போராட்டத்தில் குதித்த இளைஞர்கள்

கடந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 5,432 மையங்களில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் 2026 தேர்வை எழுதியிருந்தனர். பின்னர் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளால் மே-12 அன்று தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. மறுபுறம், சிபிஎஸ்சி அறிமுகப்படுத்திய புதிய On-Screen Marking (OSM) மதிப்பீட்டு முறையில் பல குறைபாடுகள் இருப்பதாக மாணவர்கள் சுட்டிக்காட்டியதால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.students against bjp and neetஅரசு நீட் மறுதேர்வுக்கு உத்தரவிட்டதோடு சிபிஎஸ்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்திருந்தாலும், அரசியல் பொறுப்பு யாரிடமும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த சர்ச்சைகளுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென்று காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டது.

இன்ஸ்டாகிராமில் 2.2 கோடிப்பேர் இந்த காக்ரோச் ஜனதா கட்சியை பின் தொடருகிறார்கள். வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் போல என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசியது இளைஞர்கள் மத்தியில் மாபெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, அது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக காக்ரோச் ஜனதா கட்சியாக உருவெடுத்து, அவர்கள் முதல் போராட்டக் களத்தையும் அமைத்திருக்கிறார்கள். 2023-ஆம் ஆண்டு மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்குப் பிறகு ஜந்தர் மந்தரில் மீண்டும் ஒரு போராட்டக் களம் உருவாகியிருக்கிறது. ஜூன் 6 அன்று நடைபெற்ற இப்போராட்டத்தில் நீட் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியுள்ள காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே சமூக ஊடகங்களில் விடுத்த அழைப்பை ஏற்று, தன்னெழுச்சியாக பல இளைஞர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சில இளைஞர்கள் ஊடகங்களுக்கு அளித்த கருத்துக்கள், இளைஞர்கள் மத்தியில் ஒன்றிய அரசுக்கு எதிரான மனநிலை எவ்வளவு வீரியமாக உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

சமிக்சா, கல்லூரி மாணவி: “என் பெற்றோர் என்னை இங்கே வர வேண்டாம் என்றார்கள். நான் என் உரிமைக்காகப் போராடவில்லை என்றால் வேறு யார் போராடுவார்கள்? என் தங்கை தற்போது 12-ஆம் வகுப்பில் படிக்கிறாள்; அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத இருக்கிறாள். வினாத்தாள் கசிவுகள் முதல் மதிப்பீட்டு முறைகளைச் சரியாக அமல்படுத்தத் தவறுவது வரை கல்வி அமைப்பில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அரசியல் பொறுப்பேற்பு எதுவும் இல்லை,” என்றார்.

ஜஸ்வந்த் வழக்கறிஞர்: “நாம் ஒரு தேர்தல் சர்வாதிகார நாட்டில் வாழ்கிறோம். அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடம் கோபம் உள்ளது. எங்களை தேசவிரோதிகள், நகர்ப்புற நக்சல்கள் என்று அழைத்தால், போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் போராட்டம் இளைஞர்களின் விரக்தியின் வெளிப்பாடு. இந்திய தலைமை நீதிபதியின் அந்த வார்த்தைகள்தான் முதலில் ஒரு நையாண்டியை உருவாக்கின. ஆனால் அது இப்போது ஒரு இயக்கமாக மாறியுள்ளது; தேசிய அளவில் பரவ வேண்டும்.”

சோமில்ஷியோரன், மருத்துவர்: இந்தியா பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. ஆனால் எங்களை ‘கரப்பான் பூச்சிகள்’ என்று அழைப்பது அவமானப்படுத்துவதாகும். எங்களுக்கு ஆதரவளிக்க முடியாவிட்டாலும், இழிவுபடுத்த வேண்டாம். அமைப்பைச் சரியாக நடத்த முடியாவிட்டால், அவர்கள் ராஜினாமா செய்யத்தான் வேண்டும்.”

ராபின் மகேஷ்வரி, மருத்துவர்: “இந்த தலைமுறையினர் கேலிக்குள்ளாக்கப்படுகிறார்கள். போராட்டம் நடத்துவதற்கான இந்த இடமே அரசாங்கத்தை பதறச் செய்கிறது. அரசாங்கத்தில் பரிவு மற்றும் இரக்கம் இல்லாதபோது, அரசியல் தொடர்புகளை ஆராய்வதை விட மக்களிடமிருந்து உருவாகும் இந்த அங்கீகரிக்கப்படாத எதிர்ப்பை நாம் பார்க்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை இளைஞர்களின் உணர்வுகள்தான் நிர்ணயிக்கின்றன. இந்த அமைப்பு எதிர்காலத்தில் வேறு வடிவம் எடுக்கலாம். ஆனால் அது பிற அரசியல் கட்சிகளையும் தங்களைச் சீரமைக்கத் தூண்டும்.”

- விடுதலை இராசேந்திரன்