அடிப்படை சமூக மாற்றத்திற்கு எள்ளளவு கூட வழிகாட்டாமல் முதலாளித்துவத்திற்கு முட்டுக் கொடுக்கும் அப்பட்டமான சீர்திருத்த வாதத்தையே முன்வைக்கிறது

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் ன் அகில இந்தியக் கட்சிக் காரங்கிரஸ் நடைபெற இருப்பதையயாட்டி அக்கட்சி வெளியிட்ட நகல் தீர்மானம் சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் அதன் அணுகுமுறையைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. எத்தகைய மாற்றத்தை அது கொண்டுவர விரும்புகிறது என்பதையும் அத்தீர்மானம் குறுப்பிடுகிறது. இந்தியாவில் கம்யூனிஸ்ட் என்று செயல்படும் அமைப்புகளிலேயே அமைப்பு ரீதியில் பெரியது என்ற அடிப்படையில் அதனை ஆய்வு செய்வது பட்டாளி வர்க்க கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளவர் அனைவரின் கடமையாகும்.

உலக அளவில் 2008ல் தொடங்கி இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கும் முதலாளித்துவ நெருக்கடியை அந்த நகல் தீர்மானம் புள்ளி விபரங்களுடன் விவரிக்கிறது. அதன்மூலம் உலக நாடுகளின் வளர்ச்சி விகிதம் 4 சதவீதத்திலிருந்து 1.3 சதவீதமாகக் குறைந்திருப்பதையும் ஐரோப்பாவில் ஒருகோடியே 50 லட்சம் தொழிலாளர் வேலை இழந்திருப்பதையும் 2010ம் ஆண்டில் மட்டும் 10 லட்சம் வீடுகளை அந்நாடுகளின் சாதாரண மக்கள் இழந்திருப்பதையும் அத்தீர்மானம் கோடிட்டுக் காட்டுகிறது.

இவை அனைத்தையும் கூறிவிட்டு மேலை நாடுகள் அவற்றின் பொருளாதார நெருக்கடியின் சுமை முழுவதையும் வளரும் நாடுகள் மீது சுமத்துகின்றன என்று அத்தீர்மானம் கூறுகிறது. அந்நாடுகள் சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகள் அனைத்திற்கும் அவை தற்போது கடைப்பிடிக்கும் நவீன தாராளவாதக் கொள்கைகளே காரணம் எனக் கூறிவிட்டு அப்போக்கிலிருந்து வேறுபட்ட போக்கு இல்லாமல் போய்விடவில்லை; இருக்கவே செய்கிறது. அத்தாராளவாதக் கொள்கைகளுக்கான மாற்றுக் கொள்கைகளை லத்தின் அமெரிக்க நாடுகள் பின்பற்றுகின்றன என்றும் அத்தீர்மானம் கூறுகிறது.

ஒருபுறம் நெருக்கடியினைத் தோற்றுவிக்கும் தாராளவாதக் கொள்கைக்கான மாற்று ஆக்கபூர்வமாக லத்தின் அமெரிக்க நாடுகளில் உருவாகி வளர்ந்து வருகிறது என்பதைப் பூரிப்புடன் கூறும் அக்கட்சியின் நகல் தீர்மானம் அப்பூரிப்பு குறையமால் மற்றொன்றையும் கூறுகிறது.

அதாவது சீனா, வியட்நாம், கியூபா போன்ற சோசலிச நாடுகள் இதே கால கட்டத்தில் பொருளாதார சீர்திருத்தத்தைக் கடைப்பிடித்து அந்த அடிப்படையில் சிறு தொழிற்சாலைகள் மற்றும் சுயதொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை அனுமதித்திருப்பதாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை உறவுகளை அவை கொண்டு வரத் தொடங்கியுள்ளதாகவும் அத்தீர்மானம் கூறுகிறது. தற்போது ஒன்றன் பின் ஒன்றாக அத்தீர்மானத்தில் முன்வைக்கப்படும் வாதங்களை நாம் சீர்தூக்கிப் பார்ப்போம்.

அதாவது மேலை நாடுகளில் தலைவிரித்தாடும் முதலாளித்துவ நெருக்கடியின் சுமை முழுவதும் வளரும் நாடுகளின் தலையில் சுமத்தப்படுகிறது என்பதை முதலில் நாம் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.

சுமை முழுவதும் வளர்முக நாடுகளின் மீதா

உண்மையில் மேலை நாடுகளில் தோன்றியுள்ள நெருக்கடியின் சுமை முழுவதும் வளர்முக நாடுகளின் மேல் விழுந்தால் மேலை நாடுகளின் தொழிலாளி வர்க்கம் ஏன் வேலை இழப்பையும், வீடுகளின் இழப்பையும் சந்திக்க நேர்கிறது? முதலாளித்துவ சமூக அமைப்பில் தோன்றும் நெருக்கடிகளின் சுமைகள் எல்லாம் எக்கால கட்டத்திலுமே உழைக்கும் வர்க்கத்தின் மேல் தான் அடிப்படையில் விழுகின்றன.

வளர்முக நாடுகளிலும் அதனால் பாதிப்பு உண்டாகாமல் இருப்பதில்லை. அப்பாதிப்பு அந்நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவினையும் நாணயப் பரிவர்த்தனை மதிப்புகளையும் சார்ந்து வரும் இரண்டாம்பட்சத் தன்மை வாய்ந்ததே.

தற்போது தோன்றியுள்ள இந்த முதலாளித்துவ நெருக்கடியிலும் இந்தியா போன்ற வளர்முக நாடுகள் என்று கூறப்படும் நாடுகளின் பாதிப்பு அதனுடைய நாணய மதிப்பின் வீழ்ச்சி சார்ந்ததே. அதாவது உலகமயத்தை ஒட்டி வந்த மேலை நாடுகளின் அந்நிய நேரடி முதலீட்டுத் தொகை மேலை நாடுகளின் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்ட உடன் குறைந்த விலையில் பங்குகளை வாங்கலாம் என்ற அடிப்படையில் அந்நிய முதலீட்டாளர்களால் அவர்களது நாடுகளுக்குத் திருப்பிவிடப்பட்டதன் விளைவாகத் தோன்றுவதே இது. அதன் விளைவாக அந்நிய நாணயக் கையிருப்புக் குறைந்ததால் அவ்வற்றின் ரூபாயுடன் ஒப்பிடும் போது டாலரின் மதிப்புக் கூடியதன் விளைவாக ரூபாயின் மதிப்புக் குறைந்துள்ளது.

இவ்வாறு முதல்தரப் பாதிப்பை மூடி மறைத்துவிட்டு இரண்டாம் பட்சமான பாதிப்பை அக்கட்சியின் நகல் தீர்மானம் முன்னிலைப் படுத்துகிறது. இது எந்த வகையான நோக்கமும் காரணமும் இன்றித் தற்செயலாக அக்கட்சியினால் முன்வைக்கப்படவில்லை என்பதை நகல் தீர்மானத்தின் போக்கும் தொனியும் சுட்டிக் காட்டுகிறது.

பிரச்னை வர்க்கங்களுக்கிடையிலா அல்லது நாடுகளுக்கிடையிலா

அதாவது உழைப்பாளர் தலை மேல் நெருக்கடியின் சுமை சுமத்தப்படுகிறது என்றால் உழைப்பாளர் ஒருங்கிணைந்து முதலாளித்துவ எதிர்ப்பு சமூகமாற்றப் பாதையில் அணிதிரண்டு அந்நாடுகளின் அரசுளைத் தூக்கியயறிந்துவிட்டு அங்கு சோசலிச அரசை நிலைநாட்ட முயற்சிக்க வேண்டும் என்பது அதன் குறிக்கோளாக ஆகிவிடும்.

ஆனால் அதன் சுமை முழுவதும் வளர்முக நாடுகளின் மேல் வருகிறது என்ற கருத்தை முன்வைத்தால் அது நாடுகளுக்கிடையிலான ஒரு பிரச்னையாக ஆகிவிடும். அதாவது பாதிப்புக்கு ஆளாகும் இந்தியா போன்ற வளர்முக நாடுகளின் மக்கள் நெருக்கடியின் சுமைகளைத் தங்கள் மீது சுமத்தும் மேலை நாட்டு ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற திசை வழியை அது முன்னிலைப்படுத்தும் அத்தீர்மானம் இந்த இரண்டாவது வேலையையே திறம்படச் செய்கிறது.

மேலை நாடுகளில் தோன்றியுள்ள நெருக்கடிக்கான காரணமாக அடிப்படையில் இருப்பது முதலாளித்துவச் சுரண்டல். அது இக்கால கட்டத்தில் மிகவும் கூர்மையடைந்துள்ளது. எதனால் என்றால் அந்நாடுகளின் மூலதனம் எங்கு மலிவான உழைப்புத் திறன் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அதிக லாபம் ஈட்ட செல்ல அனுமதிக்கப்படுவதால் அதன் விளைவாக உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் குன்றுகின்றன.

இந்த அம்சம் மட்டுமே ஒரு சரியான சமூகமாற்றப் பாதையைக் காட்டவல்ல அமைப்பினால் சுட்டிக் காட்டப்பட வேண்டும். இந்தப் பின்னணியை உழைக்கும் வர்க்கத்தின் மனதில் பசுமரத்தாணி போல் பதிய வைப்பதற்குப் பதிலாக அக்கட்சி புதிய தாராளவாதக் கொள்கையின் காரணமாக இந்த நெருக்கடி தோன்றியுள்ளது என்று வேறொரு கருத்தை முன்வைத்து  உண்மை எதிரியை மூடுதிரையிட்டுக் காக்கிறது.

லத்தின் அமெரிக்க நாடுகள் முன்வைக்கும் மாற்று

அக்கட்சியின் இந்த நோக்கத்தை அது முன்வைக்கும் மற்றொரு வாதமான லத்தின் அமெரிக்க நாடுகள் இக்கொள்கையிலிருந்தான மாற்றுப் பாதையை முன்வைக்கின்றன என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

லத்தின் அமெரிக்க நாடுகள் மட்டுமல்ல, புதிதாக விடுதலையடைந்த நாடுகள் அனைத்துமே அவை விடுதலை பெற்ற நாளிலிருந்து தற்போது தோன்றியுள்ள உலகமயம் வரும்வரை இவர்கள் கூறும் அந்த மகத்தான மாற்றுப் பாதையையே பின்பற்றி வந்தன. அதாவது தொழில்கள் பலவற்றைத் தேசிய மயமாக்கி அதன் மூலம் ஆதார வசதிகளை முதலாளிகளுக்கு ஏற்படுத்தித் தந்து உள்நாட்டுத் தனியார் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு உதவும் தன்மை வாய்ந்த கொள்கைகளையே அந்நாடுகள் கடைப்பிடித்து வந்தன.

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் எண்ணெய் வயல்களையும் சுரங்கங்களையும் அதன் பிரதமர் சாவேஸ் நாட்டுடமையாக்கி அரசுத்துறையின் கீழ் கொண்டுவந்துள்ளார். அதையும் அதையயாத்த நடவடிக்கைகளில் லத்தின் அமெரிக்க நாடுகளில் பல நாடுகள் கடைப்பிடிப்பதையும் முன்னிறுத்தி அதுவே இன்றுள்ள புதிய தாராளவாத உலகமயக் கொள்கைக்கான மாற்று என்று சி.பி.ஐ(எம்) ன் தீர்மானம் கூற வருகின்றது.

கூர்ந்து நோக்கினால் இக்கொள்கைகள் அவை தோன்றிய காலத்தில் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகத் தோன்றியவையே என்பது தெரியவரும். இன்று அவை லத்தின் அமெரிக்க நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றால் அந்நாட்டுத் தேசிய முதலாளிகளின் உள்ளகிடக்கைக்கு இசைந்து அவை செய்யப்படுகின்றனவே அன்றி வேறு எக்காரணத்தாலும் அல்ல. இக்கொள்கையைக் கடைப்பிடித்த இந்தியா போன்ற நாடுகள் அதனைக் கைவிட்டுப் புதிய தாராளவாதக் கொள்கை என்று கூறப்படும் அக்கொள்கையை இப்போது கடைப்பிடிப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. இங்குள்ள தேசிய முதலாளிகளின் ஒட்டுமொத்த நலனைக் கருதியும் கணக்கில் கொண்டுமே அவை செய்யப்படுகின்றன. எனவே இக்கட்சி தனது நகல் தீர்மானத்தில் கூறவரும் மாற்று முதலாளித்துவ சமூக அமைப்பை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொண்டு அதில் அங்கும் இங்கும் சில ஒட்டுக்களைப் போட்டுப் பராமரிக்கும் சீர்திருத்தவாதத் தன்மை கொண்டதே தவிர அது அடிப்படை மாற்றத்தைக் கருத்திற் கொண்டதல்ல.

அதனால் தான் சீனா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகள் அவை பின்பற்றி வந்த சோசலிசப் பாதையிலிருந்து தடம் புரண்டு சிறு தொழில், சுயதொழில் ஆகியவற்றிற்கு வாய்ப்பளிக்கிறோம் என்ற பெயரில் முதலாளித்துவத்தை நோக்கிச் செல்லும் கண்டிக்கத்தக்க போக்கை அது உள்ளார்ந்து பாராட்டுகிறது.

தேவை ஸ்டாலின் கொண்டு வந்த சந்தைக் கட்டுப்பாடே

அத்துடன் அந்தத் தீர்மானம் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தையினைக் கொண்டுவர மேற்கூறிய சோசலிச நாடுகள் முயல்கின்றன என்று அதுவும் வரவேற்கத் தகுந்த ஒரு அம்சம் என்பது போன்ற ஒரு கருத்தை முன்வைக்கிறது. அக்கட்சியின் நகல் தீர்மானத்தைத் தவிர சமீபத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத்தும் ஒரு அரிய கருத்தைத் திருவாய் மலர்ந்து அதனை மார்க்சியக் கருவூலத்திற்கான வழங்கலாக முன்வைத்திருக்கிறார். அதாவது சோசலிசம் இக்காலகட்டத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதொரு முக்கியப் படிப்பினை, சந்தைப் பொருளாதாரத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும் என்று அவர் கூறியிருக்கிறார்.

சந்தை என்பது அது தானாகவே நிலவும் சரக்கு உற்பத்தி முறையைச் சார்ந்து சுயமாகச் செயல்படும் தன்மை வாய்ந்ததாகும். அதனை வலிந்து ஒழுங்குபடுத்துவது என்பதை நிரந்தரமாகச் செய்ய முடியாது.

முதலாளித்துவத்திற்கு உண்மையான மாற்றான சோசலிசம் சந்தைப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தி வைப்பதாகும். அதனை எவ்வாறு அது கட்டுப்படுத்தி வைக்குமென்றால் சரக்குகளாகச் சந்தைக்குவர வாய்ப்புள்ள பல உபயோகப் பொருட்களை இலவசமாகப் பரந்த அளவில் மக்களுக்கு வழங்குவதன் மூலமாக அதனை அது கட்டுப்படுத்தி வைக்கும்.

மாமேதை ஸ்டாலின் அவரது ஆட்சிக் காலத்தில் அதைத்தான் செய்தார். அதாவது மக்களின் அத்தியாவசிய உபயோகப் பொருட்கள் பலவற்றை அவர் இலவசமாக மக்களுக்கு வழங்கி சந்தைப் பொருளாதாரத்தை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கட்டுப்படுத்தினார்.

அது மட்டுமின்றி தேசப் பொருளாதாரத்திலும் சந்தைப் பொருளாதாரப் போக்கைக் கட்டுக்குள் வைப்பதற்காக அங்கு நிலவிய கூட்டுறவு அமைப்புகளுக்கும் அரசிற்கும் இடையிலுள்ள உறவை ஒழுங்கு படுத்தினார். அதாவது விவசாயக் கூட்டுறவு நிறுவனங்களுக்கான உழவு மற்றும் அறுவடை எந்திரங்கள் போன்றவற்றை அந்நிறுவனங்களுக்கு வழங்கி அவற்றின் விலையைப் பணமாகப் பெறுவதற்குப் பதிலாக விவசாயக் கூட்டுறவுப் பண்ணைகளின் உற்பத்திப் பொருட்களை அதாவது தானியங்கள் மற்றும் காய்கறிகளை பெற்றுக் கொள்வது என்ற ஒருவகைப் பண்டமாற்று முறையை அங்கு அமுல் செய்தார்.

அதை அவர் செய்ததற்கான காரணம் சந்தைப் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்து நாணயப் புழக்கம் அதிக அளவு சமூகத்தில் இல்லாமல் செய்வதற்கே. ஏனெனில் நாணய வடிவில் கூட்டுப் பண்ணை உறுப்பினர்களின் உற்பத்திப் பொருள்களுக்குப் பரிவர்த்தனை மதிப்பு வழங்கப்படுமானால் அது ஒருவகை சொத்துடமை மனநிலையை அவர்களிடம் ஏற்படுத்திப் படிப்படியாக அவ்வாறு சேர்ந்துள்ள பணம் முதலீடாக மாறுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்க முயலும். அதன்மூலம் சமூகத்தில் சோசலிச மனப்பான்மை பலவீனமடையும். சமூகம் சோசலிசக் கட்டத்திலிருந்து கம்யூனிஸக் கட்டத்தை நோக்கி ஆக்கபூர்வமாகச் செல்வதற்குப் பதிலாக மீண்டும் முதலாளித்துவத்தைக் கொண்டுவரும் போக்கை வலிமைப்படுத்தும் என்று அவர் கருதினார்.

அதுமட்டுமின்றி நாணயப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வேறு பல நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டார். உணவுப் பொருட்கள், குடியிருக்கும் வீடு, தொலைபேசி வசதி, மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து போன்ற அனைத்தையும் இலவசமாக வழங்கிவிட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களது கலாச்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மட்டுமே பயன்படும் வகையில் ஊதிய விகிதங்களை வைத்திருந்தார்.

மேலும் ஒரு தொழிலாளிக்கு வழங்கப்படும் ஊதியம் அவர் அதனைப் பயன்படுத்தி பயனுள்ள வகையில் வாழ்க்கையை அதிகபட்ச மகிழ்ச்சியுடன் நடத்த வேண்டும் என்பதற்காகவே; அதனை அவர் சேமித்து வைப்பாரானால் அவர் வாழ்க்கையை முழு அளவில் நடத்தாதவராகி விடுவர். அதனால் அரசு மற்ற அனைத்துத் தொழிலாளருக்கும் இலவசமாக வழங்கும் பல சலுகைகளை அவ்வாறு சேமித்து வைப்பவருக்கு இலவசமாக வழங்காது. அவர் சேமித்து வைத்துள்ள பணத்தைப் பயன்படுத்தி அவற்றை வாங்கிக் கொள்ளுமாறு செய்துவிடும் என்ற சூழ்நிலையையும் அவர் உருவாக்கி வைத்திருந்தார்.

உண்மையில் சோசலிச அமைப்பில் சந்தையை ஒழுங்கு படுத்துவது என்பதன் பொருள் சோசலிச அகராதியில் அதைக் கட்டுப்படுத்துவது தான். அதாவது உலகம் முழுவதும் சந்தைப் பொருளாதாரம் முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில் அதனைப் புற ரீதியாக முழுமையாக ஒரு நாட்டில் மட்டும் ஒழிக்க முடியாது. அந்நிலையில் எவ்வளவு குறைந்தபட்சம் அந்தச் சந்தைச் செயல்பாட்டை வைத்திருக்க முடியுமோ அவ்வளவு தூரம் சோசலிச அமைப்பில் அதனை வைத்திருக்க வேண்டும்; அதில் அத்தகையக் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதன் நோக்கம் படிப்படியாகச் சந்தைப் பொருளாதாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே. இத்தகையதாகத்தான் ஒழுங்கு படுத்துதல் என்பது சோசலிஸ்ட்களால் அமுலாக்கப்பட்டு வந்தது.

ஆனால் தோழர் பிரகாஷ் கரத்திற்கு அவரது எடின்பர்க் கல்வி இத்தகைய கருத்துக்களைக் கற்றுத்தரவில்லை. எடின்பர்க் பல்கலைக்கழகம் மட்டுமல்ல வேறு எந்தப் பல்கலைக்கழகமுமே இத்தகைய கல்வியினை வழங்க முடியாது. ஏனெனில் இத்தகைய கல்வி மக்கள் இயக்கங்கள் கட்டுவதில் கைதேர்ந்தவராக இருக்கக் கூடியவருக்கு மட்டும் அதாகவே கிட்டக்கூடிய கல்வி.

இதனால் தான் ஒழுங்கு படுத்தப்பட்ட சந்தை என்ற பெயரில் முதலாளித்துவ மனநிலை மென்மேலும் வலுப் பெறுவதற்கான கொள்கைகளைத் தற்போது சீனா, வியட்நாம், கியூபா போன்ற நாடுகள் கொண்டுவந்து கொண்டிருக்கக் கூடிய போக்கை அவர் ஆக்கப்பூர்வமான மாற்றுச் சிந்தனை என்பது போல் முன்வைக்கிறார். உண்மையில் இந்தக் கொள்கைகள் சோசலிசத்தை அமுலாக்குவதற்காக கொண்டுவரப்பட்டக் கொள்கைகள் அல்ல. முதலாளித்துவத்திற்கு அடிபணிந்து அதன் வளர்ச்சிக்கு வழிவிடக் கூடிய கொள்கைகள்.

இனிமேல் என்றென்றும் நின்று நிலவப் போகும் அமைப்பு முதலாளித்துவம் தான் என்று இந்நாடுகள் முடிவு செய்துவிட்டால் ஏன் அதனை இவ்வாறு சிறிது சிறிதாக மெல்ல மெல்லச் செய்ய முயல வேண்டும். ஓரேயடியாக முதலாளித்துவ சீர்திருத்தங்களை அப்படியே அமுலாக்கி விடலாமே என்பது போன்ற கேள்விகள் பலரது மனங்களில் உதயமாகலாம். ஆனால் எந்தக் கொள்கைகள் அமுலாக வேண்டுமானாலும் அவை அமுலாகும் நாடு எத்தகைய பொருளாதாரக் கட்டமைப்பினைக் கொண்டதாக இருக்கிறது என்பது கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டியவிசயமாகும். அதனைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் கொண்டுவர முனைவது முதலாளித்துவ ரீதியிலான சீர்திருந்தங்களாக இருந்தால் கூட அதனைச் சரியாகச் செய்ய முடியாது.

ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி

அந்த வகையில் சீனாவைப் பொறுத்தவரையில் அங்கு அந்நாட்டின் வளர்ச்சிக்காக என்ற பெயரில் அந்நாட்டின் ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருப்பது அடிப்படையில் ஏற்றுமதியினை மையமாகக் கொண்ட உற்பத்தி முறையாகும். அதாவது அந்நாட்டில் இடைத்தரகர் அமைப்புகள் இல்லை. அங்கு சோசலிசம் அமுலில் இருந்ததால் அது அந்நாட்டின் தொழிலாளர் மத்தியில் ஒரு சமூக உணர்வையும் கட்டுப்பாட்டையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும் அவர்களது வாழ்க்கைக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுப்படுத்தி வைக்கப் பட்டிருந்ததால் அதிகக் கூலி அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லாதிருந்தது.

இவை அனைத்தையும் பயன்படுத்தி நுகர்பொருள் உற்பத்தியை மலிவான செலவில் உற்பத்தி செய்து உலகச் சந்தையில் குவித்து மேலே கூறிய அம்சங்கள் இல்லாததால் பிற முதலாளித்துவ நாடுகளில் உற்பத்திப் பொருட்களின் விலைகள் கூடுதலாக இருப்பதைப் பயன்படுத்தித் தனது விற்பனைப் போட்டியை அதிகரித்து ஏற்றுமதியை அதிகரிக்கும் அதன் சிந்தனையும் செயலுமே பிரகாஷ் கரத் முன்வைக்கும் இந்தச் சீர்திருத்தங்களின் சாதனையாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம் இந்தப் பொருட்களின் உற்பத்தியாளர்களாக இருக்கக்கூடிய புதிதாக முளைத்த சீன முதலாளிகள் வளர்வதற்கு அது வாய்ப்பினை ஏற்படுத்தித் தருகிறது. அவர்களது வளர்ச்சியில் மட்டுமல்ல அவர்களது நலம் பேணும் சிந்தனை கட்சியிலும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதற்காக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராகலாம் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.

எனவே பிரகாஷ் கரத் அவர்கள் வேலூர் வேலூர் என்று சொல்வதில் பயனில்லை. வேலூர் சிறை என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். அதாவது சந்தையை ஒழுங்கு படுத்துதல், சந்தையை ஒழுங்கு படுத்துதல் என்று கூறி அந்தச் சொல்லுக்குப் பின் மறைந்திருக்கக் கூடிய சோசலிச விரோத நாசகர சிந்தனையை மூடிமறைத்துச் சொல்லக் கூடாது; வெளிப்படையாகவே அதன் பின்னணியையும் அவர் எடுத்துரைத்திருக்க வேண்டும்.

முதலாளித்துவ முடைநாற்றம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடிக்கும் இத்தகைய கொள்கைகளின் விளைவாகத் தான் அந்த நாட்டில் முதலாளித்துவ முடைநாற்றம் வீசும் பல்வேறு போக்குகள் தலைதூக்கியுள்ளன. இவ்வாறு வலிந்து முதலாளிகளையும் முதலாளித்துவத்தையும் உருவாக்குவதற்காகக் கம்யூன்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கென ஒதுக்கித்தரும் தற்போதைய அந்நாட்டு அரசின் போக்கை எதிர்க்கும் மனநிலை மக்களிடையே பரவலாக வளர்ந்து வருகிறது. அந்த மனநிலையின் தாக்கத்தில் தான் அந்நாட்டு மக்கள் அவதார் போன்ற படங்களை விரும்பிப் பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. அதனால் தான் அது போன்ற படங்கள் திரையிடப் படுவதை எத்தனை தூரம் கட்டுப்படுத்த முடியுமோ அத்தனை தூரம் அந்நாட்டு அரசு அதனைக் கட்டுப்படுத்த முயல்கிறது.

இந்தப் பின்னணியில் அனைவரும் தொழில் தொடங்கலாம் என்ற தங்குதடையற்ற முதலாளித்துவ வளர்ச்சிக்கு உதவும் முழக்கத்தை முன்வைத்து அந்நாட்டு அரசு முதலாளித்துவ வளர்ச்சிகான கதவுகளை அகலத் திறந்துவிட முயன்றால் கூட அதனால் தற்போதுள்ள அளவிற்கு மேல் வளர முடியாது. ஏனெனில் அந்நாட்டின் மிகப் பெரும்பான்மை மக்கள் பெரிய மூலதனத்தைத் தங்கள் வசம் கொண்டவர்களாக இன்று இல்லை.

அவ்வாறு மூலதன வளம் உள்ளவர்களாக அவர்கள் ஆக வேண்டும் என்றால் அந்நாட்டு முதலாளிகள் தாங்கள் அடிக்கும் கொள்ளையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை அவர்களுக்குக் கூடுதல் ஊதியமாக வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு அவர்கள் வழங்க முன்வந்தால் மலிவான விலைக்குச் சரக்கு உற்பத்தி செய்ய அந்நாட்டு உடமையாளர்களுக்கு உதவும் காரணிகளில் ஒன்றான தொழிலாளரின் சம்பளம் குறைவாக இருப்பது என்பது இல்லாமல் போய்விடும். எனவே அதனை உடனடியாகச் செய்துவிட அந்நாட்டு அரசு முயலவில்லை.

அந்நாட்டின் உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவம் தான் இனி நமது தலைவிதி என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ளும் சூழ்நிலைக்கு வந்துவிட்டால் அவர்கள் ஒருங்கிணைந்து கூடுதல் ஊதியத்திற்கான கோரிக்கைக் குரலினை அச்சமயம் எழுப்புவர். அதுவரை இந்தநிலை நீடிக்கும்.

பிரகாஷ் கரத் அவர்களின் கட்சி வாயாரப் புகழும் சந்தையை ஒழுங்குபடுத்துவது என்ற கொள்கை சீன நாட்டில் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் பின்னணி இதுதான். அந்நாட்டின் ஆட்சியாளர்கள் அப்பட்டமான முதலாளித்துவ வாதிகளாக மாறிப் படிப்படியாக எவ்வாறு அந்த நாட்டில் முதலாளித்துவத்தைக் கொண்டுவருவது என்பதற்காகச் செய்து கொண்டிருக்கும் திட்டமே இந்தச் சந்தையை ஒழுங்குபடுத்தும் திட்டம். முதலாளித்துவத்திற்கு மாற்றாக அதாவது பிரகாஷ் கரத்தும் அவரது கட்சியும் முன்வைக்கும் விதத்தில் கொண்டுவரப் பட்டுள்ளதல்ல இத்திட்டம்.

கியூபா

கியூபா, வியட்நாம் போன்ற நாடுகளின் நிலையும் ஏறக்குறைய இதனை ஒத்ததுதான். கியூபாவைப் பொறுத்தவரையில் அந்நாடும் சரி அதையொத்த லத்தின் அமெரிக்க நாடுகளும் சரி அவை வாழைப்பழக் குடியரசுகள் என்று அழைக்கப்படும் நாடுகளாகும். அந்நாடுகளின் முக்கிய உற்பத்திப் பொருட்கள் வாழைப்பழமும் சர்க்கரையும் ஆகும். சோசலிச முகாம் என்பது இருந்த போது அந்நாடுளின் இந்த விளைபொருட்களை சோவியத் யூனியன் போன்ற சோசலிஸ்ட் நாடுகள் வாங்கிக் கொண்டு அந்நாடுகளுக்குத் தேவையான பிற ஆலைப் பொருட்களைத் தங்கள் நாடுகளிலிருந்து வழங்கி வந்தன.

அந்த அடிப்படையில் வார்சா ஒப்பந்த நாடுகள் என்று அழைக்கப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கியூபா போன்ற லத்தின் அமெரிக்க நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளில் கூடுதல் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள பொருட்களை சோவியத் யூனியனுக்கு விற்பதும் சோவியத் யூனியனில் உற்பத்தியாகும் இந்நாடுகளுக்குத் தேவையான பொருட்களை இந்த நாடுகள் சோவியத் யூனியனிலிருந்து வாங்குவதும் நடைமுறையாக இருந்து வந்தது.

ஆனால் ஒருநாள் சோசலிசம் சோவியத் யூனியனில் இல்லாமல் போனவுடன் அந்நாடு அதுவரை கியூபா போன்ற நாடுகளுக்கு வழங்கிவந்த பல பொருட்களை வழங்க முடியவில்லை. அதன் காரணமாக உயிர்க்காப்பு மருந்துகள் உள்பட பல்வேறு பொருள்களுக்கு அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இந்தச் சூழ்நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அமெரிக்கா அந்நாட்டின் மீது பொருளாராதத் தடையை விதித்தது. அதாவது சோசலிசம் சோவியத் யூனியனில் இருந்தவரை அந்நாட்டின் பல உற்பத்திப் பொருட்களை கியூபா வாங்கினாலும் அமெரிக்காவும் சில பொருட்களை கியூபாவிற்கு விற்பனை செய்வதை நிறுத்திவிடவில்லை. அமெரிக்க முதலாளிகள் சிலரின் நலன்களுக்கு அது பயன்படும் என்ற வகையில் அமெரிக்கா அக்கொள்கையைக் கடைப்பிடித்தது.

அதன்பின் சோசலிசம் சோவியத் யூனியனில் இல்லாமல் போய்விட்ட சூழ்நிலையில் கியூபாவில் தோன்றிய தட்டுப்பாட்டை முழுமையாகப் பயன்படுத்தி அந்நாட்டு சமூக அமைப்பில் இருந்த சோசலிசத்தின் கூறுகளை முழுமையாக அழித்தொழிக்க அமெரிக்கா முடிவு செய்தது. இதனைச் செய்வதற்கு அமெரிக்காவில் தங்கியிருக்கும் பல கியூபாவின் முன்னாள் உடமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் உதவியாக இருந்தனர்.

வளர்க்கப்பட்டிருக்க வேண்டியது சோசலிச உணர்வு

இந்நிலையில் கியூப அரசாங்கம் அதன் போதாமைகளை உடனடியாக அகற்ற மக்களின் உணர்வு மட்டத்தைத் தட்டியெழுப்பி அவர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்கும் திசை வழியில் தனது பொருளாதாரத்தைக் கொண்டுசெல்ல அது எத்தனை சிரமகரமானதாக இருந்தாலும் முயன்றிருக்க வேண்டும். அதனைச் செய்வதற்கு மிகவும் அத்தியாவசியமானது தொழிலாளரிடம் பராமரிக்கப்பட வேண்டிய சோசலிச உணர்வு மட்டமாகும்.

கியூபா பல விசயங்களில் எடுத்துக் காட்டானதாக இருந்த போதிலும் பிடல் காஸ்ட்ரோ உள்பட அதன் ஆட்சியாளர்கள் பெரிதும் மக்களிடையே உருவாக்கி வளர்த்திருந்தது சோசலிச உணர்வல்ல. மாறாக ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாத உணர்வே; அதுவே பிரதானமாக மக்கள் மத்தியில் தட்டியயழுப்பிவிடப் பட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அமெரிக்க ஏகபோகங்கள் அந்நாட்டில் செலுத்திய பொருளாதார ரீதியான ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காகத் தட்டியயழுப்பப்பட்டு முற்போக்கானதொரு பாத்திரத்தை வகித்த அந்த ஏகாதிபத்திய எதிர்ப்பும் தேசியவாதக் கண்ணோட்டத்திற்கு அதிக அழுத்தம் கொடுப்பதும் கைவிடப்பட்டு ஏகாதிபத்திய எதிர்ப்புக் கட்டம் அந்நாட்டில் அரசியல் ரீதியாக முடிவடைந்த சூழலில் சோசலிச உணர்வு மட்டத்தைத் தட்டியெழுப்புவதற்கு அழுத்தம் கொடுப்பதாக அந்நாட்டு ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் இருந்திருக்க வேண்டும்.

அடிப்படையில் சோசலிச இயக்கங்களாகத் தோன்றி வளராத அந்நாட்டின் முற்போக்கு இயக்கங்களிடம் அத்தகைய சோசலிச உணர்வு கூடுதல் முனைப்புடன் தட்டியெழுப்பப்பட்டிருக்க வேண்டும். அதனை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியாவது வலியுறுத்திச் சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் தோழர் ஸ்டாலினுக்குப் பின் அங்குவந்த ஆட்சியாளர்கள் அக்கடமையை நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. அவர்களிடம் இருந்தது இவ்வி­யத்தின் பாலான ஒரு மெத்தனப் போக்கு மட்டுமல்ல, அது மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மாற்றியமைக்கும் திருத்தல்வாதப் போக்காகவும் இருந்தது. இந்தப் பின்னணியில் தான் இந்த விசயத்தில் சொந்த அறிவும் இன்றி சொல்லிப் புரிய வைக்கும் சோசலிச முகாமின் தலைமையும் இன்றி அல்லாடிய கியூப அரசாங்கம் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பின்பு சில முதலாளித்துவ சீர்திருத்தங்களை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது.

போப்பின் வருகை

இந்தப் பின்னணியில் தான் முதலாளித்துவ ரீதியிலான சீர்திருத்தங்களை அது கொண்டுவரத் தற்போது முயற்சித்துக் கொண்டுமுள்ளது. இதனை நிறுவவல்ல ஒரு எடுத்துக்காட்டு தான் தற்போதைய போப்பாண்டவரின் அந்நாட்டு விஜயமும் அவரது வேண்டுகோளுக்குச் செவிமடுத்து புனிதவெள்ளி நாளை அரசு விடுமுறை தினமாக அந்நாடு அறிவித்துள்ளதுமாகும்.

மதம் மக்களுக்கு வழங்குவதற்கு என்று எதையும் இன்றைய நிலையில் கொண்டிருக்கவில்லை. அது சமுதாய மாற்றப் பாதையில் மக்களைச் செல்லவிடாமல் மந்தப்படுத்தும் வேலையையே செய்கிறது. அதாவது அவர்களது பிரச்னைகளுக்கு சமூகத்தில் நிலவும் வர்க்க வேறுபாடும் சுரண்டலும் காரணமல்ல என்று கூறி அவர்களது உண்மையான விடுதலை உயிர் துறந்ததற்குப் பின்பு அவர்களுக்குக் கிட்டும் வாழ்க்கையே என்று கூற வருவதாகவே அது இன்றும் உள்ளது.

இதில் கொடுமை என்னவென்றால் அத்தகைய அமைப்பின் தலைவரான போப் அவர்கள் கியூபா போன்ற நாடுகள் கால மாற்றத்திற்கு உகந்த வகையில் தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்திருப்பதுதான்.

மாறுதல் என்பதே மாறாத விதி என்பது மார்க்சியம் முன்வைக்கும் கருத்தாகும். அதனால் தான் மார்க்சிய சிந்தனை ஒரு விஞ்ஞானமாக நின்று நிலவுகிறது. அத்தகையதொரு தத்துவம் அமலில் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தரால் கூறப்பட்ட கருத்துக்களை இன்றும் பொருத்தமுடையது போல் காட்டிக் கொண்டிருக்கும் ஒரு மதத்தின் தலைவர் மாற்றம் குறித்து உபதேசம் செய்வது உண்மையிலேயே ஒரு சுவைகரமான விசயம் தான்.

மாற்றம் குறித்து யார் பேசுவது

அவர் இவ்வாறு சொல்வதற்கு முன்பு அவரது நிறுவனமான மதம் கடந்துவந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்திருக்க வேண்டும். உலகம் தட்டையானது என்று கூறுவதில் தொடங்கி உலகத்தைச் சுற்றித்தான் சூரியன் வந்து கொண்டிருக்கிறது; ஏனெனில் அங்குதான் தேவ குமாரன் பிறந்தார் என்பது வரை விஞ்ஞானப் பரிச்சயம் பெற்ற சிறு குழந்தை கூட எள்ளி நகையாடும் கருத்தைக் கொண்டிருந்தது தான் அந்த மதம். அது தவறானது என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் திராணியின்றி அக்கேள்வியின் பக்கமே பக்த கோடிகளின் மனங்கள் திரும்பிவிடாதவாறு திசைதிருப்பும் வேலையையே அது இன்றுவரை திறம்பட செய்துக் கொண்டிருக்கிறது.

சக மனிதனின் மீது அன்பு போன்ற உயர்ந்த மனிதாபிமான உணர்வுகளின் நிலைக்களனாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் இந்த மதம் தான் கலிலியோவிற்கு தீவாந்திரத் தண்டனை வழங்கியது. கோபர் நிகசைக் கொலை செய்தது. அதன் மிகமுக்கியத் தத்துவமே படைப்புத் தத்துவமாகும். மாபெரும் விஞ்ஞானி டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டினால் எந்த அடிப்படையும் இல்லாமல் அத்தத்துவம் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டது. சிந்திக்கும் மக்கள் மனதில் இருக்க இடமில்லாமல் தவிக்க வேண்டிய சிந்தனையே அது. அந்த சிந்தனையை அடித்தளமாகக் கொண்டுள்ள மதம் என்பது அறவே சமூகப் பொருத்தமற்றதாக ஆகிவிட்டது என்பதை மென்மேலும் கூறவேண்டிய தேவையும் அவசியமும் இன்றைய நிலையில் எள்ளளவு கூட இல்லை.

மக்களிடையே சமூக உணர்வினை ஏற்படுத்துவதற்காக ஒரு காலத்தில் உருவான அது தற்போது கடந்த காலத்தின் மிச்சசொச்சமாகக் காலம் தள்ளிக் கொண்டுள்ளது. அவ்வாறு பொருத்தமிழந்து சமூக அரங்கையே விட்டு ஒதுங்கிச் சென்றிருக்க வேண்டிய அது சோசலிசத்தைக் கண்ணோட்டத்தில் மாற்றத்தை வலியுறுத்துவது உண்மையிலேயே வேடிக்கைதான். வருந்தத்தகுந்த விதத்தில் அதற்கும் வழிவிட வேண்டிய ஒரு கட்டாயத்தில் தான் கியூப அரசாங்கம் உள்ளது என்பதே சிரமப்பட்டு ஜீரணிக்க வேண்டிய உண்மையாக உள்ளது.

வெறும் 10 சதவிகிதம் மட்டுமே கத்தோலிக்கக் கிறிஸ்தவ மக்கட்தொகையைக் கொண்ட அந்த நாட்டில் போப்பின் இதுபோன்றதொரு வருகை போலந்தில் அது செய்ததைப் போன்ற ஆட்சிக் கவிழ்ப்பைச் செய்ய முடியாது என்று வேண்டுமானால் இன்றைய நிலையில் கியூப ஆட்சியாளர்கள் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

இந்தப் பின்னணியில் ஒன்றை நாம் மனதிற்கொள்ள வேண்டும். அதாவது சீனாவைப் போல் பூனை கறுப்பாய் இருந்தால் என்ன வெள்ளையாய் இருந்தால் என்ன அது எலியைப் பிடிக்கிறதா என்பதே முக்கியம் என்ற டெங்க்சியோபிங்கின் வழியில் வளர்ச்சியை முழக்கமாக வைத்து சோசலிசப் பாதையிலிருந்து தடம்புரண்டு சந்தைச் சீர்திருத்தம் என்ற பெயரில் பாதை விலகியதல்ல கியூபா.

அது ஒரு நிர்ப்பந்தச் சூழ்நிலையில் முதலாளித்துவத்தை நோக்கி பயணிக்க இன்று தள்ளப்பட்டிருக்கிறது. இந்த அடிப்படைகளில் இருந்து மாறுபட்டதல்ல வியட்நாமும். எனவே பிரகாஷ் கரத் முன்வைக்க முயல்வது போல் இவை மாற்றுகளோ முன்மாதிரிகளோ அல்ல. மாறாக இவை பாதை விலகல்கள் மற்றும் கெட்ட முன்மாதிரிகள்.

முதலாளித்துவ அமைப்பில் அனைத்தும் சந்தைகளே

சந்தை என்பது முதலாளித்துவ சமூக அமைப்பில் வெறும் பொருட்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. சந்தைப் பொருளாதாரத்தில் மனிதனும் அவனது திறமைகளும் மனித உறவுகளும் கூடச் சரக்கு உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டவையாக ஆகிவிடுகின்றன. அதனால் இங்கு பொருட்களுக்கான சந்தைகள் தவிர வேறு சந்தைகளும் உள்ளன. வேலைச் சந்தை, திருமணச் சந்தை என்று வேறுபல சந்தைகளும் உருவாகி விடுகின்றன.

பிரகாஷ் கரத் அவர்களின் சந்தை வலியுறுத்தும் சீர்திருத்தங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சீர்தூக்கி அலசி ஆராய்ந்தால் அது இன்றையப் பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்குமா அல்லது அதற்குத் தற்காலிகத் தலைவலி நிவாரணமாக இருக்கமா என்பதைப் பார்க்க முடியும். ஏனெனில் இன்று தலைவலி நிவாரணங்கள் கூட மாற்றுகளாக மாமனிதர்கள் என்று கருதப்படுபவர்களால் முன்வைக்கப்படுகின்றன.

இன்று இந்தியப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டால் அதில் உருவாகி வளர்ந்துவரும் சந்தை உலகமயப் பின்னணியில் வருவாய் பெருகியுள்ள ஒரு 20 சதவிகித மக்களின் வாங்கும் பொருட்களுக்கான சந்தையாகும். அப்பொருட்கள் அத்தியாவசியப் பொருட்கள் இல்லை. அவை பங்களா போன்ற வீடு, கார், குளிர்சாதன வசதிகள், அழகுசாதனப் பொருட்கள் போன்ற ஆடம்பரப் பொருட்களாகவே உள்ளன. அவற்றின் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போக்கே தற்போது நிலவி வருகிறது.

கார் தொழிற்சாலைகள் பெருகி வருகின்றன. ரியல் எஸ்டேட் சந்தை பெருகி வருகிறது. அழகு சாதனப் பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்துவதற்காக அழகிப் போட்டிகள், பொழுதுபோக்குத் தொழிலின் வளர்ச்சி போன்றவைகளே வளர்ந்து வருகின்றன.

உணவுப் பாதுகாப்பை உருக்குலைக்கும் சந்தை

உண்மையில் எந்தச் சந்தைக்கான வளர்ச்சி உண்டோ அந்தச் சந்தைக்கான பொருளுற்பத்தி அதிகம் நடைபெறுவதே அனைத்து முதலாளித்துவ அமைப்புகளின் நியதி ஆகும். பொதுப் போக்குவரத்துச் சேவை குறைந்து தனிப்பட்ட முறையில் கார்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்ததன் விளைவாக அதனால் உயர்ந்துவரும் எரிபொருள் தேவையைக் கணக்கிற்கொண்டே பயோ எரிபொருள் உற்பத்தி அமெரிக்காவில் வலியுறுத்தப்பட்டது.

அது உணவுப் பொருட்களாக இதுவரை இருந்துவந்த பல தானியங்களில் இருந்து எரிபொருள் தயாரிக்கும் தேவையை அமெரிக்காவில் ஏற்படுத்தியது. அதன் விளைவாகவே உணவுப் பொருள் தட்டுப்பாடு உலக அளவில் தோன்றி வருகிறது; உணவுப் பாதுகாப்பு உணவுப் பாதுகாப்பு என்பது மிகப்பெரும் கூக்குரலாக உலக அரங்கில் ஒலித்து வருகிறது. சந்தை சுட்டிக்காட்டும் திசைவழியில் உற்பத்தியை உருவாக்கும் போக்கை பிரகாஷ் கரத் அவர்கள் வலியுறுத்துவாரேயானால் அதன் விளைவாக ஏற்பட வாய்ப்புள்ள வளர்ச்சிகள் மேலே நாம் விவரித்தவையாகவே இருக்கும். இது தீர்வா அல்லது தலைவலியா என்பதை மக்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து சி.பி.ஐ(எம்) ன் கட்சிக் காங்கிரஸின் நகல் தீர்மானம் இந்தியப் பிரச்னைகளுக்குத் தீர்வாக முன்வைப்பது கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதும் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்வதும் என்ற வழக்கமான பல்லவியாகும். அத்துடன் தற்போது சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை 10 சதவிகிதம் வரை அதிகரிக்க வேண்டும் என்ற அனுபல்லவியையும் அது சேர்த்துக் கொண்டுள்ளது.

முதலாளித்துவ எதிர்ப்புப் போக்கையும், வர்க்கப் போராட்டத்தையும் கைவிட்ட பின் சி.பி.ஐ(எம்). கட்சிக்கு அது முழுக்க முழுக்க நம்பியிருக்கும் தேர்தல் அரசியலில் கை கொடுப்பதாக இருப்பது இந்த சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஜாதியவாத அரசியலே. ஆனால் இது நமது சமூகம் சந்தித்துக கொண்டுள்ள பிரச்னைகளுக்கு மருந்தல்ல. மாறாகக் கூடுதல் உபாதைகளைக் கொடுக்கக் காத்திருக்கும் வியாதியாகும். அதாவது உழைப்பாளர் இயக்கத்தைப் பிளவு படுத்துவதையும் சமூகத்தில் வகுப்புவாதப் போக்குகளை மேலோங்க வைப்பதையுமே இது செய்யும்.

இவ்வாறு ஒட்டுமொத்தமாக பிரகாஷ் கரத்தும் அவரது கட்சியும் இந்திய சமூகப் பிரச்னைகளுக்குத் தீர்வாக முன்வைக்கும் அனைத்து வி­யங்களும் அடிப்படையில் சீர்திருத்தவாத அஜெண்டாக்களே தவிர சமூகமாற்றச் சிந்தனைகளல்ல. அவர்களது நகல் தீர்மானத்தில் மலிந்து கிடக்கும் மற்றொரு விசயம் இன்றைய சூழலில் பாசிஸப் போக்கை உருவாக்கவல்ல தேசிய வாதமுமாகும். அதாவது இந்திய முதலாளிகள் தங்குதடையின்றி மூடிமறைக்க முடியாத அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளனர் என்ற உண்மையையும் வெளிக்காட்டிக் கொண்டே அந்த தேசிய வாதத்தை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதாவது இந்திய முதலாளிகளின் முதலீடுகள் பெருமளவு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலேயே செய்யப்பட்டுள்ளன என்ற சூழ்நிலையை ஒருபுறம் படம்பிடித்துக் காட்டிக்கொண்டு மறுபுறம் பொருளாதார நெருக்கடியின் சுமை முழுவதும் வளர்முக நாடுகளின் மேல் சுமத்தப்படுகிறது என்ற அதற்குப் புறம்பான கருத்தையும் முன்வைத்துத் தேசியவாதத்தைப் பொருத்தமற்ற விதத்தில் அக்கட்சி தூக்கி நிறுத்துகிறது.

வெளிநாட்டுக் கொள்கை உள்நாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கிறதாம்

இந்திய முதலாளிகளின் நலனுக்கு உகந்த விதத்தில் தான் அமெரிக்காவின் மீதான இந்தியாவின் நெருக்கமும் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கூட்டும் ஏற்பட்டுள்ளது என்பதை மூடிமறைத்து இயக்கவியல் சிந்தனைக்கே முரண்பட்ட விதத்தில் மற்றொரு கருத்தை அவர்களது நகல் தீர்மானம் முன்வைக்கிறது.

அதாவது அமெரிக்கச் சார்பு வெளிநாட்டுக் கொள்கையே இந்திய அரசின் உள்நாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கிறது என்று அது கூறுகிறது. அதாவது எங்கெல்லாம் உள்நாட்டு முதலாளித்துவம் பிரச்னைகளுக்குக் காரணமாக விளங்குகிறதோ அங்கெல்லாம் வேறு காரணங்களைக் கூறி அதனை மூடிமறைத்துக் காக்கும் பணியையே அந்த ஆவணம் செய்கிறது.

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுவது, அந்தத் திசைவழியிலான போராட்டங்கள் நசுக்கப்படுவது ஆகியவை குறித்து அந்த ஆவணம் மூச்சுக்கூட விடவில்லை. தொழிலாளர் கசக்கிப் பிழியப்படும் சூழலுக்கும் நவீன தாராளவாதத்தைக் காரணம் என முன்னிறுத்துகிறது.

ஒட்டுமொத்தத்தில் வர்க்கப் போராட்டப் பாதையைக் கைவிட்டு விட்டு நாடாளுமன்ற அரசியலே சகலமும் என்ற அடிப்படையிலான தனது நடைமுறைக்குக் கட்டியம் கூறும் ஆவணமாகவே அக்கட்சி காங்கிரஸின் நகல் தீர்மானம் உள்ளது. உணர்வு பெற்ற பாட்டாளி வர்க்கம் இதனைப் பார்க்கத் தவறக் கூடாது. இந்தியாவில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே மிகப் பெரிய கட்சி அதுதானே என்ற மாயைக்கு ஆட்பட்டு விமர்சனப்பூர்வப் பார்வையின்றி அத்துடன் இணைந்து செயல்படும் போக்கை உழைக்கும் வர்க்க அணிகள் கைவிட வேண்டும். உதியம் பெருத்திருந்தாலும் அது உத்திரத்திற்கு ஆவதில்லை என்பதை அறிந்து உண்மையான அடிப்படை சமூகமாற்றத்தை வலியுறுத்தும் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.

இன்று சி.பி,ஐ(எம்). கட்சி தனது ஆவணத்தின் மூலம் சீர்திருத்தவாத, தேசியவாத, அப்பட்டமான நாடாளுமன்றவாதக் கட்சியயன முழுமையாக அம்பலமாகி நிற்கும் நிலையில் சரியானதொரு முடிவினை உழைக்கும் மக்கள் எடுக்க வேண்டும். சி.பி.ஐ(எம்). கட்சியும் அது அதன் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற்போல் ஒளிவுமறைவின்றி தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டுமானால் அது செய்ய வேண்டியது இதுதான்: டெங்க்சியோபிங், முதலாளித்துவப் பொருளாதார மேதை கீன்ஸ் ஆகியவர்களின் புகைப்படங்களைத் தங்கள் அலுவலகங்களில் மாட்டி, மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் படங்களை அது அகற்ற வேண்டும். உண்மைக்கு மதிப்புக் கொடுப்பதாக இருந்தால் அக்கட்சி அதைத்தான் செய்ய வேண்டும்.

Pin It