கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கு வெற்றி!
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் கெம்பனூர் கிராமத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த பேருந்து தீண்டாமையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட்டமாக நடத்தாமல் கிராமங்களில் நிலவும் தீண்டாமை அவலங்களின் பட்டியலை தயாரிக்கும் செயல்திட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் இறங்கியது. அப்போதுதான் இந்த பேருந்துத் தீண்டாமை கவனத்திற்கு வந்தது.
பேருந்து நிற்கும் இறுதி முனையமாக இந்த ஊர் இருந்த காரணத்தினால் பட்டியல் இனப் பிரிவினர் பேருந்துகளில் உட்கார்ந்து விடுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக கட்சிகளைக் கடந்து ஆதிக்க ஜாதியினர் கைகோர்த்துக் கொண்டு பேருந்து ஊருக்கு வராமல் தடுப்பதில் ஜாதி வெறியுடன் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கவனத்தில் கொண்டு வந்தும் போக்குவரத்துத் துறை அலட்சியம் செய்தது.
இந்தக் கோரிக்கைக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கழகத் தோழர்கள் திரண்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தியும் நிர்வாகம் ஜாதி வெறியர்களுக்கு பணிந்து நின்றது. தற்போது சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வன்னி அரசு அவர்களின் கவனத்திற்கு இந்த தீண்டாமை பிரச்சனை குறித்து தோழர்கள் கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அழுத்தம் தந்த பிறகும் நிர்வாகம் சில நாட்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து மீண்டும் கழகத் தோழர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்த பிறகு பேருந்து தீண்டாமை முடிவுக்கு வந்திருக்கிறது. கழக கோவை மாநகரத் தலைவர் நிர்மல் குமார் இந்த ஒற்றை கோரிக்கைக்காகவே தொடர்ந்து பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தார். இப்பிரச்சினையில் கவலையோடு தலையிட்டு செயல்பட்ட அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு கழகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கலைஞர் ஆட்சிக் காலத்தில் பட்டியல் இனத்தின் தலைவர் போராளி சுந்தரலிங்கம் பெயரை தென் மாவட்டங்களில் போக்குவரத்துக் கழகத்திற்கு சூட்டிய போது அந்தப் பெயர் சூட்டிய பேருந்துகளை தங்கள் ஊருக்கு வரக்கூடாது என்று ஜாதி வெறியர்கள் தடுத்து நிறுத்தி பெரும் கலவரத்தில் இறங்கினர். அப்போது அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கலைஞர் கூட்டி அனைத்து மாவட்டப் பேருந்துகளுக்கும் சூட்டப்பட்ட அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் முடிவை எடுத்ததோடு பெரியார் சமத்துவபுரம் திட்டத்தை அறிவித்தார். இது ஊர் சேரி பாகுபாட்டை ஒழிக்கும் ஒரு முன்னோடித் திட்டம். இந்தியாவில் இதுபோன்று ஒரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
பெரியார் திராவிடர் கழகமாக “தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் உடைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அகமண முறை எதிர்ப்பு, ஜாதி வாழ்வியல் எதிர்ப்பு” என்று தமிழ்நாடு முழுதும் பரப்புரை இயக்கங்களை, போராட்டங்களை கடும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு நடத்தியது வரலாறு. திராவிடர் விடுதலைக்கழகம் “சுயஜாதிப்பற்றோடு ஜாதி எதிர்ப்பு பேசுவது ஜாதி எதிர்ப்பல்ல!” என்ற கருத்தில் உறுதியோடு நிற்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இப்போது இந்தப் பேருந்து தீண்டாமையை முடிவிற்கு கொண்டு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த லட்சிய பயணத்தை நோக்கி இறுதி வரை மேலும் வேகத்தோடு களத்தில் கழகம் போராடும்.
அரசியல் அதிகாரம் மட்டுமே சமூக மாற்றத்தை கொண்டு வராது என்ற பெரியார் கொள்கை வெளிச்சம் பெரியார் இயக்கங்களை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. பெரியார் இயக்கமான சமுதாய இயக்கம் தொடர்ந்து நடத்திய போராட்டங்கள் அழுத்தத்தின் காரணமாகவே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. உயர் ஜாதிப்பற்றுடன் வெளியிடும் அவதூறு அறிக்கைகளைப் புறந்தள்ளுவோம்.
- விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர்
தன் கவனத்துக்கு வந்தவுடன் அங்கு பேருந்து செல்ல உத்தரவிட்டு - அடுத்த சில நாட்களிலேயே 06.06.26 அன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது. அதை வெற்றிகரமாக செயல்படுத்திய மாண்புமிகு சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களின் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும். கத்தியின்றி - இரத்தமின்றி பெரியாரின் வழி நின்று போராடிய திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு கிடைத்தது வெற்றி; இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியாக இருந்த "திராவிடர் விடுதலைக் கழகம்" இதற்கான தீர்வை நோக்கி பல முனைகளில் ஓடியது. கழகத்தின் தொடர் போராட்டத்திற்கான பலன் 06.06.2026 இன்று கிடைத்திருக்கிறது. "பலன்" என்பதையும் விட கெம்பனூர் அண்ணா நகர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைத்த "விடுதலை" என்றே சொல்லலாம். இதன் மூலம் கெம்பனூர் ஆதிக்க ஜாதிவெறி அரசியல் சக்திகளுக்கு சவுக்கடி கிடைத்திருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஜாதி ஒழிப்பு பணியில் இது ஒரு மைல்கல்.
பேருந்து அண்ணாநகர் சென்று வந்ததை ஒட்டி கழகத் தோழர்கள் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கும், எண்-21, பேருந்தில் பயணித்தவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் பேருந்தில் ஜாதி எதிர்ப்பு பரப்புரையை, மேற்கொண்டனர். தோழர்கள் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார் வெங்கட், சிவராசு, கிருஷ்ணன், சதீஷ், சத்தியமூர்த்தி தரணி, நவீன் கதிரவன், ஸ்டாலின்ராஜா, சௌந்தர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.