உரிமையை இழந்தோம், உடமைகள் இழந்தோம், கொத்துக்கொத்தாய் உயிர்களையும் இழந்தோம். பல்லாயிரக் கணக்கில் நம் தமிழ் ஈழ உறவுகள் அழிக்கப்பட்ட அந்த கொடிய நாட்களைத் தாண்டி நாம் ஓராண்டு காலம் பயணித்து விட்டோம். கால ஓட்டத்திலும் கூட கரையாத குருதிக் கறைகள் நம் நெஞ்ச மெங்கும் அப்பிக்கிடக்கின்றன.

eelam_250முன்னும் பின்னும் உலகம் பார்த்திராத வகையில் முப்படைகளையும் கொண்டு விளங்கியது நம்தமிழ் ஈழப் புலிப்படை. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்தையும் குறைத்து மதிப்பிடுவது நம் நோக்கமன்று. எனினும் சோவியத்தில், கியூபாவில், வியட்நாமில், பாலஸ்தீனத்தில் என உலகின்எந்த ஒரு மூலையிலும் முப்படை அமைத்துப் போராடிய விடுதலை அணிகள் இருந்ததில்லை. ஆனால் இந்த வலிமையே உலகின் கண்களை உறுத்தத்தொடங்கிற்று.

ஒருவருக்கொருவர் பகை நாடுகள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - சீனா ஆகிய அனைத்து நாடுகளும், ஈழ விடுதலையை ஒடுக்குவதில் மட்டும் ஒரே அணியில் நேச நாடுகளாய் நின்றன. சிங்கள அரசுக்கு, சீனா நூற்றுக்கணக்கான டேங்குகளைக் கொடுத்தது. வானில் உளவு சொல்ல இந்தியா ரேடார் கொடுத்தது. பாகிஸ்தானோ கப்பல் கப்பலாய் ஆயுதங்களைக் கொடுத்தது. இவை போதாதென்று ஐ.நா. அவையினாலும், உலக நாடுகளாலும் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளையும் இலங்கை அரசு பயன்படுத்தியது. அனைத்துமாய்ச் சேர்ந்து ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மே 16,17,18 ஆகிய நாள்களில் மட்டும் 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையிலான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

எங்கள் துப்பாக்கிகள் இனி முழங்காது என்று மே 16 ஆம் தேதி புலிகள் அறிவித்த பின்னும் கொடும் தாக்குதலை அரசு தொடர்ந் திருக்கிறது. பாதுகாப்பு வலையங்களுக்குள் மக்களை வரச்சொல்லிவிட்டு, அந்த வலையங் களையே குறிவைத்து குண்டு வீசி இருக்கிறது. வெள்ளைக் கொடியோடு சென்ற வீரர்களை துப்பாக்கிகளால் துளைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விடக் கொடுமை, இவை அனைத்தையும் ஐ.நா.வும், உலக நாடுகளும் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான். உலகாண்ட தமிழனின் பிள்ளைகள் கேட்க நாதியின்றிக் கொல்லப்பட்டார்கள்.

துயரங்கள் இப்போதும் முடியவில்லை. தமிழீழப் பகுதிகள் அனைத்தும் மெல்ல மெல்லச் சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்றன. வாழ இடமின்றியும், வழிஇன்றியும் படகுகள் ஏறித் தப்பிக்க முயன்ற தமிழர்கள் பலர் இந்தோனேசியாவிலும், மலேசியாவிலும் இன்று கைதிகளாய் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

காலம் இப்படியே போய்விடாது என்றாலும், எப்போது மாற்றம் வரும் என்னும் கேள்வி ஏக்கமாய் நம் இதயமெல்லாம் படர்ந்து கிடக்கிறது. சோவியத்திலும், கியூபாவிலும், தென்ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்க நாடுகளிலும் ஒரே நாளில் விடுதலை வந்துவிடவில்லை. தோல்விகளைத் தாண்டியும், துயரங்களைக் கடந்தும்தான் வெற்றிக் கொடிகளை அவர்களால் ஏற்ற முடிந்தது. ஈழ மண்ணிலும் மாற்றம் வரும். நம் இரத்த உறவுகள் ஏற்றம் பெறும்.

மாண்ட வீரர்களுக்கும், மடிந்துபோன மக்களுக்கும் நம் வீர வணக்கம்.

- சுப.வீரபாண்டியன்

Pin It