“தொன்மையில்லாத மனிதருக்கு வாழ்வு உண்டா? தொன்மையில்லாத இனத்திற்கு வரலாறு உண்டா? தொன்மையில்லாத வாழ்வு என்ன வாழ்வு” (பிரேம்-அதிமனிதரும், எதிர்மனிதரும்-2009 )
அலையும் நமது புலன்களுக்கு தட்டுப்படும் எல்லாவற்றிற்கும் மூலத்தைத் தேடுகிறோம். நாம் தேடி போகும் மூலம் என்பது மனிதம் என்ற சொல்லைப் போலத்தொல்நினைவாக எஞ்சியிருப்பதைக் கண்டு திணறுகிறோம், திமிருகிறோம் . திமிருதல் தொன்மையடையாளமாக உருவகப்படுகிறபோதுதான் நமது இருப்புக்கான ஓரிடம் உறுதி செய்யப்படுகிறது. இன்று உறுதி செய்யப்பட்டிருக்கிற எல்லா இருப்பிடங்களுக்கு உள்ளும் புறமும் இது போன்றதொரு தொன்ம விளக்கங்கள் நடமாடிக் கொண்டுதான் இருக்கின்றன. அல்லது தொன்மங்கள்தான் இருப்பிடங்களாக சிலருக்குக் கிடைத்துவிடுகின்றன. எந்த ஒருநிலையிலும் இரண்டு குடிகளுக்கான போரில் முதலில் அழிக்கப்படுவதும் காக்கப்படுவதும் தொன்மையடையாளங்கள்தான். ஓரினத்தை அழிக்கவேண்டுமானால் தொன்மை அடையாளங்களை அழித்துவிட்டால் போதும். அல்லது தொன்மை அடையாளங்களைக் கைப்பற்றிவிட்டால் போதும். பூக்கள் மாலைகள் , விலங்குகள், காவல்மரங்கள், குடைகள் , முரசுகள், கொடிகள், கோட்டைகள் , மதில்கள், மொழிகள், கதைகள் , இவற்றில் வரும் பெயர்த் தொடர்கள் அடைகள், உவமைகள் , உருவகங்கள் இப்படி எத்தனையோ அடையாளங்கள் ஒவ்வொரு குடிமரபுக்கும்வாழ்க்கைக்கான உந்துவினையை நிகழ்த்துகின்றன.
பழந்தமிழக அரசியலில் பெரிதும் செல்வாக்கு செலுத்திய சேர, சோழ, பாண்டிய அரசமரபுகள் இனக் குழு சமுதாயத்திலிருந்துதான் தோன்றின . ஆயினும் பழங்குடி மரபுகளின் அடையாளங்களை அழித்தும் கைப்பற்றியும் தங்களை நிலை நிறுத்திக் கொண்டனர்.
மூவேந்தர்களின் இலச்சினைகளில் ஒன்றான வில், புலி,மீன (கொடி) தோன்றிய முறைமை மற்றும் குடிமரபுப் பெயர்கள் தோன்றிய முறைமை இவை மட்டுமே இக்கட்டுரைக்கான பொருள்களாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன .
மூவரும் இலச்சினைகளும் :
பழந்தமிழகத்தில் அரசர்கள் என்றால் அது சேர , சோழர் , பாண்டியர் ஆகிய மூவரைக் குறிக்கிறது. இவர்களே தமிழ் காக்கும் மூவர் எனப் போற்றப்படுகின்றனர் . ( அகம்.131-14. ;திரு .162; புறம்35 -4;122-5;205-1; 3 57-2; பெ 33; பொ54.). ஆனால் மூவேந்தர்களுக்கு பூக்கள் , மாலைகள் உள்ளிட்ட இலச்சினைகள் இருந்தன . ஒவ்வொரு அரசமரபுக்கும் வெவ்வேறு இலச்சினைகள் இருந்திருக்கின்றன .
தமிழகப் பேரரசர்களாகிய மூவேந்தர்களும் அடையாளப் பூக்களையும் சின்னங்களையும் கொண்டிருந்தனர் . சோழர் ஆத்திப் பூமாலையும் , சேரர் பனம்பூமாலையும் , பாண்டியர் வேப்பம்பூமாலையும் வைத்துக் கொண்டிருந்தனர் . தவிரவும் ஒவ்வொரு அரசரும் தங்களது சின்னங் கள ை பொ றித்துவைத்துக் கொண்டிருந்தனர் . சோழர் புலிக் கொடியையும் , சேரர் வில் கொடியையும் , பாண்டியர் மீன் கொடியையும் கொண்டிருந்தனர் . இவை யாவும் கைப் பற்றப்பட்ட எதிரிகளின் நிலத்தில் பொ றிக்கப்பட்டிருந்தன . ( புறம். 33, 39, 58)
கோட்டைகள் மீதும் , யானைகள் மீதும் , படகுகள் மீதும் , தேர்களின்மீதும் அகன்ற தெருக்களிலும் , வணிக வீதிகளிலும் , கடைகளிலும் , கோவில்களிலும் கொடிகள் வைக்கப்பட்டிருந்தன . புறம் 9. 38. அகம் 162. புறம் 69. புறம் 31. அகம் 114. புறம் 377. அகம் 83. 126. அகம் 110. திருவிழாவின்போதும் கொடி ஏற்றப்பட்டது . அகம் 149. பழந்தமிழகத்தில் பழங்குடி த் தன்மையிலான அரசுகள் குறுநில அரசுகள் போன்றவை இருந்தபோதிலும் அவை பெரிய அளவிற்கு ப் பூக்களையும் கொடிகளையும் குடைகளையும் தங்களுடைய அடையாளங்களாகக் கொண்டிருப்பதற்கான பதிவுகள் இல்லை . ஆனாலும் .’ .. .. .. .. குருந்தே முல்லை யென்று இந்நான் கல்லது பூவும் இல்லை’( புறம்335) ; இனக் குழு சமுதாயத்திலிருந்துதான் பூக்கள் போன்ற புனிதத்துவம் வாய்ந்த அடையாளங்கள் உருவாக்கப்பட்டன என்பதற்கு ச் சிறிய சான்றாகக் கருதலாம். பெருவேந்தர் பேரரசு இவற்றிற்கு மாற்றான பதிவு இது என்பதிலிருந்தும் இக்கருத்தை உறுதி செய்ய முடிகிறது.
குறுநில அரசர்கள் இம்மாதிரியான அடையாளங்களைக் கண்டுகொள்ளவில்லை. இவர்களுடைய அடையாளங்கள் நிலவளத்தோடு ஒருங்கிணைந்துள்ளது. மேலே காட்டப்பட்டுள்ள புறம் 335 ஆம் செய்யுள்கூட இதைத்தான் உணர்த்துகிறது. இலச்சினைகள் அல்லது சின்னங்கள் என்பவை நிலத்தோடும் அந்நிலத்தில் வாழும் மக்களின் தொழிலோடும் தொடர்புடையவையாக ம். குலக் குறி என்று சொல்லப்படுகிற குலச் சின்னங்கள் கூட இப்படித்தான் உருவாக்கப்பட்டன. சேரருக்குரிய வில்கொடியையும், பாண்டியருக்குரிய மீன்கொடியையும், சோழருக்குரிய புலிக் கொடியையும் அந்த அந்த அரசருக்குரிய குலக் குறியாகக் கருதமுடியவில்லை. ஏனெனில், பல குலங்களைச் சார்ந்த குடிமக்களை ஒருங்கிணைத்துச் சேர , சோழ, பாண்டிய அரசுகள் உருவாக்கப்பட்டன. சேரநாடு மலையும் மலையைச் சார்ந்த நிலமும் ஆகும். இங்கு வேட்டை தலைமைத் தொழில் வேட்டுவர்களே தலைமை மக்கள் ; வில் இவர்களுடைய குலச் சின்னம். ஆனால், சேர அரசர்கள் இக்குடிமக்களின் வழிவந்தவர்கள் என்பதற்கு வெளிப்படையான சான்றுகள் இல்லை.
பேரரசு என்பது ஒரு குல அரசன்று. பல குடிகளை உள்ளடக்கியது. சேர அரசுக்கான பெருவருவாய் கடல்வணிகத்தின் மூலமே கிடைத்தது. அதனால்தான் ‘1கடல் பிறக்கோட்டுதல்’ புலவர்களால் மதிப்போடு பேசப்படுகிறது. வேட்டுவமக்கள் சேரநாட்டின் வலிமையான பழங்குடி மக்கள் என்பதால் பிட்டன்கொற்றன் போன்ற குலத் தலைவர்களோடு தொடர்பு கொண்டு வில்லை அடையாளமாகத் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். பாண்டிய நாட்டின் பெரும் பகுதி காடும் காடு சார்ந்த இடமும் ஆகும். பாண்டிய அரசர்கள் தங்களுடைய படை வலிமையால் தங்கள் நாட்டை விரிவுபடுத்தினர். இதனால் கடலும் அவர்களுடைய எல்லையானது. இதனால் முத்து பாண்டியருக்குச் செல்வமாக மாறியது . கடல்வளத்தைக் குறிக்கும் மீன் கொடி பாண்டியருடைய சின்னமானது . மீன் கொடி பாண்டியருக்குரியதாகப் பரவலாகப் பேசப்படுகிறது . பாண்டியர் கொற்கைப் பகுதியில் வலிமையாகத் திகழ்ந்த பரதவர் மீது பெரும்போர் தொடுத்து ப் பரதவரைக் கைப்பற்றி மீன் கொடியைத் தங்களுக்குரியதாக்கிக் கொண்டனர் .’ஒன்று மொழி ஒலி யிருப்பில் தென் பரதவர் போரேறே’ ( மதுரைக்காஞ்சி.618.) கொற்கைப் பாண்டியன் என்பது கூட குடிப் பெயராக இல்லாமல் கொற்கைப் பகுதியில் வலிமையோடு விளங்கிய ஒரு தலைவனுக்குரிய பட்டப் பெயராக இருக்கிறது. இந்தக் ‘கொற்கைப் பாண்டியன்’ பாண்டியருக்கு அடங்கி உதவி செய்தான். இவன் பரதவரின் தலைவனாக இருக்கவேண்டும். சோழநாடு மிகவும் தொடக்க காலத்தில் இவ்வளவு வளமுடைய மருதநிலமாக இருந்திருக்கவில்லை. அது சதுப்புநிலமாக இருந்தது. கரிகாலன் போன்ற அரசர்களின் முயற்சியால் காவிரிப் பாசனம் முறைப்படுத்தப்பட்டு வளம் தரும் மருதநிலமாக மாற்றப்பட்டது என்பதைப் பட்டிணப்பாலை உள்ளிட்டவை நமக்குத் தெரிவிக்கின்றன. ஆனால் சோழருக்குரிய கொடியாகப் புலிக் கொடி சுட்டப்படுகிறது .
’ மாவே, எறிபதத்தான் இடங் காட்டக் ,
கறுழ் பொருத செவ் வாயான்,
எருத்து வவ்விய புலி போன்றன;’ (புறம் .4.) ‘‘இவன் யார் ?’ என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,’ ( புறம்.13.) ‘து ,
புலிபுறங் காக்கும் குருளை போல,
மெலிவில் செங்கோல் நீபுறங் காப்ப’ ( புறம்.42.) ‘விடர்ப்புலி பொறித்த கோட்டைச், சுடர்ப் பூண்,’ (புறம்.174. ) ‘ புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து உரனுடை யாளர் கேண்மையடு’ ( புறம்.190.) புலி சோழரின் குலக் குறி என்பதற்கு ச் சான்றுகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. சோழர் ஆண்ட நிலம் கூட புலிவாழும் பெரும் காடாக இல்லை. இந்நிலையில் இந்தப் புலிக் கொடி அடையாளத்தைச் சோழர்கள் எங்கிருந்து பெற்றார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை . புலி சோழரின் குலத் தெய்வமான திருமாலின் வாகனமாகக் கூட இல்லை. இன்றைய கேரளாவில் உள்ள (அன்றைய சேரநாடு) அயப்பன் என சொல்லப்படுகிற சாஸ்த்தாவின் வாகனமாக புலி இருப்பதை அறியமுடிகிறது. சாஸ்த்தா புத்தரோடு தொடர்புடையது.
புத்தநெறியைப் பரப்புவதற்கு மவுரியர் உள்ளிட்டோர் மேற்கு தொடர்ச்சி மலைவழியாகத்தான் தமிழ் நாட்டிற்குள் வந்தனர். மேற்குத் தொடர்ச்சிமலையில் தான் புலிகள் அதிகமாக வசிக்கின்றன. எனவே சாஸ்த்தா தன்னுடையவாகனமாகப் புலியைத் தெரிவு செய்தது இயல்பு. புத்தசமயம் சோழநாட்டில் பரவியபோது சோழர்கள் புத்தசமயத்தாரோடு போரிட்டும் தொடர்பு கொண்டும் இச்சமயத்தாரிடமிருந்து புலிச் சின்னத்தைக் கைப் பற்றியிருக்கலாம். என்று சிந்திக்க இடம் உண்டு. என்றாலும் இதற்கான வலுவான சான்றுகளைத் திரட்டமுடியவில்லை. வேங்கைமார்பன் என்கிற போர் வீரன் ஒருவன் புலியை வென்றவனாக அகநானூற்றில் பேசப்படுகிறான். வேளிர் மரபில் வந்த நாற்பத்தொன்பதாவது பட்டத்திற்குரியவனாக இருங்கோவேள் புலிகடிமால் புலியோடு தொடர்பு படுத்திப் பேசப்படுகிறான் (புறம்201-202 ). எருமை நாட்டையாண்ட இந்த புலி கடிமாலுக்கும் சோழருக்கும் உள்ள தொடர்பை அறியச் சான்றுகள் எதுவுமில்லை. சோழர்களின் தலைநகரான உறை யூருக்கு இன்னொரு பெயர் கோழியூர் என்பதாகும். கோழி யானை சண்டையில் யானையைக் கோழி வெற்றி கொண்டதால் இவ்வூருக்கு இப்பெயர் வந்தது. இதற்குச் சங்க இலக்கியம் சான்று அளிக்கிறது. ஆனால் சோழர்கள் புலியைத் தங்களுக்குரிய அடையாளமாகத் தெரிவு செய்தது குறித்து உறுதியாக எதுவும் கூறுவதற்கில்லை.
மூவேந்தரும் குடிமரபுப் பெயர்களும்
பழந்தமிழில் அரசுருவாக்கம் குறித்து அறிவதற்கு மூவேந்தர்களின் குடிமரபுப் பெயர்கள் குறித்து ச் சிந்திப்பது மிகவும் இன்றியமையாததாகிறது. மூவேந்தர்களின் இலச்சினைக்கு இணையாக அவர்களுடைய குடிமரபுப் பெயர்கள் புலவர்களால் பெரிதும் பாராட்டப்படுகின்றன. இந்தக் குடிமரபுப் பெயர்கள் அரசமரபின் செயல்களையும், குடிமரபின் பெருமைகளையும், குடிமரபின் தொன்மைகளையும் உணர்த்துவனவாக அமைந்துள்ளன. பழந்தமிழகத்தில் முதலில் தோன்றிய அரசு எது என்பதை விளக்குவது எளிதன்று. ஆனால் சேர, சோழ, பாண்டியர் என வரிசைப்படுத்தி வழங்கும் மரபையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்குமுன் தமிழ் இனம் மேற்காசியாவில் தோன்றி இன்றை தென்னகத்தை வந்தடைந்தவர்கள் என்றும் இன்றைய தென்னகத்திலேயே தோன்றி உலகமுழுதும் பரவியவர்கள் என்றும் இருவேறு கருத்துகள் ஆய்வாளர்கள் இடையில் காணப்படுகின்றன. கனகசபை முதல் கருத்தை உடையவர். பாவானர் உள்ளிட்ட அறிஞர்கள் இரண்டாம் கருத்துக்குரியவராகவும் காணப்படுகின்றனர். ”ஏறத்தாழ இன்று ஒவ்வொரு இனமும் எந்தெந்த நிலங்களைத் தாயகமாகக் கொண்டுள்ளனரோ அதே நிலங்களில்தான் தோன்றியுள்ளனர் .” (! பண்டை இந்தியா t.d. கோசாம்பி) வரலாற்றுக் காலத்தில் புராதன எச்சங்கள் என்கிற கட்டுரையில் அமைந்துள்ள இக்கருத்து தமிழர் தாயகம் தென்னகம் என்கிற கருத்துக்கு வலு சேர்க்கிறது. தமிழர்கள் இன்றைய தென்கோடி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்றாலும் பழந்தமிழகத்தை ஆண்ட அரசர்கள் பெரும்பாலோர் தமிழகத்தைத் தாயகமாக உடையவர்கள் அல்லர். இந்தக் கருத்தைப் புரிந்து கொள்ளுவதற்கு அரசரின் குடிமரபுப் பெயர்களை ஆராய்வது இன்றியமையாததாகிறது.
சேரரின் குடிமரபுப் பெயர்கள்
வில்லவன் , வானவன் , வானவரம்பன் , இமயவரம்பன் , குட்டுவன் , குடக்கோ , பொ றையன் ஆகியவை சேரருடைய அரசமரபுக்குரிய பெயர்களாகும் . வில்லவன் என்பது சேரருடைய வில்லாற்றலைக் குறிக்கிறது . சேரநாட்டில் வேட்டுவ மக்கள் பழங்குட ிகளாக வாழ்ந்தனர் . இந்த க் குடியிலிருந்து கூட சேர அரசமரபு ஒன்று உருவாகியிருக்க ிறது. மலைநாட்டுக்கு வேட்டுவமக்களே தலைவர்கள் என்பதுவு ம் குறிப்பிடத்தக்கது. பிட்டன்கொற்றன் போன்ற தலைவர்களைச் சேரர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததன் அடையாளமாகக் கூடச் சேரர் வில்லைத் தெரிவு செய்திருக்கலாம். வில்லவன் என்பது சேர ருக்கு ஒரு தொன்மையான அடையாளத்தை வழங்குகிறது. வானவரம்பன், வானவன் என்பவை மலைநாட்டை ஆண்டதால் சேரருக்கும் உரியதாயிற்று. “வங்காளத்துக்கு வடக்கே உள்ள ஒரு மலைநாட்டை ஆண்ட மரபினர் இவ்வாறு பெய்ர் பெற்றிருந்ததாக “குறிப்பிடும் கனகசபை அவர்களே தமிழ்நாட்டு மலைப்பகுதிகளை ஆண்டவர்களாக் குற ிப்பிடுகிறார் .” சேர அரசர்களேயன்றி முதிரைமலைக் கோமான் நன்னன் அழும்பில்வேள் ஆகிய பிற மலைப்பகுதித் தலைவர்களும் தங்களை வானவிறல்வேள் அல்லது வானவர் கோமான்கள் என்று குறித்துக்கொண்டனர்.” (1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் ப.97.) தமிழகத்து மலைநாட்டையாண்ட குறுநில அரசர்களும் வானவர் எனச் சுட்டப்படுகின்றனர். வானவர் என்ற தொடருக்கு இந்த நில உலகத்திற்கு அப்பால் உள்ள மேலுலகம் என்ற பொருள் கொள்ளுவது கூடாது. அம்மரபினரின் சொந்த நிலம் குறித்த அல்லது கடந்துவந்த நிலம் பற்றிய பதிவு எனக் கொள்ளுவது தகும்.
இமயவரம்பன் என்ற தொடருக்கு சேரர் இமயத்தோடு தொடர்புடையவர்கள் என்பதைக் குறிக்கிறது . குட்டுவன் குட்டநாட்டை ஆண்டவன் என்பதைக் குறிக்கிறது . குடவர்கோ அல்லது குடக்கோ என்பது குடநாட்டை ஆண்டதனால் வந்த பெயராகும் . ஆதன் என்னும் சேர அரசன் கரிகால ்சோழனோடு பொருது விழுப்புண் பட்டு வடக்கிருந்து உயிர்நீத்தான் .தங்களுடைய தாய்நிலத்திற்குத் திரும்பிச் செல்லமுடியாத சூழ்நிலையில் தாய்நிலம் இருக்கும் திசைநோக்கி வழிபடுதல் அல்லது நன்றிக் கடன் செலுத்துதல் என்பது எல்லா தொல்குடிமரபுகளிலும் காணப்படுகிற பொதுவான பண்பாடாகும் . வடக்கிருத்தல் என்பது அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதை நமக்குக் காட்டுகிறது .
சோழர் குடிமரபுப் பெயர்கள்
சென்னி, செம்பியன் கிள்ளி என்பவை சோழருக்குரிய குடிமரபுப் பெயர்களாகும். சோழர் என்பது சோரர் ( திருடர்) கள்ளர் என்பதிலி ருந்து வந்தது எனக் கனகசபை எழுதுகிறார். இதே கருத்தினைப் பந்தார்க்கரும் கொண்டுள்ளார். பந்தார்க்கரின் இந்தக் கருத்தை மறுக்கும் கா. சுப்பிரமணியன் இது ஆயத்தக்கது என்கிறார். சென்னி என்பது தலைமையைக் குறிக்கிறது. தலைவன் என்ற பொருளில் வழங்கப்படுகிறது. செம்பியன் என்பது சிபியன் வழி வந்தவர் என்ற பொருளை தருகிறது என்கிறார் k.n. நீலகண்ட சாஸ்த்திரி. வளவன் வளமை என்ற பொருளைத் தருகிறது. கிள்ளி என்பது தோண்டுதல் என்ற பொருளைத் தருகிறது என்கிறார் தச்சிணாமூர்த்தி. சோழரின் குடிப் பெருமையை உணர்த்தக் கூடிய தொன்மக் கதையொன்று புறநானூற்றில் காணப்படுகிறது. அடிபட்டுத் தசையை இழந்த புறாவின் துயர் துடைக்க தன் தசையைக் கொடுத்த சிபிச்சக்கரவர்த்தியின் மரபில் வந்ததாகச் சோழர்களைக் காட்டுகிறது இத்தொன்மக் கதை. இக்கதையை மாரோக்கத்து நப்பசலையார், (புறம் 37, 39) தாமப்பலகண்ணனார் ( புறம்43 ) கோவூர்க்கிழார் (புறம் 46) ஆகிய புலவர்கள் இந்த கதையை நினைவுகூர்கின்றனர். இதனால் செம்பியன் என்பது சிபியைக் குறிக்கிறது என்கிற நீலகண்ட சாஸ்த்திரியின் கருத்து உறுதியாகிறது. சிபி வடபுலத்து அரசன் கோப்பெருஞ்சோழன் என்ற சோழ அரசன் வடக்கிருந்து உயிர் துறந்தான். இந்நிகழ்வு கூடச் சோழர்கள் வடபுலத்திலிருந்து வந்தவர் என்கிற முடிவுக்கு நம்மால் வரமுடிகிறது. காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டையாண்ட திரையரும் சோழரும் திருமால் வழிவந்தவர்களாகப் பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பட்டின ப்பாலை ஆகிய நூல்களின் துணை கொண்டு அறியமுடிகிறது. “சோழ அரசனுக்கும் நாக கன்னியான பீலிவளைக்கும் இடையிலான களவுப் புணர்ச்சி கரணத்தில் முடியாததனால் களவாகவே நின்றுவிடுகிறது . இவர்களுக்குப் பிறந்த மகன் திரையன் என்று அழைக்கப்படாமல் இளந்திரையன் என்றே அழக்கப்படுகிறான் . பெரும்பாணாற்றுப்படை , இளந்திரையனை ‘முந்நீர் வண்ணன் பிறங்கடை ' என்று குறிப்பிடுகிறது .
முந்நீர் வண்ணனாகிய சோழனின் பிறங்கடை மரபில் இளந்திரையன் உதித்துள்ளான் என்பது இதன் பொருளாகும் .”(தமிழரைத் தேடி பிரகஸ்பதி ). கடலோடிகளான திரையர் சாகர்கள் எனச் சுட்டப்படுகிறது . அவர்கள் தாயகம் வங்கத் தாழ்நிலம் என்று தோன்றுகிறது. அவர்கள் கடல் வழியாகப் பர்மா, கொச்சின், சீனா, இலங்கை, தென்னிந்தியா ஆகிய இடங்களில் பரவினர். இம்மரபின் அரசருள் ஒருவன் கரிகால் சோழன் சமகாலத்தவனாக, காஞ்சி அல்லது தற்கால காஞ்சிபுரத்தில் திரையன் என்ற பெயருடன் ஆண்டான். இந்து புராணக் கதையின்படி ஆழியில் பள்ளி கொண்ட திருமாலின் வழிவந்தவன் என்று அவன் உரிமை கொண்டாடினான்.
சோழ அரசர்களும் இதே மரபுக்குரியவர்களே. தாம் கதிரவன் மரபினர் என்று அவர்கள் பெருமை கூறிக்கொண்டது இந்த அடிப்படையிலேயே ”(கனகசபை 1903-98). தொண்டை நாட்டையாண்ட திரையரும் சோழரும் ஒரே குடிமரபினர் என்கிற கருத்தைக் கனகசபை , பிரகஸ்பதி ஆகியோரின் கூற்றுகளின் மூலம் உறுதிப்படுகிறது .
பாண்டியர் குடிமரபுப் பெயர்கள் :
கவுரியர் , பஞ்சவர் , ‘ அருநரை உருமின், பெருநரைப் பொறாஅச் செருமாண் பஞ்சவர் ஏறே ; நீயே ,’(புறம் .58.) வழுதி , மீனவர் , மாறர் , செழியன் போன்றவை பாண்டியரின் குடிமரபுப் பெயர்களாகும் . பாண்டியர் என்பதற்கு “பண்டையர் ” எனப் பொருள் கூறுவார் கா .சுப்பிரமணியன் . பாண்டவரோடு ” மஹாபாரதத்தில் பாண்டியர் பற்றிய குறிப்பு காணப்படுகிறது . கவுரியர் கவுரவரோடு தொடர்புடையவர் என்பதை க் காட்டுகிறது . “ குரு மரபிலிருந்து வந்தவர்கள்” பஞ்சவர் என்பதும் கூடப் பஞ்சபாண்டவரையே நினைவூட்டுகிறது. கவுரவரைப் போலப் பாண்டியரும் சந்திரவமிசத்திலிருந்து வந்தவர்கள் என்பதுவும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. “ஏழுமுனிவர்களின் ஏழு மனைவிகளும் ஏழு குழந்தைகளைப் பெற்று ப் பூலோகத்தில் விட்டுவிட வைகைக்கரை கட்டுவதற்கு அந்த ஏழு குழந்தைகளும் ஒத்துழைக்காதபோது அரசன் இருவர் தலைகளை வெட்டி மற்ற ஐ வரை விட்டுவிட்டான். அந்த ஐவரும் தங்களைப் பாண்டிய மரபில் வந்தவர்களாகக் கூறிக் கொண்டனர்” ( பக்த்தவச்சலபாரதி 2002-107 ).
நாடார் குறித்த இந்தத் தொன்மக் கதையில் ஐவர் என்பது பஞ்சவர் என்பதோடு பொருந்துகிறது. தமிழகத்தில புகழ் பெற்ற தெருக் கூத்துக் கதைகளுள் ஒன்று அல்லிராணிக் கதை. பாண்டியன் மகளான அல்லி அர்ஜுனனுக்கு மணமுடித்துத் தரப்படுகிறாள். இக்கதை பாண்டியர்கள் பஞ்ச பாண்டவர்களோடு தொடர்புடையவர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. மீனவன் கொற்கைப் பகுதியில் வலிமையாக இருந்த பரதவரைக் கைபற்றிப் பாண்டியர் தங்களை மீனவர் என்று அழைத்துக் கொண்டனர். தென்னவன் பாண் டியர்கள் தெற்கு பகுதியைக் கைப்பற்றியதால் தென்னவன் எனப் பெயர் பெற்றனர். செழியன் என்பது செழிப்பைக் குறிக்கிறது என்கிறார் கா. சுப்பிரமணியன். மா றன் என்பதற்குக் கூற்றுவன் என்ற பொருளும் உண்டு. பாண்டியன் கூற்றுவனைப் போல போரில் உயிர்களைப் பறி ப்பவன் என்ற பொருளும் காணப்படுகிறது. நன்மாறன், “மாறன் என்ற இப்பெயர் கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முன் பர்மாவை வென்ற “ம்ரான்மர்” என்ற மரபே என்று கூறத்தகும். பாளியில் எழுதப்பட்ட பர்மிய வரலாறுகளில் அந்நாடு மாரம்மதேசம் என்றே அழைக்கப்படுகிறது. ” (1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் பக்க எண் 96)
இதிலிருந்து மாரம தேசத்திலிருந்து மாற் என்ற குடிப் பெயர் பாண்டியருக்குச் சென்றுள்ளதை அறியமுடிகிறது. கவுரியர், பஞ்சவர், மாறன் பாண்டியர் ஆகிய பெயர்களுக்கான மூலங்களைத் தொகுத்துப் பார்த்தால் பாண்டியர்கள் வடக்கத்திய பின்புலத்தை உடையவர்கள் என்பது தெரிகிறது. மேலே காட்டப்பட்டுள்ள தரவுகளிலிருந்து பார்க்கிறபோது அரசர்களின் குடிமரபுப் பெயர்களின் மூலங்கள் பெரும்பாலும் தமிழகத்துக்கு வெளியில் இருப்பதை அறியமுடிகிறது. தமிழகத்தை ஆண்ட மூன்று அரசமரபுகளுள் எது மிகவும் தொன்மையானது என்பது குறித்து விவாதிப்பது மிக இன்றியமையாதது. அதிகாரத்தைக் கைக் கொள்ளும் அனைத்து அரசுகளும் தங்களுக்கென ஒரு தொன்மை அடையாளத்தைக் கற்பிப்பதில் பேரார்வம் காட்டுகின்றன. தம் தம் பரம்பரைக் கதைகளின் வழியாகத்தான் அரச அடையாளங்கள் வீருகொள்ளுகின்றன. ஓரரசர் மற்றோர் அரசரோடு போட்டியிடுவதற்கும் கைப் பற்றப்பட்ட நிலத்தின் மீது உரிமை கொண்டாடுவதற்கும் தொன்மை என்கிற அடையாளம் மிகவும் உதவுகிறது. இலச்சியமயமான அதிகாரவேட்கையும், அதன் மீதான பெருவிருப்பும், நம்பிக்கையும் தொன்மை அடையாளங்களால் உருவாக்கப்பட்டு நிறுவப்படுகின்றன. “ இங்கு மேலும் முன்னோர்களைக் குறித்த புகழ், மரபு உரிமைகள் பற்றிய பழைய நினைவுகள் விளக்கம் தரக்கூடும்.
1. மூத்த விழுத்திணை
2. பெரும்புகழுடைத் தொல்குடி
3. முன்னோரின் பிறங்கடை
4. முதுகுடிப் பிறந்த வேந்தன்
5. பழைய வலியைப் பெற்றோன்
6. தொன்னிலை மரபு
7. தொன்னிலக் கிழமை
8. தொல்லிசை”
(க.கைலாசபதி 245). தொல் அல்லது பழைய என்கிற சொற்கள் ஒவ்வொரு அரச குடிக்கும் ஈடு இணையற்ற பெருமிதத்தை அளித்தது. கடும்போர் புரிவதற்கும், தங்களுடைய உயிரைத் துச்சமென மதிப்பதற்குமான உந்து ஆற்றலாக இச்சொற்கள் விளங்கின. அதனால்தான் புகழ்ச்சிப் பாடலுக்கான வாய்ப்பாட்டமைப்பில் இச்சொற்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. மோகூரை ஆண்ட குறுநில அரசன் ஒருவனுடைய பெயர் பழையன் என அறியமுடிகிறது. “ மோகூர்ப் பழையன் பணியாமையால்” வடுகரையும், கோசரையும் கொண்டு மலைப் பாதையைச் செப்பனிட்டு மவுரியர் மோகூர்ப் பழையனுக்கு எதிராகத் தேரோட்டிப் போர் தொடுத்தனர்(அகம்.151). இந்தப் போரில் பழையன் தோற்றானோ வெற்றியடைந்தானோ தெரியவில்லை. பிற்காலத்தில் பழையன் அவையில் கோசர்கள் பணியாற்றியதாகத் தெரிகிறது. பழையன் என்பது குடிப் பெருமையை உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.
பின்னாளில் சேரன் செங்குட்டுவன் பழையனின் காவல் மரமான வேப்பமரத்தை வெட்டிப் பழையனைக் கொன்றதாக பதிற்றுப்பத்து வழி அறியமுடிகிறது. இந்நிகழ்வின் மூலம் வலிமையான பழையன் சேர அரசுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தான் என்பதை அறிய முடிகிறது. தங்களுடைய குடிமரபுகளை நிலை நிறுத்திக் கொள்ளப் பழம்பெருமைகளைப் பேசுவதில் அரசர்களுக்கிடையில் போட்டிகள் இருந்திருக்கவேண்டும். அல்லது முன்பே சொன்னது போல நிலத்தின் மீதான உரிமைகளை நிலைநிறுத்திக் கொள்ளுவற்குப் பழம் பெருமை உதவுகிறது என்கிற அரசர்களின் விருப்பத்திற்கேற்பப் புலவர்கள் குடிமரபுகளின் பழம் பெருமைகளைப் புகழுரையாகப் புனைகின்றனர். பழந்தமிழகத்தைப் பொருத்தவரை சேர, சோழ, பாண்டிய அரசமரபுகளே நீண்டகாலம் பெரும் புகழோடு இருந்திருக்கின்றன. ‘ தமிழ்காக்கும் மூவர்’(அகம்131)‘வன்புகழ்மூவர்’ (தொல் பொருள்) போன்ற வரிகள் இம்மூவரைச் சுட்டுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அசோகன் கல்வெட்டு “ சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர” என்று இம்மூவரைக் குறிப்பிடுகிறது. இதனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே மூன்று அரசமரபுகள் இருந்திருக்கின்றன.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டிலும் இந்த அரசர்கள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன.” ஆதன், இரும்பொறை, பெருங்கடுங்கோ, இளங்கடுங்கோ” ஆகிய சேரர்களின் குடிமரபுப் பெயர்கள் புகலூர்க் கல்வெட்டில் காணப்படுகின்றன. இதன் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்கிறார் மையிலை சீனி. அடுத்தநிலையில் 2” நெடுஞ்செழியன், கடலன், பணவன், வழுதி” ஆகிய பாண்டியரின் குடிமரபுப் பெயர்கள் மாங்குளம் கல்வெட்டில் காணப்படுகின்றன. இதில் கூறப்படுகிற நெடுஞ்செழியன் மதுரைக்காஞ்சி பாட்டுடைத் தலைவனான தலையாலங்காணத்து நெடுஞ்செழியனுக்கும் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியனுக்கும் முற்பட்டவன். இக்கல்வெட்டு கி.மு. மூன்று அல்லது கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார் மையிலை சீனி. இவ்விரு சாசனங்களிலும் சேர,பாண்டிய அரச மரபுகளின் பரம்பரைப் பெயர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் தமிழகம் வந்த கிரேக்கப் பயணிகளான பிளினி, தாலமி ஆகியோருடைய குறிப்புகளில் தொண்டி, முசிறி, கொற்கை, புகார் ஆகிய துறைமுகப் பட்டிணங்கள் குறிப்பிடப்படுகின்றன.
சேரநாட்டுத் துறைமுகப் பட்டிணங்களான “தொண்டியைத் திண்டிஸ் என்றும் , முசிறியை முஸிரிஸ் என்றும் , பொற்காட்டைப் பகரி என்றும் , குமரியைக் கொமாரி என்றும் ரோமர்கள் குறிப்பிட்டுள்ளனர் . அவற்றைப் போலவே , தமிழகத்தின் கீழைக்கடற்கரைத் துறைமுகங்களான கொற்கையைக் கொல்சாய் என்றும் , நாகப்பட்டினத்தை நிகாமா என்றும் , காவிரிப்பூம்பட்டினத்தைக் கமரா என்றும் , புதுச்சேரியைப் பொதுகே என்றும் , மரக்காணத்தைச் சோபட்மா என்றும் , மசூலிப்பட்டினத்தை மசோலியா என்றும் அந்நூல்கள் குறிப்பிடுகின்றன .”(கே.கே. பிள்ளை தமிழக் வரலாறும் மக்கள் பண்பாடும் ப.)” தமிழக அரசர்கள் யவனர்களோடும், பிற மேற்குலக நாடுகளோடும் வணிகம் செய்ததைத் தொகைநூல்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில்தான் தமிழகத்தில் பேரரசுகள் உருவாயின என்பதை ரோமாபுரி நாணயங்களின் மூலம் அறியமுடிகிறது.”
1 Iravatham Mahadevan, "Tamil Brahmi Inscriptions of the Sangam Age," Proceedings of the Second International Conference Seminar of Tamil Studies (Madras, 1971), 1:94-95.பழந்தமிழக அரசர்கள் மேற்கு உலக நாடுகளோடு வணிகத் தொடர்பினை வைத்திருந்தனர் என்பதை இச்சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
கி.மு.நான்காம் நூற்றாண்டில் சந்திரகுப்த மவுரியரின் அரசவையிலிருந்த மெகஸ்தனிசு கிரேக்கத்திலிருந்து வந்து வடநாட்டையாண்ட ஹெர்க்லஸ் என்ற அரசன் தன்னுடைய மகளுக்குப் பரிசாகத் தரப்பட்ட பகுதி பாண்டியநாடு எனச் சுட்டப்படுகிறது. கண்ணகி மதுராபதி தெய்வத்திடம் முறையிடுவதைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. பெருங்கதையில் வரும் “கள்ளமர்தேவி” என்ற தொடரைச் சான்றுகாட்டி முதன் முதலில் மதுரையை ஆண்டது ஓர் அரசி என்பதைச் சுட்டுகிறார் ந.ராமச்சந்திரன். மதுரை மீனாட்சி என்பதுவும்கூட இதனுடைய தொல் உருவகமாக இருக்கலாம். இத்தரவுகளிலிருந்து நாம் தொகுத்துக் கொள்ளவேண்டிய கருத்தாவது கி.மு. நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகே வலுவான பாண்டிய அரசமரபு தோன்றியிருக்கவேண்டும் என்பதே. “ திராவிடர்கள் பஞ்சாபிலிருந்து வந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டால் அவர்கள் மேற்குக் கடற்கரையில்தான் குடியேறியிருக்கவேண்டும்” (தச்சிணாமூர்த்தி, தமிழர் நாகரிகமும் பண்பாடும் ப.12) பிறகு அங்கிருந்தே பரவியிருக்கவேண்டும்.
இக்கருத்தினை ஏற்றுக் கொள்ளுவதில் இரண்டுவிதமான தடைகள் உண்டு. ஒன்று பஞ்சாப் மலைநிலம் அல்ல. சேர்ர்களுக்கு வில்லவர் என்ற ஒரு பெயர் இருக்கிறது. இது அவர்கள் வேட்டுவக் குடியிலிருந்து தோன்றினார்கள் என்பதைக் காட்டுகிறது.தொடக்கக் காலத்தில் சிறந்த வில்லாளிகளே குடிகளின் தலைவர்களாயினர். பின்னாளில் இவர்களே அரசத் தலைவர்களாக உயர்ந்தனர். இந்தப் படிமலர்ச்சியின் படி சேரர்கள் தமிழகத்தில் தோன்றினர் என்பது பெறப்படுகிறது. “போந்தை வேம்பே” எனத் தொல்காப்பியரும் சேரரை முதன்மைப்படுத்துகிறார்.சேரன் என்பதற்குச் “சிறிய குட்டையான (தாழ்வான) வயல்களை உடைய தலைவன்.” என்றும் சேரமான்களின் தலைவன் என்றும் பொருள்படுகிறது. சேரமான் என்பது 39 குலங்களை உடைய பழங்குடிகளைக் குறிக்கும் ஒரு பொதுச் சொல்லாகும். சேர என்பதற்குச் செரு என்ற பொருள் உள்ளது. ( தர்ஸ்ட்டன் தென்னிந்தியாவில் குலங்களும் குடிகளும்தொகுதி 2. ப.) செருமான் பழங்குடிகள் இன்றும் கேரளப் பகுதியில் காணப்படுகின்றனர். செருமான்களின் தலைவர்களே சேரமான்கள் எனப்பட்டனர். மட்டுமல்லாமல் சேரர் குறித்த இலக்கியச் சான்றுகளும் பல கிடைக்கின்றன. புறநானூற்றில் முதல் செய்யுள் சேரரைப் பற்றியது.
புறநானூற்றில் ’27 செய்யுள்களில் 18. சேர அரசர்கள் குறிப்பிடப்படுகின்றனர்.’பதிற்றுப்பத்தில் உள்ள 80 செய்யுள்கள் 8 சேர அரசர்களின் வரலாற்றைப் புகழ்ந்து பேசுகின்றன. யானைகட்சேரல் மாந்தரல் இரும்பொறையால் தொகுப்பிக்கப்பட்ட ஐங்குறுநூற்றில் சேரமரபின் முன்னோர்களான ஆதனும் அவினியும் வாழ்த்தப்படுகின்றனர். ‘வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க’(ஐங்-வேட்கை பத்து முதல் பத்துப் பாக்கள்) கி.மு. பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த சாலமன் அரசனுக்குச் சேரநாட்டிலிருந்து வணிகம் மேற்கொள்ளப்பட்டது என்கிறார் மா.ராசமாணிக்கனார். “22 அரசரின் வணிகக் கப்பல்கள், ஈராமின் கப்பல்களோடு சென்று கடல் வாணிபம் செய்தன. வணிகக் கப்பல்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, பொன், வெள்ளியையும் தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றையும் கொண்டு வந்தன. “ (பழைய ஏற்பாடு பகுதி11-அதிகாரம்9-21, 22.) மேலும் சாலமன் அரசன் யானைகளின் தந்தத்தால் அரியணை செய்து கொண்டதாகத் தெரிகிறது.” 18 அரசர் தந்தத்தினால் பெரியதோர் அரியணை செய்து அதைப் பசும்பொன்னால் வேய்ந்தார்.” (மேலது) இது சேரநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தந்தம் எனத் துணியலாம்.
இறுதியாகச் சேர அரசரின் பழைமையை உணரக் கொடுமணல் அகழாய்வைக் குறிப்பிடலாம். ஈரோட்டுக்கு அருகில் கொடுமணலில் பண்டைய இரும்புத் தொழில்சாலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது சேர நாட்டுக்குட்பட்ட பகுதியாகும். இது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். இங்குத் தரப்பட்டுள்ள தரவுகளிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே சேரர்கள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர் என்று முடிவு செய்யலாம்.சேரமரபுக்குரிய மூலத் தொன்மங்கள் சோழர், பாண்டியருக்கு இருப்பதைப் போல வெளிநாட்டைச் சார்ந்ததாகவோ! அல்லது வடக்கத்திய மரபைச் சார்ந்த்தாகவோ! இல்லை. சேரர்கள் பழங்குடித் தன்மையிலான இனக்குழு மரபிலிருந்து தோன்றியவர்கள் என்பதற்குச் சான்றுகள் பல உள.
‘ நாடன் என்கோ? ஊரன் என்கோ? பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ?’ (புறம்49) கோ கோதைமார்பன் என்பதில் உள்ள கோ இனக் குழு நிலையை உறுதி செய்கிறது.
- மு.ரமேஷ்