எப்போது எந்த வரிசையில் நின்றாலும் அவனுக்கு அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்துவிடுகிறது. தன்னைத்தானே 'முட்டாள், முட்டாள்' என்று வாய் விட்டுத் திட்டிக் கொள்வதும், தன்னையறியாமல் தலையிலடித்துக் கொள்வதும் வழக்கமாகிவிட்டது. பின்னர் சுயநினைவிற்கு வந்து மற்றவர்கள் யாரும் கேட்டு விட்டார்களா, பார்த்து விட்டார்களா என்று சுற்றும் முற்றும் பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
இப்போதும் அப்படித்தான். அன்று போலவே இன்றும் ரயில் டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றிருந்தான். வரிசையில் நிற்கும் பொறுமை யாருக்குமே இல்லை. ஒருவருக்குப்பின் மற்றொருவர் என்பதுதானே வரிசை? அதுதானே நம்மைப்போல மற்றவர்களையும் நாம் மனிதர்களாக மதிக்கிறோம் என்பதற்கு அடையாளம்? அங்குதானே இருக்கிறது பிரச்சனை!
அந்த வரிசை நேர்கோடாக இருக்க வேண்டாமா? இரண்டு பற்சக்கரங்களை எதிரெதிர் திசையில் நீட்டி வைத்தது மாதிரி தனக்கு முன்னே நிற்பவரின் பக்கவாட்டில் இந்தப்பக்கமும், அந்தப் பக்கமும் விலகி கவுன்டரையே உற்றுப் பார்த்துக் கொண்டு, ஏதோ நெருப்பின் மீது நிற்பவர்கள் போல அல்லவா நிற்கிறார்கள்? முன்னால் நிற்பவர் தன் காரியத்திற்கு குறுக்கே இடையூறாக இருக்கிறார் என்றுதான் எல்லோருமே கருதுகிறார்கள்.
தான் வந்ததும் நேராக கவுண்டருக்குப்போக வேண்டும், டிக்கெட் எடுத்தோமா போனோமா என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
வரிசைகளில் நிற்பவர்களெல்லாம் முட்டாள்கள்,இளிச்சவாயர்கள், தங்களைவிட கீழானவர்கள் என்று எண்ணுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள். ரயில் ரிசர்வேஷனோ, வங்கியோ, சினிமாத் தியேட்டரோ, கரண்ட் பில் கட்டுகிற இடமோ, ரேசன் கடையோ எங்கெல்லாம் வரிசை இருக்கிறதோ அங்கெல்லாம் இத்தகைய மகானுபாவர்கள் காணப்படுகிறார்கள்.
அன்று ரயில்வே ரிசர்வேஷன் நிலையத்தில் ஏகப்பட்ட கூட்டம். ஏதோ அரசு விடுமுறை. இயங்கிக் கொண்டிருந்த ஐந்து கவுன்டர்களிலும் இருந்த வரிசை ஒரு ஸ்டேஷனிலிருந்து அடுத்த ஸ்டேஷன் வரை நீள்கிறதோ எனத் தோன்றும் கூட்ஸ் வண்டி போலநீண்ட கூட்டம். இவன் சென்று நின்ற கவுண்டரில் ஏற்கெனவே முப்பத்தைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். மற்ற வரிசைகளில் அதைவிட அதிகமானவர்கள் நிற்பது போல் இருந்தது. எப்போதும் அப்படி எண்ணுகிற பழக்கம் உண்டு. எவ்வளவு நேரம் ஆகும் என்று கணக்கிட வேண்டுமல்லவா?
அரை மணி நேரத்திற்குப் பிறகு இவன் இருபத்தி எட்டாவது இடத்திற்கு முன்னேறியிருந்தான். அதாவது, எட்டு பேர் டிக்கெட் வாங்கிக் கொண்டுபோக அரை மணிநேரம். சராசரியாக ஒருவருக்கு மூன்றரை நிமிடங்களுக்கு மேல். இது கொஞ்சம் ஸ்லோதான் என்று எண்ணியவன் சற்று விலகி கவுன்டரை எட்டிப் பார்த்தான்.
அப்போதுதான் கவுன்ட்டரை ஒட்டியப்படி, ஆனால் வரிசையில் இல்லாத ஒருவர் நின்றிருப்பதைப் பார்த்தான். அவன் கையிலும் ரிசர்வேஷன் பார்ம்கள் இருந்தன. இவன் ஏன் வரிசையில் நிற்காமல் விலகி நிற்கிறான்? வரிசையில் வந்தவனா? மற்றவர்கள் அசந்திருக்கும் நேரம் பார்த்து கையை கவுண்டருக்குள் நுழைத்து விடலாம் என்று ஏமாற்றக் காத்திருப்பவனா? அவனையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தான்.
கிட்டத்தட்ட ஆறு அடி இருந்தான். செக்கச் செவேலென்றிருந்தான். அணிந்திருந்த ஆடைகளின் படி அவன் வசதியானவனாக இருக்க வேண்டும்; பெரிய தொழில் செய்பவனாகவோ அல்லது உயர் பதவி வகிப்பவனாகவோ இருக்க வேண்டும். வயது முப்பதுக்குள்தான் இருக்கும். படித்தவன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவன் நின்றிருந்த விதத்தில் மற்றவர்களைப் பொருட்படுத்தாத ஒரு திமிரான தோரனை இருந்தது. நிச்சயம் களவாணிப் பயலாகத்தான் இருக்க வேண்டும். இவன் வண்டி ஸ்டார்ட் ஆகி உறும ஆரம்பித்தது. இருந்தாலும் என்ன ஏதென்று தெரியாமல் எதுவும் செய்து விடக் கூடாதே என்று ஒரு பக்கம் ஆக்சிலேட்டர் தானாக ரெய்ஸ் ஆகிக் கொண்டே இருக்க, பிரேக்கை இறுகப்பற்றி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
"ஏன் சார் அந்த ஆள் வரிசையிலயா வந்தாரு?" என்று தனக்கு முன்னே நின்றிருந்தவரிடம் கேட்டான். அவரும் அவனைப் பற்றியேதான் நினைத்துக் கொண்டிந்தார் போல. "இல்ல சார், இப்பத்தான் வந்து நேராப் போய் அங்க நிக்கிறான்" என்று சட்டென்று பதிலளித்தார்.
'பின்ன ஏன் சார் பாத்துக்கிட்டு சும்மா நிக்கிறீங்க' என்று கேட்க எண்ணியவன் அடக்கிக் கொண்டான். "ஒரு நிமிஷம் இந்த இடத்தப் பாத்துக்குங்க சார். இதோ வர்றேன்" என்று வேகமாக அவனை நோக்கிப் போனான். தான் நடந்த விதமும், வேகமும் ஏதோ அவனை அடிக்கப்போவது போல் இருப்பதை உணர்ந்தவனாக நிதானித்து நெருங்கினான். அவன் தன்னை விட உருவத்தில் பெரிய ஆளாக இருந்ததும் கூட இவனது எச்சரிக்கை உணர்வை அதிகரித்தது.
"சார் ஏன் சார் இங்க நிக்கிறீங்க?"
அவன் காதுகளிலும், இவன் பார்வைக்குத் தெரிந்த கன்னத்திலும் பரவிய உணர்வலைகளை இவன் கவனித்துவிட்டான். அவனைத்தான் கேட்கிறோம் என்பது அவனுக்குத் தெரிகிறது. இருந்தும் கேள்வி வந்த பக்கம் திரும்பாமல் காதில் விழாதவன் போல் அவன் இருந்தது கோபத்தை அதிகரித்தது.
"சார், ஒங்களத்தான் கேக்குறேன்... ஏன் இங்க நிக்கிறீங்க? வரிசையில் வாங்க" என்றான் சற்று குரலை உயர்த்தி.
சட்டென்று திரும்பியவன் முகத்தில் ஏளனச் சிரிப்பு. முறையாக வரிசையில் நிற்பவர்கள் இளிச்சவாயர்கள் என்றால், அதை ஒழுங்குபடுத்த முயற்சிக்கும் இதுபோன்ற திருவாளர் பொது ஜனங்கள் எல்லாம்கோமாளிகள். ‘என்ன’ என்பதுபோல புருவங்களை உயர்த்தினான். துரை பேசமாட்டார் போல. இவனுக்கெல்லாம் வாய் திறந்து பதில் பேச வேண்டுமா என்று அவன் நினைப்பது போல தோன்றியது. பேச்சைக் குறைத்தால் எதிரி பயப்படுவான் அல்லது முடிவெடுக்க முடியாமல் தயங்குவான் என்பதொரு உளவியல் உத்தி. இந்தக் களவாணி அதைப்பிரயோகிக்கிறான். அவ்வளவுதான் இவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.
"இங்க என்ன பண்ணிட்டு இருக்க?" என்றான் ஆவேசமாக.
இனி அவன் முறை. ஆவேசத்தையும், கோபத்தையும், வார்த்தைகளில் இருந்த ஒருமையும் அவனைத் தூண்டிவிட்டு விட்டது. ஏதோ இவன்தான் தப்பு செய்தவன் என்பது போல, நாக்கைத் துருத்திக் கொண்டு "அதக்கேக்க நீ யாரு?" என்று வாயாலும், கையாலும் கேட்டான். பொது இடத்தில் என்ன நடந்தாலும் யாரும் எதுவும்கேட்கக் கூடது. அவனவன் வேலையை அவனவன் பார்த்துக் கொண்டு போக வேண்டியதுதானே? அக்கிரமக்காரர்களின் வாதம் இதுதானே?
"நாங்க மணிக்கணக்கா வரிசையில் நிக்கிறோம்... நீ நேரா வந்து நொட்டிட்டுப்போயிடுவியோ?" - இந்த வார்த்தைகளை உச்சரிக்க உச்சரிக்கவே மனம் இவனைக் கடிந்து கொண்டது. தகாத வார்த்தைகளையெல்லாம் பேசக் கூடாதப்பா.
'என்னடா சொன்ன' என்ற அந்த நவநாகரீக மனிதனின் வாயிலிருந்து அகராதியில் காண முடியாத அருஞ்சொற்கள் சரமாரியாக அந்தவெளியெங்கும் சிதறின. காற்றில் ஒரு கெட்ட வாடை. இவன் நெஞ்சில் கை வைத்து ஓங்கித்தள்ளினான். இந்தச் சின்ன உருவம் அந்த பல மடங்கு பெரிய உருவத்தின் பலத்தால் தட்டுத்தடுமாறி நான்கைந்து அடி தள்ளிப் போய் விழுந்தது. சட்டைப் பையிலிருந்த செல்போன் தரையில் விழுந்து உடைந்து சிதறியது; கீழே விழுந்த கண்ணாடிக் கூடு மார்பிள் தரையில் வழுக்கிக் கொண்டு ரொம்ப தூரம் போய்விட்டது; பேனா எங்கே இருக்கிறது என்பதே தெரியவில்லை; ரூபாய் நோட்டுகளும், சில்லறைக் காசுகளும் கொட்டிப் பரவின. எல்லோரும் அதிர்ந்து விட்டார்கள்.
விழுந்த வேகத்தில் சீறிக் கொண்டு எழுந்தான். அவனும், தான் கை வைத்து விட்டதைப் பற்றிக் கவலைப்படவில்லை. மேலும் எகிறிக் கொண்டு வந்தான். அதற்குள் மற்றவர்களெல்லாம் அவனையும் இவனையும் பிடித்துக் கொண்டு விட்டார்கள். சிலர் பணம், போன்,கண்ணாடிக் கூடு என எல்லாவற்றையும் தேடி எடுத்துக் கொடுத்தார்கள். 'அடி பலமா சார்' என்று விசாரித்தார்கள். ஆளாளுக்குத் திட்டியதில் அவன் அந்தக் கட்டிடத்தை விட்டே போய்விட்டான். அதற்குப் பிறகு இவன் எப்போது எந்த வரிசையில் நின்றாலும் அதைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துகிறவனாக தன்னைத் தானே யாரையும் கேட்காமல் நியமித்துக் கொண்டான். அவன் இப்போதும் நினைத்து நினைத்து வருந்துகிற சம்பவம் பின்னர் ஒருநாள் நடந்தது.
அன்றும் வழக்கம்போல கூட்டம்தான்.ஆனால் விடுமுறை நாட்களிலோ, காலை நேரங்களிலோ, மதிய உணவு இடைவேளைகளிலோ இருக்கும் அளவு இல்லை. இருந்தும் இவனுக்கு வரிசையில் பதினைந்தாவது இடம்தான் கிடைத்தது. ஒரு பத்து பதினைந்து நிமிடம் நின்றிருப்பான். திரும்பிப் பார்த்ததில் வரிசை கிராபிக்ஸ் பாம்புபோல வளர்ந்து விட்டிருந்தது. எத்தனை டிரெய்ன் விட்டாலும் பத்தாது என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான். அப்போது அவனுக்கு பரிச்சயமான குரல் ஒன்று அவன் பெயரைச் சொல்லி அழைத்தது. குரல் வந்த பக்கம் திரும்புவதற்குள் அவர் அருகே வந்துவிட்டார். கையில் இரண்டு பார்ம்கள் வைத்திருந்தார். தூரத்துச் சொந்தம்.
“வாங்கண்ணா, எங்க, ஊருக்கு கிளம்பிட்டீங்களா" என்றான்.
"ஆமாம்பா, ஆந்திராவுல ஒரு வேல" என்றவர் மேற்கொண்டு ஒன்றும் சொல்லாமல் கண்காளல் ஜாடை செய்தவாறு பார்ம்களை இவனிடம் நீட்டினார். இவனுக்குக் கோபம் வந்துவிட்டது. இவரும் வரிசையை மதிக்க மாட்டார் போல. இருந்தாலும் சொந்தம் என்பதால் கோபத்தை அடக்கிக் கொண்டு, ஒன்றும் பேசாமல் அவரையே உற்றுப் பார்த்தான். மற்றவர்களெல்லாம் இவன் என்ன செய்யப் போகிறான் என்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது போல குறுகுறுத்தது.
"வாங்கிக்கப்பா" என்று பார்ம்களையும், பணத்தையும் ஆட்டினார். அப்போதும் இவன் எதுவும் பேசவில்லை. ஊருக்கெல்லாம் உபதேசம் செய்துவிட்டு, தான் அதை மீறுவது நியாயமில்லை.
"என்னப்பா, இந்த உதவி கூட செய்யமாட்டியா" என்று சற்று உரத்த குரலில் கேட்டார்.
வரிசையில் முன்னும் பின்னும் நின்றிருந்தவர்களைப் பார்த்தான். பின்னால் இருந்தவர் மட்டும் இவன் என்ன செய்யப்போகிறான் என்பது போல பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்கள் கவனிக்காதவர்கள் போல இருந்தார்கள். என்னவொரு தர்ம சங்கடம்?
"வரிசையில நில்லுண்ணா டிக்கெட் கெடைக்கும்".
"டேய் நிக்க முடியாதுடா, ஒரு மணி நேரம் ஆகும்போலத் தெரியுது. அவ்வளவு நேரம் என்னால முடியாதுடா" என்று ஒரு முறைக்கு பலமுறை வலியுறுத்தினார். கிட்டத்தட்ட கெஞ்சினார். அப்போதும் கூட அவரைப் பற்றி அவனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த உண்மையை அவன்மனம் நினைவுறுத்தவில்லை.
இப்போது எல்லோரும் அவரையும், இவனையும் பார்த்தார்கள். யாரும் அவரை வரிசையில் போய் நில்லுங்கள் என்று சொல்லவில்லை. கரடுமுரடான அனுபவங்களால் இறுகிப்போயிருந்த அவன் மனது மசியவில்லை. நியாயஸ்தன் என்று எல்லோரும் தன்னைப் பற்றி எண்ணிக் கொள்வார்கள் என்று பெருமிதமும் கொண்டான்.
அவர் முகத்தில் தெரிந்தது வெறுப்பா, கோபமா, கழிவிரக்கமா என்று தெரியவில்லை. அசையாமல் அதே இடத்தில் நின்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் கவுன்ட்டரை பார்த்தார். வரிசையின் பின்பக்கம் நோக்கி திரும்பியரை "எங்கிட்ட குடுங்க சார். நீங்க போய் உக்காருங்க. நான் எடுத்துட்டு வர்றேன்" என்று இவனுக்குப் பின்னால் நின்றிருந்தவர் பார்ம்களையும், பணத்தையும் வாங்கிக் கொண்டார்.
கொடுத்துவிட்டு இவர் பக்கம் பார்க்காமலேயே அவர்விந்தி விந்தி நடக்க ஆரம்பித்தவுடன்தான் அவனுக்கு உறைத்தது. அப்போது ஆரம்பித்தது அவன் தலையில் அடித்துக் கொள்வதும், தன்னைத்தானே திட்டிக் கொள்வதும்.
- அசோகன் முத்துசாமி