மொழி அறக்கட்டளை

சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்

முனைவர் ஐராவதம் மகாதேவன்

மொழிபெயர்ப்பு:

பா.ரா. சுப்பிரமணியன்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

பாலாறு இல்லம்,

6, காமராசர் சாலை, சேப்பாக்கம்,

சென்னை_ 600005

பக்: 48

(இலவச வெளியீடு)

ஐராவதம் மகாதேவன் திருச்சிராப்பள்ளியில், 2009 இல் நடைபெற்ற தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையில் ஆங்கிலத்தில் நிகழ்த்திய அறக்கட்டளை உரை க்ஷிமீstவீரீமீs ஷீயீ மிஸீபீus நீவீஸ்வீறீவீக்ஷ்ணீtவீஷீஸீ வீஸீ ளிறீபீ ஜிணீனீவீவீறீ என்னும் தலைப்பில் வெளியாகி உள்ளது. அந்த உரையை அடியற்றி இந்தத் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஆசிரியர் பார்வையிட்ட தமிழ் மொழிபெயர்ப்பாக இதைக் கொள்ளலாம். அவர் செய்த திருத்தங்களும் விளக்கங்களும் ஆய்வுரையை எளிதாகப் புரிந்துகொள்வதற்குப் பெரிதும் உதவும்.

ஐராவதம் மகாதேவன் கடந்த நாற்பது ஆண்டுகளாகச் சிந்துவெளிப் பண்பாட்டு வரிவடிவங்களில் ஆய்வு மேற்கொண்டவர். இது தொடர்பாகப் பல கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். மேலே குறிப்பிட்ட அறக்கட்டளை உரையைத் தமிழில் மொழிபெயர்க்க நான் விரும்பியதற்குச் சில காரணங்கள் உண்டு.

1. இந்த உரையின் முதல் பகுதியில் சிந்துவெளிப் பண்பாடு, அகழ்வாராய்ச்சி, இலச்சினைகளில் பொறிக்கப்பட்டுள்ள சித்திர வடிவக் குறியீடுகள் ஆகியவற்றில் இதுவரை நிகழ்ந்த ஆய்வுகளைத் தொகுத்துரைத் திருக்கிறார். சிந்துவெளிப் பண்பாட்டின் வரலாற்றைப் பற்றி அறிவதற்கான ஒரு நல்ல முன்னுரையாக இப்பகுதி உள்ளது.

2. பகுதி இரண்டில் சிந்துவெளிப் பண்பாட்டின் எச்சங்கள் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் மிக மென்மையாகவும் தொன்மக் கதைகளில் அழுத்தமாகவும் பதிவாகி இருப்பதைத் தொகுத்துக்கொண்டு சிந்துவெளிப் பண்பாட்டு வரிவடிவங்களுடன் தொடர்பு படுத்திக் காட்டியிருக்கிறார்.

3. மேலும், இந்த முதல் பகுதியில் நேரடி மொழிபெயர்ப்பு, சிந்துவெளி வரிவடிவங்களில் இலக்கண விகுதிகள், ஒலி ஒற்றுமையால் விளையும் சிலேடை, சிந்துவெளி நாகரிகத்தைத் தமிழகத்தோடு தொடர்புபடுத்தும் கூறுகள் ஆகியவை குறித்து அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் முக்கியம் வாய்ந்தவை. ஏனெனில், பகுதி இரண்டில் தமிழகத் தொன்மக் கதைகளை அவர் மேற்கூறிய முறைகளாலேயே விளக்குகிறார். இதனால், முதல் பகுதியும் இரண்டாம் பகுதியும் தனித்தனியானவை அல்ல. இரு பகுதிகளும் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிந்துவெளி வரிவடிவ ஆய்வுகளில் பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் அஸ்கோ பர்போலா போன்றவர்களிடம் காணப்படாத ஒரு புதிய அணுகுமுறையை மகாதேவன் பின்பற்றியிருக்கிறார். இந்த அணுகுமுறைக்கு அவர் அடிப்படையாகக் கொண்டிருப்பது கடன் மொழிபெயர்ப்பு கடன் மொழிபெயர்ப்பு என்பது இரு மொழிகளுக்கு இடையே நிகழ்ந்திருக்கக்கூடிய நேர் மொழி பெயர்ப்பு ஆகும். சிந்துவெளியை வாழ்விடமாகக் கொண்டிருந்தவர்கள் வெளியிலிருந்து வந்தவர் களின் மேலாதிக்கத்தின் கீழ் வந்தபோது இரு மொழிகளும் தம்மிடையே கொண்ட உறவால் நேரடியான மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்திருக் கக்கூடிய வாய்ப்புகள் மிகுதி. இந்த நேரடி மொழி பெயர்ப்புகளை இரு மொழிகளிலும் காணமுடியும். அதாவது திராவிட மொழி களிலிருந்து ரிக்வேத காலத்து வடமொழியிலும், வடமொழியிலிருந்து திராவிட மொழிகளிலும் அவை நிகழ்ந்துள்ளன. இந்த நேரடி மொழி பெயர்ப்புகளை மொழியியல் மற்றும் பண்பாட்டு அடிப்படையில் கண்டு, கவனத்துடன் கணித்து, சிந்துவெளி ஆய்வில் பயன்படுத்தியிருப்பது மகாதேவன் காட்டும் புதிய பாதை ஆகும்.

இந்தப் புதிய முறையால் மகாதேவன் சிந்துவெளி வரிவடிவங்கள் உணர்த்தும் கருத்தை ‘விளக்குகிறார்’; அவற்றை ஒலிப்பு அடிப்படையில் ‘படிக்க’ முற்படவில்லை. இது மிகவும் அடிப்படையான வேறுபாடு. ஆய்வாளர்கள் பலர் ‘படிக்க’ முற்படுகிறார்கள். ஆனால், மகாதேவன் ஒரு சித்திர வடிவக் குறியீடு குறிக்கும் கருத்தை மொழிச்சிலேடை என்னும் உத்தியாலும் நேரடி மொழிபெயர்ப்பு என்னும் முறையாலும் தொன்மங்களுடன் தொடர்புபடுத்தி விளக்கியிருப்பதுதான் இந்த உரையின் மிகக் கவர்ச்சியான, படிக்கவும் சிந்திக்கவும் தூண்டுகிற பகுதி.

சிந்துவெளியைப் பற்றிய இந்த ஆய்வுரையைத் தமிழ் வழியாகப் பலரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்த மொழி பெயர்ப்பைச் செய்திருக்கிறேன்.

Pin It