பொன்னமராவதி சந்தைக்கடை வெறிச் சோடிக் கிடந்தது. கடைத் திட்டுகளும், படுதா கட்டும் மூங்கில் கழிகளும் ஆங்காங்கே நின்றன.

மனிதர்கள் கழித்துப் போட்ட குப்பை கூலங்கள் சிதறிக் கிடந்தன. மளிகைக் கடைகளின் பக்கம் சிதறிக்கிடந்த தானியங்களைப் பொறுக்கித் தின்ற புறாக்கள், கூட்டமாக சுதந்திரமாக சிறகடித்து பறந்தன.

நேற்று இந்நேரம் எல்லாம் சந்தை களை கட்டி இருந்தது. கடை விரித்தோரும் பொருள் கொள்வோரும் எழுப்பிய கலவையான குரல்களால் ஏரியாவே கலகலத்தது. சந்தைக்கடை இரைச்சலின் இடையே ஒரு மௌனத் தோற்றமாக அறுபது வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருத்தி, வெறும் கூடையை வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.

அவளது கருத்த முகத்தில் கவலையின் இருள் அப்பியிருந்தது. பாதப் பிரதச் சனமாக மெல்ல நடந்து சென்றாள்.

ஒவ்வொரு கடையைக் கடக்கும்போதும் அந்தந்தக் கடைப் பொருட்களின் வெள்ளாமையால் ஏற்பட்ட நட்ட கஷ்ட புலம்பல்களும், புகார்களும் அவள் காதில் விழுந்து கொண்டே வந்தது.

வாழைத்தார் கடை கடந்தது.

அன்னைக்கு அடிச்ச சூறாவளி காத்துல வாழை பூராவும் சாஞ்சி போச்சு. நட்டஈடும் கிடைக்கல இன்சூரன்சும் கிடைக்கல.அது என்னமோ ஏரியா பூராவும் பாதிச்சிருக்கணு மாம்ல. மாப்பிள்ளை நம்ம காட்ட நாம தான் பாத்துக்கணும்.

அடுத்து வெங்காயக் கடை வந்தது. அதில் ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் ஒப்பாரி வைக்காத குறையாய் தன் பாட்டை பகிர்ந்து கொண்டிருந்தாள்.

போன சீசன்ல வெங்காயம் போட்டோம். எல்லாம் சாவியா போச்சு. போற போக்க பார்த்தா அவன் அவன் வீட்டிலேயே காய்கறிகளை வளத்து திங்கணும் போல. கவர்மெண்ட்டும் ரிலையன்ஸ் மாதிரி பெரிய முதலாளிகளுக்குத் தான் சலுகை காட்டுது.

மளிகைக் கடை பக்கம் வேறுமாதிரியான புலம்பலாக இருந்தது.

இந்தத் தடவை மக்காச்சோளம் போட்டேன். கம்பெனி விதையை நம்பி ஏமாந்து போயிட்டேன்பா. ஒரு காலத்துல விதையும் நம்ம கையில இருந்துச்சு. உரமும் நம்ம கையில இருந்துச்சு இப்ப அடுத்தவனை எதிர்பார்த்து கிடக்க வேண்டியதா இருக்கு.

பக்கத்தில் கலாசுக்காரர்கள் அரிசி மூட்டைகளை கொக்கி போட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த கொக் கியின் துளை வழியில் தானியங்கள் கீழே சிதறின. உழுதவன் கணக்குப் பார்த்தா உழக்கு கூட மிஞ்சாதும்பாங்க. இதனாலதான் நம்ம விவசாயிகள் டெல்லி வரைக்கும் போயி நெல்லை கொட்டி போராடுகிறாங்க.

அட இதுக்கெல்லாம் மாற்றா இயற்கை விவசாயம் பண்ணுங்கப்பா. நம்மாழ்வார் அய்யா போல பலபேரு சாதிச்சிக் காட்டி இருக்காங்களே

அட சொல்றாங்கப்பா... அதெல்லாம் எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்னு தெரியலையே

அதுசரி, சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட் டாச்சு. உழைக்கிறதுக்கு மனசு வருமா?

டீக்கடையில் வடையும், பஜ்ஜியும் மென்ற படி ஒரு குழு காரசாரமாக விவாதித்துக் கொண்டே இருந்தது.

இதெல்லாம் அரசாங்கமாப் பார்த்து செய்ய வேண்டியதப்பா. நம்ம கையில என்ன இருக்கு

நம்ம கையில என்ன இருக்கா? உதாரணத் துக்கு ஒன்று சொல்கிறேன் கேளு. நெல்லு பயிறுல ஒத்த நாத்து நடவுன்னு நம்மாழ்வார் பத்து வருஷமா போராடினார். அதுக்கப்புறம் நிறைய பேரு செய்ய ஆரம்பித்ததும் கவர் மெண்ட், செம்மை நெல் சாகுபடின்னு கொண்டு வரலையா. மக்கள் ஒன்று சேர்ந்தா அரசாங்கம் பின்னால வந்து தான் ஆகணும்.

இதையெல்லாம் கவனித்தபடி அந்த மூதாட்டி களைப்போடு நடந்து கொண்டிருந்தாள்.

ஆங்காங்கே கட்டில்களில் பலகாரங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன அவற்றைப் பார்த்தபடி பசியோடு நடந்து சென்றாள். கண்களுக்கு விருந்தானது வாய்க்கு வாய்க்கவில்லை

செருப்பு கடைகளில் வித விதமான செருப் புகளைக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்கள். அவள் வெறும் காலோடு வெயிலில் நடந்து சென்றாள்.வெயிலுக்கு தொண்டை வறண்டு கிடந்தது. கரும்பு ஜூஸ் கடைகளும் சர்பத் கடைகளும் அவள் தாகத்தைக் குடித்தபடி கடந்து போயின.

கரும்புக் கடை கடந்தபோது அந்த வெள்ளாமையும் விருப்பமாக இல்லை.

டன்னுக்கு விலை கிடைக்கவில்லை என்று வெள்ளாமை இனிக்கவில்லையாம்.

மூதாட்டியின் நெற்றிச் சுருக்கத்தில் வியர்வையாறு, மெல்ல மெல்ல வழிந்தது. விவசாய கடன்களால் தற்கொலை செய்து கொண்ட தன் கணவனால் வெறுமையாகிப் போன நெற்றி, கைம்மையைப் பறைசாற்றியது.

ஒரு பூக்காரியை கடக்கும்போது, பெரிய பெரிய கடைக்கு போனா தின்னுட்டு அவன் கேட்கிற காசை குடுத்துட்டு வராங்க. நம்ம கிட்ட தான் அஞ்சுக்கும் பத்துக்கும் பேரம் பேசுறாங்க" என்று பூக்களைக் கோத்து முடிச்சுப் போட்டுகொண்டே சமூக அவலங் களை அவிழ்த்தாள்.

பாட்டி சில கடைகளைக் கடக்கும் போது அவளது பேரக்குழந்தைகள் நினைவுக்கு வந்தார்கள்.

கண்ணாடி, வளையல் பொட்டு கடைகள் கடக்கும்போது அவளது பேத்தியின் குரல் காதில் ஒலித்தது.

சந்தைக்குப் போய்ட்டு வரும்போது எனக்கு ரிப்பனும் வளையலும் வாங்கிட்டு வா பாட்டி.

அல்வா கடை நகர்ந்தபோது குட்டிப் பேரனின் குரல் ஒலித்தது.

 எனக்கு அல்வா வாங்கிட்டு வா பாட்டி.

இப்பொழுது எதுவுமே வாங்க முடியாத கையறு நிலையில் பாட்டிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

தன் புடவை முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி நகர்ந்துகொண்டே இருந்தாள்.

காய்கறிக் கடைகளில் பக்கம் தக்காளியின் வரத்து அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதைப் பார்த்த பாட்டியின் கண்கள் அச்சத்தில் சிவந்து போனது.

அடக்கடவுளே எங்கிருந்துதான் இப்படி மலைமலையா தக்காளி குவியுமோ என்று பாட்டிக்கு மிரட்சியால் ஒரு அயற்சி ஏற்பட்டது.

ஒருவன் வெங்காயம் போட்டால் அந்தப் பகுதி முழுக்க வெங்காயம் போடுவது. ஒருவன் தக்காளி போட்டால் எல்லோரும் அதையே போடுவது. இந்த ஒரு பயிர் சாகுபடியில் தான் விவசாயிகள் அழிந்தார்கள்.

பாட்டியின் அச்சத்திற்கும் தக்காளி தான் காரணம்.

தன் தோட்டத்து தக்காளியை சந்தையில் விற்று வர கூடையைச் சுமந்து கொண்டு மூன்று மைல் நடந்து வந்திருந்தாள்.

தக்காளி ரெண்டு ரூபா. ரெண்டு ரூபா. ரெண்டு ரூபா என்று கூவி விற்ற தக்காளியின் விலை, அவள் காதில் நாராசமாய் இறங்கியது. திராவகத்தின் மேல் நிற்பது போல் தவித்தாள்.

குவிந்திருந்த தக்காளி மலைகளுக் கிடையில் அவளது கூடைக்காய் எவ்வளவு காணும்? என்றாலும் கமிஷன்காரனிடம் விற்பதற்கு ரொம்ப போராடிப் போனாள்.

என்னம்மா நீ. இதப் போயி இம்புட்டு தூரம் சுமந்துகிட்டு வந்திருக்க . சுமை கூலிக்குக் கூட காட்டாதேம்மா. பஸ்சுக்கு காசு கொடுத்து விடுகிறேன். ஊரு போய்ச் சேரு.

அவளது தக்காளியை அள்ளிய அந்த வியாபாரியின் கைகளில் தங்க நிற செயின் போட்ட வாட்சும், தங்கத்தாலான மோதிரமும், பிரேஸ்லெட்டும் மினுமினுத்தது. அதன் பின்பு தான் சந்தையிடையே கூடை நிறைய கவலையோடு வலம் வந்தாள்.

ஒட்டுமொத்த சந்தை புலம்பலின் அவல ஓசை, எங்கோ விவசாயக் கொள்கைகளில் பிழை இருப்பதாக கூறிக் கொண்டே இருந்தது.

இப்பொழுது அவள் சுடுமணலில் வெறும் காலோடு நடப்பது கூட சுடவில்லை. கந்துவட்டிக்காரனின் சுடுசொற்கள், அவளது பேரப்பிள்ளைகளின் குரல்களுக்கு நடுவே ரீங்காரமிட்டுச் சுழன்றது.

வட்டிக்குப் பணம் வாங்கும் போது மட்டும் வக்கனையா வாங்குறீங்க. அதை ஒழுங்கா கட்டணும்னு கொஞ்சமாவது நெனப்பு இருக்கா? நீ எல்லாம் சோத்த தான திங்கிற.

சந்தைக்குப் போனா ரிப்பனும் வளையலும் வாங்கிட்டு வா பாட்டி

"எனக்கு சாப்பிடறதுக்கு அல்வா வாங்கிட்டு வா பாட்டி. திரும்பத் திரும்ப குரல்களின் சுழற்சியில் அவளுக்கு சந்தையே வேகமாக சுழன்றது போல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் அந்தக் கிறுகிறுப்பில் அப்படியே மயங்கி கீழே விழுந்தாள்.

யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்து பாட்டியை எழுப்பினார்கள்.

தட்டி எழுப்ப வேண்டியது இவர்களை மட் டுமல்ல அழிந்துகொண்டிருக்கும் வேளாண் மையையும் அதன் வேராய் இருக்கும் விவ சாயிகளையும் தான்.

மறுநாள் சந்தையில் நிறைய குப்பைக் கூலங்கள் இறைந்து கிடந்தன. மூட்டை தூக்கும் கூலிகளின் பயனாய் சிதறிக் கிடந்த தானியங்களை மேய்ந்தபடி பறந்தன புறாக்கள்.

- து.சோ.பிரபாகர், திருப்பூர்

Pin It