உங்கள் மனைவிக்கு சமையலறையில் நீங்கள் உதவி செய்வீர்களா? என்ற கேள்விக்கு பெரும்பாலான ஆண்கள் ஆமாம் என்று தான் பதில் கூறுகிறார்கள். இப்படி கூறுகிறவர்கள் மிகவும் முற்போக்கானவர்கள் மனைவியை மிகவும் நேசிப்பவர்கள் என்று சமூகம் முடிவு செய்கிறது. சமூக ஊடகங்களில் ஒரு பிரபலமான இணையர்களிடம் பேட்டி எடுத்த போது இந்த பதில் கணவரிடம் இருந்து வந்தது. ஏராளமான லைக்குகளும் சேரும் குவிந்தன.

இதில் அடங்கியுள்ள பாகுபாடு உணரப்படுவது இல்லை! உதவி என்ற சொல் எதைக் குறிக்கிறது? சமையலறை பொறுப்பை ஏற்க வேண்டியது பெண்; அவர் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கு கணவர் உதவுகிறார். இது கணவருக்கான பொறுப்பு அல்ல! என்பதே உதவி என்று சொல்லுக்கான உண்மையான உள்ளடக்கம்.

சமையல் பெண்களுக்கான பொறுப்பு என்று காலம் காலமாக மூளையில் திணிக்கப்பட்ட சிந்தனையின் தொடர்ச்சியாகவே உதவி என்ற சொல் வருகிறது. இங்கே உதவி என்பது ஒரு சொல் அல்ல; இது கருத்தியல். உதவி என்ற சொல்லுக்குள் மறைந்திருக்கும் அரசியலை கவலையுடன் பரிசீலிக்க வேண்டும். எனது மனைவிக்கு உதவுகிறேன் என்ற வார்த்தை கணவருக்கு பெருமையின் மகுடத்தை சூட்டுகிறது. இப்படி ஒரு கேள்வியை கணவரை அல்லது ஆண்களை மட்டும் நோக்கி ஏன் கேட்க வேண்டும்? மனைவியை நோக்கி கேட்கப்படும் பல கேள்விகள் எப்படி வருகின்றன தெரியுமா? இந்தக் கேள்விகளுக்கு நீண்ட பட்டியலிட முடியும். இந்தக் கேள்விகள் இயல்பானவைதான் என்று கடந்து செல்ல முடியாது. சமூகத்தில் நிலவி வரும் பாகுபாடுகளின் வெளிப்பாடு இவை.

சமூக மாற்றத்தில் பேச்சுகளும்; உரையாடல்களும்; சொற்களும்; மொழியும் முக்கிய பங்களிக்கின்றன. பெண்களிடம் பாகுபாடு காட்ட வேண்டும் என்று ஏதேனும் சட்டம் இருக்கிறதா? அவர்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? அவர்களை அடக்கி ஆள வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? அப்படி எந்தச் சட்டமும் இல்லை. இந்த அடிப்படை உரிமையைக் கூட சமூகம் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் மிகப்பெரும் அவலம்! ஒவ்வொரு குடும்பத்திலும் இயல்பாக நிகழ்ந்து கொண்டிருக்கும் உரையாடல்களை கவனியுங்கள்.

8 மணி நேரம் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் பெண்ணிடம் கேட்கப்படும் கேள்வி. `இரவில் என்ன டிபன் செய்ய முடிவு செய்து இருக்கிறாய்?’ ஆனால் ஒரு ஆண் அலுவலகப் பணியை முடித்துவிட்டு வரும்போது கேட்கப்படும் கேள்வி என்ன தெரியுமா? `நீங்கள் மிகவும் சோர்ந்து போய் இருக்கிறீர்கள்’. இங்கே ஆண்களின் சோர்வு கவலையோடு கவனம் பெறுகிறது. பெண்களுக்கான இரவு சமையல் அவர்களுக்கான கூடுதல் சுமையாக்கப்படுகிறது.

அப்பாக்களை சமூகம் எப்படி கொண்டாடுகிறது பாருங்கள்! குழந்தையைப் பேணி பெற்று வளர்க்கும் முழு பொறுப்பையும் ஏற்பவர் அம்மா; அதற்காக சமூகம் அவரை கைதட்டி பாராட்டுகிறதா? ஆனால் அப்பா என்ன செய்கிறார்? உடைமாற்றி விடுகிறார்; சமைத்த உணவை டப்பாக்களில் அடைக்கிறார்; `இப்போதே சமையலை கற்றுக்கொள் திருமணத்திற்கு பிறகு இதுதான் உனக்கு அவசியம்’ இந்த உரையாடல் ஒவ்வொரு குடும்பங்களிலும் பெண்ணை நோக்கி நடக்கிறது.

சமையல் என்ற கலை வாழ்நாள் தேவையாக இருக்கும் பொழுது அது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொல்லப்பட வேண்டும் ஆனால் சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் தான் அது சொல்லப்படுகிறது. பெற்றோர், ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்பார். குடும்பத்தில் யாருக்கு அதிகாரம்? யார் ஓய்வெடுக்க வேண்டும்? யார் இறங்கிப் போக வேண்டும்? என்ற சிந்தனைகள் குழந்தைகளிடம் பதிய வைக்கப்படுகின்றன.

அறிவுரை; நகைச்சுவை; கரிசனம் வழியாகவே பாகுபாடுகள் திணிக்கப்படுகின்றன. பாகுபாடுகள் வெளிச்சப்படுத்திக் கொள்ளாமல் முகமூடி அணிந்து வருகின்றன இது மிகவும் ஆபத்தானது. மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் வார்த்தைகள் வழியாக இளைய தலைமுறை இடம் நாம் பாகுபாடுகளை கடத்திக் கொண்டிருக்கிறோம்.

பெண்களிடம் எதை கட்டாயம் எதிர்பார்க்க வேண்டும்; ஆண்களிடம் எதிர்ப்பு காட்டாமல் எந்த வகையில் பணிந்து போக வேண்டும்;

சமூகத்தில் இயல்பாக திணிக்கப்படும் இந்த சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன் ('ஆங்கில இந்து’ இதழில் வெளிவந்த கட்டுரை தழுவல்)