வடவாண்டை மேட்டு வெள்ளச்சி நிலத்தில் கேழ்வரகு நடவு நட்டுக் கொண்டிருந்த மொட்டச்சி கால் சேற்றைக்கூட கழுவாமல் விழுந்தடித்து ஓடினாள். 

“மொட்டச்சி மக ஒட்டந்தழய அரச்சித் துன்னுட்டாளாங்'' என்று ஊரே பற்றிக் கொண்டது. 

மொட்டச்சிக்கு ஓடஓட பாதை நீண்டு கொண்டே போனது. வரப்பு, கால் வாய்,கல்,மண் தெரியாமல் ஓடினாள். மொக்கப்பல்லனின் நீட்டுத்துண்டின் வரப்பில் விழுந்து முழங்கை தேய்த்துக் கொண்டது. விழுந்த வேகத் தில் எழுந்து ஓடினாள்.மோட்டூர்க்காரி வெள்ளச்சியின் நடவுக்கு மாத்தாளாகப் போனவள், மதியக்கூழ் குடித்துவிட்டு வந்து ஒரு மனைதான் ஏறினாள். 

“செம்பகம், நாம் பெத்த மவளே'' என்று அடித்தொண்டையில் கதறியபடி ஓடியவள், செண்பத்தின் வீட்டை நெருங்கும்போதே கும்பல் கண்ணில் பட, ஈரக்குலை பதற, உச்சத்தில் கதறி னாள். வீட்டின் முற்றத்தில் செண்பகம் அலங்கோலமாய் கிடக்க, பெண்களும், ஆண்களும் சூழ்ந்து, ஆளாளுக்கு கத்திக்கொண்டும், அங்குமிங்கும் ஓடிக் கொண்டும் இருந்தனர். பக்கத்துவீட்டு மாரியம்மாள் பனைஓலை விசிறியால் செண்பகத்தின் முகத்தில் விசிறிக் கொண்டிருந்தாள். 

“அய்யோ என்ன பெத்த மகளே.... இப்பத்தானே பாத்து பேசிட்டு போனேங்.. அதுக்குள்ள பெத்த வயித் தில நெருப்ப வாரிக் கொட்டிட்டியே'' என்று மகளை வாரிக் கட்டிக்கொண்டு கதறினாள் மொட்டச்சி. கத்திக் கொண்டிருந்த குழந்தையை செண் பகத்தின் மாமியார் தோளில் போட்டுக் கொண்டு அரற்றிக் கொண்டிருந்தாள். 

நுரை தள்ளிய வாயோடு, கண்கள் நிலைக்குத்தி நிற்க, பேச்சு மூச்சின்றி கிடந்தாள் செண்பகம். 

“ராவு பகலா பாடம் சொல்றமாரி சொன்னனே... எம்பேச்ச கேக்காம இப்டி பண்ணிட்சே'' என்று பதைத்துக் கொண்டிருந்தான் செண்பகத்தின் கணவன் சின்னராசு. 

“உள்ள போன தழ வெளிய வந்திட்சினா காப்பாத்திட்லாம்... ஒரு சொம்புல துணிசோப்ப கரச்சி எட்தாங்க'' என்றார் சஞ்சீவி ரெட்டியார். 

செண்பகத்தின் நாத்தனார் கோமதி பின்பக்கம் ஒடினாள். எவர்சில்வர் சொம்பு நிறைய்ய கரைத்த சோப்புத் தண்ணீரைக் கொண்டுவந்து சஞ்சீவி ரெட்டியாரிடம் கொடுத்தாள்.சூழ்ந்திருந்த வர்களை தூர விரட்டிவிட்டு, நாராயண ரெட்டியார் செண்பத்தின் தலையைத் தூக்கி தன்மடியில் வைத்துக்கொண்டு, அவள் வாயைப் பிளக்க, சஞ்சீவி சோப்புத் தண்ணீரை வாயில் ஊற்றினார். வாயில் நிரம்பிய நீர் கீழே வழிந்ததே தவிர உள்ளே இறங்க வில்லை. கன்னத்தில் தட்டினார். தலையை ஆட்டினார். துளிகூட இறங்கவில்லை. மீண்டும் குய்யோ முய்யோ என்று பெண்கள் கதறத் தொடங்கினர். 

“இதெல்லாம் ஒன்னும் கேக்காது... பீ கரச்சி எட்த்துகினு வாங்க... அத ஊத்திப் பாக்கலாம்'' என்றார் நாராயண ரெட்டியார். 

மொட்டச்சி ஒரு அலுமினிய குண் டானைத் தூக்கிக்கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினாள். ஊராரின் ஒட்டு மொத்த மலமும் அங்குதான் கிடந்தது. காய்ந்து கருவாடானது, மண்பூத்து மூடியது, அரைகுறையாய் காய்ந்தது என விதவிதமாய் கலந்து கிடந்தது. அன்று காலையில் கழித்த மலமாகப் பார்த்து நான்கு குவியல்களை மண் ணில்லாமல் அள்ளி குண்டானில் போட்டுக்கொண்டாள். குடல்வரை நுழைந்த நாற்றம் மூச்சை அடைத்தாலும் மொட்டச்சிக்கு அதெல்லாம் உறைக்கவில்லை. கைகளைக்கூட துடைத்துக்கொள்ளாமல் குண்டானைத் தூக்கிக்கொண்டு ஓட்டமாகத் திரும்பினாள்.கூட்டம் இவளுக்காகவே காத்திருந்தது. கோமதி தண்ணீர் தவலையைத் தூக்கிவந்து வைத்தாள். இரண்டு சொம்பு தண்ணீரை மொண்டு மலம் இருந்த குண்டானில் அவள் ஊற்ற, கூழ் கரைப்பதுபோல மலத்தைக் கரைத்தாள் மொட்டச்சி.நாற்றம் நாலாபுறமும் பரவ, பெண்கள் புடவை முந்தானையால் மூக்கை மூடிக் கொள்ள, ஆண்கள் துண்டால் பொத்திக்கொண்டனர். கட்டியில்லாமல் கரைத்து, அதில் மிதந்த தும்புதூசிகளை துழாவி எடுத்து வெளியே எறிந்த மொட்டச்சி, குண்டானை நாராயண ரெட்டியாரிடம் கொடுத்தாள். 

கூட்டம் மூக்கை பொத்திக்கொண்டு எட்டிப்போவதும், நெருங்கி வருவதுமாக இருந்தது. மாட்டுக்கு மருந்து ஊற்றும் "கொட்டானை' பக்கத்துவீட்டு மாரியம் மாள் கொண்டு வந்து கொடுத்தாள். துண்டை மூக்கோடு சேர்த்து தலை யில் கட்டிக்கொண்டு, கொட்டான் நிறைய மலத்தை ஊற்றிய நாராய ணன், கிட்டிப் போயிருந்த செண்பகத் தின் பற்களுக்கிடையில் கொட்டானை வைத்து தொண்டைவரை நுழைத்து மெதுவாக சாய்த்தார். நாற்றம் டவலை யும் மீறி நாராயணனின் மூக்கைத் துளைக்க, அவருக்கு குமட்டிக்கொண்டு வந்தது. மெதுமாக தொண்டைக்குள் மலம் இறங்க, எல்லோரும் திகிலோடு பார்த்தனர். ஊற்றி முடித்த நாராயணன், இன்னொருமுறை கொட்டானில் நிரப்பிய போது, செண்பகத்தின் தலை சாய, உள்ளே போன மலம் வாய்வழியே கீழே வழிந்தது. 

“பீ உள்ள இறங்கல... அதனால தான் வாந்தி வரல... ஆஸ்பத்திரிக்கி போனா தான் காப்பாத்த முடியும். தூக்குங்க'' என்றார் நாராயணன். 

மறுநாள் மருத்துவமனையில் கண் விழித்தாள் செண்பகம். கணவன் சின்ன ராசுவையும், தாய் மொட்டச்சியையும், குழந்தையையும் பார்த்துப் பார்த்து சத்த மில்லாமல் அழுது கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. 

இவள் தற்கொலைக்குப் போனது இது இரண்டாவது முறை. ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிலேயே தூக்கு மாட்டிக்கொண்டவளை கணவன் சின்ன ராசு பார்த்து காப்பாற்றிவிட்டான். ஆனால் இப்போது பிழைப்பது கடினம் என்று பெரியமருத்துவர் சொல்லிவிட்டார். தழை யின் கடுமையான விஷம் ரத்தத்தில் பரவிவிட்டதாகக் கூறியவர், இன்னொரு 24 மணிநேரம் கெடு வைத்துவிட்டார். 

ஒரு மாதமாக, ஒருநாள் தவறாமல், கிளிப் பிள்ளைக்கு சொல்வதுபோல் செண்பகத் திற்கு சின்னராசுவும், மொட்டச்சியும் பாடம் சொல்லிக் கொண்டிருந்தனர். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டி ருந்தும், அசந்த நேரத்தில் ஒட்டந் தழையை அரைத்துத் தின்றுவிட்டாள். 

“செண்பகம்...ஏண்டி இப்டி பயித்தியக்காரி மாறி பண்ற... இந்த பச்சக்கொயந்த மூஞ்சியப் பாருடி... எப்பிட்ரி இத உட்டுட்டுப்போவ உனுக்கு மன்சு வர்து'' செண்பகத்திடம் மன்றாடினாள் மொட்டச்சி. 

“யம்மா... இப்போ என்ன காப்பாத்திட்டா லும் எப்டினாலும் நா செத்துபுடுவேன்' என்றாள் செண்பகம். 

“சாவுடி... ஊர்ல உலகத்துல எல்லாருமே சாவறவங்க தான்டி... ஆனா அதுக்குனு ஒரு நேரங்காலம் வர வாணாமா'' என்றாள் மொட்டச்சி. 

“அது எனுக்கு சீக்கிரமா வரமாட்டுன் னுதே... நானு தெனமும் சாவறதவிட, ஒரேடியா செத்துப்போறேன். என்ன உட்ருங்கோ'' என்று அழுதாள் செண்பகம். 

“அப்டி ஊர்ல உலகத்துல யார்க்கும் நடக்காததாடி உனுக்குமட்டும் நடந்து பூட்ச்சி....? ஏண்டி இப்டி எல்லாரயும் சாவடிக்கிற...?'' என்று கோபமும், பாவமுமாக கத்தினாள் மொட்டச்சி. 

மொட்டச்சிக்கு செண்பகம் ஒரேமகள். மொட்டச்சியின் கணவர் சாராயம் குடித்துக் குடித்து சீக்கிரமாகவே போய் சேர்ந்துவிட, இருந்த கால்காணி நிலத்தையும், இரண்டு பசுமாடுகளை யும் வைத்துக்கொண்டு,கூலிவேலையும் செய்து செண்பகத்தை ஆளாக்கினாள். 

ஒரே மகள் என்பதால் பொத்திப் பொத்தி வளர்த்தாள். வீட்டு வேலைகளைக்கூட மகளுக்கு வைக்கமாட்டாள். கூலிக்கு அனுப்பமாட்டாள். மாத்தாளுக்கும் அனுப்பியதில்லை. நடவு,களைஎடுப்பு, மாத்தாள் எல்லாவற்றையும் மொட்டச்சி ஒருத்தியே செய்வாள். உள்ளூர் பள்ளிக்கூடத்தில் 5 வகுப்புவரை படிக்க வைத்தாள். அதற்குமேல் வேண்டா மென்று நிறுத்திவிட, வீட்டோடு ஊதுவத்தி உருட்டினாள் செண்பகம். 

லட்சணமாக வளர்ந்தாள் செண்பகம். ஊர்ப்பெண்களுடன்கூட அதிகம் ஒட்டா மல் வளர்ந்தாள். கூச்சசுபாவம் அதிக மாக இருந்ததால் வெளி விசேசங் களுக்குக்கூட போகமாட்டாள். இவள் வயது பெண்கள் கல்யாணம், காது குத்து, சீமந்தம் என்றால் சீவி, சிங்கா ரித்து, பவுடர் பூசி, முகத்தில் மின்னும் சந்தோச வெளிச்சங்களோடும், சிதறும் சிரிப்புகளோடும் தெருவே வேடிக்கைப் பார்க்க கிளம்புவார்கள். 

மொட்டச்சி அறுத்துவிட்டவள் என்பதால் மகளை அக்கம்பக்கம் விசேசங்களுக்கு போகச் சொல்லுவாள். செண்பகமோ வீட்டைவிட்டு நகரமாட்டாள்.முந்தானை விலகவிடமாட்டாள். பாவாடையை தூக்கிச் சொருகமாட்டாள்.சினிமாவிலும், டிவியிலும், விளம்பரங்களிலும் பாதி மார்பு தெரியவரும் பெண்களைப் பார்த்து குமட்டிக் கொண்டு வரும் செண்பகத்திற்கு. "இவளுங்களுக்கு வெக்கமே கிடையாதா...' என்று வியப்பும் வெறுப்புமாய் கேட்பாள். 

“வெய்யிலு பார்க்காம,காத்து பார்க்காம, ஒரு ஈ, காக்காகூட பார்க்காம பொத்தி பொத்தி வச்சிருக்கிற ஒடம்ப எந்த நாட்டு எளவரசனுக்கு காட்டப் போறியோ'' என்று கிண்டலடிப்பார்கள் குமரிகளும், உள்ளூர் கிழவிகளும். 

பதினேழு வயதில் தன் தம்பிக்கே மகளை கல்யாணம் செய்து கொடுத்து சொந்தத்தை விட்டுக்கொடுக்காத திருப்தி யோடு அழகு பார்த்தாள் மொட்டச்சி. தாய்மாமனை செண்பகத்திற்கும் பிடிக்கும் என்றாலும், அவனோடு பேசவே கூச்சப்பட்டாள். 

இரவில் கணவனுடன் இருட்டில் இருக்கும்போதுகூட அவளை வெட்கம் பிடுங்கித்தின்னும். மாமியார், நாத்தனார் எதிரில் கணவனோடு பேசவேமாட்டாள். இடுப்பில் கிள்ளு வான். முதுகில் இடிப்பான். வேண்டு மென்றே சீண்டுவான் சின்னராசு. சிவந்துபோவாள் செண்பகம். சதா கேலி பேசுவான். அவளுடைய வெட்க மும், கூச்சமும் சின்னராசுவிற்கு அவள்மேல் அடங்காப் பிரியத்தை உண்டாக்கின. 

திருமணம் முடிந்து முதல் ஆண்டி லேயே ஒரு பெண் குழந்தை பிறந் தது. செண்பகத்தை உரித்துக் கொண்டு பிறந்தது அது. யாரும் இல்லாத நேரத்தில் இழுத்து மூடிக் கொண்டுதான் குழந்தைக்குப் பால் கொடுப்பாள். தன் தாயின் எதிரில்கூட தாராளமாக உட்கார்ந்து பால் கொடுக்க மாட்டாள். 

இரண்டுவருட இடைவெளியில்ó அடுத்த ஆண்குழந்தை பிறக்க, பூரித்துப்போனார்கள் எல்லோரும். ஒரு பெண், ஒரு பையன். அளவான குடும்பம். பிரசவம் நடந்த பக்கத்து ஊர் அரசாங்க மருத்துவமனை யிலேயே சிக்கல் இல்லாமல் குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷனும் முடிந்து விட்டது.  சிக்கலில்லாமல் முடிந்துவிட் டதாய் நினைத்துக்கொண்டிருந்த இடத் தில்தான் சிக்கல் தொடங்கியது. அங்கு தான் அந்த அழகான குடும்பத்தின் மீது சத்தமில்லாமல் இடிவிழுந்தது. 

குழந்தை பிறந்த மூன்றாவது நாளே ஆபரேஷன். காலை ஏழுமணிக்கே, வெறும் வயிற்றோடு, பச்சை கவுன் உடுத்தி செண்பகத்தோடு சேர்த்து எட்டு தாய்மார்கள் காத்திருந்தனர். ஆபரேஷன் மதியவேளைக்குள் முடிந்து எல்லோரும் மயக்கநிலையில் வார்டுக்கு அனுப்பப்பட்டார்கள்.அடுத்த மூன்றாவது நாள் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பும் போது தான் செண்பகத்திற்குள் பூகம்பம் அதிர்ந்தது. 

“இவருதாம்மா உனுக்கு ஆப்பரேசன் பண்ண டாக்டரு'' என்றாள் மொட்டச்சி. மருத்துவரைப் பார்த்ததுமே மயங்கிவிழுந்தாள் செண்பகம். பதறிப் போனார்கள். சோதித்த மருத்துவர் "அதிர்ச்சிதான்...பயப்பட ஒன்னுமில்ல' என்றார். தெளிந்து எழுந்த செண்பகம் உள்ளுக்குள் குமுறிப் போனாள். நடுத் தெருவில் அம்மணமாய் நிற்பதுபோல உடல் கூசியது. 

“ஒரு ஆம்பள டாக்டர் நமக்கு ஆப்ப ரேஷன் செஞ்சிகிறார். நம்ம ஒடம்ப அம்மணமா ஒரு ஆம்பள பாத்து... அய்யோ'' என்று நினைக்க நினைக்க உடல் தகித்தது அவளுக்கு. தாய்வீட் டிற்கு பிணம்போல வந்தாள். ஆரத்தி எடுத்ததும், உறவுகள் குழந்தையை வாரிக் கொஞ்சுவதும் எதுவுமே உறைக்காமல் கிடந்தாள்.   மொட்டச்சி புரியாமல் விழித்தாள். துருவித்துருவிக் கேட்டாலும் வாயைத் திறக்கவில்லை செண்பகம். கணவன், மாமியார், நாத்தனார் எல்லோருமே திகைத்தனர். 

காத்துக்கருப்பு தீண்டியிருக்கும் என்று திருநீறு பூசினர்.தேசிகாமணி பண்டிதர் வேப்பிலை மந்திரம் போட்டார். வடக்கு மலையானுக்கு மொட்டை அடிப்பதாய் காசு முடிந்து கட்டினாள் மொட்டச்சி. எதற்கும் தெளியவில்லை. பித்துப் பிடித் தவள் போலவே கிடந்தாள் செண்பகம். இடையிடையே பிதற்றவும் தொடங்கி னாள்.ஒருநாள் தூக்கத்தில் அலறினாள். 

“அய்யோ... அம்மணமா பாக்கறாங் களே...பாக்கறாங்களே...'' என்று செண்பகம் அலறியபோதுதான் விழித்துக்கொண்டாள் மொட்டச்சி. மகளின் தலையைத் தூக்கி மடிமீது வைத்து, முடியை நீவியபடி வாஞ்சை யோடு மொட்டச்சி பதமாய் கேட்க, ஓவென்று கதறினாள் செண்பகம். 

“ஆம்பள டாக்டரு என்ன அம்மணமா பார்த்து, ஆபரேசன் பண்ணிட்டாரே... ஒடம்பு கூசுதே... ஒடம்பு நெருப்பாட்டம் எரியுதே' என்று கதறினாள். 

சின்னவயதிலிருந்தே ஒதுங்கியே வளர்ந்தவள், காய்ச்சல் என்றால்கூட அரசாங்க மருத்துவமனையில் பெண் மருத்துவரிடம் தான் ஊசிபோட்டுக் கொள்வாள்.இவள் வயதுக்கு வந்த புதி தில் ஒருமுறை குளிர்காய்ச்சல் வந்தது. இரண்டு கம்பளிப்போர்வைகளைப் போர்த்தியும் தூக்கித்தூக்கிப் போட்டது உடம்பு. பக்கத்து சிறுநகரத்துக்கு அவச ரமாய் கூட்டிப் போனாள் மொட்டச்சி. அங்கிருந்த ஒரு தனியார் மருத்துவ மனையில் ஒரு ஆண் மருத்துவர் ஸ்டெத்தாஸ்கோப்பை இவள் மார்பின் மீது வைத்து, மூச்சை இழுத்துவிடச் சொன்னார். மார்பில் கம்பளிப்பூச்சி நெளிவதுபோல் இருந்தது செண்பகத் திற்கு. ஸ்டெத்தாஸ்கோப் மார்பில் நகர, நகர, அதை ஒரு ஆண் மருத்துவர் கையாள, இவளுக்கு கூசியது. ஊசி போட்ட மருத்துவர் மறுநாளும் வரச் சொன்னார். செத்தாலும் வரமாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டாள் தாயிடம். 

கர்ப்பிணியாக இருந்தபோதுகூட பெண் மருத்துவர்தான் இவளை கவனித்துக் கொண்டார். இரண்டு பிரசவங்களை யுமே பெண் மருத்துவர்கள்தான் பார்த் தனர். ஆபரேசனைக்கூட பெண் மருத் துவர்கள்தான் செய்வார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தாள் செண்ப கம். மயக்க மருந்து கொடுத்துவிட்ட தால் இவளுக்கு எதுவும் தெரியாமல் நடந்துவிட்டது. 

“எனுக்கு மயக்க மருந்து குட்த்து... ஆம்பள டாக்டரு எங் ஒடம்ப அம்மணமா பாத்துட்டாங்களே..'' என்று பிதற்றினாள். 

“உயிர காப்பாத்துற டாக்டருங்க கடவுளு மாதிரிமா... அவங்கள்ல ஆம்பள பொம்பள ஏது... எல்லாமே தெய்வம் இல்லியா கண்ணு'' என்றாள் மொட்டச்சி. 

“தெய்வம்னாக்கூட அது ஆம்பள தெய்வம்தானேம்மா?!'' என்றாள் செண்பகம்.  

அவளைப் பெற்ற தான்கூட செண்பகம் ஆளான பிறகு அவள் உடம்பை முழுதாகப் பார்த்ததில்லை என்பது மொட்டச்சிக்கு நினைவுக்கு வந்தது. 

“ஒலகத்துல எவ்ளவோ நடக்குதுறீ... ஒன்னுமே இல்லாத இதுக்குப்போயி இப்டி பேய் புட்சிக்கின மாரி கீறீயே செம்பகம்...உங்கொயந்த பால்குடிக் கும் போது உம்மார பாக்கறதில்லியா?'' 

“அது கொயந்தம்மா...டாக்டரு ஆம்பளயாச்சே'' 

இந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்குள் பரவியது. இதை விசித்திர மாகப் பேசியது ஊர். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா என வாய் மேல் விரலை வைத்து வியந்தது. 

“செம்பகம் இப்டிதாண்டி சின்னவய சுல நாங்கூட ரொம்ப கூச்சப்பட்டுகினு இருப்பேங்'' என்றது ராமம்மா கிழவி. 

“எங்க ஊட்டுக்காரர ஒருநாளுகூட மாருல கைவைக்கவே உடமாட்டேங். எனுக்கு மூனு கொயந்த பொறந்தப் பறம் ரெண்டு மாருக்கும் நடுவுல ஒரு கட்டி வந்திட்ச்சி. அசிங்கப்பட்டுகினு யாருகிட்டயும் சொல்லாம அப்டியே உட்டங். கட்டி பெரிசாயி, ஒடஞ்சி, புண்ணாயி சோத்துக்கை மார்ல உள்ளயே பொற வச்சிட்சி. உயிரு போறமாறி நோவு. அப்பதாங் ஒரு வைத்தியருகிட்ட சொன்னங். காட்டும்மா பாக்கலான்னாரு அவுரு. எனுக்கு ரொம்ப வெக்கமா இர்ந்திச்சி. என்ன உங் கொயந்தையா நெனச்சிகினு காட்டும்மா... இல்லேன்னா உயிருக்கே ஆபத்தா பூடும்னாரு. அப்போ உன்ன மாரிதான் நானும். வேற இன்னா பண்றது? அழுகிப்போயிருந்த மாரு சதய பேனாக்கத்தியால சீவிட்டு மருந்து வச்சி கட்டினாரு. அந்த வைத்தியரு அன்னிக்குப் பாத்து வைத்தியம் பண் ணலன்னா, இன்னிக்கி நான் செத்து மண்ணாயி நாப்பதம்பது வருசமாயி ருக்கும்'' என்றது ராமம்மா கிழவி. 

என்னதான் சமாதானம் சொன்னாலும் செண்பகத்தின் மனசு ஏற்கவில்லை. சின்னராசு ஆபரேஷன் செய்த மருத்துவரிடம் சொன்னான். 

“அடடா... அப்டியா... இந்த வட்டாரத் துக்கே நான் ஒருத்தன்தான் ஆப்பரே ஷன் பண்ணணும். இதுவரைக்கும் நாலாயிரம் பேருக்குமேல பண்ணி யிருப்பேன். அரசாங்கம் ஞாயமா இதுக்குன்னு தனியா பெண் டாக்டர் களை போடணும். ஆனா எங்க போடு றாங்க? பொதுவாவே தேவையான அளவு டாக்டருங்க இல்லாம, இருக்கிற வங்கள வெச்சி நோயாளிங்கள சமாளிக்கிறோம். ஆனா எப்பவுமே அம்மணமா இந்த ஆபரேஷனை பண்ணமாட்டோம். மேல ஒரு கவுன் போட்டுதான் பண்ணுவோம். மனசள வுல சிலரோட இயல்பு அப்படி இருக் கும். மெதுவா சொல்லி புரிய வைங்க. கொஞ்சநாள் போனா சரியா போயிடும்.'' என்றார் மருத்துவர். 

சரியாகப் போகவில்லை. சின்னராசு எவ்வளவோ சொல்லியும், இரவு பகல் எந்நேரமும் வெறித்துக் கிடந்தாள். கணவனைப் பார்த்தாலே பதறினாள். அவனிடம் பேசவே பயந்தாள். குழந் தைக்குப் பால்கொடுக்கக்கூட மறந்தாள். 

கணவன் வீட்டுக்குப் போனால் சரியாகி விடும் என்று ஐந்தாம்மாதம் குழந் தைக்கு கால் செயின், வெள்ளி அரணாக்கயிறு போட்டு தாய் வீட்டிலி ருந்து அனுப்பிவைத்தாள் மொட்டச்சி. ஆனால் அங்கும் அப்படியே கிடந்தாள். இரவில் கணவனை படுக்கையில் சேர்க்கவே இல்லை செண்பகம். இர வெல்லாம் தூங்காமல் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பாள்.குழந்தை கதறு வதைக்கூட கவனிக்கமாட்டாள். கண வன் வீட்டிற்குப் போன ஒருமாதம் கழித்து ஒருநாள் மதியம் தூக்கு மாட்டிக் கொண்டாள். அப்போது காப்பாற்றி விட்டனர். அதன்பிறகு ஊரே கூடி பாடம் சொன்னது. எதுவும் அவள் காதில் விழவில்லை. 

அடுத்த ஒரு மாதம் இப்படியேதான் நகர்ந்தது. சின்னராசு அவள் கூடவே இருந்தான். பயிரைக்கூட சரியாகக் கவனிக்காமல் இவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மொட்டச்சியும் பகலில் மாடு, பயிர் என்று அல்லாடி னாலும், இரவில் மகளுடனேயே படுத்துக்கொண்டாள். 

அன்று சின்னராசு பயிருக்கு உரம் வாங்க பக்கத்து ஊருக்குப் போன அந்த நேரத்தில் காட்டுப்பக்கம் போனாள் செண்பகம். குழந்தையை கோமதி பார்த்துக்கொண்டிருந்தாள். ஒதுங்கப்போகிறாளோ என்று நினைத்துக்கொண்டிருக்க, அங்கே ஒட்டந்தழையைப்பறித்து அங்கேயே கல்லில் அரைத்து விழுங்கிவிட்டு வீட்டுக்கு வந்தவள் நுரை தள்ளி மயங்கி விழுந்தாள். 

மருத்துவர் வைத்த கெடு முடிவதற் குள், மறுநாள் காலையிலேயே செண்பகத்தின் கதை முடிந்துபோனது. 

ஆறுமாதக் குழந்தையை மார்பில் அணைத்தபடி மாமியார் கதறிக் கொண்டிருக்க, மருத்துவமனை தரை யில் விழுந்து புரண்டு கொண்டிருந் தாள் மொட்டச்சி.மதிய வெயில் உக்கிரமாய் காய்ந்துகொண்டிருந்தது. உறவினர்கள் கும்பலாய் வெளியே பிரமை பிடித்ததுபோல் கிடக்க, குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது. 

பிணவறையின் உள்ளே மேஜைமேல் செண்பகத்தின் பிணம் கிடத்தப்பட்டி ருந்தது. கைகளில் உறைகளை மாட்டி யிருந்த உதவியாளர்கள் செண்பகத் தின் உடைகளைக் களைந்து அம்மணமாக்கி, வயிற்றைக் கிழிக்க, மருத்துவரின் முன் எந்த எதிர்ப்புமின்றி மல்லாந்து கிடந்தாள் செண்பகம். 

***

Pin It