திசம்பர் - 6 அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள்

ஆரியர்கள் வருவதற்கு முன்னர், பண்டைய இந்தியாவில் பரந்து வாழ்ந்த தொல் குடியினர், திராவிடர்கள். இத் தொல்குடியினர் நாகர்கள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர்.

“திராவிடர்கள், நாகர்கள் என்பது ஒரே மக்களின் வெவ்வேறு பெயர்களே என்பதை ஒப்புக் கொள்ள வெகுசிலரே தயாராக இருப்பர் என்பதை மறுக்க முடியாது. அதே போன்று திராவிடர்கள் நாகர்களாக தென்னிந்தியாவில் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் பரவியிருந்தனர் என்பதையும் சிலரே ஒப்புக்கொள்வர். ஆயினும் இவை வரலாற்று உண்மைகள் என்பதில் ஐயமில்லை” - இது பேரறிஞர் டாக்டர் அம்பேத்கர் தரும் செய்தி.

ஆரியர்களின் முதல் நூலான ரிக் வேதத்தில் நாகர்கள் பற்றிய செய்திகளும் குறிப்புகளும் இருக்கின்றன. எனவே ஆரியர்களுக்கு முந்தைய, இந்நாட்டின் தொல்குடியினர் நாகர்கள் என்பது உறுதி பெறுகிறது. அப்படியானால் நாகர்கள் என்பவர் யார்?.

சி.எப்.ஓல்டாம் சொல்கிறார், “நாகர்கள் திராவிட சேரர்களின் குருதித் தொடர்புடையவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை”.

இங்கே சேரர்கள் என்று சொல்லாமல், திராவிட சேரர்கள் என்கிறார் ஓல்டாம்.

 அதாவது திராவிட என்பது சேரர்களின் மொழியாகிய தமிழைக் குறிக்கிறது. சேரர் என்பது அவர்கள் நாகர் இனம் என்பதைச் சுட்டுகிறது. இங்கே ஒரு கேள்வி எழுகிறது. சேரர்கள் எப்படி நாகர்கள் ஆனார்கள்?-

பாம்பைத் தங்களின் குலமரபுச் சின்னங்களாகக் கொண்டவர்கள் நாகர்கள் என்கிறார் தீட்சிதர். நாகம் என்ற பாம்பினத்தின் ஆண் சாதி சாரை. சாரை என்றதன் மருஉ சேரர் ஆனது. “தென்னிந்தியாவைச் சேர்ந்த சேரர்கள் நாகத்தை வழிபடும் பிரிவினரே அன்றி வேறல்லர் என்பது கண்கூடு” சி.எப். ஓல்டாமின் இந்தக் கூற்று நாகத்திற்கும் சேரர்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்துவதன் மூலம், பண்டைய சேரர்கள் நாகர்கள் என்பது உறுதியாகிறது. இவர்களின் குருதித் தொடர்புடைய திராவிட நாகர்கள் பண்டைய இந்தியா முழுவதும் பரவலாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

திராவிட மொழி பேசிய திராவிட நாகர்களைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் விரிவான தகவல்களைத் தந்திருக்கின்றார். அவற்றுள் சில...

திராவிட நாகர்கள் ஆதிவாசிகள் அல்லர். நாகரிகம் மிக்கவர்கள். இரண்டாம் சந்திர குப்தன் ஒரு நாகர் இனப் பெண்ணை மணம் செய்துள்ளான். சோழ மன்னன் கோக்கிள்ளியின் பட்டத்து அரசி நாகர் இனப்பெண். இன்றைய கராச்சிக்கு அருகில் ஒரு நாகநாடு இருந்தது இலங்கை மற்றும் சயாமில் இருந்து கிடைத்த பவுத்த நூல்களின் மூலம் தெரியவருகிறது. மத்திய இந்தியாவில் சேந்த்ரகா, சிந்தா, சிந்தகா வழிவந்த மக்கள் தங்களை நாகர்கள் என்று அழைத்துள்ளார்கள். கங்கைச் சமவெளிப் புறத்தில் குறிப்பாக பாஸ்டரில், பேகூரில், வீர மகேந்திரனை எதிர்த்து எரியபா தலைமையில் நாகர்கள் போராடிய செய்தி 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது. நர்மதா நதி அருகில் ரத்னாவத நாட்டை ஆண்டவன் ஒரு நாக மன்னன். கி.பி.4ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவின் குஷாணர்களின் அரசு நாகர்களால் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. வட இந்தியாவில் பல நாக மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அவர்களின் கல்வெட்டுகள், நாணயங்கள் இதைத் தெளிவாக மெய்ப்பிக்கின்றன என்று பல்வேறு சான்றுகளைத் தருகின்ற டாக்டர் அம்பேத்கர் இந்த நாக மரபினரே திராவிடர்கள் என்பதை அறுதியிட்டு அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

இத்திராவிடர்கள் வடமேற்கில் தட்சசீலத்தில் இருந்து வட கிழக்கில் அஸ்ஸாம் வரையிலும், தெற்கில் தென்னிந்தியா இலங்கை வரையிலும், கங்கைச் சமவெளியில் பரவலாகப் பல இடங்களிலும், கங்கைப் பள்ளத்தாக்கில் பெரும்பகுதியை அரசாளுபவர்களாகவும் இருந்துள்ளனர்.

நேபாளத்தின் நோவார், லிச்சாவிய திராவிடர்கள் தென்னகத் திராவிடர்களுக்குரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தனர். லிச்சாவியர்களின் திருமண உறவுகள் தமிழர்களின் திருமண உறவுகளை ஒத்திருந்தன. இவைகளின் மூலம், இவர்கள் திராவிடப் பொதுமரபு மூலத்தைக் கொண்டவர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

“நோவர்களிடையே சொத்துரிமை பெண் மரபுவழியில் அமைந்திருந்தது. பஞ்சாபைச் சேர்ந்த அரட்டாக்களும், பசிக்காக்களும், தகாங்களும் இந்தச் சொத்துரிமை முறையைத்தான் கடைப்பிடித்தனர். இதன்படி குடும்பச் சொத்துக்கு வாரிசுதாரர்கள் சகோதரிகளின் புதல்வர்களே அன்றி, சொந்தப் புதல்வர்கள் அல்லர். இது இன்னமும் ஒரு திராவிடப் பழக்கமாக இருந்து வருகிறது” என்று அண்மைய திராவிட எழுத்தாளரான பாலகிருஷ்ண நாயர் கூறுகிறார் என்று டாக்டர் அம்பேத்கர் தரும் மேற்கோள் மூலம் இந்திய திராவிட மக்களின் பண்பாட்டுக் கூறுகளையும் நிறுவுகிறார்.

சி.எப். ஓல்டாம் மேற்கு ஜுனாப் பள்ளத்தாக்கின் சியோரஜ், சட்லஜ் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சரஜ் மக்களும் கங்கைப் பள்ளத்தாக்கின் சியோரிஸ்களும் தென்னிந்திய பண்டைய சேரர்கள் வழி நாகத்தை வணங்கும் திராவிட மக்களின் பல்வேறு பிரிவினர்கள் என்று தெய்வ வழிபாட்டுக் கூறுகளிலும் ஒன்றுபடுவதாகக் கூறுவது, டாக்டர் அம்பேத்கரின் திராவிடப் பண்பாட்டுக் கூறுகளை வலுப்படுத்துவதாக அமைகிறது.

அடுத்து தென் திராவிட (தமிழ்) மொழி, வடஇந்திய வட்டார மொழிகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பதாக சமற்கிருத வல்லுனர்கள் கூறுகிறார்கள். பாண்டிய, கேகய, வஹ்லிக, சாஹ்ய, நேபாள, குந்தல, சுதேச, போட்டா, காந்தார, ஹைவா, கனோஜ் முதலான நாடுகளில் பைசாச மொழி பேசப்படுவதாக ‘சாவஹ சந்திரிகா’வில் லட்சுமிதாரா கூறுவதாக ஒரு மேற்கோளைத் தருகிறார் டாக்டர் அம்பேத்கர்.

இங்கே பைசாச மொழி என்பதை அசுர மொழி என்று விளக்கும் அவர் அசுரர்கள் என்று ஆரியர்கள் அழைத்தது திராவிடர்களைத்தான் என்றும் சுட்டிக்காட்டுவது பொருளுடை யதாக அமைகிறது.

“பலுஸ்சிஸ்தானத்தில் வழங்கும் பிராகுவி மொழிக்கும் தென்னிந்திய மொழிக்கும் தொடர்பு உள்ளது” என்று கூறும் ராபர்ட் கால்டுவெல், “பிராகுவி மொழியில் ஒருசில தலைமையான சொற்கள் திராவிடச் சார்புடையன. இலக்கண அமைப்பில் தெளிவான ஒற்றுமை உள்ளன. பிராகுவி மொழி திராவிட இனத்தை சிந்து ஆறு கடந்து நடு ஆசியா வரை கொண்டு போய்ச் சேர்க்கிறது. அந்த மொழி உண்மையில் பஞ்சாபி, சிந்தி இவற்றுடன் ஒத்த மொழியாயினும், திராவிடப் பகுதியுடன் இணைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது” என்று தென்னிந்திய தமிழகம் தொடக்கம் பலுசிஸ்தானம் வரை வழங்கிய மொழி திராவிட மொழி, அதன் இனக் கூறுகள் என்பதை உறுதி செய்கிறது.

பின்வந்த காலங்களில் ஆரியர்களின் சமற்கிருத ஆதிக்கம், அதன் தாக்கத்தால் வட இந்திய மொழிகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பண்பாடு நாகரிகங்களில் ஆரியத்தை ஏற்ற வட இந்திய மக்கள் ஆரியச் சார்புடையவர்களாக மாறியதின் விளைவாக வட இந்தியாவில் திராவிடச் சரிவும் மறைவும் ஏற்படலாயிற்று.

ஆந்திரர்களும், கேரளர்களும், கன்னடியர்களும் சமற்கிருதத்தை உள்வாங்கி திராவிடத்தை விட்டுவிட்டார்கள். எஞ்சி இருக்கும் தமிழர்களே இன்றும் திராவிடர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அம்பேத்கர் பதிவு செய்துள்ளார்.

நிறைவாக திராவிடர் அல்லது திராவிடம் என்றால், தமிழகம் - ஆந்திரம் - கருநாடகம்தான் திராவிடம் என்பது வரலாற்றுக்குப் புறம்பானது.

டாக்டர் அம்பேத்கர் ஆய்வுப்படி பண்டைய இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் என்பதுதான் வரலாற்று உண்மை என்பதை அவரின் நினைவு நாளில் உணர்வோம்.

Pin It