மலர் சரத்தின் வாட்டம் போல்
இனிய பழத்தின் அழுகலைப் போல்
எனக்கு மிக நெருக்கமான 
உன் வீட்டில் தான் அதுவும் நிகழ்ந்தது
காற்றின் இசைத்தட்டினை
காலம் கிழித்துக் கொண்டிருக்க
என் கதவுத் தட்டலில்
விழி பூத்து வரவேற்கிறாய்
அன்று என் கைகளில்
குரோட்டன்கள் பூத்திருந்தன
கண்கள் மௌனங்களை பூசி
ஆழ்ந்திருந்தன
ஒரு வெள்ளைப்புறா மட்டும்
தன் அலகுகளால்
இதழ்களை நீவி விட்டபடி
கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தது
உள்ளுக்குள்
ஏதேனும் வார்த்தைகளைக் கொண்டு
என்னைக் கலைக்க முயற்சிப்பதைத் தவிர
இந்த சிட்டுக் குருவிக்கென
என்ன செய்வாய்?
அதி நெரிசலான
பேருந்துப் படியில் தொடரும்
என் பயணத்திற்க் கிரங்கி
பெரும் பரிவோடு என்னை
விஷநாகமொன்று விழுங்கிச் செல்கிறது.

வெறி பிடித்த நாய்கள் 

என் வீட்டு பளிங்குத் தரையை
அசிங்க மாக்குகின்றன
தடித்த குரலெழுப்ப முனைகையில்
மரண பீதி
ஒற்றனைப் போல் அடைக்கிறது
நெஞ்சுக் குழியை
தப்பிக்கத் தவ்வும் எனது கால்களோ 
ஒரு பைத்தியக் குள்ளனைப் போல்
இடறி விழுகின்றன.
கருத்த மேசைக்கடியில்
மெய்விதிர்த்து ஒளிய யான்
தொடை நழுவுகின்றன கழிவுகள்.
நா விளாசி புணர்ந்த
இரக்கமற்ற ஞமலிகள் 
கோரைப் பற்களை நீட்டி
கொழுத்த என் மார்புச் சதைகளை
குதப்பிக் கொண்டு
வெளியேறிய பின்னும்
தலைக்கு மேல்
காளி
உக்கிரத்தில்
நர்த்தனம் ஆடுகிறாள்.