தோழர்களால் தங்களது அன்பிற்குரிய மூத்த சகோதரி என்று கருதவும் அழைக்கவும்பட்ட தோழர் ரேகா சின்கா இந்த ஆண்டு மே மாதம் 18- ம் நாள் மாலை 3.45 மணியளவில் பாட்னா நகரில் போரிங் கால்வாய் சாலையில் உள்ள வைஷ்ணவி பிளாஸா அடுக்குமாடிக் குடியிருப்பில் அவர் வசித்த வீட்டில் காலமானார். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் அவரது மரணம் நேர்ந்தது. அனைவராலும் நன்கு அறியப்பட்ட மார்க்சிய சிந்தனையாளர் சிப்தாஸ்கோஷ் அவர்களின் சிந்தனைகளின் தாக்கத்தால் உத்வேகம் பெற்று உழைக்கும் வர்க்கப் போராட்டப் பதாகையை தனது இறுதி மூச்சுவரை அயர்வின்றி உயர்த்திப் பிடித்த அவரது வாழ்க்கைப் பயணம் இவ்வாறு முடிந்தது.
 
பல்வேறு எதிர்மறை நிலைகளை துணிச்சலுடனும் லட்சிய வேட்கையுடனும் எதிர்கொண்ட அவர் உழைக்கும் வர்க்க இயக்கம் உருவாக்கிய ஒரு அசாதாரணமான பெண் தலைவர் ஆவார். தொழிற்சங்க இயக்கம் பல்வேறு வகையான சந்தர்ப்பவாதப் போக்குகளுக்கு இரையாகி உள்ள இன்றைய நிலையில் தோழர் ரேகா சின்காவைப் போல் தான் கையிலெடுத்த லட்சியத்தை அர்ப்பணிப்புத் தன்மையுடன் எடுத்துச் செல்பவர்கள் மிகவும் குறைவே.

தோழர் ரேகா சின்காவைப் பீடித்திருந்த கொல்லும் தன்மை வாய்ந்த நோய் அவரை செயலிழந்தவராக ஆக்கிய வேளை வரை அவர் அமைப்பு ரீதியாக ஒருங்கு திரட்டப்படாத கட்டிடத் தொழிலாளர் இயக்கத்தை தனிப்பட்ட முதலாளிகளுக்கு எதிராகவும் காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தின் அடாவடித்தனங்களை எதிர்கொண்டும், சீரிய முறையில் தலைமையேற்று நடத்தினார்.

அவ்வாறு கட்டிடத் தொழிலாளர் இயக்கத்திற்கு தலைமைப் பொறுப்பேற்றிருந்த கால கட்டத்தில் தனது சொந்த நலனை சிறிதளவு கூடப் பொருட்படுத்தாத அர்ப்பணிப்புத் தன்மை வாய்ந்த தலைவராக விளங்கினார். 1960 மற்றும் 1970-களில் ஏறக்குறைய 10 ஆண்டு காலம் அவர் சப்பை மஸ்தூர் சங்கம் எனப்படும் அப்போதைய கிழக்கிந்திய ரயில்வேயின் தானாப்பூர் மண்டலத்தின் தலைவராகச் செயல்பட்டார்.

அரசியல் ரீதியாக அவர் எஸ்.யு.சி.ஐ கட்சியின் பாட்னா கிளையில் பல ஆண்டுகள் செயல்பட்டார். அக்கட்சியின் பெண்கள் அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருந்த ஒரு நிர்வாகி என்ற ரீதியில் பல்வேறு பெண்களின் இயக்கங்களையும் அவர் தலைமையேற்று நடத்தி தனது பங்கினை சீரிய முறையில் ஆற்றினார்.

எஸ்.யு.சி.ஐ-லிருந்து அரசியல் வேறுபாடுகள் காரணமாக விலகிய பின்னர் அவர் ஒரு உண்மையான புரட்சிகர உழைக்கும் வர்க்கக் கட்சியாக கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொது மேடையைக் கட்டியமைக்கும் அரும்பணியில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக் கொண்டார். அவரது மரணம் கம்யூனிஸ்ட் தொழிலாளர் செயல்பாட்டுப் பொதுமேடையை ஒரு கட்சியாக உருவாக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாகும்.

அவரது மரணத்தைஒட்டி அகில இந்திய அளவிலான இரங்கல் கூட்டம் வைஷ்ணவி பிளாஸா அடுக்குமாடிக் குடியிருப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்த இரங்கல் செய்தியை தோழர் விப்பின் மகத்தோ முன்மொழிந்தார். அதனை தோழர்கள் சந்திரிகா பிரசாத், ராம்நாராயண் பாஸ்கர் ஆகியோரும் திருவாளர்கள் அபை சவுத்திரி, ஆர்.கே. சர்மா ஆகியோரும் திருமதி அனுராதா அவர்களும் வழிமொழிந்து தங்ளது மறைந்துவிட்ட தலைவருக்கான மரியாதையைச் செலுத்தினர்.

Pin It