ஆங்கிலம் வழித் தமிழில்: எஸ்.நாகராஜன் 

அந்தச் சிறிய காம்பவுண்டுக்குள் மூலையில் இருந்தச் சின்னக்குடிசை பெரிதும் இடிந்துபோயிருந்தது. குடிசை யின் ஒற்றைக்கதவு வழியே வெளியேறிக்கொண்டிருந்த அடர்ந்த கரும்புகை நடுவே தலைவிரிகோலமாய் ஒல்லி யான ஒரு இளம்பெண் அடுப்பின் புகையை ஊதிஊதி நெருப்பை எரியவைப்பதற்கு முயற்சி செய்துகொண்டிருந் தாள். குடிசைக்கு வெளியே பெயர்ந்துபோன திண்ணையில் மரவள்ளிக் கிழங்கு காய்ந்து கொண்டிருந்தது. ஆறுவயதுச் சிறுவனொருவன் கிழங்குத்துண்டுகளைக் கொறித்த வண் ணம் நின்றுகொண்டிருந்தான். அவன் வீசி எறியும் கிழங்குத் துண்டுகளை கவ்விப் பிடிப்பதற்கு ஒரு நாய் வாலை ஆட்டிக்கொண்டு ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தது. 

குடிசையின் மூலையில் குவித்துவைக்கப்பட்டிருந்த அழுக்குத் துணிமூட்டையினுள் ஏதோ அசைவது தெரிந்தது. பிறகு தீனமான குரல் ஒன்று கேட்டது. அடுப்பில் நெருப்பைப் பற்றவைக்கப் போராடிக் கொண்டிருந்த இளம் பெண் திரும்பிப் பார்த்து என்னம்மா விஷயம்? என்று கேட்டாள். தீக்குச்சி போன்ற இரண்டுகைகள் துணி மூட்டைக்கு வெளியே தெரிந்தன. பிறகு எலும்பும் தோலு மாய் கிடந்த ஒரு உருவத்தைக் காண முடிந்தது. வறுமையும் நோயும் இயலாமையும் அந்தக்குடிசையில் நிரம்பி வழிந்தன. 

இங்க வா, பாத்துமா, என்று தளர்ச்சி நிறைந்த குரலில் அந்தப் பெண் அழைத்தாள். மகள் அவளருகே சென்றாள். சோறு பொங்கப் போகுது ஒனக்குத் தாகமா இருக்கா? இல்ல மகளே ஒக்காரு, ஓங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். பாத்துமா அவளருகே சென்று அமர்ந்தாள். கிழவி கண்ணீர் வழிய நடுங்கும் குரலில் பேசினாள். 

ஓங்கிட்ட இதக் கேக்கிறது சரியான்னு தெரியல. இது நடக்குமான்னும் தெரியல. ஆனா, இது எனக்கு வேணும். இது கெடக்கலேன்னா, பூமிக்கு பாரமா நா ஏன் உசிரோட இருக்கணும்? பாத்துமா அன்புடன் சொன்னாள். என்னான்னு சொல்லு, என்னால செய்ய முடியுமான்னு பாக்குறேன் 

இல்லத்தில் இருக்கிற பெரிய நம்பூதிரிய ஒனக்குத் தெரியு மில்ல, சாகுறதுக்குள்ள நா அவரப் பாக்கணும். பாத்துமா வுக்குத் தூக்கி வாரிப்போட்டது. பெரிய நம்பூதிரியா? திருமேனி நம்ம குடிசைக்கு வருவாருன்னா நெனக்கிற 

இது என்னோட கடைசி ஆசை மகளே. நீ கெஞ்சிக்கெதறிக் கேட்டேயின்னா, நம்பூதிரிகளுக்கு மனது இளகிப்போயி டும். நம்பூதிரிகள் எத்தனை கல்மனசுக்காரங்க. ஏழைகளை எவ்வளவு கொடுமப்படுத்துவாங்கன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீ போயி, முயற்சி பண்ணனும். 

பாத்துமா அதிர்ச்சி அடைந்திருந்தாள். மகாராஜாவின் மாளிகையைவிட, நம்பூதிரியின் இல்லம் அவளுக்கு அதிக மாய் அச்சமூட்டியது. அங்கே போய் அவள் என்ன சொல்ல முடியும்? இருந்தாலும், இது அவள் தாயின் கடைசி ஆசை. 

சரி, நா போறேன், ஒனக்கு கஞ்சி தரட்டுமா? 

பையன் குடுப்பான் நீ சீக்கிரம் போ, நம்பூதிரி இங்க வருவாரான்னு எனக்குத் தெரியணும். எத்தன வருஷமா நா இதுக்குத் தவியா தவிச்சுப் போயி காத்துக்கிட்டிருக்கேன். 

பத்துமைல் தொலைவிலிருந்த இல்லத்துக்கு பாத்துமா கிளம்பிப்போனாள். ஒருமுறை நெல் வாங்குவதற்கு அங்கு சென்றிருக்கிறாள். எனவே வழி லேசாகத் தெரிந்திருந்தது உயரமான கோட்டைச்சுவர் முன் போய் நின்றாள். அதற்கப் பால் சில ஜாதிக்காரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என் பது அவளுக்குத் தெரியும். எனவே வெளியே காத்திருந்தாள் உள்ளே பெருத்த இரைச்சலாயிருந்தது. போர்காலத்துக் கோட்டை மாதிரிக் காட்சியளிக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். உயிருள்ள ஒரு ஜீவனைக்கூட அவளால் காண முடியவில்லை. பொழுது சென்றதும் இரண்டு நாயர் பெண் கள் பாத்திரங்கள் நிறைய உணவை எடுத்துக்கொண்டு சத்தம்போட்டுப் பேசியபடி வெளியே வந்தார் கள். 

விருந்து பிரமாதமா இருந்துச்சும்மா, பெரியம்மா ஆசிர் வாதம் பண்ணியிருக்கணும். அவள் தாய் வருத்தத்துடன் சொன்னாள்.ஆசிர்வாதமா? அந்தம்மாவைப் பத்திப் பேசாத... அவள நெனச்சாலே என்னால தாங்க முடியல. 

ஏன்? அவங்க அவ்வளவு மோசமானவுங்களாம்மா 

மோசமானவுங்களா, சிவசிவ, அந்த மாதிரி அருமையான பொம்பளய நா பார்த்ததுல்ல. ஆனா, என்ன பண்றது? விதி வௌயாடிருச்சு. என்னயக் காட்டிலும் நாலு வயது சின்னவ அவ, இப்ப இருக்காளா, செத்துப் போனாளா தெரியல. 

மகள் ஆச்சரியத்துடன் பார்த்தாள். அவுங்க செத்துப் போக லேன்னா, எப்படி அவுங்களுக்குத் திதி வைக்கிறாங்க. 

அவ செத்துப் போயிருந்தாகூட நல்லதுதான். அவள ஜாதி யிலேருந்து தள்ளி வச்சுட்டாங்க. எல்லாம் விதி. 

ஏன் அப்படிச் செஞ்சாங்கம்மா? 

நம்பூதிரிகளுக்குக் காரணம் வேற வேணுமா? சின்னம்மாதான் எல்லாத்துக்கும் காரணம்னு நெனக் கிறேன். அவ வந்ததும் தான், திருமேனி பெரியம்மாவை வெறுக்க ஆரம்பிச்சாரு. சின்னம்மா தூண்டுதல் பேர்லதான் அவர் அப்படிச் செஞ்சார்னு சொல்றாங்க. 

சின்னத் திருமேனி எப்படி அதை அனுமதிச்சார். 

அவருக்கு அப்ப பத்து வயதுதானிருக்கும். பெரியம்மாவ வெளியே அனுப்பிச்சப்ப, அவ எப்படி அழுதா தெரியுமா?. மகனுக்காக கதறி அழுதா. சின்னத்திருமேனி அவக்கிட்ட ஓடினாரு. பெரிய திருமேனி அவரப் பிடிச்சு அறைக்குள்ள அடச்சு வச்சுட்டாரு. சின்னத்திருமேனி தாய்கூடப் போவேன்னு அழுதாரு. எனக்கு எல்லாம் நல்லா ஞாபக மிருக்கு. பெரியம்மா அப்ப கொள்ளை அழகு. பெறகு அந்த முஸ்லீம்கள் அவளக் அழச்சுட்டுப் போயிட்டாங்க. அன்னிக்கு பூரா நான் அழுதுகிட்டிருந்தேன். நெஞ்சில் அடிச்சு அடிச்சு அழுததுல இன்னம் வலிக்குது. 

பெரியம்மா உயிரோட இருந்தா, ஏன் இன்னும் திதி பண்றாங்கம்மா? 

ஒனக்குப் புரியாது, மகளே, என்னைக்கு அவுங்க அவள வெளியேத் தள்ளி கதவடச்சு ஜாதியிலேருந்து வெலக்கி வச்சாங்களோ, அன்னைக்கே அவளுக்கு கருமாதி காரியம் எல்லாம் பண்ணிட்டாங்க. அவ உயிரோட இருக்காளா, இல்ல ஆறு கொளத்துல விழுந்து செத்துப் போயிட்டா ளான்னு தெரியல. இல்ல, அவள யார்னாச்சும் அடிச்சுக் கொன்னுட்டாங்களோ, என்னவோ, கடவுளே, பத்து ஜென்மம் நாயாக்கூட பொறந்துடலாம். நம்பூதிரி வீட்டுல பொண்ணா மட்டும் பொறந்துரக் கூடாது. 

பாத்துமாவைப் பார்த்துவிட்டு அவள் கேட்டாள். இங்க என்ன பண்ணிக்கிட்டிருக்க, புள்ள? 

இந்தப் பெண்கள் பேசுவதைக் கேட்டு பாத்துமா ஏற்கனவே அதிர்ச்சி அடைந்திருந்தாள். தட்டுத்தடுமாறி திருமேனியப் பாக்க வந்திருக்கேன் என்றாள். 

ஒனக்குப் பைத்தியம் பிடிச்சுருக்கா புள்ள, திருமேனி வெளிய வந்து ஒன்னப் பாப்பார்னா நெனக்கிற? ஏதாவது சொல்லணும்னா காரியஸ்தர் ராமன் நாயரைப் பாத்துச் சொல்லு.

இல்ல, நா திருமேனிய நேர்ல பாத்துத்தான் பேசணும். 

அப்ப நீ காணிக்கை கொண்டு வந்துருக்க வேணாமா. இருந் தாலும் அவர இன்னைக்குப் பாக்கமுடியாது. இன்னைக்கு அவர் அம்மாவோட திதி. அவர நாயர்கள்கூட பாக்க முடியாது. பெறகு அவர என்னைக்குப் பாக்க முடியும்? 

ராமன் நாயரத்தான் கேட்கணும். நாளைக்கு வந்து அவரப் பாரு. நிறைய மரவள்ளிக்கிழங்கு கொண்டு வா. பாத்துமா சென்றதும் தாய் மகளிடம் சொன்னாள். அந்த முஸ்லீம் பொண்ணுக்கு பெரியம்மாவோட முகஜாடை அப்படியே இருக்குது. அதனால்தான் அவகிட்ட ரொம்பநேரம் பேசிக் கிட்டிருந்தேன். 

பாத்துமா வீட்டுக்குப் போனபோது, அவள் தாய் பொறுமை யிழந்து காத்துக்கொண்டிருந்தாள். என்ன ஆச்சு மகளே? 

நம்பூதிரியப் பாக்க முடியல இன்னைக்கு அவர் அம்மாவுக்கு திதியாம். 

அம்மாவுக்குத் திதியா.... நாராயணா அவள் வேகமாய் தன்னைத் திருத்திக் கொண்டு, அல்லா... என்றாள். பிறகு தன்முகத்தைத் திருப்பிக் கொண்டாள். உள்ளுக்குள் எரியும் நெருப்பு செல்லரித்துப்போன தன் உடலை எரித்துப் பஸ்பமாக்குவதைப் போல உணர்ந்தாள். 

மறுநாள் காலை பாத்துமா கைநிறைய மரவள்ளிக் கிழங்கை யும் ஒரு குலை வாழைப்பழத்தையும் எடுத்துக்கொண்டு காரியஸ்தனின் வீட்டுக்குச் சென்றாள். இல்லத்திலிருந்து அவன் திரும்பி வரும்வரை, வீட்டு முற்றத்தில் காத்திருந் தாள். காரியஸ்தனுக்கு அவள் கொண்டு வந்திருந்த பொருட் களைக் கண்டவுடன் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒனக்கு என்ன வேணும்? நீ குத்தகைக்காரியா? 

இல்ல, நா ஒங்கக்கிட்ட ஒண்ணு கேக்கணும். 

எதுவாயிருந்தாலும் சொல்லு 

தயங்கியபடி பாத்துமா சொன்னாள். நீங்க இத எனக்கு செய்ய முடியுமான்னு தெரியல, 

காரியஸ்தன் கர்வத்துடன் நெஞ்சை நிமிர்த்துக் கொண் டான். என்னால இல்லத்தில் எதையும் சாதிக்க முடியும். ஆனா, முதல்ல நா அத ஒத்துக்கிரணும். 

பாத்துமா மெதுவாகப் பேசினாள். பெரிய நம்பூதிரி எங்க குடிசைக்கு வரமுடியுமா? வயசான என் அம்மா அவ சாகுறதுக்கு முன்ன அவரப் பாக்க விரும்புறா. 

காரியஸ்தன் படபடப்பாகிவிட்டான். என்ன பேச்சு இது, உண்மையிலே நம்பூதிரி ஓங்குடிசைக்கு வருவார்னா நெனக் கிறே, ஒன்னப் போல அவருக்கு நூத்துக் கணக்கா குத்தகைக் காரங்க இருக்குறாங்க. எல்லாரும் இந்த மாதிரி கோரிக்கை வச்சா, அவர் என்ன பண்ணுவாரு? 

பாத்துமா அழ ஆரம்பித்தாள். தயவு செஞ்சு நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. எஜமான் மனசு வச்சா, எனக்காக இதச் செய்யலாம். இது என் அம்மாவோட கடைசி ஆசை. இத நிறைவேத்தி வச்சா எஜமானுக்குக் கோடிப் புண்ணிய முண்டு. 

காரியஸ்தனுக்கு சிறிது இரக்கம் ஏற்பட்டது. அழுவறத நிறுத்து, ஒரு முஸ்லீம் குடிசையில் கால்வச்சு திருமேனி தன்னோட புனிதத்தக் கெடுத்துக்கிட மாட்டாரு. உண்மை யில ஒனக்கு என்ன ஆகணும்னு சொல்லு, நா அத செஞ்சு தாரேன். 

பாத்துமாவுக்குத் திடீரென யோசனை தோன்றியது. எஜமானே நீங்க நல்லா இருக்கணும். ஒங்களுக்கு மம்மதத் தெரியுமில்ல, எங்க இடத்துக்குப் பக்கத்துல இருக்கிறவன். எங்க இடத்த ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பிச்சிருக்கான். அதப் பாக்குறதுக்கு திருமேனி எங்க இடத்துக்கு வந்தா போதும். என் அம்மாவோட ஆசையும் நிறைவேறும். எஜமானே, எங்களுக்கு வேறு யாரு இருக்கா? நீங்கதான் எங்களக் காப்பாத்தணும். 

ராமன் நாயர் அவள் கோரிக்கையைப் பரிசீலித்தான். மம்மது ஒரு அயோக்கியன். காரியஸ்தனுக்கு அவன் எப்போதும் மரி யாதை தருவதில்லை. மேலும் பாச்சு நாயர் தனக்கு மம்மது வின் நிலத்தைப் பிடுங்கிக் கொடுப்பதாயிருந்தால் லஞ்சம் தருவதாய் சொல்லியிருந்தான். எல்லாமே ஒரே காரியமாய் முடிந்து விடும். இது ஒரு மோசமான யோசனை இல்லை. 

நாளை மத்தியானம் திருமேனிக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கையோட இல்லத்துக்கு வந்துடு. ஒன்னோட நெலத்தப் பாக்கணும்னு மட்டும் சொல்லு. ஒங்க அம்மாவப் பத்திச் சொன்னே, காரியம் கெட்டுப்போயிடும். கால்ல விழுந்து கெஞ்சிக் கேளு. அவர் நிச்சயம் ஒத்துக்கிடுவார். 

பாத்துமா சந்தோசத்துடன் வீட்டுக்குப் போனாள். அடுத்த நாள்வரை தன் தாய் உயிருடன் இருக்க வேண்டுமென அல்லாவிடம் வேண்டிக்கொண்டாள். 

வைஷ்ரவநாத் நம்பூதிரி அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை புனஸ்காரங்களை முடித்து சிற்றுண்டி அருந்தி விட்டுத் தன் பரிவாரத்துடன் பத்து மணியளவில் வராந்தா வுக்கு வந்தார். இன்றைக்கு பால் பாயசம் நேற்று வச்ச பிரதமனைக் காட்டிலும் நல்லா இருந்தது இல்லையா, கரீப்ரம்? ரொம்ப சுவையா இருந்தது. நான்கூட கொஞ்சம் அதிகமா சாப்டேன்னு நெனெக்கிறேன். 

கற்றைக் காகிதங்களுடன் காத்துக் கொண்டு நின்றிருந்த காரி யஸ்தனை ஏறெடுத்தும் பார்க்காமல், தன் கனத்த சரீரத்தை நாற்காலியில் கிடத்தினார். முகஸ்துதியில் வல்லவனான கரீப்ரம் தோளில் கிடந்த துண்டை கையில் எடுத்து வைத்துக் கொண்டு பவ்யத்துடன் தலையை ஆட்டினான். 

ஆமா, ஆமா, இன்னைக்கு வச்ச பாயசம் ரொம்ப பிரமாதம். இதோடு பாக்கும்போது நேத்து வச்ச பிரதமன் ஒண்ணுமேயில்ல. 

விளையாட்டை ஆரம்பிக்கப்போகிறார்கள் என்பதைக் கண்ட காரியஸ்தன் தொண்டையை லேசாகச் செருமினான். நம்பூதிரி திரும்பி அவனைப் பார்த்தார். ராமன், நீ ரொம்ப நேரமா காத்துக்கிட்டிருக்கேன்னு நெனெக்கிறேன். கையெ ழுத்து எதுவும் போடவேண்டியிருக்கா? கரீப்ரம், காகிதங் கள் வாங்கு. காகிதங்களைக் கொடுத்துவிட்டு காரியஸ்தன் வாய்பொத்தி மரியாதையுடன் காத்திருந்தான். 

நம்பூதிரி காகிதங்களை அசிரத்தையாய் நோட்டமிட்டார். எதையும் சரியாகப் படிக்காமல், வேகமாகக் கையெழுத்திட் டார். இன்றைக்கு அவ்வளவுதானா? என்று கேட்டார். காரியஸ்தன் குனிந்து வணங்கினான். ஆமா, கையெ ழுத்துப் போடவேண்டியது அவ்வளவுதான். ஆனா சில காரி யங்கள் இருக்கு. மம்மது அக்கம்பக்கத்துல இருக்கிறவங் களுக்குப் பெரிய தொல்லையா போயிட்டான். மம்மதோட நெலத்தக் குடுத்தா, பாச்சு நாயர் நூறு கலம் நெல் தர்றதாச் சொல்றான். 

இல்லை, இல்லை அது நியாயமில்லே. மம்மது பழைய குத்தகைக்காரன். அவன் ஓணத்துக்கும், விஸீவுக்கும் நமக்கு காணிக்கை கொண்டு வரத் தவறுரதில்லை. 

திருமனசு நேர்ல வந்து இடத்தப் பாத்தா, அங்கே இருக்கிற பாவப்பட்ட ஜனங்களுக்கு உதவியாயிருக்கும். அவுங்க கஷ்டத்தச் சொல்றதுக்கு ஒரு முஸ்லீம் பெண் வெளியே காத்திட்டிருக்கா. 

நீயே இதையெல்லாம் கவனிக்கக்கூடாதா ராமன், இதுக்குத்தானே உன்னக் காரியஸ்தனா வச்சிருக்கேன். இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னைக் கஷ்டப் படுத்தாத, சதுரங்கக் காய்களை எடுத்து வை. கரீப்ரம். 

காரியஸ்தன் அர்த்த புஷ்பியோடு புன்னகைத்தான். அவ காணிக்கை கொண்டு வந்திருக்கான்னு நெனக்கிறேன். 

நம்பூதிரி எழுந்தார். அப்படியா, அது என்னான்னு பாக்க லாமே, வா, கரீப்ரம் 

பாத்துமா கோட்டைச் சுவருக்கு வெளியே காத்துக் கொண்டி ருந்தாள். நம்பூதிரியின் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினாள். இரண்டு குலை பூவன் பழங்களை வாழை இலையில் வைத்து அவரிடம் நீட்டினாள். நம்பூதிரி அவளைப் பார்த்து புன்னகை புரிந்தார். உனக்கு என்ன குறை, பெண்ணே 

அவள் நெஞ்சில் அடித்துக்கொண்டு சத்தம் போட்டு அழு தாள். அவன் எங்க நிலத்த அடிச்சுப் புடுங்கிட்டான். இப்ப எங்க குடிசையை இடிச்சுத் தள்ளப்போறதா பயமுறுத்தறான். 

யார் அதச் செஞ்சது? மம்மது. திருமனசு நேர்ல வந்து பாத்து அவன விரட்ட லேன்னா, எல்லாமே எங்களுக்கு முடிஞ்சு போயிடும். 

சரி, சரி நாளை நான் வர்றேன். இப்ப நீ வீட்டுக்குப் போ நம்பூதிரி திரும்புகையில் சொன்னார். பார்த்தாயா, கரீப்ரம், இதனால்தான், சொத்தே வேண்டாம்னு நான் அடிக்கடி நெனக்கிறேன். சொத்துன்னாலே, கஷ்டம்தான். 

ஆமா, ஆமா, என்று கரீப்ரமும் ஒப்புக்கொண்டான். 

அடுத்த மாலை நம்பூதிரியும் கரீப்ரமும் நிலத்தைப் பார்வை யிடச் சென்றார்கள். காரியஸ்தன் பின் தொடர்ந்தான். கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு நடப்பதற்கு நம்பூதிரி சிரமப் பட்டார். அவருக்கு வேர்த்துக் கொட்டியது. வயலில் முதிர்ந்த நெற்கதிர்கள் தலைசாய்ந்து கிடப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். இதோ பார் கரீப்ரம், எங்க வயலி லேயே இதுதான் செழிப்பான வயல். பொன் கொழிக்கும் பூமியிது அவர் ராமனிடம் திரும்பி, நமக்கு கடன்கள் இருக்குதுன்னு நீ சொல்லும்போது, எனக்கு ஆத்திரமா வருது, என்றார். 

திருமனசு செலவப் பாக்கணும். இல்லத்துக்கே மாசம் ரெண்டாயிரம் கலம் நெல் வேண்டியிருக்கு. இதைத் தவிர, கோயில் திருவிழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள்னு நெறைய இருக்கு. 

நமக்குத் கிட்டத்தட்ட ரெண்டு லட்ச ரூபாய் வருமானம் வரும்னு எங்க அப்பா சொல்வார். 

நம்பூதிரி அருகில் உள்ள குடிசையிலிருந்து ஒரு பரிதாப மான முனகல் ஒலி வருவதைக் கேட்டார். 

தம்புரானே, தயவு செஞ்சு வாங்க..., நீங்கதான் எங்க கடவுள். நம்பூதிரியின் முகத்தில் துயரம் சூழ்ந்தது. வேதனையான குரலைக் கேட்கும்போது அவரின் மென்மையான மனம் எப்போதும் இளகிவிடும். அவர் முன்பு யார் கண்ணீர் சிந்தினாலும், அவர் துன்பத்தைப் போக்குவதற்கு எதையும் செய்வார். என்ன அது, ராமன்? யாராவது அழுகிறார்களா? 

நேத்து நாம் பாத்த முஸ்லீம் பெண்ணின் குடிசையது. அங்கிருந்துதான் சத்தம் வருதுன்னு நெனைக்கிறேன். 

தம்புரானே.. கடவுள் மீது ஆணை... தயவு செஞ்சு வாங்க... தயவு செஞ்சு தாமதிக்காதீங்க... அந்தக் குரல் இறைஞ்சியது. 

ராமன் போய் என்ன விஷயம்னு பாத்துட்டு வா, இல்லை, கொஞ்சம் பொறு, நானே வர்றேன். தோஷம் ஏற்பட்டாலும், போய் குளித்துக் கொள்ளலாம். 

கரீப்ரம் முணுமுணுத்தான். திருமனசு முஸ்லீம் குடிசை யில் கால் வச்சா, நிறைய பிராயச்சித்தம் செய்ய வேண்டி வரும் 

ஆனால் நம்பூதிரி மேற்கொண்டு நடந்தார். அவர் இதயத்தில், தன்தகுதி பற்றிய உணர்வும் அவருக்கே இயல்பாய் அமைந்த இரக்கக் குணமும் ஒன்றெ ஒன்று வெல்வதற்குப் போட்டி யிட்டன. முடிவில் கருணைதான் வென்றது. 

குடிசையில் கிழிந்த பாய் மேல் மனித உருவம் என்று சொல்லக்கூடிய ஒன்றைக் காண முடிந்தது. நம்பூதிரி உள்ளே நுழைந்ததும், சாவு நெருங்கிக் கொண்டிருந்த அந்த சுருங்கிப் போன உடலில் ஒரு ஒளிவெள்ளம் பாய்ந்தது. அந்த வயதான பெண் தனது உலர்ந்த கைகளை நீட்டி அருகில் வரும்படி சைகை செய்தாள். மெல்லியக்குரலில், கடைசியில் ஒன்னை மறுபடியும் பாக்குறேன், எல்லாம் விதி என்றாள். 

நம்பூதிரி திகைத்துப்போய் அசைவற்று நின்றார். சாவின் கருமை படிந்த கண்களில் கண்ணீர் பெருகுவதைக் கண்டார். 

ஒன்னப் பாத்து எவ்வளவு நாளாச்சு, வா உண்ணி, வந்து என்னை ஒரு தடவத் தொடு, நீ பத்து வயசாயிருக்கும்போது ஒன்னத் தொட்டது. 

நம்பூதிரி அவளைத் திடீரென்று அடையாளம் கண்டு கொண் டார். அங்கிருப்பதா அல்லது அங்கிருந்து அகன்று விடுவதா என்று அவருக்குத் தெரியவில்லை. 

நா செய்யாத பாவத்துக்கு என்னத் தண்டிச்சிட்டாங்க, மகனே நா ரொம்ப கஷ்டத்த அனுபவிச்சிட்டேன் வா... என்ன ஒரு தடவத் தொடு... 

நம்பூதிரியின் மனதில் பல குழப்பமான எண்ணங்கள் உதித் தன. என்னதான் தவறான முறையில் தண்டிக்கப்பட்டாலும் ஜாதிப் பிரதிஷ்டம் செய்யப்பட்ட, அன்னியமதத்தைச் சேர்ந்த வனுடன் வாழ்ந்து, அவன் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்ற பெண்ணைத் தொடுவது கூடாது என்று நினைத்தார். அது பெரிய பாவம். மதம் மாறிய நம்பூதிரிப்பெண் கொடிய பாவம் செய்தவள். அவளைக் கண்ணால் காண்பதே குற்றம். அவர் ஒரு வார்த்தை பேசவில்லை. வெளியே போவதற்கு எத்தனித்தார். ஆனால், அவருள் ஏதோ நிகழ்ந்தது. அப்படியே நின்றுவிட்டார். 

நான் அவளைப் பார்த்துவிட்டேன். அதற்காகவேனும் நான் பிராயச்சித்தம் செய்து தீரவேண்டும். எப்படியிருந்தாலும், அவள் என் தாய், அவள் சாவதற்குமுன் இரண்டு சொட்டுத் தண்ணீர் அவள் வாயில் விடவேண்டும். விதி தான் என்னை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. ராமன் கொஞ்சம் துளசி இலைகளைக் கொண்டு வா 

நம்பூதிரி மந்திரங்களை ஜபித்துக் கொண்டே அவளருகே சென்றார். துளசிஇலைகளை நீரிலிட்டு விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உச்சரித்த வண்ணம் துளசி தீர்த்தத்தை அவள் வாயில் சொட்டு சொட்டாக ஊற்றினார். அந்த முஸ் லிம் குடிசையில் நாராயண நாமத்தின் உச்சாடனம் எதிரொ லித்தது. அவள் கண்களை மூடிக்கொண்டாள். கொஞ்ச நேரங் கழித்து கண்களைத் திறந்து பார்க்கையில் பாத்துமா விம்மி அழுது கொண்டிருப்பதைக் கண்டாள். அவள் மகன் திகைப்பில் நின்று கொண்டிருந்தான். அவள் நம்பூதிரியைப் பார்த்து கூறினாள். உண்ணி, இவளுக்கு ஒலகத்தில யாரு மில்ல. பையன் எப்படியாவது பொழச்சுக்கிடுவான் 

சாவின் விளிம்பில் இருக்கிறபோதுகூட பாசத்தின் ஆதிக்கம் எத்தனை வலிமையுடையதாயிருக்கிறது என்று நம்பூதிரி நினைத்துக்கொண்டார். அவர் சொன்னார், கவலைப் படாதே, ஆண்டவன் எல்லோரையும் கவனித்துக் கொள்வார். 

என்னைக் கவனிக்கலியே, அப்பா, என்றாள் அவள். அப்படிக் கவனிச்சிருந்தால், நா இப்ப இல்லத்தில் தானே இருந்திருக்கணும். 

ஆனா, எப்படியிருந்தாலும் இப்ப என் மடிமேலதானே இருக்கே, விதியின் சக்தி எப்படியிருக்குன்னு பார்த்தாயா? 

அந்த வயதான பெண் அமைதியில் ஆழ்ந்தாள். அவள் மூச்சு பலவீனமடைந்தது. எதிர்பாராத விதமாய் கிடைத்த அதிர்ஷ் டத்தின் விளைவாய் ஏற்பட்ட சந்தோசத்தில் அவள் ஆன்மா மெல்ல உயரே கிளம்பத் தொடங்கியது. நம்பூதிரி அவள் வாயில் தொடர்ந்து துளசித் தீர்த்தத்தை ஊற்றிக் கொண்டிருந்தார்.  

அல்லா... இல்ல... நாராயணா... 

முடிவுற்ற சோகத்தையும் வேதனையையும் தாங்கிக் கொண் டிருந்த உடல் சத்தியத்தின் சாரத்தில் கலந்து கரைந்தது. அப்படித்தான் பிரார்த்தனையின் தீவிரத்தில் ஆழ்ந்திருந்த நம்பூதிரி நம்பினார். 

தன் தகுதி உணர்ந்து குற்ற உணர்வுடன் நம்பூதிரி எழுந்தார். முகச்சுளிப்புடன் நின்றிருந்த கரீப்ரமிடம், இதோ, பார் கரீப்ரம், இதப் பத்தி யாருக்கும் சொல்லாத, இவள் என் தாய். என்னால தவிர்க்க முடியல. பிராயச்சித்தத்துக்கு சடங்குகள் செய்றதுக்கு ஏற்பாடு பண்ணு என்றார். காரியஸ்தனிடம் திரும்பி, இந்தப் பெண்ணுக்கும் பையனுக்கும் என்ன வேண்டுமோ அத செஞ்சு கொடு. என்றார்.

Pin It