இந்திய மருத்துவக் குழுமம் அளித்துள்ள பரிந்துரையின் பேரில் 2011 - 2012 ஆம் ஆண்டு முதல் அனைத்திந்திய அளவில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது அடுத்தக் கல்வி ஆண்டு முதல் அனைத்திந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தத் தயாராகிவிட்டது.

karunanidhi_213தமிழக அரசு சார்பில் இந்தப் பொது நுழைவுத் தேர்வை ஏற்க முடியாது என்று, தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மத்திய அரசுககுக் கடிதம் எழுதியும், நாடாளுமன்றக்குழுத்தலைவர் டி.ஆர். பாலு மூலமாகவும் தெரிவித்து விட்டார்.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற மருத்துவக் கல்வி நிறுவனம் “எய்ம்ஸ்”. (AIIMS - All India Institute of Medical Science)

சாதாரண, சாராசரி மாணவர்களுக்கு அவ்வளவு எளிதில் இங்கு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து விடாது. இந்நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான இடங்கள் 50. இதில் பொதுப்பிரிவினருக்கான இடங்கள் 34. தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடங்கள் 7. பழங்குடியின மாணவர்களுக்கான இடங்கள் 4. வெளிநாட்டினருக்கான இடங்கள் 5. இந்த 5 இடங்களுக்கான வெளிநாட்டு மாணவர்களை இந்திய அரசு நியமிக்கும்.

இந்தப் படிப்பில் சேர மாணவருக்கான நான்கு முக்கிய விதிகள் பிளஸ் டூ வில் 60 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும், ஆங்கிலம் மற்றும் கணினி பற்றிய தேர்ந்த அறிவு இருக்க வேண்டும்.வயது 21 ஐத் தாண்டியிருக்கக் கூடாது. தேர்வு வினாத்தாள்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் தான் இருக்கும்.

புதுவை “ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுகேசன் அன்ட் ரிசர்ச்” (ஜிப்மர்) மருத்துவக் கல்வி நிறுவனத்திற்கும் இது பொருந்தும்.

இந்தக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர்களின் தேர்வை பொது நுழைவுத் தேர்வு முறையாக அறிவிக்கிறது மத்திய அரசு. அதாவது கல்வி வாய்ப்பு மிக்க முற்பட்ட மாணவர்கள், கல்வி வாய்ப்பில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், கல்வி முற்றாக மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் இவர்கள் எல்லோருமே 60 விழுக்காடுக்கு மேல் மதிப்பெண்கள் பெற வேண்டும்., ஆங்கிலம், கணினியில் மிகத் தேர்ந்த அறிவு பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பும் 21 ஐத் தாண்டியிருக்கக் கூடாது என்பது எல்லா மாணவர்களுக்குமான ஒரே பொது விதி.

இந்த பொதுவிதி சமூக நீதியைத் தகர்த்து எறிகிறது.

ஈராயிரம் ஆண்டுகளாக சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, முற்றாக மறுக்கப்பட்டு இருந்தது. அவர்கள் ஆடு மாடு மேய்த்தும், பண்ணை அடிமைகளாக இருந்தும் வாழவேண்டியவர்களாக இருந்தனர். குழந்தைகளும் மாடு மேய்க்க நிர்பந்தப் படுத்தியதால் முற்றாக கல்வி இவர்களுக்குக் கிடைக்கவில்லை. இப்பொழுதுதான் தட்டுத் தடுமாறி கல்விபெறத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதுபோலவே பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களும் பாதிப்புக்கு உள்ளானார்கள். 1914 ஆம் ஆண்டுக்குப் பிறகு எழுந்த பகுத்தறிவு, திராவிட இயக்கப் போராட்டங்களால் இன்று இந்த பிற்படுத் தப்பட்ட மாணவர்கள் கல்வி பெறத் தொடங்கி இருக்கிறார்கள்.

குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மாறாக, தொடக்கத்தில் இருந்தே கல்வி வாய்ப்பு பெற்றுக்கொண்டு வந்த முற்பட்ட மாணவர்கள் எளிதில் மருத்துவப் படிப்பு வாய்ப்பைப் பெற்றுவிடுகிறார்கள்.

இந்தப் பொது நுழைவுத் தேர்வு முறை, ஒரு வகையில் மனுநீதி சாத்திரத்தை ஒட்டி இருப்பதைப் பார்க்கலாம்.

இப்படி ஒரு நிலையில் திராவிட மாணவர்கள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதனால்தான் பேரறிஞர் அம்பேத்கர் போராடி வகுப்புவாரி உரிமை என்கிற இடஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்தார். சில பல மாற்றங்களுடன் இன்று 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழகத்தில் நடமுறையில் இருந்து வருகிறது.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி, கிராமப்புற மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு கலைஞர் தலைமையிலான தமிழக அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, தொழில் மற்றும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வை 2007 -2008 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியது.

தவிர மத்திய அரசு தற்போது அறிவித்துள்ள முடிவு மாநிலங்களின் கல்வி முறையை நிர்வகிப்பதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுவதாகவும், தமிழ்நாடு அரசு 69 விழுக்காடு இடஒதுக்கீட்டைப் பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருகிறது என்றும், மத்திய அரசின் இந்தப் புதிய நுழைவுத் தேர்வு முறையினால் இச் சமூகநீதி முறையைச் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும், அதனால் பொது நுழைவுத் தேர்வு நடத்துவதை ஏற்க இயலாது என்றும் கலைஞர் மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

தமிழக அரசின் இந்த முடிவு கிராமப்புற, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மாணவர்களும், பொருளாதாரத்தில் நைந்து போய் இருக்கும் ஏழை எளிய மாணவர்களும் பெரிதும் பயன் பெறக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. கலைஞரின் உணர்வுப் பூர்வமான செயல்பாடு இது.

அதே நேரம் பொது நுழைவுத் தேர்வை ஜெயலலிதாதான் ரத்து செய்தார் என்று அவர் கூறுகிறார்.

ஜெயலலிதா ஆட்சியின் போது, சட்ட விதிகளின் படி பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்யாமல், 09.06.2005 இல் ஓர் அவசர ஆணைபிறப்பித்து ரத்து செய்வதாக அறிவித்தார். அந்த ஆணை சென்னை உயர்நீதி மன்றத்தால் 27.06.2005 அன்று செல்லுபடியாகாது என்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மீண்டும் அதேபோல 18.02.2006 ஆம் நாள் ஜெயலலிதா ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட ஆணை அதே உயர்நீதி மன்றத்தால் மீண்டும் 27.02.2006 இல் ரத்து செய்யப்பட்டது.

இத்தகைய ஆணைகள் உளப்பூர்வமாக ஏழை எளிய மக்கள் நலன் கொண்டதல்ல - அப்படிக் காட்டிக் கொள்வதுதான்.

ஆனால் 2006 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியின்போது, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம். அனந்தகிஷ்ணன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின்படி பொது நுழைவுத் தேர்வு முற்றிலும் நீக்கப்பட்டு அதைச் சட்டமாக்கி, அது 7.03.2007 தொடக்கம் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.

இப்பொழுது மீண்டும் மத்திய அரசு பழைய பல்லவியான பொது நுழைவுத் தேர்வை நடைமுறைப்படுத்த முயல்கிறது.

நம் நாட்டில் சாதிகளாக, சமூகங்களாகப் பிரிந்து கிடக்கும் அனைத்து மாணவர்களின் கல்வித்தரம் ஒரே நேர்கோட்டில் இல்லை. அவர்களின் பொருளாதார வாழ்வு முறையும் கல்விக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையப் பெறவில்லை. எனவே பொது நுழைவுத் தேர்வு என்பது ஒரு குறிப்பிட்ட முற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கே சாதகமாக அமைந்துவிடும்.

எனவே பொதுநுழைவுத் தேர்வு முறையை முற்றாக ஒழித்துக்கட்டிவிட்டு, சமூக நீதிக்கான இடஒதுக்கீட்டு முறையையே தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதே உண்மையான சமூக நீதி ஆகும்!

Pin It