சென்னை சட்டக்கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களுக்கிடையே நடைபெற்ற மோதல் தமிழகம் முழுவதும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள் முதல் பத்திரிக்கையாளர்கள் வரை அவைரும் காவல்துறையினர் கலவரத்தின் போது கல்லூரி வளாகத்திற்கு முன்பு இருந்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்காது கலவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த செயலை ஒருமித்த குரலில் கண்டித்து வருகின்றனர். கண்டன குரல் மிகவும் அதிகமாகி அரசின் மெத்தனப்போக்கு அம்பலப்பட்டு போனதால் வேறுவழியின்றி தமிழக அரசு சென்னை போலீஸ் கமிஷ்னரை இடமாற்றம் செய்தும் உதவிகமிஷ்னர், கல்லூரி முதல்வர் ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்தும் தனது "கடமையை" கடனுக்கு செய்துள்ளது.

இதனை ஒட்டி தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றம் தோன்றியது. பல இடங்களில் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் சாலை மறியல்கள் போன்றவை நடைபெற்றன. மோதலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட, முக்குலத்தோர் வகுப்பினைச் சேர்ந்த இருபாலரையும் சாதிய ரீதியாக உருவேற்றிவிட்டு அதில் குளிர்காயும் சாதி அமைப்புகள் தத்தம் செயல்களை தங்களுக்கே உரிய விதங்களில் நியாயப்படுத்தும் வேலையைச் செய்து வருகின்றன.

'அடிபட்டு மிக அதிக காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கத்தி போன்ற ஆயுதங்கள் வைத்திருந்தனர்: எனவே முழுமையான தயாரிப்புகளுடன் மோதலுக்கு தயாராக இருந்தவர்கள் அவர்கள் தான்; தாழ்த்தப்பட்ட வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் தற்காப்புக்காக கட்டைகளையே பயன்படுத்தினர்' என்று தாழ்த்தப்பட்டோர் பிரிவினைச் சேர்ந்த சாதியவாதிகளும் அவர்களின் ஆதரவு அமைப்புகளும் கூறுகின்றனர். முக்குலத்தோர் பிரிவினரைப் பொறுத்தவரையில் அவர்கள் தரப்பு மாணவர்கள் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதை ஊடகங்கள் தெளிவாக வெளியிட்டு பெரிய அளவில் அவர்களின் நியாயப்படுதுதலை அவசியமற்றதாக்கி விட்டன.

காவல்துறையின் கடமை தவறிய செயல்

கலவரம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே மோதல் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் நிறைய இருந்தும் கலவரத்தன்று அது தொடங்குவதற்கு முன்பே பெரும் எண்ணிக்கையிலான காவல்துறையினர் கல்லூரிவாயில் முன்பு குவிக்கப்பட்டிருந்தும் கலவரத்தை முன்கூட்டி தடுக்கவோ அல்லது கலவரம் நடந்தபோது அதை ஒடுக்கவோ காவல்துறையும் கல்லூரி நிர்வாகமும் ஒன்றுமே செய்யவில்லை. இது எவராலும் மறுக்க முடியாத உண்மையாக வெளிவந்துள்ளது.

மிக மோசமாக அடிபட்டுக்கிடந்த மாணவனை தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்க்கும் மனிதாபிமான நடவடிக்கையைக் கூட காவல்துறை செய்யவில்லை. பத்திரிக்கை நிருபர்கள் காவல்துறையினரிடம் அதனை செய்யுமாறு வலியுறுத்தியும்கூட காவல்துறை தான் இருந்த இடத்தைவிட்டு நகராமலேயே இருந்தது. சட்டம், ஒழுங்கை பராமரிப்பதற்காகவே காவல்துறை உள்ளது என்ற கருத்து பொதுவாக உள்ளது. அது பெரிதும் பரப்பவும்படுகிறது. சட்டக் கல்லூரி சம்பவங்கள் இது எத்தனை அப்பட்டமான பொய்யயன தெளிவாக நிரூபித்துள்ளன.

நொண்டிச்சாக்கு தேடும் போக்கு

சட்டக்கல்லூரியில் மட்டுமல்ல வேறு இடங்களிலும் காவல்துறையின் உண்மையான சட்டம் ஒழுங்கு பிரச்னையின் பாலான அணுகுமுறை இவ்வாறே இருந்துள்ளது. சட்டக் கல்லூரியிலாவது காவல் துறையினர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே இருந்தனர்; முதல்வரின் வேண்டுதல் இன்றி அவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலையிலிருந்தனர் என்ற நொண்டிச் சமாதானத்தையாவது அங்கு கூறமுடியும்.

ஆனால் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 13.10.2008 அன்று கல்லூரிக்கு உள்ளே சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு என்ற போர்வையில் வைக்கப்பட்டிருந்த காவல்துறையினர் பேராயரின் ஆதரவு மாணவர் சிலருக்கும் போராடும் மாணவர்களுக்கும் இடையே மோதல் சூழல் உருவாகியபோது 'எப்படியோ ஒருவரையயாருவர் அடித்துக் கொண்டு சாவுங்கள்' என்று கூறி வளாகத்தைவிட்டே வெளியேறி விட்டனர். அதன் பின்னர் பேராயர் ஆதரவு மாணவர்கள் காவல்துறையின் கண்முன்பாகவே போராடிய மாணவர்களைத் தாக்கினர். ஆனால் அதன்பின்னர் காவல்துறையின் செயலின்மையை கண்டித்து சாலைமறியலில் மாணவர்கள் ஈடுபட முயற்சித்தபோது கண்மூடித்தனமாக அவர்களைத் தாக்கி ஒரு மாணவனின் மண்டையைப் பிளந்தனர்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை என்பது பல சமயங்களில் திட்டமிட்டு யாராலும் உருவாக்கப்படுவதில்லை. சில அற்பமான உடனடி காரணங்களே கூட வன்முறை ஏற்படும் சூழ்நிலையை உருவாக்குகின்றன. அந்த நிலையில் அதனை தடுக்க முயற்சி செய்வதே உண்மையில் காவல்துறையின் வேலை. அந்த பணிக்காகவே மக்களின் வரிபணத்தில் இருந்து அவர்கள் ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல சமயங்களில் காவல்துறை அப்படிப்பட்ட உடனடி நடவடிக்கை எடுப்பதே கிடையாது.

உடைமை வர்க்க நலன்காக்கவே காவல்துறை

காவல்துறையின் மேல்மட்டம் எங்கெல்லாம் சுரண்டப்படும் மக்களின் உடமைவர்க்கத்தை எதிர்த்த கிளர்ச்சிகளால் உடைமை வர்க்க நலன்கள் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் போராடும் ஏழை தொழிலாளரை ஒடுக்கவே காவல் துறையைப் பயன்படுத்துகிறது. அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு தேவையேதும் இல்லாத போதும் கூட அதற்கான ஆணைகள் மேல் மட்டத்திலிருந்து பறக்கின்றன. மேல் மட்டத்திலிருந்து ஆணை எதுவும் வராவிட்டாலும்கூட அங்குள்ள காவல்துறையினரே முதலாளிகள் தங்களை உரிய முறையில் கவனிப்பர் என்ற எண்ணத்தில் தாங்களாகவே போராடும் தொழிலாளரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கின்றனர்.

குர்காவுன் உள்பட பல தொழிலாளர் போராட்டங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். அதுதவிர இதுபோன்ற உடைமை வர்க்க நலன் சம்பந்தபடாத பிரச்னைகளில் எந்த சிரத்தையும் இன்றி கல்லூரி முதல்வரிடமிருந்து வேண்டுகோள் எதுவும் வரவில்லை என்று நொண்டிச் சமாதானம் கூறியே காவல்துறையினர் காலம் கடத்தும் வேலையைச் செய்கின்றனர்.

முழுக்க முழுக்க தேவையற்ற கலவரம்

சென்னை சட்டக்கல்லூரி மோதலைப் பொருத்தவரையில் அதில் மாணவர்கள் இத்தனை தூரம் வரிந்துகட்டிக்கொண்டு மோதலில் ஈடுபடுவதற்கு எந்த கொள்கை மற்றும் கோட்பாடு ரீதியான பிரச்னையும் இல்லை. இதில் கூறப்படும் காரணங்கள் எள்ளளவு கூட கல்வியுடனோ அல்லது கல்விகற்று வழக்கறிஞர் தொழிலில் சட்ட மாணவர்கள் ஈடுபடத் தொடங்கியவுடன் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பிரச்னைகளுடனோ தொடர்புடையவையல்ல. இக்கலவரம் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்ட இரண்டு வகுப்புகளையும் சேர்ந்த உடைமை மற்றும் அதிகார வர்க்கத்தினரின் நலனுக்காக உள்ள அந்தந்த சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் மாணவர் நலனையோ, கல்வி நலனையோ எள்ளளவும் கருத்திற் கொள்ளாது உருவாக்கி விசிறிவிட்டவையே.

அரசியல் - ஜாதிக் கட்சிகளால் விசிறிவிடப்படும் ஜாதியவாதம்

ஜாதி, மத, பேதம் கடந்தவை என்று தங்களைப் பற்றி பறை சாற்றிக்கொள்ளக்கூடிய கட்சிகளால் பிழைப்புவாத அடிப்படையில் அரசியல் நடத்தப்படுகின்றது. அவற்றிற்கு கொள்கை கோட்பாடுகள் எதுவும் இல்லாமல் போய்விட்டது. அதனால் கல்லூரி வளாகங்களுக்குள் பொது அரசியல் போக்கு அறவே இல்லாமல் போய்விட்டது. இந்த அரசியல் கட்சிகளும் சமூக நீதி என்பது போன்ற அலங்காரமான பெயர்களில் ஜாதியவாதத்தை நியாப்படுத்துகின்றன.

ஜாதியக் கட்சிகளும், அமைப்புகளும் எந்த உருப்படியான பொதுநல வேலைகளையும் செய்து மக்கள் மனதில் இடம் பிடிக்காமல் குறுக்குவழியில் குடுட்டுத்தனமான மக்கள் ஆதரவினை ஜாதிகளின் பெயரைச் சொல்லி தங்கள்பக்கம் இழுத்து அதன் மூலம் நாடாளுமன்ற அரசியலிலும், அரசு நிர்வாகங்களை நிர்ப்பந்தித்து சலுகைகள் பெற்று பிழைப்பை ஓட்டுவதிலும் அக்கறையாக உள்ளன. அவர்களே மாணவர்கள் மனதில் ஜாதியம் என்ற நச்சு விதையை தூவுகின்றனர். சமூகப்பிரச்னைகளில் ஈடுபாடு, பிரஞ்ஞை போன்ற எதுவும் இல்லாத நிலையிலிருக்கும் மாணவர்கள் இப்போக்குகளுக்கு இரையாகின்றனர்.

மாணவர்களின் முன்மாதிரிகளாக நிற்கத் தகுதிபடைத்த ஜாதி, மத, பேதம் கடந்த அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்கள் எவரையும் முதலாளித்துவ அரசியல் உருவாக்க திராணியற்றதாக இருப்பதால் அப்படிப்பட்ட தலைவர்கள் எவரும் இல்லாத நிலையில் ஒரு பெரிய கலாச்சார வெற்றிடம் மாணவர்களிடையே நிலவுகிறது. மிகவும் வருந்தத்தகுந்த விதத்தில் பல கலிசடைகள் அந்த வெற்றிடத்தை நிரப்பும் அவலநிலை நிலவுகிறது.

சின்னத்திரை மற்றும் வண்ணத்திரையினரின் பங்கு

திரைப்படங்கள் மற்றும் சின்ன திரைகளில் அடிக்கடி காட்டப்படும் அடிதடி நிகழ்ச்சிகள் இளைஞர் மற்றும் மாணவர் மனங்களில் வன்முறையை உன்னதப்படுத்தும் ஒரு போக்கை அவர்களை அறியாமலேயே உருவாக்குகின்றன. இதுதான் அத்தனை மோசமாக அடிபட்டு முற்றிலும் நினைவிழந்த நிலையில் கிடக்கும் ஒருவனை கம்புகளால் அடுத்தடுத்து இடைவெளிவிட்டு இடைவெளிவிட்டு தாக்கும் ஒரு கோரமான, கசப்பான, மிருகத்தனமான செயலை செய்யும் அளவிற்கு உள்ளுணர்வுரீதியாக அடிதடியில் ஈடுபட்ட மாணவர்களை தூண்டியுள்ளது.

மாணவர்கள் நிச்சயமாக பொது விசயங்களில் பங்கேற்க வேண்டும். உன்னதமான கொள்கைகளும், கோட்பாடுகளும் அவர்களை வழிநடத்த வேண்டும். இந்த சமூகத்தை வாட்டி வதைக்கும் மையமான வேதனை என்ன என்பதுபோன்ற விசயங்களில் அவர்கள் அக்கறைகாட்ட வேண்டும். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்ற மாவீரர்களின் பொதுநல எண்ணமும், தியாக சிந்தையும் அனைத்து வகை சுரண்டல்கள் மற்றும் அடிமைத்தனங்களிலிருந்தான விடுதலை வேட்கையும் மாணவர்களால் படிக்கவும் உணரவும்படவேண்டும். ஏனெனில் மாணவப்பருவத்தில் ஒருவன் எந்த கருத்துகளிலும் ஈடுபாடற்றவனாக இருக்கவே முடியாது.

இது போன்ற பொதுவான நல்ல விசயங்களுக்கான ஈடுபாட்டினால் ஒருவனுக்குச் சிரமங்கள் வருமென்றால் அதனை எதிர் கொள்ளலாம். ஏனெனில் அதன் மூலம் ஒரு ஒட்டு மொத்த சமுதாயமே எதிர்காலத்தில் பலன் பெறும். அவனது பங்களிப்பை வரலாறு பேசும், பாராட்டும். அதைவிடுத்து இது போன்ற மோதல்களில் ஈடுபடுவது அவர்களது பண்பு நலனையே பாழாக்கும்.

தேவையற்ற பாதிப்பு

இன்று இந்த மோதலில் தாக்குதலுக்கு இரையாகி நான்கு மாணவர்கள் மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். இவர்களை தாக்கியவர்கள் என்ற ரீதியில் பலர் கைதாகி வழக்குகளை சந்திக்கும் நிலையிலுள்ளனர். இவ்விரு தரப்பினரையும் பொருத்தவரையில் இவர்களுடைய கல்வி வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடை இதன் மூலம் உருவாகி உள்ளது. பிரச்னைகளே இல்லாத வாழ்க்கை என்பது இல்லை. இருப்பினும் பிரச்னைகள் நேர்வதற்கும் அதனை சந்திப்பதற்கும் ஒரு சரியான காரணம் இருக்க வேண்டும். இவ்விசயத்தில் அப்படிப்பட்ட காரணம் ஏதாவது உள்ளதா?

பொருளாதார ரீதியாக பார்த்தால் அரசின் வரைமுறைப்படியே இவ் இருபாலரும் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று வர்ணிக்கப் படுபவர்களே. இவர்களுக்கிடையே இப்படிப்பட்ட மோதலில் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலமாக இவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ள ஜாதியத்தை ஒழிக்கப்போகிறார்களா? இதனால் ஜாதியவாதமே மென்மேலும் கொழுந்துவிட்டு எரியப்போகிறது. சமத்துவத்தை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறெந்த நோக்கத்தையும் கொண்டிருக்கும் எந்த கிளர்ச்சியும், எந்த மோதலும் ஏதாவது ஒரு வகையில் ஒரு தரப்பினரின் மேலாதிக்கத்தை கொண்டுவருவதையே நோக்கமாகக் கொண்டிருக்கும்.

எந்த ஒரு வகுப்பினரின் ஜாதி ரீதியிலான மேலாதிக்கத்தையும் மற்றொரு வகுப்பினர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதன் விளைவு முடிவில்லாத மோதலும் பூசலுமே. எவ்வாறு வகுப்பு வாத பி.ஜே.பி கட்சியின் அரசியலுக்கு இடிபடாமல் இருந்த பாபர் மசூதி தீணிபோட்டுக் கொண்டிருந்ததோ அதுபோல் இந்த முடிவில்லாத ஜாதிய மோதல்களும் பூசல்களும் ஜாதிய கட்சிகளுக்கு தீனி போடும்; அது மட்டுமல்ல, ஜாதிமதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சிகள் என்று தங்களை கூறிக் கொண்டாலும் சமூக நீதி என்ற பெயரில் ஜாதிய வாதத்தை சுயலாபத்திற்காக வளர்த்து விசிறிவிடும் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் தீனிபோடும்.

என்றென்றும் மோதலுக்கும், பூசலுக்கும் வழிவகுக்கும் போக்கு

இந்த சமூக அமைப்பில் உண்மையான மேலாதிக்கம் பணத்தின் மூலமே ஏற்படுகிறது. எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அதில் வசதி படைத்தவர்கள் தங்களது வசதி வாய்ப்புகளை மென்மேலும் பெருக்கிக் கொள்ள தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க தங்களது ஜாதிகளை பயன்படுத்துகின்றனர்; ஜாதிய அமைப்புகளை ஏற்படுத்துகின்றனர். தங்களுக்காக திரண்டு வர இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று மற்ற வகுப்பினரிடம் காட்டி அவர்களது தொழில் வாய்ப்புகளில் பிறரின் தலையீடுகளைத் தவிர்த்து அவற்றை மேம்படுத்த முயலுகின்றனர்.

எதிர்காலத்தைத் தொலைக்கும் ஏழை மாணவர்கள்

அரசு நிர்வாகம் ஜாதிய அணிதிரட்டலுக்கும், அது வெளிப்படுத்தும் வன்முறை தோய்ந்த சக்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த பிரமுகருக்கு காரியம் செய்து கொடுக்காவிட்டால் பிரச்னை வரும் என்று எண்ணி அவர்களின் தனிப்பட்ட நலன் சார்ந்த காரியங்களை செய்து கொடுக்கிறது. இவ்வகையில் மிகப் பெரும் அளவில் ஜாதிய அணி திரட்டல்கள் அந்தந்த ஜாதிகளைச் சேர்ந்த உடைமை வர்க்கத்தினருக்கே பெரிதும் பயன்படுகிறது. எல்லா ஜாதிகளிலும் உள்ள ஏழை எளிய உழைக்கும் மக்கள் உரிய வர்க்கப் பார்வை அவர்களுக்கு ஊட்டப்படாததால் இந்த உடைமை வர்க்கச் சதிக்கு இரையாகி அவர்கள் விரிக்கும் வஞ்சக வலையில் விழுந்து தங்கள் எதிர்காலத்தைத் தொலைத்து விட்டு அல்லல்படும் அவலநிலைக்கு ஆளாகிறார்கள்.

வாசகர் கருத்துக்கள்
sanmukam
2009-02-26 07:10:00
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

but you must realise, communinty problem

Pin It