காதல் வந்த பிறகு ஒருவர் முன்பு போல இருக்க முடியாது.

இருப்பதாக நம்புவது கக்கடைசி முத்தத்துக்கு ஏங்கும் சாமர்த்திய உதடு குவித்தல். முத்தங்களை வாங்கி கொண்டேயிருப்பது கூட தனிமனித அலட்டல் என்று சொல்லலாம். முத்தம் என்பது கொடுக்கப்படுவது எனும்போது கொக்கியில் தொங்கும் சட்டையில் எல்லாம் தூக்கணாங்குருவி கூடு கட்டும். நினைப்புக்கு நியதி ஏது. அவதிக்கு ஆச்சரியம் தான் ஏது.

சமீபத்தில் சொற்கள் அற்ற ரூமா இவானை தேடத் தொடங்கி விட்டாள்.

தொலைத்தவருக்கு தான் தேடலின் ஆர்வம் அதிகம் இருக்கும். தான் தொலைத்த அவனில்தான் தானும் தொலைந்துப் போயிருப்பதை ரூமா கடந்த வாரம் முழுக்க மிக கண்ணியமாக உணர்ந்ததால் கண்ணீர் சிந்துவதைக் கூட கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தாள்.

*

வேறு வழியில்லாத போது காதலிக்கத்தான் முடியும். காதல் போலொரு சாத்தானை பின் தொடர விட்டு ரசிப்பது தேவதைகளின் முக்கோண புத்திசாலித்தனம். கக்கடைசியில் தேவை எல்லாம் என்ன... சிறு குருவி வாய் திறந்து பசிக்கு ஏங்க... மறுகுருவி வாயில் ஊட்டும் சிறு காமத்தின் பிரபஞ்சம் தான்.

ரூமா... தேவதை வம்சத்தில்... கடைசி பிறவி இல்லை. மாநிறத்தில்.. மத்தியில் கொஞ்சம் தொப்பையோடு அலையும்... மத்திய தர கதாபாத்திரம். அடுத்த மூன்று மாதங்களில் அவள் வீட்டிலுள்ள கிழட்டு கட்டைகளும்... எவனோ ஒருவன் வீட்டு கிழட்டு கட்டைகளும் சேர்ந்து... காசு கட்டில் பீரோ கணிப்பொறி.. ஐ போன் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு சீதாலட்சுமி கல்யாண மண்டத்தில் திருமணத்தை நிச்சயித்து இருக்கிறார்கள்.

காதல் பற்றி பேசி பார்க்கலாம் என்றால்... ஸ்ட்ரைட்டா வீடு கட்டி வைத்தால் உள் நுழைந்து உக்கார்ந்து கொள்ளும் கேஸ்.. வர போகும் கணவன். முதல் பார்வையே மார் பார்த்த கம்பளி பூச்சி ஊரல் தான். அது அப்படி ஒன்றும் தவறில்லை. மார் காணாத மயிறு இருந்தால் என்ன… மாண்டால் என்ன...?

வேறு வழியில்லாமல் மண்டையைச் சொரிந்து கொண்டாள். வயது டிக்கியையும் தொப்பையையும் வளர்த்துக் கொண்டே போகிறது. வாழ்க்கை.. கையை மீறும் வளையலென ஓடி ஓடி தப்பித்துக் கொள்ள பார்க்கிறது. கேரட்டை நம்பி பிரயோஜனமில்லை. விரல் தேய்ந்தது பற்றி யாரும் தெரிந்து கொள்வதற்கு முன் வந்த வரை வழுக்கையாக இருந்தாலும்... வாழ்க்கையாகத்தான் பார்க்க வேண்டும்... என்று முடிவெடுத்து... சரி என சொல்லி விட்டாள்.

ஆனால் ரூமாவின் ஆழ்மனதில்.... எதுவோ எப்போதோ கீறி விட்ட காதல் என்ற அம்மணம் சொரூபக் கண்களோடு அவளை சுற்றி சுற்றி இழுத்துக் கொண்டே இருந்தது. காதலின் கூப்பாடு கயமுய மௌனங்களை அவளுள் நிரப்பிக் கொண்டே இருந்தது. சாகும் போது மறந்து விட காமம் நிறைய இருக்கும். ஆனால் சாகும் போது நினைத்து பார்க்க காதல் கொஞ்சமாவது வேண்டும். காதலின் தகிப்பில் ஊன் உருக உயிர் கரைய வைக்கும் அவன் முகம் படித்து அப்படியே வயல் வெளியில் மாயம் மேய படுத்துக் கிடக்க வேண்டும். ஆசை புல் வெளியில்... இச்சை சொட்டும்.. ஆதி திரவத்தில் உடல் நிரம்பிக் கிடக்க வேண்டும்.

அவள் புத்தியில் ஆடையற்ற ஈக்களின் ரீங்காரம்... தொடை தடவும் மாய விரல்களின் மினுமினுப்பாகவே இருந்தது.

தோழி துப்பி விட்டாள்.

"போடிப்.... புண்ணாக்கு.... இவ மூணு மாசம் மட்டும் லவ் பண்ணுவாளாம்.. மூணு மாசமும்.. உயிர் உடம்பு.. காமம் காதல்னு உருக வைப்பாளாம். உருகி நிப்பாளாம்... அப்பறம் மூணு மாசத்துக்கு அப்புறம் வீட்ல சொல்ற எரும மாட்டை கல்யாணம் பண்ணிட்டு போய்டுவாளாம். அப்போ லவ் பண்ணினவன் என்ன இளிச்சவாக் கூ... முட்டையா... எவன் ஒத்துக்குவான்... நீ உதை பட போற.. சரியான கிறுக்கு முண்டமா இருக்க... உன் ஆழ் மனசுல யாரோ நீ பேரழகினு சொல்லி உன்னை நம்ப வெச்சிருக்காங்க போல. டேட்டிங் மாதிரி கூட இல்ல... இது. இதெல்லாம் எங்க கொண்டு போயி விடுமோ.."

"நான் சொல்றது உனக்கு புரியவே இல்ல... காதலிக்கனும்... நிஜமா... உண்மையா... ஆழமா… திகட்டத் திகட்ட.... தித்திக்க... தித்திக்க... பாகக்காய் கசப்பு மாதிரி சில ஊடல்.... பார்த்ததும் பத்திக்கற மாதிரி சில கூடல்..."

"சரி காதலிச்சிட்டு அவனை விட்டுட்டு போனா அவன் எப்டி உன்ன விடுவான். எப்டி மறக்க முடியும்... அவன் அதை வெச்சு ஏதும் பிரச்னை பண்ணினா... எல்லாத்தையும் தாண்டி அவனை விட்டுட்டு இன்னொருத்தர் கல்யாணம் பண்றது அவனை ஏமாத்தற மாதிரிதான... இல்லனா ஒன்னு பண்ணு... இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு நீ சொல்ற மாதிரி காதலிச்சு காதலிக்கறவனையே கட்டிக்கோ...

"அதுக்கு ஆப்சன் இருந்தா நான் ஏன் இந்த கிறுக்குத்தனம் பண்ண போறேன்... அப்டி நடந்தா வீட்ல இருக்கற கிழட்டு கூமுட்டைங்க விஷம் குடிச்சு சாவேன்னு சொல்லுதுங்களே... நான் என்னதான் பண்றது... அவுங்க சொல்றபடி கேட்டு வாழ்ந்து தொலைப்போம்... அதே நேரம் எனக்கு காதல் பீல் வேணும்... "

"அப்டினா ஒன்னு பண்ணேன்... பேசாம கட்டிக்க போறவனையே காதலியேன்..."

"முயற்சி பண்ணேனே... அந்த முட்டாக்கூமுட்டை... முலையத்தான முதல்ல பார்த்தான்... என் கன்னத்துல மினுங்கற பருவ பாக்கலியே..."

"சரி.... என்னமோ பண்ணித் தொலை... ஆனா... இந்த டீலுக்கு யாரு ஒத்து வருவா..."

இருக்கவே இருக்கு.. மார்க் பக்கரின் முகநூல் முகமூடி. தேடுவோம்.

"நிறைய கிறுக்கன்கள்... கிறுக்கச்சிகள் இருக்கும் இடம்மா அது. புது ஜட்டி வாங்கினா கூட போடறதுக்கு முன்னால ஒரு போட்டோ எடுத்து போட்டுட்டு போட்டுக்கற லைக்ஸ் விரும்பிகள் இருக்கற இடத்துல நீ தேடற ஆள் இருப்பான்கிறயா..."

"மாத்தி யோசிக்கிறவன் எல்லா இடத்துலயும் இருப்பான்... நாம தான் மாத்தி யோசிச்சு அவனை கண்டு பிடிக்கணும்.. சரி நாளைக்கு பேசறேன் பாய்..." - தோழியின் அழைப்பைத் துண்டித்து விட்டு முகநூலில் மூஞ்சி நோக தேட ஆரம்பித்தாள் ரூமா.

*

தேடல் உள்ள உயிர்களுக்கே வாழ்வில் பசி இருக்கும்... நான்கு நாட்கள் தேடி அலுத்தபோது... தன்னையே பிணமாக்கி போட்டோ போட்டு யாரெல்லாம் வந்து ஆறுதல் சொல்கிறார்கள்.. கண்ணீர் அஞ்சலி ஓட்டுகிறார்கள்.. Rip போட்டு பிபி ஏத்துகிறார்கள் என்று சிரித்துக் கொண்டே கவனித்துக் கொண்டிருப்பவன் கொஞ்சம் ஒத்து வருவான் போல.. என்று மனதுக்குப் பட்டது.

நிறைய பேர் உண்மைத் தெரிந்து கொண்டு கமெண்டில் திட்ட ஆரம்பித்திருந்தார்கள்.

நீண்ட நேரம் யோசித்து விட்டு எழுதினாள்.

"நீ செத்ததை ஊரே காண்கிறது

நீ பிழைத்ததை நான் மட்டும் காண்கிறேன்" -டொயிங் என்று விழுந்த சத்தத்தில்... சொற்கள் இருந்தன.

கண்கள் விரிந்த எமோஜியோடு மெஸ்சேஞ்சரில் வந்திருந்தான்.

சிரிக்கும் பொம்மை சிலிர்த்துக் கொண்டே வந்து எட்டி பார்த்தது.

குட் மார்னிங்... இடம் மாறியது. குளிர் பிரதேசம் பிடிக்கும் என்பது வரை.. எல்லாமே ஒரு வாரத்தில்... நிகழ்ந்திருந்து. ஆணுக்கும் பெண்ணுக்குமான நிகழ்த்துக் கலை மிக லாவகமாக சரியாக கவ்விக் கொண்டு நாயின் புணர்ச்சி போல... மாட்டிக் கொண்டு விழிக்கும். திட்டமிட்டு... அல்லது விளையாட்டாக... அல்லது.. அதுவாக... காதல் எப்படி நிகழ்ந்தாலும்... ஒரு கட்டத்தில்... தான் வைத்த பொறியில் தானே மாட்டிக் கொள்ளும்.

"நான் இவ்ளோ சாப்ட் இல்ல.. இவான்... ஆனா உன்கிட்ட பேசும் போது.. இவ்ளோ அமைதி எப்படி வருதுன்னு தெரியல... உன்னோட ஓவியங்கள்... மிரட்டுது. உன்ன காதலிக்க ஆரம்பிச்சு தான்... உன்கிட்ட வந்தேன். ஆனா உன்ன காதலிச்சிட்டேன் தான் இருந்திருப்பேன் போல... வர்றதுக்கு.

புரிந்தாலும் புரியாது தான் இவானுக்கு. புரியாமைக்கு புரிந்து வைக்கும் ஆர்ப்பாட்டம் அவனிடம் இல்லை..

எல்லாவற்றையும் சொன்னாள். ஆனால் இந்த நிமிடம் உன்னை காதலிப்பது நிஜம் என்றாள். இது எதுவுமே காதல் என்ற பதார்த்தத்தில்... சேராத பச்சை மிளகாய் போல தான் இருந்தது. இதுவரை காதலுக்கு இப்படி ஒரு வரையறையை அவன் கேள்விப்பட்டதில்லை. ஆனாலும்.... காதலின் புதுமை.. காட்டாற்றில்... கப்பல் விடுவது போல கற்பனைக்கு வண்ணமிட்டு ஒழுகும் குழந்தையின் மூக்கு நுனியை ஒத்திருந்தது.

சரி என்றான்.

என்ன சரியா....

ம்ம்ம்ம்

மூணு மாசத்துக்கு அப்புறம்... உன்ன விட்டு போய்டுவேன்.

நானும் தான் போய்டுவேன்......

என்ன நீ ஏன் போற....

நீ போறதுக்கு ஒரு காரணம் இருக்கற மாதிரி நான் போறதுக்கு ஒரு காரணம் இருக்கும்தான...

"கிறுக்கர்கள் தனக்கான கிறுக்கர்களை தேடிப் பிடித்து விடுவார்கள்.. நிஜமாவே பயமாருக்கு.. அவன் கூட பார்த்து பழகு..." என்ற தோழியிடம்... "என்ன பார்த்து பழகு.. பாக்காம பழகு"ன்னுட்டு... என்ன... கூட்டிட்டு போய் மேட்டர் பண்ணிடுவான்னு தான சொல்ற,.. அப்டி நடந்தா அதுவும் காதலில் ஒரு பகுதிதான டோலி..." என்ற ரூமாவை என்ன வகையில் சேர்ப்பது..

தோழி... அன்றைய சாட்டிங்கை முடித்துக் கொண்டாள்.

புகைப்படம் மாற்றிக் கொண்டார்கள்.

"என்னை விட நீ 14 வருஷம் பெரியவன் இவான்... நீ சீக்கிரம் பொறந்திருக்கலாம்" என்று கொஞ்சினாள்.

"சீக்கிரம் பொறந்தா மட்டும் என்ன நீ என் கூடயேவா இருக்க போற..."

"வீட்ல ஒரு முறை பேசி பாருன்னு சொல்லவே மாட்டிக்கற இவான்.. என்னை எப்பவுமே கூடவே வெச்சிக்கணும்னு உனக்குத் தோணலயா...?"

"தோணுது தான்... ஆனா என்ன பண்ண... நீ காதலிக்க ஆரம்பிக்கும் போதே மூணு மாசம் தான் எல்லாம்னு சொல்லிட்ட. எனக்கு அதே மூணு மாசம் தான்... எல்லாம் யோசிச்சு தான் உன் காதலுக்கு ஓகே சொன்னேன். இப்போ வந்து கூடயே இருன்னு நான் கேட்டா அது காதலுக்கு அழகா..." என்று முத்தமிட்டான். முத்தத்துக்கு நடுவே எமோஜிகள் முழி பிதுங்கி நின்றது வாட்சப் வேதனை.

*

திடும்மென புது நம்பரில் இருந்து பேசுவாள். இரவு நள்ளிரவு அதிகாலை அந்திமாலை என்று எதுவும் அவளுக்கு இல்லை. நினைத்த நேரத்தில் அழைத்து கிசுகிசுப்பாள்.

"உன் பேர் சொல்லும் போதே... உச்சந்தலையில் ஒரு சில் இருக்கு பாரு இவான்... இது தான் காதலா. என்னை நினைச்சு நிறைய நேரம் எனக்கே பயமா இருந்திருக்கு. ஒரு மாதிரி கிறுக்குத்தனமா இருக்கேனோன்னு. ஆனா உன்ன மாதிரி ஒருத்தனை காதலிக்கத்தான் அவ்ளோ கிறுக்குத்தனமும் காத்திருட்டு இருந்துச்சு போல. நீ ஒன்னும் பயப்படாத......நான் தெளிவாத்தான் இருக்கேன்.

மூணு மாசம் தான் என் காதல் வாழ்க்கை. அதுக்கப்புறம் கல்யாணம்... குழந்தை... டிவி சீரியல்... இட்லி தோசை... சண்டே மட்டன் பிஷ்... நைட்டானா புருஷன் கூட மேட்டர்ன்னு அக்மார்க் ஒரு குடும்ப பெண்ணின் வாழ்க்கைக்குள்ள போய்டுவேன். நீயும் நீ சொன்ன மாதிரி உன் காரணத்துக்கு போயிருவதான. நான் ஏமாத்தினதா நீ பீல் பண்ணிடக் கூடாது.

அது இப்ப உன் மேல எனக்கு இருக்கற காதலை குறை சொன்ன மாதிரி ஆகிடும். மூணு மாசத்துக்கு அப்புறம் நான் எப்பவுமே உன் வாழ்க்கைக்குள்ள வர மாட்டேன் இவான். என் வாழ்க்கை இப்டி புதிர் மாதிரி ஆகிடுச்சு பார்த்தியா. கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைக்கு தான் கட்டி வைப்பேன்னு அப்பா அம்மாங்கற பூதங்கள் பண்ற அற்ப கலாட்டா அப்பிடி. அவுங்கள மீறி நான் என் இஷ்டத்துக்கு ஏதும் பண்ணிக்கிட்டா அது இது எல்லாத்தை விட கில்ட்டி பீல் அதிகம் குடுக்கும்...." என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்.

"ரூமா அழாத. அழும் போதை பழகிட்டா அப்புறம் அதுக்கு அடிக்ட் ஆகிடுவோம். சிரிச்சு பழகிக்கோ. அதுக்கு போதை கூட்டற மாதிரி இருக்கும்..."

"இப்டிதான்... பேசி பேசியே நீ மயக்கற. நீ எனக்காகவே காத்திட்டுருந்த மாதிரி இருக்கு இவான். இவ்ளோ சீக்கிரம் எப்படி இப்டி ஒட்டிக்கிட்டோம்... இன்னும் ஒரு முறை கூட நேர்ல பாக்கல. ஆனாலும் இவ்ளோ நெருக்கம் எப்பிடி...!"

"ஒப்பந்தம் போட்டுக்கிட்டு காதலை ஆரம்பிக்கலாம். ஆனால்... ஒப்பந்தம் போட்டுக்கிட்டு காதல் நடக்காது... பெண்ணே. நீ பேரழகி... உன் மேல என் அழுத்தம் தவிப்பு அன்பு காதல்... நெருக்கம் இயல்பு தான.."

"இதுவரை என்கிட்டே யாருமே ப்ரொபோஸ் பண்ணினது இல்ல... அப்டி ஒரு மயிறு வாழ்க்கைய வாழ்ந்துருக்கேன். கொஞ்சம் அழகா இருக்கேங்கிற திமிரு... யாரையும் ஏறெடுத்து பாக்கல. வழிய வந்து சுத்துவாங்கன்னு ஒரு செலிபிரிட்டி நினைப்பு. இந்த வாழ்க்கையோட ஆதாரத்துல மிதக்கற கொடுக்கல் வாங்கல்.. பத்தி ஒரு அறிவும் இல்ல.

அப்படி ஒரு கட்டுப்பெட்டி வாழ்க்கை தான் என் குடும்பம் மானம் மரியாதைங்கற பேர்ல எனக்கு கொடுத்துச்சு. கடகடன்னு வயசு போய்டுச்சு. அப்புறம் நினைச்சாலும் ஒருத்தனும் பாக்க மாட்டேங்கிறான். 20 வயசுல காதலிக்காத வாழ்க்கையெல்லாம் சபிக்கப்பட்டதுன்னு போக போக தெரிஞ்சுது. அதான்.. தப்போ சரியோ.. காதல் அனுபவம் கண்டிப்பா வேணுன்னு முடிவு பண்ணி தான்.. இப்டி... உன்ன கண்டு பிடிச்சேன். இப்ப வரை நீ நல்லவனா நல்லவன் மாதிரி நடிக்கறவனான்னு கூட எனக்குத் தெரியல. ஆனா நான் உன்கிட்ட உண்மையா தான் இருக்கேன்... இத்தனை வருஷம் காத்திருந்தது... எல்லாமே இப்டி ஒருத்தனை உருகி உருகி காதலிக்கத்தானா.."

அவனும் அவளின் அழைப்புக்கு ஏங்கித் தவித்தான். போதாமை இன்னும் கூடியது. பஞ்சு மிட்டாய்ல செஞ்ச மாதிரி ஒரு முகம்.. புசு புஸுன்னு ஓர் உடம்பு. இந்த மாதிரி ஒருத்தியை எப்படி மிஸ் பண்றது. கிசுகிசுத்த குரல்ல பேசும் போது காதுக்கெல்லாம் சிறகு முளைச்சு பறக்க ஆரம்பிச்சிடுது. செதுக்கி ஒட்டுன மாதிரி உதடும்.. கன்னமும். விட்டா செதுக்கிடும் போல கண்கள். காதலின் தீபம் அணையா பெரு விளக்கை மூளையில் ஏற்றி விட்டது. மலை உச்சி மினுமினுப்பு தனக்கு மட்டும் தெரிய ஆரம்பித்தது அவனுக்கு.

மூன்று மாதம் முடியும் தருவாயில்தான்... மிக தயக்கத்தோடும் அதே நேரம் உள்ளூறும் அவஸ்தையோடும் வீட்டுக்கு அழைத்து வந்தான்.

அலையடித்து ஆர்ப்பரிக்கும் மனதோடு... அவன் இருந்தான். அலைக்குள்ளே நகல் நுரைப்பது போல அவள் இருந்தாள்.

*

இதே அறை தான்.

அன்று நட்சத்திரம் பூத்துக் கிடந்த அறைக்குள் இன்று வெறும் இருட்டு. மெல்லத் துழாவும் பூனைக் கால்களால் 6 மாதங்கள் ஆன பின்னால் ஓர் இரவுக்கு தானே மெழுகுவர்த்தி போல... வீடு நுழைந்து விட்டாள்.

எங்கு தான் போயிருப்பான். ஏதோ காரண காரியம் என்றான். என்ன என்று அந்த மூன்று மாதத்தில் அவள் கேட்கவில்லை. என்ன என்றும் அவன் சொல்லவுமில்லை.

கண்களால் ஒளியூட்டி இளஞ்சூட்டு இறுக்கத்தை மெல்ல விலக்கினாள். அறைக்குள் அவன் இருப்பது போலவே ஒரு பிரமிப்பு. சுவரெல்லாம் கிறுக்கி வரைந்து வைத்திருந்த அவன் மாயத்தின் அரூபமோ என்று கூட பயந்தாள். பிசாசின் வழி வந்த பிரிதொரு நாயகனோ என்று எதுகை மோனை முனங்கியது.

இருள் விலகிய அந்த அறையில்... சுவரில்.. கட்டம் கட்டமாக வேறு வேறு முகம் வரையப் பட்டிருந்தது. எதிரே இருந்த வெற்றிடத்தில் அமர்ந்து வேற்றுக் கிரகத்தை நோக்குவது போல பார்த்துக் கொண்டே இருந்தாள். தானும் பார்க்கப்பட்டுக் கொண்டிருப்பதாக நம்பினாள்.

முதல் முத்தத்தை அவன் தரவும் இல்லை. இவள் பெறவும் இல்லை. ஒரே சந்திப்பு. இருளும் ஒளியும் சந்தித்துக் கொண்ட அந்த ஒரு நாள்.. பேச்சுக்கள் இல்லை. அவளை தன்னில் நிறைத்து வரைந்து கொண்டே இருந்தான். ஓவியமாய் வாழ்வதை.... உயிருக்குள் நரம்பில் வழியே வண்ணம் இழையோடுவதை உணர்ந்து உள்ளூர துளிர்த்தாள்.

காதலின் பெரும்பாடு இதுவாகத்தான் இருக்கும். காதல் என்பது சொல் அல்ல. வாக்கியம். இவான் என்ற தூர தேச சுவற்றில் ரூமா ஓர் ஓவியமானதை அவள் உடலாலும் விரும்பினாள். உயிராலும் ரசித்தாள். அணைத்துக் கொள்ள இயம்பிய போது... ஆசுவாசம் மூச்சுக்கு ஏங்கியது. கண்டிப்பாக இவன் ஒரு மாய தேசத்துக்காரன். இவன் பார்வையில்... இருளும் ஒளிர்கிறதே. இவன் சொற்களில்.. இனியும் அவள் வளர்கிறாளே. அவள் உள்ளம் வட்டமிட்ட குளத்தில் திட்டமிட்ட ஆகாயத்தின் வகைமையைக் கொண்டிருந்தது.

நினைக்க நினைக்க ஊர்ந்து செல்லும் நினைப்பின் வழியே இவான் ஓர் எலுமிச்சை வாசம். அந்த அறையில் எங்கிருந்தோ சுழன்று வரும் வாசத்துக்கு உதிரம் பூசி உலகம் மாற்றி விட்டவனின் சுவற்றில் உறைந்து நின்ற முகங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். திட்டமிட்ட கால பிளவுகள் அங்கே தெளிவாக கட்டமைப்பட்டிருக்கின்றன.

கண்கள் ஒவ்வொரு யுகமாய் அசைய... ஆராய... கண்கள் இன்னும் நெக்குருக... எழுந்து சென்று கிட்ட நின்று கவனிக்க ஆரம்பித்தாள்.

அறையின் இரவு சூடு... அவளின் இளமை சூடு... இரண்டுமென அவனின் அருகாமையைத் தேடி தேடி அலையும் அவளின் அதிகாரத் தனிமைக்கு அந்த சித்திரங்கள்... ஒளியூட்டி எழுச்சியூட்டின. ஒவ்வொரு முகத்துக்கு கீழேயும்.. ஒரு தேதி இருந்தது.

பிறப்பு இறப்பு போல. அவள் நெற்றிக்கு கண்கள் விரியக் கண்டாள். திடும்மென சுழலும் மின்விசிறியை பார்த்தமாதிரி ஒரு நினைவு தலை சுற்றிய கவனிப்பில் தானே சுற்றியது போன்ற அவதானிப்பு. அவள்.. இன்னும் அருகே சென்று சுவற்றை மனதுக்குள் விரித்துப் பாரத்தாள். அது ஒரு உலக வரை படம் போல...அவனைக் காட்டிக் கொடுக்க ஆரம்பித்தது. ஒவ்வொரு படத்துத்தின் கால அளவும் மூன்று மாதங்கள் தான் இருந்தன.

"இவானும் மூணு மாசம்னு தானே அடிக்கடி சொன்னான்... அப்டி என்ன மூணுமாசத்துல அவனுக்கு. அவனும் கல்யாணம் பண்ணிக்க போறானா... இல்ல... அவன் கல்யாணமெல்லாம் பண்ணிக்கற ஆள் இல்லையே... அவன் நகர்ந்துக்கிட்டே இருக்கற நந்தவனம் மாதிரிதான..."

ஒவ்வொரு முகமும் ஒரு கதைக்கானது. ஒரு வாழ்வுக்கானது. ஒரு தேவைக்கானது. ஒரு வெளிச்சத்துக்கானது.

ரூமா கண்கள் உருள... கண்டாள். காலம் உருள நின்றாள்.

*

என் ஆசைக்கு... என் சுயநலத்துக்கு... உன்கிட்ட பழகிட்டேன் இவான். காதல் சொல்லும் போது இயல்பா இருந்துச்சு. பிரியும் போது வலியா இருக்கு. உனக்கும் அப்படித்தான இருக்கும் என்றவளின் உள்ளங்கை பற்றி எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டு..." ரூமா... நிஜமா நான் தான் உனக்கு நன்றி சொல்லணும்.. என் வறண்ட வாழ்க்கைல ஒரு மூணு மாசம் நீ மலை உச்சி சிற்றோடையா வந்த.

ஏன்னா... வாழ்க்கைல எதுவோ போதாமையால தவிச்சிட்டு இருக்கறவன் நான். எனக்கு இந்த வாழ்வின் வடிவம் பத்தல. இங்க எல்லாமே இயலாமையின் நர்த்தன பிடிகள்தான்.. எனக்கு ஆச்சரியமூட்டும் நாட்கள் வேணும். அற்புதம் கொட்டும் பொழுதுகள் வேணும்.

அதான்... நான் ஒவ்வொரு மூணு மாசத்துக்கு ஒரு முறையும்....என் உடை......பாவனை......உடல் மொழி.. ன்னு மாத்திக்கிட்டே இருக்கறேன். வேற ஒரு ஆளா நான் மாறிக்கறேன். கடந்த மூணு மாசங்கள்ல நான் பழகுறவங்கள்ல யாரு என்னை ஆச்சரியப் படுத்தறாங்களோ... அற்புதப் படுத்தறாங்களோ... அவுங்களோட உடல்மொழியோடு... பாவனையோடு.. அங்கிருந்து நான் நகர்ந்துடுவேன்.

நான் மூணு மாசங்களுக்கு மேல ஒரு ஊர்ல இருக்கறது இல்ல. ஒரு வேலைல இருக்கறது இல்ல. ஒரு பேர்ல இருக்கறது இல்ல. நான் இன்னொருத்தரா தெரிஞ்சே என்னை மாத்திக்கறேன். ஒரு முறை ஒரு பிச்சைக்காரர் வாழ்வை கூட மூன்று மாசங்கள் வாழ்ந்திருக்கேன்.

இந்த உலகத்தில இன்னொருத்தர் சொல்ற எந்தவித கட்டுப்பாடுகளும் எனக்கு இதுவரைக்கும் இல்ல. இது நல்லாருக்கு. ஒரே மூஞ்சிய ஒரே மனநிலைய ஒரே உடல் மொழிய கண்ணாடில பார்த்து ரசிக்கிற சகிக்கற வாழ்க்கை முறை எனக்கு இல்லை.

ஒவ்வொரு மூணு மாசத்துக்கு நான் வேறொருவனா பிறக்கறேன். என் வாழ்க்கை ரெம்ப ஷார்ட். 90 நாட்கள்.. வாழ்வு தான். அது நல்லாருக்கு. 90 வது நாள் பழைய ஆள் செத்து மீண்டும் முதல் நாள் இன்னொரு புது ஆளா பிறந்துக்கறேன். அதன் தோற்றம் மறைவு தான்... இந்த சுவற்றுக் கல்லறைகள். அவ்வவ்போது வந்து மாண்டவர் பற்றியும் மீண்டவர் பற்றியும் பதித்து விட்டு போவது எல்லாமே ஜஸ்ட் அடையாளத்துக்கு தான்...."

"வெண்ணிற இரவுகளில் நட்சத்திரம் கொட்டும் என்பது நீ வந்த பிறகு தான் எனக்கு தெரிந்தது. நீ ஒரு பேரிரவு. உன் கண்களே ஒளி பாய்ச்சுகின்றன. நீ ஒரு கற்பனைச் சித்திரம் ரூமா.. உன்னை மனித பிறவின்னு எல்லாரும் நினைச்சிட்டு இருக்காங்க. உன் கிசுகிசு குரலில்.. ஒரு மயக்கம் இருக்கு. அதன் அர்த்தம் எனக்கு மட்டும் தான் தெரியும். என் வாழ்வின் போதாமைக்கு உன் நிழல் கூட... பளிங்கு மாளிகைதான். உன்னைப் பார்த்து முடியாத போதுதான் ஆகாயத்தின் முக்தி நிகழ்கிறது..." என்று ரூமாவின் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பிய 6 மாதங்கள் ஆகி விட்டன.

ஒவ்வொரு சித்திரமாய் புன்னகைத்து கதைச் சொல்லி.. கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிஜங்கள் பூமியில் உருள்கிறது என்று ஒற்றை கண் சிமிட்டி... ஒவ்வொரு சித்திரமும் அவளை பார்த்துக் கொண்டே வர... கடைசி சித்திரத்தில்... ரூமா வரையப்பட்டிருந்தாள்.

ரூமாவை உற்றுப் பார்த்த ரூமாவின் உடல்மொழி பாவனைக்கு ஆறு மாதங்களுக்கு முன் தன்னை மாற்றிக் கொண்ட இவான்-னிடம் யாராவது கேட்க வேண்டும்.

"வழக்கமாக 3 மாதங்களில் வேறு உருவத்துள் உன்னை புகுத்திக் கொள்ளும் நீ இந்த முறை ஏன் ரூமோவோடே நின்று விட்டாய்....?"

ரூமாவாய் மாறி விட்ட இவான்... இவானைத் தேடிக் கொண்டிருப்பது ரூமாவுக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை... கூடவே இவானுக்கும் தெரியுமா என்றும் தெரியவில்லை..!

- கவிஜி

Pin It