‘சந்நியாசி’ நித்தியானந்தாவைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் கூட.

nithyananda‘தெய்வீகச்’ சிரிப்போடும் ‘காவி’ உடைக்குள் ‘காமத்தைக்’ கட்டிக் கொண்டும் தொலைக்காட்சியின் ஒளிக் காட்சிக்குள் அந்த மகானுபாவரின் அணுக்கிரகத் தோற்றம் அவரைப் ‘புகழின்’ உச்சிக்கே கொண்டு போய்விட்டது.

அந்தப் புகழைத் தாங்கமுடியாத நித்தியானந்தர் தலைமறைவானார் குருத்து வாரத்தில். அங்கிருந்து மீண்டும் இமாசலப்பிரதேசம், சோலன் மாவட்டம் குனியால் என்ற சிற்றூருக்கு ஓடியிருக்கிறார்.

“உனக்கு இரண்டு கோடி ரூபாய் தருகிறேன், பள்ளிக் கூடம் கட்டிப் பிழைத்துக்கொள்” என்று விவேக் என்பவருக்கு ஆசைகாட்டி, அவரின் வீட்டில் பதுங்கியிருக்கிறார் நித்தியானந்தர். இந்த சந்நியாசிக்கு பீகாரைச் சேர்ந்த மகாதேவர் எனபவரும் உதவி இருக்கிறார்.

இப்படி அங்கே நித்தியானந்தருக்கு உதவியவர்களும் கூட பாலியல், படுகொலையோடு சம்பந்தப்பட்ட கிரிமினல்கள் என்கிறார் அங்குள்ள காவல் ஆய்வாளர் விக்ரம் செளகான்.

எப்படியோ! பெங்களூர் பிடதி ஆசிரமம் என்ற பெருமாளிகையில் இருந்து தப்பித் தலைமறைவான சந்நியாசி நித்தியானந்தா, குனியாவில் கைது செய்யப்பட்டு, இப்பொழுது பெங்களூர் சி.பி.சி.ஐ.டி விசாரணை வளையத்தில் - சிறையில் இருக்கிறார். காவல் துறையின் கட்டுப்பாட்டில் நித்தியானந்தர் எப்படி விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்? செய்தித்தாள்களில் வரும் தகவலின் அடிப்படையில் அவர் விசார ணைக்குப் போதுமான ஒத்துழைப்பு தருவ தில்லை என்பதுதான்.

பெங்களூர் சட்டமன்றமான விதான் சவுதாவிற்குப் பின்புறம் உள்ள சி.ஐ.டி காவல் அலுவலகத்தில் நித்தியானந்தர் விசாரிக்கப் பட்டபின், “அவரை விசாரிப்பது காமெடி காட்சிக்கு வசனம் எழுதுவது போல் இருக் கிறது” என்று விசாரணை அதிகாரிகள் சிரித்துக்கொண்டே சொன்னார்களாம்.

எப்படி?

காலையில் காலதாமதமாகத்தான் நித்தியானந்தர் துயில் நீங்கி எழுந்திருக்கிறாராம். குளிச்சிட்டுத்தான் சாப்பிடுவேன் அப்படீன்னு அடம் பிடிக்கிறாராம். காலைச் சாப்பாட்டை அவர் முடித்து விசாரணை ஆரம்பிக்க 11 மணி ஆகிறதாம். மூன்று மணிக்குச் சாப்பாடாம். பிறகு கொஞ்சம் “கண் அசரணும்” என்று சொல்லி தூங்குகிறாராம். எழுப்பி உட்காரவைத்தால் சோர்ந்து விழுவதுபோல நடிக்கிறாராம். இரவு 7 மணிக்குமேல் 12 மணிவரை விசாரணை நீளுகிறதாம்.

- இப்படிச் சொல்பவர்களும் அதே விசாரணை அதிகாரிகள் என்பதை வார இதழ் ஒன்று அழுத்தமாகக் கூறுகிறது.

அதுமட்டுமல்ல, பால் கொடுங்க, தயிர்சாதம் கொடுங்க, உலர்திராட்சை கொடுங்க, ஊறவச்ச பழம் கொடுங்க, பாதாம் கொடுங்க என்றெல்லாம் கேட்கிறாராம் இந்த சந்நியாசி.

நித்தியானந்தரைக் கைது செய்வதில் முக்கிய இடம் வகித்த இமாசலப்பிரதேச காவல் உளவு, சி.பி.சி.ஐ.டி பிரிவின் டி.ஐ.ஜி. வேணுகோபால் கொடுத்த பேட்டியில், “சப்பாத்தி, சாதம் கொடுத்தோம். அதைச் சாப்பிட மறுத்தார். பழங்கள், பிஸ்தா, பாதாம், பால் இவற்றைத்தான் சாப்பிடுவேன் என்று சொன்னார். பழங்களில் ஆப்பிளும், பப்பாளியும் தான் வேண்டும் என்றார். அவர் கேட்ட அயிட்டங்களை வரவழைத்தோம். மிக்ஸ்டு காய்கறிகளையும், உலர்ந்த திராட்சைகளையும் வரவழைத்துக் கொடுத்தோம்” என்று கூறியிருக்கிறார்.

சந்நியாசி நித்தியானந்தார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவாகின்றன. பாலியல் உறவு இதில் பிரசித்தம். அவர் வெளிநாடு களுக்குப் போகும்போது செப்புத்தகடால் இணைக்கப்பட்ட உருத்திராச்சக் கொட்டை மாலைகளை கழுத்திலும் கையிலும் கொண்டு செல்வார். திரும்பி வரும்போது, செப்புத்தகடுகள் தங்கமாக இருக்குமாம். இதைக் கண்காணித்த சுங்கத் துறை அதிகாரிகள் அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்டு இருந்துள்ளார்கள்.

பிடதி ஆசிரமம் என்ற பெருமாளிகையில், 20 பெண்களிடம் ‘செக்ஸ்’ உறவுக்கு ஆங்கிலத் தில் ‘அக்ரிமென்ட்’ போட்டு கையயழுத்து வாங்கிய சிருங்காரதாசன் இந்தச் சந்நியாசி நித்தியானந்தர்.

டி.ஐ.ஜி. வேணுகோபால் தரும் தகவலின்படி, இந்தச் சந்நியாசி, நாள் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார் குனியாவில். ஏ.டி.எம். சென்ட்டரில் ஏராளமான பணம் எடுத்துக் கொண்டே இருந்திருக்கிறார். கிரெடிட் கார்டுகளையும் பயன்படுத்தி இருக்கிறார்... 150 கிலோ மின்னணுப் பொருள்கள், 3 லேப்டாப்புகள், 10 செல்போன்கள், 15 சிம்கார்டுகள், கேமரா, மோடம், போர்ட்டபுள் கனெக்­ன், இன்டர்நெட் தகவல் சாதனங்கள், உலர்ந்த பழ மூட்டைகள், பெரிய பெரிய சூட்கேஸ்கள் 12, லட்சக்கணக்கில் பணம், கத்தை கத்தையாக அமெரிக்க டாலர்கள் ஆகியவைகள் குனியால் வீட்டில் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.

ஒரு சாமியார் இந்த வகையான பொருள்கள் எல்லாம் ஏன் வைத்திருக்க வேண்டும்? வைத்திருந்தால் அவன் சாமியாரா?

நித்தியானந்தர் ஒரு கிரிமினல் என்பதைக் காவல் துறையினர் உறுதி செய்கிறார்கள். அவர் காவல் துறையின் விசாரணை வளையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஒரு விசாரணைக் கைதியைப் போல் அவர் விசாரிக்கப்பட வேண்டுமா அல்லது, பாதாம், பிஸ்தா, உலர்திராட்சை, பப்பாளி எல்லாம் கொடுத்து விருந்தினர் போல் நடத்தப்பட வேண்டுமா? குறிப்பிட்ட காலத்தில் விசாரணையைத் தொடங்குவதற்குப் பதிலாக, நித்தியானந்தர் ஆறஅமர தூங்கி எழுந்த பின்னர்தான் விசாரணை நடத்த முடிகிறது என்று விசாரணை அதிகாரிகள் சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? நித்தியானந்தரை விசாரிப்பது காமெடி காட்சிக்கு வசனம் எழுதுவது போல இருக்கிறது என்று அவர்கள் சொன்னால், நடப்பது விசாரணையா அல்லது காமெடிக் காட்சிக்கு ஒத்திகையா? மொத்தத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் நித்தியானந்தர் விசாரணை இருக்கிறதா அல்லது நித்தியானந்தரின் விருப்பத்திற்கு ஏற்ப காவல் துறை நடந்து கொள்கிறதா? என்பது புரியாத புதிராக இருக்கிறது.

இதுவே ஒரு சாதாரணக் குடிமகன், ஒரு சிறிய தவறு செய்து, காவல் துறை விசாரித்தால் இப்படித்தான் விசாரணை நடக்குமா? கடுமையாக விசாரணைகள் நடத்திய பல விசாரணைகள் பற்றிய செய்திகளை நாம் செய்தித்தாள்களில் பார்க்கிறோமே! இவனுக்குப் பாதாமும் இல்லை பிஸ்தாவும் இல்லை, பப்பாளியும் இல்லை, நிம்மதியாக இவனால் அங்கு தூங்கவும் முடியாது!

இதற்கு நேர் எதிரிடையாக நித்தியானந்தர் ‘பூ’ வைப் போல விசாரிக்கப்படுகிறார் என்றால், இந்த விசாரணையின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.

இந்திய அரசியல் சாசனப்படி அனைவரும் சமம்தான். குற்றம் சாட்டப்பட்டவன் சாமியாரானால் என்ன? சாராரணமானவன் ஆனால் என்ன? இருவருக்கும் ஒரே மாதிரியான விசாரணை அணுகுமுறைகள் தான் இருக்கவேண்டும்.

கைதாகியுள்ள நித்தியானந்தர் சாமியாராக இருந்தாலும் சரி, அவருக்காக மதச்சாயம் பூசப்பட்டாலும் சரி, இரண்டையும் தூக்கி எறிந்துவிட்டு, நேர்மையான சரியான விசாரணையை, விசாரணை அணுகுமுறையை அந்தச் சந்நியாசியின் மீது நடத்தப்பட வேண்டிய கடமை, கர்நாடக காவல்துறையின் தலையாய கடமை என்பதை நினைவூட்ட வேண்டியது - நம் கடமை!

- எழில்.இளங்கோவன்

Pin It