மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ஆனால் `உச்சிப்பிள்ளையார் கோயிலில் அல்ல, மலையின் உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவின் சர்வே கல் பகுதியில்தான் விளக்கு ஏற்ற வேண்டும், அந்த சர்வே கல்தான் தீபத்தூண்’ என இந்து அமைப்புகள் கலவரத்திற்கு வித்திட்டு வருகின்றன. முந்தைய திராவிட மாடல் அரசு இவ்விவகாரத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை வெளிக்காட்டி, வழக்கம்போல உச்சிப்பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்படும் என்பதை உறுதி செய்தது. நீதிமன்றப் படியேறிப் பார்த்தும், சங்கிகளின் கலவர முயற்சி நடக்கவில்லை. மலையை முற்றுகையிட்டு கலவரம் செய்ய காவிகள் முயற்சித்த நொடியில் கூட, We are not allowing..we will face the consequences... என்று காவல்துறையை வைத்து தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது அன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்தச் சூழலில், தமிழ்நாட்டில் ஆட்சி மாறிவிட்ட நிலையில், தற்போதைய புதிய அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறது உயர்நீதிமன்றக் கிளை. தமிழக வெற்றிக்கழகத்தைப் பொறுத்தவரையில் கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை, இவ்விவகாரத்தில் துணிச்சலாக எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. மாறாக, இது தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் செயல் என்று அறியாமல் பாஜகவும் திமுகவும் திட்டமிட்டு செய்யும் சண்டை என்பதாக கருத்துக்களை வெளிப்படுத்தி வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்துவிட்ட பின்பு, இத்தகைய பதிலை ஒரு அரசாக சொல்ல முடியாது என்ற நிலையில் தெளிவான விளக்கத்தை மக்கள் எதிர்பார்த்தனர்.

தவம் – தமிழ் தாசன் ஆகியோர் இணைந்து திருப்பரங்குன்றம் ஃபைல்ஸ் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். திமுக ஆட்சிக்காலத்திலேயே வெளி வந்துவிட்ட இந்த ஆவணப்படம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை அலுவலகத்திலும் திரையிடப்பட்டது. தற்போது ஆட்சி மாறிவிட்ட சூழலில், புதுக்கோட்டையில் இந்த ஆவணப்படம் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. மேலிட உத்தரவு என்று காவல்துறை கூறியிருக்கிறது. மேலிடம் என்றால் அது யார்? தமிழ்நாடு அரசா அல்லது ஒன்றிய அரசா என தெளிவுபடுத்தவில்லை. இந்தத் திரையிடலை எப்படித் தடுக்கலாம் என கழகப் பொதுச்செயலாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது பதிவு சென்னை திவிக முகநூல் பக்கத்தில் முடக்கப்பட்டது.  

அதுவும் அரசுத்தரப்பில் இருந்து முறையிடப்பட்டதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உறுதியோடு செயல்படுத்திக் காட்டிய மதுரை காவல் ஆணையர் லோகநாதன், தேர்தலுக்குப் பிறகு 25 நாட்களுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, தற்போது தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகைய போக்குகளால் தமிழ்நாடு அரசு எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகிறது என்ற குழப்பம் நிலவியது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், மின்சாரத்துறை அமைச்சருமான சி.டி.ஆர். நிர்மல் குமார், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசின் நடைமுறையே தொடரும் என விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தெளிவாக கூறியிருக்கிறோம் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள், இரண்டு வருடத்திற்கு முன்பாக எந்தச் சூழல் இருந்ததோ, அதையேதான் தொடர வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. எந்த மதவாத சக்திகளும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100% அனுமதிக்க மாட்டோம்” என தெளிவுபடுத்தியுள்ளார். இவர் முன்பு பாஜகவில் இருந்தபோது மிக மோசமான மதவாத கருத்துக்களை தனது முகநூல் பக்கத்தில் வெளிப்படுத்தியவர். ஆனால் இன்று தனது போக்கில் இருந்து மாறுபட்டு, தவெகவின் நிலைப்பாடாக கூறியிருக்கும் கருத்துக்கள் வரவேற்கத்தக்கவையாகவே உள்ளன. அதேசமயம் பத்திரிகையாளர்களிடம் அளித்த இந்த உறுதியை, ஜூன் 22 -ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் தெளிவுபடுத்த வேண்டும். முந்தைய திமுக ஆட்சியைப்போல எவ்வித சமரசமும் இல்லாமல் இவ்விவகாரத்தில் தவெக அரசும் உறுதிகாட்ட வேண்டும். ஒவ்வொரு விவகாரத்திலும் நெருக்கடிகள் முற்றிய பிறகு தனது கருத்தை வெளிப்படுத்துகிற போக்கில் இருந்து வெளி வந்து, எந்தவொரு சிக்கலிலும் தனது கொள்கைப்பார்வையை தெளிவோடு தயக்கமின்றி வெளிப்படுத்த வேண்டும்.

விடுதலை இராசேந்திரன்