். இதில் பிள்ளைகளை மட்டுமே ஏகபோக குற்றவாளிகளாக்கிவிட முடியாது. இக்குற்றத்தில் மூன்று பங்குதாரர்கள் இருக் கின்றனர்.

1. சமூகம் 2.பெற்றோர் 3.பிள்ளைகள்

இந்தியா ஒரு விவசாய நாடு. உழவுத் தொழிலே முதன்மையான உற்பத்தித் தொழிலாக இருந்தது. அந்த உற்பத்தித் தொழிலில் குடும்பம் குடும்பமாகவே மக்கள் ஈடுபட்டுவந்தனர். ஒரு குடும்பத்திலுள்ள ஆண் பெண் அனைவரும் அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொண்ட னர். இதற்குப் பெரிய அளவில் மனித சக்தி தேவைப்பட்ட காரணத்தால், அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர். அதோடு வயதில் மூத்தவர்களின் முன் அனுபவமும், காலநிலை, வானிலை, மண், பயிர்கள் தொடர்பான அறிவும், வழிகாட்டலும் அன்றைக்கு உழவுத் தொழிலின் மூலாதாரமாக இருந்தன. இதனால் இறுதிக் காலம் வரையில் குடும்பத்திற்குள்ளேயே முதியவர்கள் வாழ்ந்து முடித்தார்கள்.

காலப்போக்கில் விவசாயத்தில் ஏற்பட்ட பின்னடைவு இந்த அமைப்பைச் சிதறடித்து விட்டது. உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் வயதானவர்களைத் தனியே விட்டுவிட்டு பிழைப்பு தேடி பிள்ளைகள் திசைக்கொன்றாகப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வயதான பெற்றோரின் தனிமை தவிர்க்க இயலாததாகிப் போனது.

போட்டி நிறைந்த சமூகத்தில் எங்கே தங்களுடைய பிள்ளைகள் பின்தங்கிவிடுவார் களோ என்ற பெற்றோரின் அச்சம் காரணமாக கல்வி, தொழில், விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்துமே பிள்ளைகளின் மேல் திணிக்கப்படுகின்றன. பிள்ளைகளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அவர்கள் அதை விரும்புகிறார்களோ இல்லையோ பெற்றோர் களின் பெருமைக்காகக் கண்டிப்பாகச் செய்தாக வேண்டும், கற்றாக வேண்டும். இங்கே பிள்ளைகளின் உணர்வுகள், விருப்பங்கள் மதிக்கப்படுதில்லை. இப்படிக் கட்டாயத்தில் வளர்ந்து ஆளாகும் பிள்ளைகள், பெற்றோர்களைப் பற்றிய எத்தகைய மதிப்பீடு களைக் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தங்களுடைய பிள்ளைகளை அதிக மதிப்பெண், முதலிடம், நல்ல வேலை கூடுமானவரை வெளிநாட்டில் பணம் சம்பாதிப்பது, தன்னுடைய தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் என இவற்றைச் சுற்றியே வட்டமிட வைக்கின்ற பெற்றோர்கள்தான் தனிமையிலே இனிமை காணவேண்டியிருக்கிறது. வேறு வழியில்லை.

பின்னே, அமெரிக்கா போவதற்கு தயார் செய்யப்பட்ட பிள்ளை, அரக்கோணத்தில் அம்மா அப்பாவுடன் தங்குமா? தங்களுடைய பிள்ளை கள் அன்புடைய வர்களாக, பண்பாளர்களாக வளர்ந்து ஆளாக வேண்டும் என்று எண்ணாமல், அம்பானிகளாகவும், பில்கேட்ஸ்களாகவும் ஆக வேண்டும் என்று எண்ணும் பெற்றோரிடம் தொடங்குகின்றது முதல் கோணல்.

பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கின்ற இன்றைய சூழலில், நேரங்காலம் பார்க்காமல் வேலை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கின்றனர். ஒருவரோடொருவர் முகம் பார்த்துப் பேசவும் நேரம் இல்லாமல்தான் பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள். பாசத்தைக்காட்டுவதற்குக் கொஞ்சமாகவும், பணம் பண்ணுவதற்கு அதிகமாகவும் கற்றுக்கொடுக்கப்பட்ட பிள்ளைகளுக்குப் பெற்றோர்களை கவனிப்பது அதிகப்படியான சுமையாகிப்போனதில் வியப்பில்லை.

பொருளாதாரத் தேவை, நேரமின்மை போன்ற காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும், இன்றைக்கு குறைந்து வருகின்ற மனிதநேயமும் முதியோர்களைக் காப்பகங்களில் கொண்டு போய் தள்ளிவிடுகின்றது.

மனித உறவுகளின் மதிப்பை சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்கப்பட வேண்டி யதன் அவசி யத்தை முதியோர் இல்லங்கள் காட்டுகின்றன.

வெளிநாடுகளுக்குச் சென்று லட்சங்களில் சம்பாதிக்கும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் வசதியான முதியோர் இல்லங்களில், மின்னணு சாதனங்களுக்கு மத்தியில் காலத்தைக் கழிக்கின்றனர். உள்ளூரிலும், உள்நாட்டிலும் ஆயிரங்களில் சம்பாதிக்கின்ற பிள்ளைகளைப்பெற்றவர்கள் வசதி குறைவான முதியோர் காப்பகங்களில் நான்கு சுவர்களுக்கு மத்தியில் காலத்தைக் கழிக்கின்றனர்.

மொத்தத்தில் தனிமை தனிமைதானே!

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்த குடிமக்கள் என்று அங்கீகரிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு ஊக்கத்தொகை, பயணக் கட்டண சலுகைகள் போன்றவற்றை அரசுகள் வழங்கி னாலும், உறவுகள் தரவேண்டிய அரவணைப்பை, மரியாதையை எதிர்பார்க்காமல் இருக்குமா இவர்களின் நெஞ்சம்?

வயதானவர்களை வளர்ந்த குழந்தைகள் என்று சொல்லுவதுண்டு. அப்படியானால் குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்ற அன்பும், கவனிப்பும் இவர்களுக்கும் தேவைதானே?

சட்டத்தை வரவேற்கிறோம். ஆனால் சட்டத்தால் முழுமையான மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியாது என்னும் நடைமுறை உண்மையையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சாசனச்சட்டம்.

பணக்காரர்களின் பணப்பெட்டியோடு உறவாடுகின்ற சட்டம், ஏழைகளின் வாசலுக்கு நீதியைக் கொண்டு வந்ததில்லை இதுவரை.

ஆணும் பெண்ணும் சமம் - சொல்கிறது சட்டம் ஆணுக்குப் பெண் அடிமை - என்கிறது சமூகம்

தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்கிறது அரசியல் சாசனச் சட்டம். இரட்டைக் குவளைகளும், பள்ளுப்பட்டமும், பறைப்பட்டமும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனமாற்றம் ஒன்றுதான் மாறுதலுக்கான வழி.

கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை - கொடுமை!

- இரா.உமா

Pin It