கொள்கை அறிவிப்புகள் என்று உலகின் பல அரசுகள் பல சமயங்களில் பலவற்றை அறிவிக்கின்றன. பலர் அப்படிப்பட்ட கொள்கை அறிவிப்புகள் வெளிவந்தவுடன் அதன் பின் நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அந்தக் கொள்கைகளையே பொறுப்பாக்குகின்றனர். ஆனால் உண்மையில் கொள்கைகள் ஒரு சமூகச் சூழல் மற்றும் தேவையினை அடிப்படையாகக் கொண்டு வருபவையே பொது நன்மை கருதி அரசில் இடம் பெற்றிருக்கக்கூடிய சில மதிநுட்பம் படைத்தவர்களால் அவை கொண்டுவரப் படுவதில்லை.

பொதுவாக அரசியல் கட்சிகள் வர்க்கப் பின்னணிகளுடன் செயல்படுகின்றன. அனைவருக்கும் பொதுவானவை என்று அக்கட்சிகள் தங்களைப் பற்றிக் கூறிக் கொண்டாலும் அனைவருக்கும் பொதுவானவையாக அவை இருப்பதில்லை. கட்சி அரசியல் என்பது மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னணியில் தான் தோன்றியது. அதாவது மன்னர்கள் வாரிசு உரிமைப்படி ஆண்ட அந்தப் போக்கினை மாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களைக் கொண்டு ஆட்சி நடக்கிறது என்று காட்டுவதற்காக அந்த மக்களாட்சி முறை தோன்றியது.

பலகட்சி ஆட்சிமுறை

இவ்வாறு கட்சி அரசியல் தோன்றியதன் பின்னணியில் எந்திரத் தொழில் உற்பத்தி முறையும் அதற்குத் தலைமை தாங்கிய முதலாளி வர்க்கமும் இருந்தன. எனவே அவ்வாறு ஆரம்ப காலத்தில் தோன்றிய பல கட்சிகள் முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்காகவே தோன்றின. முதலாளித்துவ நலன்களைப் பாதுகாப்பதற்கு ஏதாவது ஒரு கட்சி இருந்தால் போதுமே எதற்குப் பல கட்சிகள் உதயமாயின என்ற கேள்வி பலரது மனங்களில் எழலாம். முதலாளித்துவம் போட்டியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது முதலாளிகள் சந்தைகளைப் பிடிப்பதற்காக தங்களுக்குள் போட்டியில் ஈடுபடக் கூடியவர்கள். அந்தப் போட்டி அவர்களது நலனைப் பாதுகாப்பதற்காக உருவாகும் அமைப்புகளிலும் தோன்றுவது இயல்பே. எனவே முதலாளி வர்க்கத்திற்குச் சேவை செய்யப் பல கட்சிகள் இருப்பது முதலாளித்துவ உற்பத்திமுறை தோன்றிய காலத்திலிருந்து நிலவி வரக்கூடிய ஒன்றாகும்.

முதலாளிகளுக்குள்ளும் பல பிரிவுகள் உள்ளன. பல தேசிய இனங்களைக் கொண்ட நமது நாடு போன்ற நாடுகளில் பிராந்திய முதலாளிகள், பிராந்தியம் கடந்து நாடு தழுவிய அளவில் முதலீடு செய்துள்ள முதலாளிகள் எனப் பல பிரிவினர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரின் நலனையும் பிரதிபலிக்கும் விதத்தில் அரசியல் அமைப்புகள் அதாவது அரசியல் கட்சிகள் உருவாகின்றன.

அவ்வாறு உருவாகும் கட்சிகள் ஆளும் வர்க்கத்திற்குத் தங்களால் முடிந்த அளவு அதிகபட்சச் சேவையைச் செய்கின்றன. அத்தகைய சேவையை மக்களை நாசூக்காக ஏமாற்றி அதே சமயத்தில் ஏமாற்றுகிறோம் என்று தெரியாமல் அதற்கான கெட்ட பெயரையும் சம்பாதிக்காமல் செய்ய முயலுகின்றன. அதனைத் திறம்படச் செய்யும் கட்சிக்கு ஆளும் வர்க்கத்தின் ஆதரவு கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு அத்தகைய ஆதரவினைப் பெறும் கட்சிகள் ஆட்சியதிகாரத்திற்கு வருகின்றன.

ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த பின்பு ஆளும் வர்க்க நலன் கருதி உருவான அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி ஆளும் வர்க்கத்தின் அவ்வப்போதைய தேவைகளுக்கு உகந்த பல கொள்கை அறிவிப்புகளை அவை வெளியிடுகின்றன. அவ்வாறு கொள்கைகளை வகுத்துக் கொடுப்பதில், அவற்றை அறிவிப்பதில் அரசின் அதிகார வர்க்கம் மிகமுக்கியப் பங்கினை ஆற்றுகிறது.

ஜனநாயக சோசலிசம்

இவ்வாறு தான் பல்வேறு கொள்கை அறிவிப்புகள் நமது நாட்டிலும் கடந்த காலத்தில் ஆட்சியாளர்களால் செய்யப்பட்டுள்ளன. ஜனநாயக சோசலிசம் என்ற கொள்கை அறிவிப்பு இந்திய ஆளும் வர்க்கத்தின் நம்பகமான கட்சிகளில் தலையாயதாக இன்றுவரை விளங்கி வரும் காங்கிரஸ் கட்சியின் ஆவடியில் நடைபெற்ற மாநாட்டில் கொண்டுவரப்பட்டது.

கலப்புப் பொருளாதாரம், ஐந்தாண்டுத் திட்டங்கள், பசுமைப் புரட்சி போன்ற பல்வேறு திட்டங்களும் அக்கட்சியினால் கொண்டுவரப்பட்டன. அத்திட்டங்களில் பின்னணியில் அவை கொண்டுவரப்பட்ட காலகட்டத்தின் ஆளும் முதலாளி வர்க்கத்தின் தேவைகள் இருந்தன.

முதலாளித்துவம் வெகுவேகமாக வளர வேண்டும் என்பதற்காக அதற்கான ஆதார வசதிகளை அன்றிருந்த காங்கிரஸ் கட்சி மலிவான விலையில் ஏற்படுத்தித்தர விரும்பியது. அதற்காக ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு மக்களின் வரிப்பணத்தைச் செலவு செய்து அந்நிய நாடுகளிடம் உதவி பெற்று அதனைச் செய்தது. இவ்வாறு அரசுத் துறையில் தொழில்களைக் கொண்டு வருவது சோசலிசம் என்று கூறப்பட்டது.

ஆனால் சோசலிசம் அதன் விஞ்ஞானப்பூர்வ வடிவில் அமுல் படுத்தப்பட்ட சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் இருந்த சோசலிச அரசுகள் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசுகளாக இருந்தன. அதாவது அந்த நாடுகளில் பல கட்சி ஆட்சிமுறை இருக்கவில்லை. ஒரு வர்க்கத்தின் நலனுக்காகச் செயல்படச் சரியான ஒரே ஒரு கட்சிதான் இருக்க முடியும் என்ற அடிப்படையில் அங்கு செயல்படும் ஒரே கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.

அந்த நாடுகளிலும் தனிஉடமை என்பது நிதர்சன வடிவத்தில் இல்லாவிடினும் மனநிலை ரீதியாக அது பல பகுதி மக்களிடம் இருக்கவே செய்தது. ஆனால் காலாவதியாகிப்போன சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ சிந்தனைகளுக்கு வாய்ப்புக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அங்கு பல கட்சி ஆட்சிமுறை என்பது அனுமதிக்கப் படவில்லை. அவ்வாறு அனுமதிக்காதிருப்பதை வெளிப்படையாக அறிவிப்பதிலும் அன்றிருந்த மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு தயக்கம் ஏதுமில்லை. ஏனெனில் அவர்கள் வேசதாரிகளாக இருக்கவில்லை.

இவ்வாறு பட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக இல்லாமல் பல கட்சி ஆட்சிமுறையை அனுமதிப்பதாகவும் அதே சமயத்தில் சோசலிசத்தின் கூறுகள் என்று கருதப்பட்ட திட்டமிடுதலையும் அரசுத் துறையில் தொழில்களை வைத்திருப்பதையும் ஒரே சமயத்தில் கொண்டிருந்ததால் அந்தப் பின்னணிக்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் காங்கிரஸ் அன்று கடைப்பிடித்த கொள்கை ஜனநாயக சோசலிசம் என்று அறிவிக்கப்பட்டது.

தாராளவாதம் தோன்றியதன் பின்னணி

பொதுவாகவே முதலாளித்துவக் கருத்தோட்டம் தோன்றிய காலத்தில் அதன் சித்தாந்தமாக மக்கள் முன்பு நிறுத்தப்பட்டது தாராளவாதம் என்ற கண்ணோட்டமாகும். அந்தக் கண்ணோட்டம் உருவானதற்கும் ஒரு பின்னணி இருந்தது. அதாவது உலகம் முழுவதும் முதலாளி வர்க்கத்திற்குச் சந்தை வாய்ப்புகள் அகலத் திறந்திருந்த நிலையில் யார் வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்; அதற்கு எந்தக் கட்டுப்பாட்டையும் யாரும் விதிக்க முடியாது. அரசு கூட அதனைச் செய்ய முடியாது என்றிருந்த பின்னணியில் அதாவது தங்குதடையற்ற போட்டியினை தொழில் நடத்துவதில் அனுமதிப்பதற்கு உகந்த தெம்பையும் திராணியையும் கொண்டிருந்ததாக முதலாளி வர்க்கம் இருந்த காலத்தில் இந்தக் கண்ணோட்டம் தோன்றியது.

அதாவது முதலாளி வர்க்கம் இன்று வரையிலான அதன் வாழ்நாளில் அதிகபட்ச உரிமைகளை வழங்கிய காலகட்டம் அந்தத் தாராளவாதக் கண்ணோட்டம் நிலவிய காலகட்டமே. ஆனால் அந்த உரிமைகளைப் பெரும்பாலும் அனுபவித்தவர்கள் முதலாளிகளே. அந்தக் கண்ணோட்டம் சார்ந்த மதிப்புகள் அதாவது தாராளவாத மதிப்புகள் பொருளாதாரத்தில் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் பிரதிபலிக்கப்பட்டன.

நாம் இன்று கற்கும் கல்விமுறை கூட தாராளவாதக் கல்விமுறை என்றே அழைக்கப்படுகிறது. நமது நீதி மன்றங்களுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையில் அடிக்கடி உராய்வுகள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம். அதற்கான அடிப்படைக் காரணமும் இந்தத் தாராளவாதம் தான். அதாவது நிர்வாகத்தில் அறவே ஜனநாயகம் இல்லாமல் போய்விட்ட போக்கும், நீதி அமைப்பில் முதலாளித்துவ ஜனநாயக தாராளவாத மதிப்புகள் பழைய பெருங்காய டப்பாவிலிருந்து வரும் வாடையைப் போல் இருந்து கொண்டிருக்கும் போக்குமே அந்த உராய்வுகளுக்குக் காரணம்.

மங்கி மறைந்த தாராளவாதம்

இவ்வாறு இருந்த தாராளவாத மதிப்புகள் படிப்படியாக மங்கி மறையத் தொடங்கின. அவ்வாறு அவை மங்கி மறையத் தொடங்கியது யாருடைய இனிய விருப்பத்தின் அடிப்படையிலும் நடைபெறவில்லை. மாறாக முதலாளித்துவம் அது அடுத்தடுத்துச் சந்தித்த சந்தை நெருக்கடிகளின் பின்னணியில் அனைவருக்கும் அனைத்துவகை ஜனநாயக உரிமைகளையும் வழங்கினால் அது ஒரு வேளை முதலாளித்துவ அமைப்பு காலாவதியாகிவிட்டது என்பதைத் தர்க்க ரீதியாக நிறுவும் அளவிற்குச் சென்று அது தொழிலாளி வர்க்க மாற்று அரசியல் தலை தூக்குவதற்கு வழிவகுத்துவிடும் என்று முதலாளித்துவம் பயந்த பின்னணியில் நிகழ்ந்தது.

அதாவது முதலாளி வர்க்கம் ஒரு காலத்தில் வழங்கிய உரிமைகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தனது பாதுகாப்புக் கருதிப் பறிக்கத் தொடங்கிய நிலையில் தாராளவாத மதிப்புகள் மங்கி மறையத் தொடங்கின. அதாவது பாசிஸப் போக்குகள் தலைதூக்கிய பின்னணியில் தாராளவாத மதிப்புகள் பின்னுக்குத் தள்ளப்பட்டன.

நவீன தாராளவாதம் மீண்டும் பழைய தாராளவாதத்தை நிலை நிறுத்துவதல்ல

தற்போது தாராளவாத மதிப்புகளை சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் அமுலாக்கும் நாடுகள் என்று எவையும் இல்லை. ஆனால் பொருளாதார ரீதியில் முன்பிருந்த தாராளவாத நிலையினை மீண்டும் கொண்டுவரச் செய்யப்படும் முயற்சி என்ற அடிப்படையில் நவீன தாராளவாதக் கண்ணோட்டம் என்பது இப்போது முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்ணோட்டம் தோன்றியதற்கான பின்னணியையும் நாம் பார்க்கத் தவறக் கூடாது.

உலகின் பல நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் தொழில் ரீதியாக மிகவும் முன்னேறியவையாக இருந்தன. அதற்கான காரணம் எந்திரத் தொழில் உற்பத்திமுறை அந்த நாடுகளில் அறிமுகமான போது பல ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளில் அத்தகைய எந்திரத் தொழில் உற்பத்தி முறை தலைதூக்கி இருக்கவில்லை. எனவே அந்தக் கண்டங்களைச் சேர்ந்த நாட்டு மக்களிடமும் ஐரோப்பிய நாடுகள் தாங்கள் எந்திரத் தொழில் உற்பத்தி முறையில் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டின.

அதனால் எந்திரத் தொழில் உற்பத்திமுறை அந்நாடுகளில் பெரிதும் வளர்ந்தது. தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்குக் கூடுதல் தொழிலாளர் தேவைப்பட்டதால் அந்தக் கூடுதல் தொழிலாளரைப் பெறுவதற்காக அந்நாடுகளில் விவசாயமும் பெருமளவிற்கு நவீன மயமாக்கப்பட்டது. இருந்தாலும் கூட அங்கும் சில தொழில்கள் தேசிய மயமாக்கப்பட்டவையாக இருந்தன. ஆனால் மிகப் பெருமளவு தொழில்கள் தனியாரது ஆதிக்கத்தின் கீழ் இருந்தன.

ஆனால் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு விடுதலை பெற்ற இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவம் வெகு வேகமாக வளர்க்கப்பட வேண்டும் என்பதற்காக பல தொழில்கள் நாம் ஏற்கனவே பார்த்த விதத்தில் அரசுத் துறையில் நடத்தப்பட்டன.

உலகை மறுபங்கீடு செய்ய

உலக யுத்தங்கள் குறித்து நமக்கு கற்பிக்கப்படும் கல்வியின் மூலமாக நாம் தெரிந்து கொண்டிருக்கும் வரலாற்றிலிருந்து பெரிதும் மாறுபட்ட ஒரு வரலாறு மார்க்சிய வாதிகளால் கற்பிக்கப் படுகிறது. அது முதல் இரண்டு உலக யுத்தங்களும் ஏகாதிபத்திய நாடுகள் உலகைத் தங்களுக்குள் மறுபங்கீடு செய்து கொள்வதற்காக நடத்திய ஏகாதிபத்திய யுத்தங்கள் என்ற பார்வையை உலகிற்கு வழங்கியது.

அவ்வாறு உலக ஏகாதிபத்திய நாடுகள் யுத்தங்களைத் தோற்றுவித்து பிற ஏகாதிபத்திய நாடுகளின் கைவசமிருந்த நாடுகளைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் ஏன் எழுந்தது என்றால் வளர்ந்துவரும் உற்பத்தியும் அவற்றை வாங்கி உபயோகிக்கச் சக்தியற்றவர்களாக உள்நாட்டு மக்கள் ஆகியதனாலுமேயாகும்; அதாவது இப்படித் தோன்றிய முதலாளித்துவச் சந்தை நெருக்கடியே யுத்தங்களைத் தோற்றுவித்தது.

பொதுவாக யுத்தங்கள் மிகப்பெரிய பொருட் செலவினை வேண்டுபவை, உயிர்ச் சேதத்தினையும் தோற்றுவிப்பவை. சந்தை நெருக்கடி போன்ற பிரச்னைகளின் தீர்வுக்காக அவற்றையே சார்ந்திருப்பது மிகவும் கடினம். எனவே கட்டாயம் என்று தோன்றும் போது அவற்றை சார்ந்திருக்கவும் அதே சமயத்தில் இந்த சந்தை நெருக்கடியிலிருந்தான தீர்விற்கு பொருளாதார ரீதியில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆளும் வர்க்கங்கள் விரும்பின.

அந்த விருப்பம் சார்ந்த கேள்விகளுக்கு விடையாக கீன்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரக் கருத்துக்கள் வந்தன. அதாவது வாங்கும் சக்திக் குறைவுதான் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட அவர் மக்களிடையே வாங்கும் சக்தியை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டு வந்தார். அதற்காக அவர் அரசுத் துறையில் பல தொழில்களை உருவாக்கி அவற்றின் மூலம் வேலை வாய்ப்புகளைப் பெருக்கி ஒரு பகுதி மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்து அதன்மூலம் முதலாளித்துவ நெருக்கடிக்கு ஒரு வடிகால் அமைத்துத்தர விரும்பினார்.

கீன்ஸின் பரிந்துரை தற்காலிகத் தீர்வே

ஆனால் அவர் பரிந்துரைத்த மக்கள்நல அரசாங்கக் கருத்துக்கள் என்று அறியப்படும் கருத்துக்களும் முதலாளித்துவ நெருக்கடியை எதிர்கொள்வதற்கான ஒரு தற்காலிகத் தீர்வாகவே இருந்தன. ஏனெனில் அரசுத் துறையில் உருவாக்கப்படும் தொழில்கள் உற்பத்தி சார்ந்தவையாக இருக்க முடியாது. அவை பெரும்பாலும் சேவையை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருக்க முடியும்.

சேவைத்துறையை அதிகரித்து அதற்குப் பெருமளவு செலவு செய்தால் அது பணவீக்கத்தையும் விலை உயர்வையும் தோற்றுவிக்கும். அந்தச் செலவே உற்பத்தித் துறையில் செய்யப்பட்டால் அது பல பொருட்களை மக்கள் வாங்குவதற்கு ஏற்றவையாகச் சந்தைக்குக் கொண்டுவந்து அதன்மூலம் சமூகத்தில் பணப் புழக்கமும் அதைப் பயன்படுத்துவதற்குத் தேவையானப் பொருள் புழக்கமும் சம விகிதத்தில் இருக்கச் செய்யும். அது பொருளாதாரத்தில் நெருக்கடியைத் தோற்றுவிக்காது. அதாவது பணவீக்கமும் விலை உயர்வும் அதனால் பெருமளவு ஏற்படாது.

ஆனால் வாங்கும் சக்தி குன்றிய நிலையிலிருக்கும் மக்களிடம் உற்பத்தித்துறை சார்ந்த பொருட்களை அதிகம் உற்பத்தி செய்து கொண்டு சென்றால் அப்பொருட்களை மிகக் குறைந்த விலைக்கே விற்க வேண்டிவரும். ஆனால் முதலாளித்துவப் பொருளாதாரமோ லாப நோக்கை அடிப்படையாகக் கொண்டது. அதுவும் அதிகபட்ச லாப நோக்கை அடிப்படையாகக் கொண்டது. எனவே மிகக் குறைந்த விலைக்குப் பொருட்களை விற்பனை செய்து லாபமே இல்லாமல் அல்லது குறைந்த லாபத்திற்கு விற்க முதலாளிகள் முன்வர மாட்டார்கள். எனவேதான் கீன்ஸ் முன்வைத்த பொருளாதாரக் கருத்துக்கள் சேவைத் துறையை மையம் கொண்டவையாகவே இருந்தன.

கீன்ஸின் கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப் பட்டதால் பணவீக்கமும் விலை உயர்வும் பெருகிய நிலையில் அரசின் சேவைத் துறைகளைக் கட்டுப்படுத்தி தேசிய மயமாக்கப்பட்ட தொழில்களையும் தனியாருக்குத் தரைவார்த்து முதலாளித்துவப் பொருளாதாரத்தை அது அதள பாதாளத்தில் விழுந்துவிடா வண்ணம் சரிசெய்ய வேண்டிய தேவையும் அவசியமும் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டது.

தற்காப்பு வளையங்களைத் தகர்க்க

அதன் காரணமாக முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் தாங்கள் அதிநவீன உற்பத்தி முறையைப் பயன்படுத்தி தயாரிக்கும் உற்பத்திப் பொருட்களை அத்தகைய அதிநவீன உற்பத்தி முறை அறிமுகமாகாத நாடுகளில் விற்று லாபம் ஈட்ட விரும்பின. அவ்வாறு தங்குதடையின்றி அந்த நாடுகள் அவற்றைச் செய்வதற்குப் பல தடைக்கற்கள் இருந்தன. அவை தற்காப்பு வளையங்கள் என்று அழைக்கப்பட்டன. உலகின் பல பின்தங்கிய நாடுகளில் இருந்த பின்னணியில் இந்தத் தற்காப்பு வளையத் தடைகள் எழுந்து நின்றன.

அதாவது உள்நாட்டின் தொழில்களை வளரச் செய்வதற்காக அவற்றின் விலைகள் கூடுதலாக இருந்தாலும் அவற்றிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசுகள் விரும்பின. அதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களின் மீது பெரும் வரி விதிப்புகளை அவை செய்தன. ஆனால் பின்தங்கிய நாடுகளிலும் கூட ஏற்றுமதி வர்த்தகம் அந்நாடுகளின் பொருளாதாரத்தில் ஒரு குறிப்படத்தக்க பங்கினை வகிப்பதாக இருந்தது. அதற்குக் காரணம் யாரும் அறியாததல்ல.

பின்தங்கிய நாடுகளின் மக்களுக்கு அந்நாடுகள் ஏற்றுமதி செய்யும் பல பொருட்கள் தேவைப்படும் அளவிற்குக் கிடைக்காதிருந்த போதிலும் அவற்றை வாங்குவதற்கு சக்தியற்றவர்வளாக அந்நாடுகளின் பெரும்பான்மை மக்கள் இருந்தனர். அதனால் அவற்றையும் கூட ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்நாடுகள் இருந்தன.

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் உலக வர்த்தக அமைப்பின் மூலம் இந்தத் தற்காப்பு வளையங்களை உடைத்தெறிந்து சுதந்திர வர்த்தகம் உலக அளவில் நிலவ வழிகோல வேண்டும் என விரும்பின. அந்தப் பின்னணியில் வந்ததுதான் உலகமயம்.

தாராளம் என்பது கட்டுப்பாடுகள் இல்லாதது. தற்காப்பு வளையக் கட்டுப்பாடுகள் இல்லாத போக்கும் தாராளவாதம் என்ற வரையறைக்குள் வருவதாகவே இருந்தது. இந்தப் பின்னணியில் தான் அரசுத் துறையில் இருந்த பல தொழில்கள் தனியார் துறைக்கு வழங்கப்படும் போக்கு உலக அளவில் தோன்றியது.

முன் அனுமதி பெற்றுத் தொழில் தொடங்க வேண்டும் என்ற லைசென்ஸ் முறை கைவிடப்பட்டது. படிப்படியாக வர்த்தகத் தடுப்புச் சுவர்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அரசாங்கம் மக்களின் பல உபயோகப் பொருட்களுக்கு வழங்கி வந்த மானியங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு இறுதியில் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

சலுகைகள் வழங்குவது கட்டுப்பாடுகள் விதிப்பது இவை அனைத்தும் இல்லாத ஒரு சுதந்திர வர்த்தகச் சூழல் அதாவது சந்தை சக்திகளின் செல்வாக்கிற்கு முன்னுரிமை வழங்கும் சூழலை உலக அளவில் நிலவச் செய்யும் போக்காக அது மாறியது. இந்த நவீனத் தாராளவாதத்திற்கும் முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் நிலவிய யதார்த்தமான தாராளவாதத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருந்தது. கண்ணை உறுத்தும் தன்மை வாய்ந்த அந்த வேறுபாடுகளை மறைக்க முடியாது என்பதால் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள் தற்போது அவர்கள் அறிமுகம் செய்த இந்தக் கொள்கைக்கு நவீன தாராளவாதக் கொள்கை என்று பெயரிட்டனர்.

நாம் இதனை இத்தனை விளக்கமாகப் பார்ப்பதற்கான முக்கிய காரணம் முதலாளித்துவம் அதன் வளர்ச்சிப் போக்கின் ஒரு கட்டத்தில் அதன் தேவைகளுக்கு உகந்த வகையில் கொண்டு வந்ததே இந்தக் கண்ணோட்டம். மற்றபடி இந்தக் கண்ணோட்டம் பொதுவாகத் தானே உருவாகி அது பலரால் எடுத்து அமுலாக்கப்பட்ட விதத்தில் கோளாறுகள் பலவற்றைத் தோற்றுவித்த கண்ணோட்டமல்ல. இன்று இந்தக் கண்ணோட்டம் தான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம் என்று கூறுவோர் இதற்குப் பின்னணியாகவும் காரணமாகவும் இருந்த முதலாளித்துவத்தை மூடி மறைத்துக் காக்கும் வேலையைச் செய்கின்றனர். இதனை அம்பலப்படுத்து வதற்காகத்தான் இக்கண்ணோட்டத்தை இத்தனை விரிவாக நாம் இங்கு ஆய்வு செய்கிறோம்.

Pin It