‘கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போன கதை’ என்ற ஒரு பழமொழியைச் சாதாரண மக்களும் சொல்வார்கள்.

தமிழக அரசுக்கு இது மிகவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

நிர்வாகத் திறன் அற்று, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது அதை முந்தைய ஆட்சியர் மீதோ அன்றி நடுவண் ஆட்சி மீதோ பழியைப் போட்டு, இல்லாத வைகுந்தம் போகும் கதைபோல் இருக்கிறது தமிழக அரசின் செயல்.

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது தமிழகத்தில் மின்வெட்டு இருந்தது. அது இப்போது போலல்லாமல் சென்னை தவிர்த்துப் பிறமாவட்டங்களில் நான்கு மணிநேரம் மட்டும் மின்வெட்டு இருந்தது.

இது குறித்து ஜெயலலிதா, மைனாரிட்டி அரசின் கையாலாகாத்தன நிர்வாகம் என்று அறிக்கை வாசித்தார். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நான்கே மாதங்களில் மின் வெட்டைச் சரி செய்வேன் என்று வேறு கூறினார்.

வந்தது அ.தி.மு.க. ஆட்சி. நடந்தது என்ன-?

கழக ஆட்சியின் போது, நான்கு மணிநேரம் என்பது, இரட்டிப்பு ஆகி, எட்டுமணி நேரம் மின்சாரம் காணாமல் போய்விட்டது. பிறகு 16 மணி நேர மின்வெட்டு வரையில் நிலைமை மிகவும் மோசமானது. இதனால் வேளாண்மை, தொழில், கல்வி என மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு கொஞ்சநஞ்சம் அன்று.

அப்போதும் தி.மு.க. அரசுதான் இதற்குக் காரணம் என்றார். இப்போது மீண்டும் எட்டு மணி நேரம் மின்வெட்டு தொடர்கிறது-.

என்னவோ, தெரியவில்லை, இம்முறை கலைஞரை விட்டுவிட்டு, மத்திய அரசுதான் தமிழக மின்வெட்டுக்குக் காரணம் என்று தலைமை அமைச்சர் மன்மோகன் சிங்கிற்குக் கடிதம் எழுதிவிட்டார்.

அ.தி.மு.க. ஆட்சியேற்றபின் கொஞ்ச காலம் கடந்து, ஓரளவு மின்வெட்டு சரியானபோது, எல்லாம் தன் நிர்வாகத் திறமையே என்று பேசினார் முதல்வர் ஜெயலலிதா.

உண்மையில் தி.மு.க. ஆட்சியின் போது மின் உற்பத்திக்காகப் போட்ட திட்ட நடைமுறையே இடைக்காலத்தில் மின்சாரம் சற்றுச் சீராகக் காரணமாக இருந்தது என்ற உண்மையை ஜெயலலிதா மறைத்து விட்டார்.

வடசென்னை, நெய்வேலி அனல்மின் நிலையங்களில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்து, மின் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. அதைச் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, மைனாரிட்டி அரசு, மத்திய அரசு என்று சொல்லிக்கொண்டு இருப்பது ஆட்சிக்கு அழகன்று.

நல்லது நடந்தால் நானே காரணம் என்பதும், அல்லவை என்றால் மற்றவர் மீது பழிபோடுவதும் நாணயமான செயல் அன்று.

“செயற்கரிய செய்வர் பெரியர், சிறியர்

செயற்கரிய செய்கலா தார்”

என்கிறார் வள்ளுவர்.

கலைஞர் சொல்வதைப் போல தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறவில்லை. மின் ‘பகை’ மாநிலமாகத்தான் ஆகியிருக்கிறது.

Pin It