கல்கத்தாவில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றின் பெயர் தி டெலிகிராஃப். அது கிழக்கிந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிக்கைகளில் தலையாயது என்று கருதப்படக் கூடிய பத்திரிக்கை. அதில் கடந்த மாதம் ஒரு கட்டுரை வெளிவந்தது. அந்தக் கட்டுரை போலந்து நாட்டில் சோசலிசத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்த லே வேலசா குறித்தது.

பொதுவாக மாநில மொழிகளில் வெளிவரும் பத்திரிக்கைகளைக் காட்டிலும் ஆங்கிலப் பத்திரிக்கைகள் தரமானவையாக இருப்பதற்குச் சாதகமான சில சூழ்நிலைகள் உள்ளன. ஏனெனில் ஆங்கிலப் பத்திரிக்கைகளுக்கு உலகளாவிய வாசகர்கள் இருப்பதால் அவற்றில் வரும் செய்திகளும் கட்டுரைகளும் நன்கு பரிசீலிக்கப்பட்டு வெளிவருபவையாக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஆனால் பத்திரிக்கைகள் அவை மாநில மொழியைச் சேர்ந்தவைகளாக இருந்தாலும் ஆங்கில மொழியில் வெளி வருபவையாக இருந்தாலும் ஒரு வி­யத்தில் அவை ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. அதாவது அவற்றின் வர்க்க அடிப்படை எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.

மாநில மொழிப் பத்திரிக்கைகள் முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராக வரும் கருத்துக்களைக் கருத்து ரீதியாக எதிர்கொள்ளும் வேலையைப் பெரும்பாலும் செய்வதில்லை. அவை வெளியிடும் செய்திகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றை வெளியிடும் தொனியிலும் ஆளும் வர்க்க நலனைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. ஆனால் ஆங்கிலப் பத்திரிக்கைகள் முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராக அதற்கு மாற்று அமைப்பாக அனைந்து அம்சங்களிலும் வருவதற்கு வாய்ப்புள்ள சோசலிச சமூக அமைப்பையும் அதனைக் கொண்டு வருவதற்கு வழிகாட்ட வல்லதாக இருக்கும் சோசலிசக் கண்ணோட்டத்தையும் எதிர்ப்பதிலும் கொச்சைப் படுத்துவதிலும் மாநில மொழிப் பத்திரிக்கைகளைக் காட்டிலும் பன்மடங்கு முனைப்புடன் உள்ளன. அந்த அடிப்படையில் வந்துள்ள ஒரு கட்டுரையே தி டெலிகிராஃப் பத்திரிக்கையில் வந்த அந்தக் கட்டுரையாகும்.

போலந்தின் அரசியல் சூழ்நிலை

அந்தக் கட்டுரையை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பு லே வாலசா அவரது கிளர்ச்சியைக் கொண்டுவந்த காலத்தில் இருந்த போலந்து நாட்டின் அரசியல் சூழலைப் பார்ப்பது அவசியம். அதைப்போல் போலந்து நாட்டின் அரசியல் சூழ்நிலையைத் தனித்துப் பார்க்கும் போது ஒரு தெளிவான சித்திரம் நமக்குக் கிடைக்காது. அத்தகைய தெளிவான சித்திரம் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்பு முதலாளித்தவ அமைப்பிலிருந்து மாறி மக்கள் ஜனநாயக அமைப்புகளாக ஆன கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சூழ்நிலையைப் பார்ப்பதும் மிகவும் அவசியம்.

உலகில் மக்கள் எழுச்சி மூலம் சோசலிச சமூக அமைப்பு ஏற்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க நாடுகள் இரண்டே இரண்டுதான். ஒன்று ரஷ்யா, மற்றொன்று சீனம். ஆனால் ஒரு காலகட்டத்தில் உலகின் மூன்றில் ஒரு பங்கு நாடுகள் சோசலிச மயமாக இருந்தன. இவ்விரு நாடுகள் தவிர யுகோஸ்லோவாகியா, செக்கஸ்லோவாக்கியா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, போலந்து ஆகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் சோசலிச முகாமில் இடம் பெற்றவை ஆகின.

இந்த நாடுகளில் மகத்தான மக்கள் எழுச்சிகள் சோசலிசத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த நாடுகள் அனைத்திலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஓரளவு வலுவுடன் இருந்தன. இந்த நாடுகள் ஹிட்லரின் பாசிஸ ராணுவத்தால் கைப்பற்றப்பட்டுப் பாசிஸ ஆட்சியின் கீழ் இருந்தவை. ஆனால் அந்நாடுகளின் மக்கள் பாசிஸத்தை வாய்மூடி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

எதிரிகளாகப் பாவிக்கப்பட்டவர்கள்

ஹிட்லர் கொண்டுவந்த பாசிஸம் சமூகத்தின் இரண்டு பிரிவினரைத் தனது எதிரிகளாகப் பாவித்தது. ஒரு பிரிவினர் யூதர்கள், மற்றொரு பிரிவினர் கம்யூனிஸ்ட்டுகள். யூதர்கள் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் சிறுபான்மையினராக இருந்தனர். சிறுபான்மை இன மக்களிடையே பாதுகாப்பு உணர்வினை அடிப்படையாகக் கொண்ட ஒரு மனநிலை இருக்கும். அந்தப் பாதுகாப்பு பணம் தான் அனைத்தும் என்றாகிவிட்ட முதலாளித்துவ சமூக அமைப்பில் பொருளாதார ரீதியாக தங்களை வலுப்படுத்திக் கொள்வதன் மூலமான பாதுகாப்பே ஒரே பாதுகாப்பு என்றாகிவிட்டது.

அதனால் அவர்களில் சிலர் எளிதில் பணம் ஈட்ட வழிவகுக்கும் வட்டித் தொழிலில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால் அனைத்து யூதர்களும் வட்டித் தொழில் செய்பவர்களாக இருக்கவில்லை. அவர்களது ஒட்டுமொத்த மக்கட் தொகையில் வட்டிக்காரர்களாக இருந்த யூதர்களின் விகிதம் மற்ற பகுதி மக்களில் வட்டிக்காரர்களாக இருந்தவர்களின் விகிதத்தை விடக் கூடுதலாக இருந்தது. பொதுவாக வட்டித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சமூகத்தில் நல்ல பெயர் இருப்பதில்லை. அவர்களின் அதே பாதுகாப்பு உணர்வு பல சிறந்த கல்வி மான்களை, அறிவாளிகளை உருவாக்குவதாகவும் இருந்தது. ஆனாலும் கூட வரலாற்று ரீதியாகவே வட்டித் தொழிலை யூதர்களோடு ஒன்றிணைத்துப் பார்க்கும் ஒரு போக்கு பல காலம் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் நிலவிவந்தது.

ஷைலக்

எடுத்துக்காட்டாக ஷேக்ஸ்பியரின் தி மெர்செண்ட் ஆஃப் வெனிஸ் என்ற ஆங்கில நாடகத்தை எடுத்துக் கொள்ளலாம். மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக வட்டி வசூல் செய்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அந்த நாடகத்தில் வரும் ஷைலாக் என்ற பாத்திரம் இருக்கும். அத்தகைய கொடூரமான ஷைலாக் அந்தக் கதையில் ஒரு யூதனாக வருவான். இந்தப் பின்னணியில் யூதர்களைப் பொதுவாக மக்களின் வருவாயைக் கடன் கொடுத்து அட்டை போல் உறிஞ்சுபவர்களாக மக்கள் முன்பு நிறுத்துவதில் பாசிஸ ஹிட்லருக்கு அத்தனை சிரமம் இருக்கவில்லை.

தேசியவாதம்

அடுத்தபடியாக அவன் எதிரியாகப் பாவித்த கம்யூனிஸ்ட்களை மக்களின் எதிரிகளாக அத்தனை எளிதாக மக்கள் முன்பு அவனால் நிறுத்த முடியவில்லை. ஆனால் அவ்வாறு நிறுத்துவதற்கு அவன் தேசிய வாதத்தை மக்கள் மனதில் ஆழமாகப் பதியும் விதத்தில் பயன்படுத்தினான். அதற்கு ஹிட்லர் வாழ்ந்த ஜெர்மன் மக்களின் அன்றைய மனநிலையும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

அதாவது முதல் உலக யுத்தத்தில் தோல்வியுற்று அதற்காக மிகப் பெரிய தண்டத்தை உலக நாடுகளுக்கு வழங்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் ஜெர்மன் நாடு இருந்தது. அது ஒரு தேசிய ரீதியான தலை குனிவாக ஜெர்மன் மக்களால் பார்க்கப்பட்டது. உலகம் முழுவதும் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் பொது நெருக்கடியால் 1930 களில் ஏற்பட்ட தி கிரேட் டிப்ரசன் என்று அறிவிக்கப்படும் பொருளாதார நெருக்கடி ஜெர்மனியையும் பாதித்தது.

அவ்வாறு நெருக்கடி தோன்றிய சூழ்நிலையில் மக்களின் வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக ஆன வேளையில் அந்த நெருக்கடிக்குக் காரணம் என்ன என்பதை கம்யூனிஸ்ட்கள் ஓரளவு விளக்கினர். ஆனால் முதலாவது உலக யுத்தத்திற்கு முன்பு உலகப் பொது நெருக்கடி ஏற்பட்ட போது அதன் விளைவாகவே முதல் உலகப்போர் தோன்றியது.

அந்த உலகப்போர் உலகை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக ஏகாதிபத்தியங்கள் நடத்தும் போர் அதனை உள்நாட்டுப் போராக மாற்றி சோசலிசத்தைக் கொண்டுவர அந்தந்த நாடுகளின் உழைக்கும் வர்க்கம் முன்வர வேண்டும் என்று தோழர் லெனின் அறைகூவல் விடுத்தார். அப்போது ஜெர்மன் நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரும் வலுவுடன் விளங்கியது. அதுமட்டுமின்றி அந்நாட்டில் கார்ல் காட்ஸ்கி போன்ற தலை சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்களும் இருந்தனர். ஆனால் அவர்களின் தலைமை கம்யூனிஸ்ட் கட்சியினை லெனினது அறைகூவலை அமுல்படுத்தும் விதத்தில் நடத்தவில்லை.

மாறாக தேசியவாத நிலையயடுத்து ஜெர்மனியின் முதலாளி வர்க்கத்துடன் ஒருங்கிணைந்து முதல் உலக யுத்தத்தில் ஜெர்மன் தேசிய முதலாளிகளோடு அக்கட்சி கைகோர்த்து நின்றது. அதன் காரணமாக இரண்டாவது உலக யுத்தத்திற்கு முன்பும் கூட ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஓரளவு வலுவுடன் இருந்தும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறையும் அது தவிர்க்க முடியாமல் நெருக்கடிகளை உருவாக்கும் தன்மை வாய்ந்ததாக இருப்பதுமே என்பதை அது வலியுறுத்த முடியாமல் போனது.

அதனால் ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் உழைக்கும் வர்க்கம் சமூகமாற்ற எழுச்சிக்குத் தயாராக இருந்தும் அந்நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதனை வழிநடத்தி சமூகமாற்றத்தை உருவாக்கத் தவறின. பாசிஸம் வளர்ந்ததற்கு அது ஒரு முக்கியக் காரணமாகும். இவ்விரு நாடுகளின் பாசிஸ்ட் தலைவர்களான ஹிட்லர் மற்றும் முசோலினி இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு மிதமிஞ்சிய தேசியவாதத்தை உருவாக்கின. கம்யூனிஸ்ட்கள் சர்வதேச வாதம் பேசும் தேசிய உணர்வற்றவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி பாசிஸத்தை வளர்த்தனர்.

இதுதவிர பாசிஸ்ட்களின் எதிரியாக கிறிஸ்தவ மதமும் கருதப்பட்டது. அதாவது பாசிஸ சித்தாந்தத்தை உருவாக்கித் தந்தவர் நீச்சே என்ற தத்துவஞானி ஆவார். அவருடைய அடிப்படைத் தத்துவம் மனிதர்கள் அனைவரும் பிறப்பால் கூடச் சமமானவர்கள் அல்ல என்பதாகும்.

அதாவது மனிதர்களில் ஆளுமை நிறைந்தவர்கள் அதாவது ஆளப் பிறந்தவர்கள் என்ற ரகத்தைச் சேர்ந்தவர்களும் ஆளப்பட வேண்டியவர்கள் என்ற ஆளுமை அற்றவர்களும் உள்ளனர்; அவர்களில் ஆளப் பிறந்தவர்களின் ஆளுமைத் தன்மையினை மதங்கள் மழுங்கடிக்கின்றன; ஜனநாயகம் என்ற பெயரில் அனைவரும் சமம் என்ற கருத்தை முன்வைப்பதன் மூலமும் அந்த ஆளுமைத் தன்மை மழுங்கடிக்கப் படுகிறது; குறிப்பாகக் கிறிஸ்தவ மதம் கடவுள் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கருத்தை முன்வைத்து ஆளுமைத் தன்மை உடையவர்களின் ஆளுமையை பெருமளவு சமூக மயமாக்கல் போக்கில் மழுங்கடிக்கிறது என்ற கருத்தை நீச்சே முன்வைத்தார்.

ஆனால் நீச்சே எங்கும் ஜெர்மனியர்கள் அனைவரும் அத்தகைய ஆளுமைத் தன்மை பொருந்தியவர்கள் என்று கூறவில்லை. ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களான அவர்களது உடலில் நீல நிற ரத்தம் ஓடுகிறது என்ற கருத்தையும் அவர் கூறவில்லை. ஆளுமைத் தன்மை எந்தக் குறிப்பிட்ட தேசிய இனத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் இருக்கக்கூடிய ஒன்று என்று அவர் எங்கும் எப்போதும் கூறவில்லை.

ஆனால் ஹிட்லர் நீச்சே முன்வைத்த சித்தாந்தத்தை எடுத்துக் கொண்டு அதனை ஜெர்மன் தேசிய இனத்திற்கு மட்டுமே உரிய குணம் என்று வரையறை செய்து தேசிய வெறிவாதத்தை கிளப்பினான். ஜெர்மன் தேசம் முதல் உலக யுத்தத்தில் கடும் தோல்வியைத் தழுவி யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வற்புறுத்தப்பட்ட நிலை அவனது முயற்சிக்குப் பெரிதும் உதவியது.

லெனின் தனது பிரசித்தி பெற்ற நூலான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்ற நூலில் வலியுறுத்தியது போல் முறியடிக்கப்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களிடமே தேசிய உணர்வு மிகப் பெருமளவு இருக்கும் என்ற கருத்திற்கிணங்க முதல் உலக யுத்தத்தில் தோல்வி அடைந்த ஜெர்மன் மக்களிடையே அத்தேசிய உணர்வு மிதமிஞ்சி இருந்தது. நாசகார ஹிட்லர் அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டான்.

இவ்வாறு கிறிஸ்தவ மதமும் ஹிட்லரின் தாக்குதலுக்கு ஆளாகியிருந்ததால் ஹிட்லரால் கைப்பற்றப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஹிட்லருக்கு எதிராகப் பிரதானமாகக் கம்யூனிஸ்ட்களால் அணிதிரட்டப்பட்ட எதிர்ப்பு இயக்கத்திற்குக் கிறிஸ்தவ தேவாலயங்களும் பின்பலமாக இருந்தன. அதனால் இரண்டாவது உலக யுத்தத்தில் செஞ்சேனையினால் ஹிட்லரது ராணுவம் மீண்டெழ முடியாத ஒரு தோல்வியைத் தழுவிய போது அதன் விளைவாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் பாசிஸ ஆட்சியாளர்களிடமிருந்து செஞ்சேனையினால் மீட்டெக்கப்பட்ட சூழலில் அந்நாடுகளின் கம்யூனிஸ்ட்களோடு கூட கிறிஸ்தவ மதத்திற்கும் ஒரு நற்பெயர் ஏற்பட்டது.

இவ்வி­யத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்திலிருந்தும் சற்றே வேறுபட்டதாக இருந்த ஒரே நாடு யுகோஸ்லோவாக்கியா ஆகும். ஏனெனில் அந்நாட்டில் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போல் அல்லாமல் மார்­ல் டிட்டோ அவரே ஒரு ராணுவத்தைத் திரட்டி பாசிஸ ஹிட்லரை எதிர்த்த போரில் ஈடுபட்டார். கம்யூனிஸ்ட்களின் பின்பலம் அவருக்கு இருந்தாலும் யுகோஸ்லோவாக்கியாவில் பாசிஸத்தை எதிர்த்து நடந்த போரில் முக்கியப் பங்காற்றியவராக மார்­ல் டிட்டோ விளங்கினார்.

போதாமைகள்

இவ்வாறு ஒரு வேறுபட்ட சூழ்நிலை நிலவிய சோசலிச முகாமில் இடம்பெற்றிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பல போதாமைகள் இருந்தன. முதற்கண் முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டங்களில் பெருமளவு ஈடுபட்டு புடம்போடப் பட்டவர்களாக அந்நாட்டின் உழைக்கும் மக்கள் இருக்கவில்லை. இரண்டாவதாக அந்நாடுகளின் முதலாளிகள் முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் பெரிய அளவில் அம்பலப்படுத்தப்படவும் இல்லை.

அந்நாடுகளில் சோசலிசத்திற்கு முதற்கட்டமான மக்கள் ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்ட நிலையில் முதலாளிகள் பெருமளவு அம்பலமாகாமல் தங்கள் வலுவை நீறுபூத்த நெருப்பாக வைத்திருக்கக் கூடியவர்களாக இருந்தனர். இதுதவிர கிறிஸ்தவ மதமும் ஒரு நற்பெயருடன் அந்நாடுகளில் விளங்கியது. மேலும் மக்கள் இயக்கங்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிப் பதவிக்கு வந்தவர்களாக அந்நாடுகளில் ஆட்சிக்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் இருக்கவில்லை. அதாவது லெனின், ஸ்டாலின் போன்ற மாபெரும் தலைவர்களாக மகத்தான மக்கள் செல்வாக்குடன் அவர்கள் விளங்கவில்லை.

சோசலிசம் உருவான நாடுகள் அனைத்திலும் உழைக்கும் வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றிய உடன் அந்நாடுகளில் சோசலிச சமூக அமைப்பு உடனடியாக நிலைபெற்று விடுவதில்லை. ஆட்சியைக் கைப்பற்றுதல் சில புறச் சூழ்நிலைகளை திறமையாகப் பயன்படுத்துவதன் மூலம் அகரீதியான உழைக்கும் வர்க்கத்தின் தயார் நிலை தேவைப்படும் அளவிற்கு சாதிக்கப்படாத சூழ்நிலையிலும் கூட நடைபெற்று விடுகிறது. அந்த நிலையில் சோசலிசத்தைக் கட்டியமைக்கும் பணியே புரட்சியைச் சாதித்ததற்குப் பின்பு அந்நாட்டுக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மிகப்பெரும் பணியாக ஆகிவிடுகிறது. அதனைச் சரிவரச் செய்வதற்கு அந்நாட்டின் பிரச்னைகள் அனைத்தையும் மார்க்சிசத்தின் கோணத்திலிருந்து பார்க்கும் திறமை பெற்ற தலைவர்கள் தேவை. அத்தகைய தலைவர்கள் உடனடியாக உருவாகிவிடுவதில்லை.

அம்பலப்படுத்தத் தவறினர்

இந்தப் பின்னணியில் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களாகவும் அந்நாடுகளின் அரசமைப்பை நடத்துபவர்களாகவும் இருந்தவர்கள் அந்நாடுகளில் தேசிய முதலாளிகள் அம்பலமாகாமல் இருக்கும் நிலையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

அத்துடன் வரலாற்று ரீதியாக சமூகப் பொருத்தம் எதுவுமின்றி கடந்த காலத்திய நிறுவனமாக நிற்கக்கூடிய மதம் ஒரு நற்பெயருடன் அந்நாடுகளில் இருந்த நிலையினைக் கணக்கிலெடுத்துக் கொண்டு மதத்தின் கோளாறினை மக்களிடையே கொண்டு சென்று அதன் பாதிப்பிலிருந்து மக்களை விடுவிக்கும் பணியைத் திறம்படச் செய்யவுமில்லை. அத்துடன் தேசிய உணர்வு கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களின் மனதிலிருந்து தேவைப்படும் அளவு நீங்காதிருந்த நிலையில் சோவியத் யூனியனின் தலைமை மீது அந்நாடுகளின் தலைவர்கள் கொண்டிருந்த ஒரு எந்திர கதியிலான உணர்வு மதவாதிகளாலும் ஆதிக்கத்தை இழந்த தேசிய முதலாளித்துவ சக்திகளாலும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் பட்டது.

இத்தகைய சூழ்நிலை பொதுவாக நிலவிய வேளையில் மக்கள் ஜனநாயகம் மலர்ந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்திலிருந்தும் போலந்து நாடும் குறிப்பிட்ட அளவிற்கு வேறுபட்டு சில தனித்தன்மைகளைக் கொண்டதாக விளங்கியது. மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளைப் போலன்றி போலந்து நாட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தின் செல்வாக்கு மிகுந்திருந்தது. அப்போதிருந்த போப்பும் ஒரு போலந்துக்காரராக இருந்தார்.

இந்தப் பின்னணியில் தான் லே வாலசாவின் சாலிடாரிட்டி இயக்கம் போலந்தில் தொழிலாளர்களைத் திரட்டும் வேலையைச் செய்தது. உழைக்கும் மக்களின் உள்ளக்கிடக்கையைப் புரிந்துகொண்டு அதற்குகந்த எதிர் நடவடிக்கையை போலந்து ஆட்சியாளர்களும் அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் செய்யத் தவறிய சூழ்நிலை அவரது சாலிடாரிட்டி அமைப்பின் வளர்ச்சிக்கு நன்கு பயன்பட்டது.

இந்தப் பின்னணியில் போப் ஆண்டவர் பலமுறை போலந்திற்கு வருகை புரிந்தார். அவரது வருகை மத ரீதியானதாக மட்டும் இருக்கவில்லை. அவரை லே வாலசா அடிக்கடி சந்தித்து அவருடன் தனக்கு இருக்கக்கூடிய நெருக்கத்தை மக்களிடையே காட்டித் தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினார்.

எத்தனை தர்க்கப்பூர்வமான வாதங்களை முன்வைத்து சில விசயங்களை மக்களிடம் விளக்கினாலும் அவை பல சமயங்களில் மக்களைத் தெளிவாக்கி விடுவதில்லை. அப்படிப்பட்ட ஒன்று தான் மதம். மதங்கள் மக்கள் மனதில் இடம் பிடிக்கப் பல காலம் எடுத்துக் கொண்டன. அதைப்போல் அவை அவையாகவே மக்கள் மனதிலிருந்து நீங்க வேண்டுமென்றாலும் கூட அதற்கும் பல காலம் தேவைப்படும். அந்த அடிப்படையிலேயே போப் ஆண்டவர் செலுத்திய மத ரீதியான செல்வாக்கு போலந்து மக்களிடம் மிகப் பரவலாக இருந்தது.

போலந்துக்காரராக இருந்த போப்பாண்டவர்

இது மட்டுமின்றி போலந்து மக்களிடையே போப் ஆண்டவருக்கு இருந்த செல்வாக்கு அப்போதிருந்த போப் ஆண்டவர் போலந்துக்காரராக இருந்ததும் இவ்வி­யத்தில் கூடுதலாக வாலசா போன்றவர்களுக்குப் பயன்பட்டது. அவரது ஆசியுடன் லே வாலசாவின் சாலிடாரிட்டி இயக்கம் வளர்ந்தது. இவை அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு உலக ஏகாதிபத்திய நாடுகள் சோசலிச முகாமின் பலவீனமான கண்ணியாக ஆகிக் கொண்டிருந்த போலந்து நாட்டின் மீது கைவைக்க விரும்பினர்.

ஏகாதிபத்திய நாடுகள் அனைத்திற்கும் இந்த விருப்பம் இருந்தாலும் இதில் குறிப்பாக மிக முக்கியப் பங்கினை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஏகாதிபத்தியங்கள் ஆற்றின. அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ரொனால்டு ரீகனும் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த மார்க்ரெட் தாச்சரும் போலந்து நாட்டில் சோசலிசத்தை முடிவுக்குக் கொண்டுவர போப் ஆண்டவரோடு இணைந்து தீவிரமாகப் பணியாற்றினர்.

இத்தகைய பின்னணியில் இதுபோன்ற போக்குகள் ஒரு நாட்டில் தோன்றும் போது அதற்கு வெளியிலிருந்து வழிகாட்டி பிரச்னைகள் அனைத்திலிருந்தும் அந்நாட்டை மீட்பது மிகவும் கடினம். இருந்தாலும் கூட ருமேனியா, ஹங்கேரி போன்ற நாடுகளில் இதுபோன்ற பிரச்னைகள் வந்தபோது நேரடியான தலையீட்டின் மூலம் அது சரியில்லாததாக இருந்தாலும் எதிர்ப்புரட்சிப் போக்குகளை சோவியத் தலைமை (அப்போதே அது திருத்தல்வாதிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டது) செய்து வந்தது.

ஆனால் போலந்தில் இந்தப் பிரச்னை தோன்றிய போது அத்தகைய நடவடிக்கை ஆரோக்கியமானது இல்லை என்றாலும் அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுக்கவல்லதாகக் கூட சோவியத் தலைமை இல்லை. இதையயல்லாம் சாதகமாக்கிக் கொண்டு போலந்து நாட்டில் இறைச்சியின் விலை சற்றே கூட்டப்பட்டதை மையமாக வைத்து லே வாலசா தொடங்கிய இயக்கம் அந்நாட்டின் சோசலிச அமைப்பிற்கே ஊறுவிளைக்க வல்லதாக ஆகியது. உலக அளவில் மிகப்பெரிய ஊடக வலுவைக் கொண்டிருந்த ஏகாதிபத்திய நாடுகள் அவற்றின் மூலம் ஒரு மகத்தான எழுச்சி போலந்தில் தோன்றியுள்ளது போன்ற ஒரு சித்திரத்தை உலக அளவில் மக்களிடையே பரப்பின.

யார் புரட்சியாளன்

அதன் விளைவாக லே வாலசா மிகப்பெரிய புரட்சி வீரராகச் சித்தரிக்கப்பட்டார். நாம் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த தி டெலிகிராப் பத்திரிக்கையின் கட்டுரையிலும் லே வாலசா தன்னைப் பற்றி மிகவும் டாம்பீகமாக தானே உலகின் கடைசிப் புரட்சியாளன் என்று கூறிக் கொண்டார்.

புரட்சி என்றால் என்ன என்பதைப் பற்றிச் சரியான விஞ்ஞானப்பூர்வ விளக்கங்களை அறியாதவர்களுக்கு கிளர்ச்சியாளர்கள் அனைவருமே புரட்சியாளர்களாகவே தென்படுகின்றனர். அந்த அடிப்படையில் லே வாலசாவின் அக்கூற்றை இன்றைய நிலையில் மறுத்துரைப்பவர்கள் அதிகம் பேர் இருக்க மாட்டார்கள். ஆனாலும் கூடப் புரட்சி குறித்த காலத்தால் மிகச் சரியானது என்று நிரூபிக்கப்பட்ட உண்மைகள் உள்ளன. அவற்றிற்கு வரலாற்று ஆதாரங்களும் உள்ளன.

கிளர்ச்சிகள் எல்லாம் சரியான அடிப்படையில் மட்டும் தோன்றுவதில்லை. அவை தவறான அடிப்படையிலும் கூட தோன்றுகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் அதற்குப் பல எடுத்துக்காட்டுகளை நாம் கூற முடியும். தேசிய உணர்வு, பிராந்திய உணர்வு, மத உணர்வு, மொழி உணர்வு, சலுகைகளின் மீதான நாட்டம் இவற்றை அடிப்படையாகக் கொண்டும் கிளர்ச்சிகளைக் கொண்டுவர முடியும்.

ஆனால் இக்கிளர்ச்சிகளில் பங்கேற்பவர்களின் உள்ளத்தின் அடித்தளத்தில் கிளர்ச்சிகளில் பங்கேற்பதற்கான உந்து சக்தியாக நிலவும் சூழ்நிலைகளின் மீதான பொதுவான அதிருப்தியே இருக்கும். உலக நாடுகள் அனைத்திலும் நிலவுவதாக இன்று இருக்கக்கூடிய அடிப்படை முரண்பாடான முதலாளி தொழிலாளி வர்க்கங்களுக்கிடையிலான வர்க்க முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகவே அந்த அதிருப்தி இருக்கும். குறிப்பாக அதனை முன்னிலைப்படுத்தி மக்கள் இயக்கங்கள் நடத்தப்படாத நிலையில் அது நடக்கும் இயக்கங்கள் அனைத்திலும் செல்வாக்கு செலுத்தி அவற்றில் மக்களை பங்கேற்கச் செய்யும்.

ஆனால் புரட்சி என்பது கிளர்ச்சியைப் போலன்றி சரியான விசயங்களுக்கும் தவறான விசயங்களுக்கும் ஓரே சமயத்தில் தட்டி எழுப்பப்பட முடியாதது. புரட்சி சமூகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய முற்போக்குத் திசை வழியில் மட்டுமே செல்லக் கூடியது. அதற்கு மிகத் தீவிரத் தயாரிப்புகள் தேவை.

அதன் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மனதில் பதிக்க பல்வேறு வகை நடவடிக்கைகளும் தேவை. அதனைச் செய்வதற்கு ஒரு கலைஞனின் நேர்த்தியும் ஒரு விஞ்ஞானியின் துல்லியமும் வேண்டும்.

புரட்சியாளர்கள் தங்களுடைய இனிய விருப்பத்தின் அடிப்படையில் அவ்வாறு புரட்சியாளர்களாக ஆவதில்லை. மனித சமூகத்தில் நிலவும் பல அவலங்களை கண்டு அவற்றிற்குத் தீர்வு எதுவாக இருக்கும் என ஆழ்ந்து சிந்தித்து அவ்வாறு தங்களுக்கு முன்பு சிந்தித்த பலரின் அனுபவங்களையும் எடுத்துக்கொண்டு அதன் விளைவாக பொதுக் கருத்துக்களை வகுத்தெடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த முயன்று நடைமுறை அனுபவத்தின் மூலம் பொதுக் கருத்துக்களைச் செறிவு செய்து அவர்களால் உருவாக்கப்படுபவையே புரட்சிகரக் கருத்துக்கள்.

குறிப்பாக நாம் இன்று வாழும் முதலாளித்துவ சமூக அமைப்பு தோன்றிய அதன் ஆரம்ப காலத்தில் மக்களிடையே ஏற்றதாழ்வுகள் உருவாகி வளர்ந்தன. அவ்வேளையில் பணம் தான் அனைத்தும் என்ற மனப்போக்கு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டது. அப்பின்னணியில் உழைப்பாளிகள் அதற்கு முன்பிருந்த அடிமை, நிலவுடமை சமூகங்களில் அவர்களுக்கிருந்த வாழ்வுரிமை கூட முதலாளித்துவ சமூக அமைப்பில் பராமரிக்கப்படாத சூழ்நிலையைக் கண்டனர். அப்பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அவர்களில் பலர் முயன்றனர்.

அவர்கள் கற்பனாவாத சோசலிஸ்ட்களாக இருந்தனர். ஏற்றதாழ்வைப் போக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் மட்டும் அவர்களுக்கு இருந்தது. அதனை எவ்வாறு செய்வது என்பதற்கான வழிமுறைகளை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அந்தப் பின்னணியில் தான் அதுபோன்ற கற்பனாவாத சோசலிஸ்ட்களின் அனுபவங்களைக் கையிலெடுத்துக் கொண்டு கம்யூனிஸக் கருத்தோட்டம் வளர்ந்தது.

பொருளாதார அடிப்படையே சமூகப் பிரச்னைகளில் மிகமுக்கியப் பங்கினை வகிப்பதாக உள்ளது என்ற புரிதல் ஏற்பட்டது. வரலாறு இயக்கவியல் ரீதியாகப் பார்க்கப்பட்டது. அதன் விளைவாக வரலாற்றின் வளர்ச்சி உற்பத்தி சக்திகள் மற்றும் உற்பத்தி உறவுகளை மையமாகக் கொண்டதாக உள்ளது என்ற விஞ்ஞானப்பூர்வ உண்மை வெளிப்பட்டது.

அதாவது உற்பத்தி சக்திகள் தொடர்ச்சியாக வளரக்கூடிய தன்மை வாய்ந்தவை. அவை அவற்றிற்குத் தேவையான உற்பத்தி உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உகந்த விதத்தில் உற்பத்தி உறவுகளில் தேவைப்படும் போதெல்லாம் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. தேவைக்குகந்த விதத்தில் மாறாதிருக்கும் உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஒரு கட்டத்தில் முட்டுக்கட்டை போடுபவையாக ஆகிவிடுகின்றன.

அப்போது அதற்குகந்த விதத்தில் அந்த முட்டுக்கட்டையை அகற்றி உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மென்மேலும் வளர அதற்குத் தேவையான புது உற்பத்தி உறவுகளை உருவாக்கித் தருவதே புரட்சியாகும் என்ற விஞ்ஞானப்பூர்வ கண்ணோட்டம் மனித சமூகத்தில் எழுந்தது. மாமேதை மார்க்ஸ் அந்தக் கண்ணோட்டத்தின் அடித்தளத்தையும் அதனைக் கொண்டுவருவதற்குத் தேவையான வரைபடத்தையும் போட்டுத் தந்தார்.

மார்க்ஸ் போட்டுத் தந்த வரைபடம்

முதலாளித்துவ சமூக அமைப்பு சமூகத்தின் அனைத்துச் செல்வங்களையும் உருவாக்கித் தரும் உழைக்கும் மக்களைச் சுரண்டுவதை அடிப்படையாகக் கொண்டது. அவர்களைச் சுரண்டி அதிகபட்ச லாபம் அடைவதே அச்சமூக அமைப்பின் உற்பத்தி நோக்கம். அதனால் உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி தொடர்ச்சியாக சூறையாடப்படுகிறது. வாங்கும் சக்திக் குறைவினால் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தவிர்க்க முடியாமல் சந்தை நெருக்கடிகள் உருவாகின்றன. அத்தகைய சந்தை நெருக்கடிகள் வேலையின்மையைத் தோற்றுவிக்கின்றன.

முதலாளித்துவ சமூக அமைப்பில் கூலி அடிமையாகத் தரம் குறைக்கப்படும் மனிதன் தன்னிடமுள்ள உழைப்புத் திறனை விற்பதற்கு வாய்ப்பில்லாமல் போகும் சூழ்நிலையில் அதிருப்திக்கும் கொந்தளிப்பிற்கும் ஆளாகிறான்.

அந்த அதிருப்தியையும் கொந்தளிப்பையும் அடிப்படையாகக் கொண்டு உழைக்கும் மக்களை அணிதிரட்டிச் சுரண்டலையும் அதிகபட்ச லாபநோக்கையும் உற்பத்தி நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிந்துவிட்டு சுரண்டல் இல்லாத சமூக அமைப்பைக் கொண்டுவர வேண்டும்; அது சக்திக்கேற்ற உழைப்பு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பதை முதல் கட்டமாகவும் சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற ஊதியம் என்பதை இறுதிக் கட்டமாகவும் கொண்டதாக இருக்கும். அது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

அத்தகைய முதல்கட்ட புரட்சி சோசலிசப் புரட்சியாகும். அந்தப் புரட்சியின் விளைவாக மலரும் பொதுவுடமை சமூகத்தில் நெருக்கடிகளுக்கு வாய்ப்பில்லை. ஏனெனில் அங்கு உழைப்பவரின் வாங்கும் சக்தி சூறையாடப் படுவதில்லை. சமூகத்தின் பொதுவான தேவைகளுக்காகவும் முன்னேற்றத் திற்காகவும் உழைப்பின் விளைவாக உருவாகும் செல்வத்தில் ஒரு பகுதி அச்சமூகத்தில் எடுத்துக்கொள்ளப் படுகிறது.

மீதி அனைத்தும் உழைக்கும் வர்க்கத்திற்கே பகிர்ந்தளிக்கப் படுவதால் அவர்களது வாங்கும் சக்தி வளர்கிறது. வாங்கும் சக்தியின் வளர்ச்சிக்கு உகந்த வகையில் புதுத் தொழில்கள் உருவாகும் வாய்ப்பும் சூழலும் ஏற்படுகின்றன. அவ்வாறு உருவாகும் புதுத் தொழில்களில் பலருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு மனித சமூகம் சுரண்டலிலிருந்து விடுவிக்கப்படும் போது சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தனிமனித ரீதியாக அதிகபட்ச வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது. கல்வி, பொது சுகாதாரம் போன்றவை அனைத்தும் இலவசமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதால் படிப்படியாக உடல் உழைப்பு, மூளை உழைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடும் கிராம நகர்ப்புறங்களுக்கு இடையிலான வேறுபாடுகளும் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாக்கப்படுகிறது.

இந்த அம்சங்களை மனதில் கொண்டுதான் புரட்சி என்பது முன்னோக்கிச் செல்லக் கூடியது. அது முற்போக்கானது, அது சரியான அடிப்படையில் மட்டுமே உருவாகக் கூடியது என்று கூறுகிறோம்.

ஆனால் எத்தனை உன்னதமானதாக இருந்தாலும் ஒரு விசயத்தை சிக்கல் நிறைந்த கடந்தகால கோளாறுகளை மனரீதியாக சுமந்து கொண்டுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தில் அமலாக்க முனையும் போது அது நினைத்த விதத்தில் சிக்கலேதுமின்றி அமுலாகிவிடுவதில்லை. அவற்றில் பல பிரச்னைகள் தோன்றவே செய்கின்றன. அப்பிரச்னைகளை உரிய முறையில் கணக்கில் எடுத்துக்கொண்டு மக்களிடையே அவை குறித்த புரிதலைக் கொண்டு சென்று அவற்றைப் போக்க முயல வேண்டும். அதைச் செய்பவர்களே புரட்சியாளர்கள் என்று கருதப்படக் கூடியவர்கள்.

மாறாக நாம் மேலே விவரித்த சூழ்நிலையில் ஒரு தனித்தன்மை வாய்ந்த பின்னணியில் சோசலிசம் கொண்டுவரப் பட்ட போலந்து நாட்டில் அங்கு சோசலிசம் அமுலாகும் விதத்தில் இருக்கக் கூடிய கோளாறுகளைக் கண்டறிந்து அவற்றைச் சுட்டிக்காட்டி அவற்றைப் போக்குவதற்கு ஆட்சியாளர்களை வலியுறுத்தி அதனை ஆட்சியாளர்கள் செய்ய முன்வரவில்லை என்றால் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி செயல்படுவதே சமூகத்தை முற்போக்குத் திசைவழியில் நடத்தும் ஒரு புரட்சியாளனின் பணியாக இருக்க முடியும்.

வாலஷா செய்ததென்ன?

ஆனால் வரலாற்றின் கடைசிப் புரட்சியாளன் என்று தன்னைத்தானே வர்ணித்துக் கொண்ட லே வாலசா அதனைச் செய்யவில்லை. மாறாக சோசலிசம் சரிவர அமல்படுத்தப் படாததால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்தி காலாவதியாகிப் போன மதவாத சக்திகளோடு கைகோர்த்து போலந்து நாட்டின் சமூக அமைப்பு சோசலிசத்தினால் அடைந்திருந்த அனைத்து சாதக அம்சங்களையும் கொட்டிக் கவிழ்க்கும் வேலையையே அவர் செய்தார்.

தொழிற்சங்கத் தலைவரும் தொழிலாளர் விரோதியும் நண்பர்களாக

அவராவது தொழிலாரைத் திரட்டும் கிளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் அவர் வாயாரப் புகழும் அவருக்குத் துணை நின்ற இங்கிலாந்தின் பிரதமர் மார்க்ரெட் தாச்சரோ லே வாலசா எந்த வர்க்கத்தை திரட்டி கிளர்ச்சியை உருவாக்கினரோ அந்த வர்க்கத்தை ஒடுக்கி இங்கிலாந்து நாட்டின் முதலாளித்துவத்தின் நன் மதிப்பைப் பெற்றவர்.

இங்கிலாந்து நாட்டின் நிலக்கரிச் சுரங்கங்களை மூடுவிழா செய்து பல்லாயிரக் கணக்கான தொழிலாளரின் வேலை வாய்ப்பைப் பறித்து அவர்களை தெருவில் நிர்க்கதியாக அலையவிட்டவர். அவர்தான் வரலாற்றின் கடைசிப் புரட்சியாளரான லே வாலசாவின் மதிப்பிற்குரிய கூட்டாளியாக ஆனார்.

லே வாலசா அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பேட்டியில் தனது மனைவி எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்றில் லே வாலசா கிளர்ச்சியில் ஈடுபட்ட காலம் தனது குடும்பத்தைப் பொறுத்தவரையில் ஒரு மோசமான காலம் என்று குறிப்பிட்டுள்ளதை மிகவும் வருத்தத்தோடு நினைவு கூர்கிறார்.

உள்ளுணர்வு ரீதியாக அவரது மனைவி கூட உணர்ந்திருக்கலாம் சமூகம் குறித்த பெரிய புரிதல் ஏதுமின்றி மதவாத ஏகாதிபத்திய சக்திகளின் கைப்பாவையாகப் பயன்பட்டு போலந்து சமூகம் அடைந்த சில உயரிய வளர்ச்சிகளையும் சமூகப் பாதுகாப்பையும் கொட்டிக் கவிழ்க்கும் வேலையில் தன் கணவர் ஈடுபடுகிறார் என்று. அதனைச் செய்வதற்காக தானும் தன் குடும்பமும் இந்த அல்லல்களை எதிர்கொண்டிருக்க வேண்டுமா என்ற அடிப்படையில் கூட அவர் அதனை எழுதியிருக்கலாம்.

எதிர்ப்புரட்சி

இந்த அடிப்படையில் லே வாலசா செய்தது புரட்சியல்ல. புரட்சி தவறான விசயங்களை நிலை நிறுத்துவதற்காக செய்யப்பட முடியாதது. ஆனால் அதனைச் செய்வதற்காக செய்யப்படும் செயல்களும் எதிர்மறைப் பொருளில் புரட்சி என்றே குறிப்பிடப்படும். ஆம் அவை எதிர்ப்புரட்சிகள்.

எனவே வரலாற்றின் கடைசி புரட்சியாளன் அல்ல லே வாலசா. ஒரு வகையில் பார்த்தால் அவர் முதல் எதிர்ப் புரட்சியாளன். அவருக்குப் பின் பல எதிர்ப் புரட்சியாளர்களை அதாவது கோர்பச்சேவ், எல்சின், டெங்சியோபிங் போன்ற பல எதிர்ப் புரட்சியாளர்களை வரலாறு கண்டிருக்கிறது.

புரட்சியாளர்கள் அவர்கள் தங்களது தனிப்பட்ட வாழ்வில் செய்த தியாகங்கள் அளப்பரியவை. அவர்கள் எதிர்கொண்ட போராட்டங்கள் எண்ணிறந்தவை. அவர்களது மனமும் உணர்வும் புடம் போடப்பட்ட உருக்கு போன்ற தன்மை கொண்டவை. சமூகப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கற்றுணர்ந்த நூல்கள், செழுமைப் படுத்திய கருத்துக்கள், பதிந்து வைத்த அனுபவங்கள் போன்றவை எத்தனையோ பாகங்கள் கொண்டவை.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற மாபெரும் புரட்சியாளர்கள் சமூகத்திற்கு வழங்கிய கருத்துக்கள் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு என்பது நிலவும் வரை நின்று நிலவும் மகத்தான பொருத்தமுடையவை.

அவர்கள் உடல் ரீதியாக மறைந்தாலும் அவர்களுடைய கருத்துக்களின் வாயிலாக இன்றும் சமூக நலன் கருதும் கோடானகோடி மக்களின் மனதில் அவர்கள் வாழ்ந்து கொண்டேயிருக்கின்றனர். அதனால் தான் பிறந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மாமேதை மார்க்ஸை மறக்கச் செய்வதற்கு முதலாளித்துவம் எடுக்காத முயற்சியே இல்லை என்ற நிலையிலும் கூட அவரை அவர்களால் மக்களின் நினைவிலிருந்து அகற்ற முடியவில்லை. வரலாறு உருவாக்கிய மகத்தான மனிதர் என்று முதலாளித்துவ நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளே அவரை அங்கீகரிக்கின்றன.

அவர்கள் போன்ற மாமனிதர்களோடு ஒப்பிடும் போது லே வாலசா மனித சமூகத்திற்கு வழங்கிய கருத்துக்கள் எவை? கூட்டிக் கழித்துப் பார்த்தால் அப்படிப்பட்ட இன்றும் பயன்படக் கூடிய அவருடைய கருத்து என்று எதுவுமே இல்லை.

ஆனால் இந்த நிலையிலும் கூட அவர் தன்னை வரலாற்றின் கடைசி புரட்சியாளன் என்று நாணமின்றி வர்ணித்துக் கொள்கிறார். அதை ஒரு அரிய உண்மை போல் தி டெலிகிராஃப் போன்ற பத்திரிக்கைகளும் வெளிக்கொணருகின்றன.

அவர் தன்னைப் பற்றி வரலாற்றின் கடைசிப் புரட்சியாளன் என்று கூறிக் கொள்வது ஒன்றே ஒன்றைத்தான் நமக்கு நினைவுப் படுத்துகிறது. சர்க்கஸ் அரங்கிற்குப் போனால் அங்கு சில காட்சிகள் வரும். பளு தூக்குவதில் வல்லவரான நல்ல உடல்வாகு கொண்ட ஒருவர் வந்து பல கிலோ எடைகளை அவர் தூக்கும் கம்பியின் இருபுறமும் வைத்து அவற்றை முயற்சி எடுத்துத் தூக்கிக் காட்டுவார். அவர் அதனைச் செய்வதன் மூலம் உருவாக்கிய தாக்கம் பார்ப்பவரின் மனதிலிருந்து அகல்வதற்கு முன்பாகவே சர்க்கஸ் நிகழ்ச்சியில் வரும் கோமாளி ஒரு சிறிய கம்பினை எடுத்துவந்து அதன் இருபுறமும் இரு தொப்பிகளை வைத்து அதனை மிகவும் சிரமப்பட்டு தூக்குவது போல் தூக்கிக் காட்டி அனைவரையும் சிரிக்க வைப்பான்.

சர்க்கஸ் அரங்குகளில் இது மக்களைச் சிரிக்க வைப்பதற்காக செய்யப்படக் கூடியது. ஆனால் தி டெலிகிராஃப் பத்திரிக்கை இதுபோன்றதொரு காட்சியைக் கொண்டு லே வாலசா தான் வரலாற்றின் கடைசிப் புரட்சியாளன் என்று நிறுவ முயல்கிறது.

அதன் மூலமாக உண்மையான புரட்சியாளர்களோடு ஒப்பிடும் போது நகைப்பிற்கிடமானதாகக் கருதப்படத் தகுந்த ஒரு விசயத்தை மிகவும் சீரியஸாக மக்களிடையே கொண்டு வந்து அது தனது தரத்தைச் சீரழித்துக் கொள்கிறது. முதலாளித்துவ மோகம் சமூக மாற்ற சக்திகளின் மீது அதற் கிருக்கக்கூடிய கோபம் இந்த அளவிற்கு அப்பத்திரிக்கையையும் கோமாளித் தனமானதாக ஆக்கியுள்ளது.

Pin It