கடைமயிர் நீக்கச் சொன்ன பெருமாள்கோயில் பூசாரியின் குறியறுத்த சண்முகம் ஊர் திரும்பும் படலம்  

விடியலுக்கான சாத்தியக்கூறுகளிலிருந்த அந்த கருக்கல் நேரத்தில் வந்து நின்ற டவுன் பஸ்ஸிலிருந்து சண்முகம் தன் துணையுடனும் நிறையப் பொதிகளுடனும் இறங்கி தெற்கு நோக்கிப் பார்த்தான். இரவு ஒரு புதிராக விலகிப் போய்க் கொண்டிருந்தது. தலைக்கு மேலிருந்த வானம் நீங்கலாக மீதமெல்லாம் அவனுக்குப் புதிதாய்த் தோன்றியது. பஸ்ஸிலிருந்து அவனுடன் சில குடியானவர்கள் இறங்கி மேற்கு திசை நோக்கி வேகமாக எட்டுவைத்து நடக்கத் தொடங்கினர். பஸ்ஸ்டான்ட் டில் சுமைதூக்கும் குதுபுதீனோ சேட்டுவோ இருந்தால் நல்லதெனத் தோன்றியது சண்முகத்துக்கு, நாலாபுறமும் திரும்பிப் பார்த்தான். அதேநேரத்தில் தொத்தன் கடைக்குள்யிருந்து சாயாவை உறிஞ்சிய வாறு குதுபுதீனும், ரஷீயான் கடைமறைவில் பீடியை இழுத்தபடி சேட்டும், சண்முகத்தையும் அவனோடிருந்த ஜோடியையும் பொதி மூட்டைகளையும் குறுகுறுத்த கண்களுடன் பார்த்தனர்.

நீலகிரி மலையிலிருந்தும் கேரளத்து மலபார் பிரதேசத்திலிருந்தும் வந்திறங்கும் முதலாளிமார்களின் பட்டியல் இருவரிடமும் உண்டு. அவர்களில் பாதிக்குமேல் குதுபுதீனின் வாடிக்கையாளர்கள். எப்போது வந்திறங்குவார்கள் என்கிற தகவல் எல்லாம் முன்னதாகச் சேகரித்துக்கொண்டு தன் உருண்ட பூவிழுந்த கண்ணைச் சுழற்றிய படி குதுபுதீன் வந்து நிற்பான். அல்லது கடைகளில் பதுங்கி நின்று புகைத்திருப்பான். பஸ் வந்து நிற்பதற்குள் இரும்புக்கை மாயாவி போல அவனுடைய கைகள் மட்டும் நீண்டு சுமைகளை எடுத்துக் கொள்ளும். தப்பித் தவறிக்கூட அவனுடைய சுமைகள் சேட்டுக்குப் போய்விடாமல் காப்பாற்றிக் கொள்வதுதான் தொழில் சாமர்த்தியம், சேட்டு பலதரப்பட்ட ஆட்களின் சுமைகளையும் ஏந்திக்கொள்வான், பாரபட்சம் பார்ப்பதில்லை.

குதுபுதீன் அப்படியில்லை. முதலாளிகளுக்கு மட்டுமே சேவகம் செய்ப வன், எந்த நிலையிலும் கீழ்பட்டோரின் சுமைகளை அவன் தொடுவ தில்லை, ஆக அந்த கோட்பாட்டின்படி இப்போது இறங்கியுள்ள ஆசாமி தனக்கானவரில்லை சேட்டுக்குரியவன் என்று கணித்த பிறகு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டான். 

சுமைகள் அதிகமாக இருக்கிறது. எப்படியும் சேட்டுக்கு ஐந்து ரூபாயா வது தேறிவிடும். விடிந்து இறங்கியதும் போணி பண்ணிவிட்டான். தனக்கு யாராவது, தாடியை நீவிக் கொண்டே வந்து இறங்கினால்தான் உண்டு' என்னும் பதைபதைப்பிருந்தது குதுபுதீனுக்கு. மேலும் ஆசாமி புதிதாக இருப்பதால் எவரென அறிந்து கொள்ளும் முனைப்பிருந் தது. ஆராயும் பாங்குடன் அவன் தொத்தன் டீக்கடையை விட்டும் வெளியேறி சேட்டின் இயக்கத்தை கவனித்தான்.

சேட்டு சுரத்தில்லாமல் ஒருவித ஆயாசத்துடன் தயங்கி வந்து சண்முகத் தினருகில் நின்றான்.  இமைகளைக் குவித்து அவன் சண்முகத்தையும் அவனருகில் பைஜாமா சகிதமாய் நின்ற பெண்ணையும் பார்த்த பார் வையில் கூசிப்போய் நெளிந்து என்ன சேட்டூ... என்றான் சண்முகம். உரிமை கலந்த குரலாய் இருக்கவும் சேட்டு சற்று நிதானித்துப் பார் வையை இன்னும் கூர்மையாக்கினான். சேட்டுவை காலம் சிதைத்திருந் தது. நரையோடிப் போய் மெலிந்து பீடிப்புகை இழுப்பில் கன்னங்கள் இரண்டுபக்கமும் டொங்கு விழுந்திருந்தது. அதிகாலைப் பனியை அவ னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அடிக்கடி உடலை ஸ்ஸ்ஸ்... என்ற ஓசை தந்து குறுக்கிக்கொண்டான்.

சண்முகமும் அவனுடைய ஜோடிப்பொண்ணும் உடுப்புகளுக்கு மேலே நல்ல ஸ்வெட்டர் அணிந்து கதகதப்பாய் இருந்தனர். முன்னொரு காலத்தில் உருளைக் கட்டையைப் போல உடம்பை வைத்திருந்தவன் சேட்டு, வந்து நின்றானானால் தாராசிங்கைப் போல இருப்பான் என்று அய்யன் துருத்தி அடிக்கடி சொல்லக்கேட்டதுண்டு. சண்முகமும் அறிவான். சேட்டுவின் பராக்கிரமங்களை, ஏழெட்டு வயதிலிருந்தே கண்டதைச் சுமந்த உடம்பல்லவா, மாட்டிறைச்சியானால் ஒற்றை ஆளாயிருந்து ஒரு கிலோ உண்பான். அவன் மனைவி கணீயூர், கடத்தூர் பக்கமிருந்து வந்தவள். கஞ்சி தண்ணி விஷயத்தில் கஞ்ச மான கஞ்சம். புளிச்சாறு காய்ச்சினால் பொழுதெல்லாம் ஓட்டி நான்கு நாட்களுக்கு அதையே சுண்டக்காய்ச்சி வைப்பாள். தொட்டுக்க ஒன்று மிருக்காது, சேட்டு சுமைதூக்கும் தன் விரல்களைத்தான் கடித்துக் கொள்ளவேண்டும். காசு காசு என்று அவள் விரல்கள் சதா கணவ னின் சட்டைப்பையை பிறாண்டிக் கொண்டிருக்குமே தவிர பரிவாக ஊர்ந்ததில்லை ஒரு போதும். பொதி சுமந்த கழுதை தண்ணிக்கு வந்து நின்றால் பொச்சைச் சேத்தி உதைத்த மாதிரியிருக்கும் சேட்டுக்கு.

பொறுத்துப் பார்த்த சேட்டு பிறரிடம் புலம்புவதை நிறுத்திவிட்டு சுண் ணாம்புக் காளவாயில் உழன்றுகொண்டிருந்த ஒட்டச்சி தாலியறுத்த மாரியம்மாளை ஏற்பாடு செய்துகொண்டான். அவளும் சாதாரண மில்லை. எடுபட்டவள்தான். சுமைக்கூலியில் தாய்வீட்டுக்கும், செத்துப் போன கணவனின் தம்பிக்கும் தந்தது போக மீதியை சேட்டுக்கு ஆக்கிப் போட்டாள். கைப்பக்குவம் அப்படி ஒன்றும் பிரமாதமில்லை, ஆனால் உப்பை, உறைப்பைக் கூட்டி ஜாலக் பண்ணி சேட்டுவைத் தலையாட்ட வைத்துவிடுவாள். படுக்கையிலும் மோசமில்லை, காந்தார முலை களில் மயங்கித்தான் சேட்டு சுமைகளை அங்கே இறக்கி வைத்ததே. ஒரே உடம்பில் சலித்திருந்தவனுக்கு மாற்று உடம்பு அதுவும் அயல் இனம் தாது உற்பத்தியை அதிகரித்துக்கொடுத்தது. என்ன ஒரே ஒரு விஷயத்தில் மாரியம்மாளிடம் அவன் பருப்பு வேகவில்லை.

மாரியம்மாளை அவள் கொளுந்தனிடமிருந்தும் தாய்வீட்டிலிருந்தும் பிரித்தெடுத்து தனதாக்கிக்கொள்ள அவன் கைக்கொண்ட முயற்சி அவளை இஸ்லாத்துக்குள் இழுத்து வரவேண்டும் ஊரறிய ரெண்டாந் தாரமாய் நிக்காஹ் செய்துகொண்டு ஜனாப் ஜனாபாக்களாக வாழ வேண்டும். ஒரு காஃபிரை இஸ்லாத்துக்கு அழைத்து வந்தால் ஹாஜ் புனித யாத்திரை போய்த்திரும்பிய நன்மைகிட்டும் எதுவும் நிகழ்ந்தேற வில்லை. சேட்டு ராத்திரி நேரங்களில் மாரியம்மாளிடம் இதற்கான மந்திரங்களை பிரயோகித்துப் பார்த்தான். இந்தப் பரந்த மொகத்துக்கு பொட்டு கண்றாவியெல்லா அழிச்சுப்போட்டு தலைல சீல போட்டு புர்கா பொத்தி நடந்தீன்டா அசல் துலுக்கச்சி தோத்துப்போவா. இந்த ஒட்டத் தெருவைவிட்டு அங்குட்டு வடக்க, மேற்க வீடு மாத்தி போயர்லாம். கை யெல்லாம் பொத்துப் போறமாதிரி சுண்ணாம்புக்கல்லு ஒடைக்கத் தேவையில்ல, பொட்டாட்ட நீ வீட்டுக்குள்ளயே இருக்கலாம். நா சம்பாதிச்சுப் போட்றீங் என்று ஆசை காட்டிப் பார்த்தான். அவள் மசிய வில்லை. அட நீ வேற ஏ ஓயாம கத்திகிட்டு, ஆத்தா என்னொடம்புக் குள்ளேயே இருக்காக. அதுதேம் பேரே மாரியம்மான்டு வச்சுருக்கறது, இப்பவும் ஆத்தாள நெனச்சீன்டா நா அவுகளா மாறிப் போயிருவீ. அது என்ன சங்குதின்டு ஒனக்குத் தெரியாது. செத்துப்போன எம்புருஷேந் தண்டவாணியக் கேட்டாத் தெரியிம் என்றவள் கூந்தலை அவிழித்து கண்களை வெறித்து கை கால்களை ஒரு மாதிரியாக முறுக்கிக் காட்டவும் அடங்கி விட்டான்சேட்டு, அத்துடன் அவளிடம் இஸ்லாத்துக்கு மாறும் பேச்சை எடுப்பதில்லை.

என்ன சேட்டு என்னிய அடையாளந் தெரியிலியா? இறந்த காலத்தி லிருந்து திரும்பியிருந்த சண்முகம் கேட்டான்.

எனக்கு நெகால் கெடைக்கிலியே தம்பி. வயிசாச்சு. கண்ணு மங்கிப்போச்சு...

ஆம்பிள்ளைக்கு நாண்டுகிட்டு அந்தப்பக்கமாகத் திரும்பி நின்ற பைஜாமாப்போட்ட சண்முகத்தின் இணை இப்போது மெல்லத் திரும்பி சேட்டுவைப் பார்த்தது. வெகுநேரமாக தொத்தன் கடை வெளி மறைப்பிலிருந்து விழுங்குவதைப் போல அவளையே கவனித்துக் கொண்டி ருந்த பூவிழுந்த கண் அப்போதுதான் இமைத்தது. ஆய்வின் முடிவில் குதுபுதீனின் மனம் இவ யாரோ பட்டாணிச்சியாட்டவுல இருக்குது என்று கணித்தது.

அஞ்சு வயிசுல ஒன்ட்ட அரையணாவுக்குப் பொட்டி தூக்குன ஆளு சேட்டு... ஞாவகமில்லியா... புருவத்தைச் சுருக்கினான் சேட்டு. அரை யணா வாங்கி கொடிக்காப்புளிக் கூறு அள்ளி வீதி வீதியாகத் தின்றபடி நடந்த தடயங்கள் சண்முகத்தின் ஞாபகத்தில் பதிந்திருந்தது.

துருத்தி மகனா? ஆச்சரியத்தில் கண்கள் விரிந்து நின்றன.

பாரப்பா நெடுநெடுண்டு வளந்து எத்தாஞ்சோடு ஆயிட்ட. எங்கியோ வட மாகாணத்துக்குப் போயிட்டியாம்ல. ஒங்கப்பனுக்கு எதுங்க காசு பணமனுப்புவியா? இது யார்றா? என் சம்சாரம் சேட்டு

என்ன துளுக்கக் குட்டியாட்ட இருக்குது? நாணம் படர்ந்த சண்முகத் தின் முகத்தில் பெருமிதம் இருந்தது. ஆமா சேட்டு...

அசலூரா?

சொந்த ஊரு இந்தப் புள்ளைக்கி சேலத்துப் பக்கம். கொஞ்ச நாளைக்கி மின்னாடி யேவாரத்துக்காக பம்பாய்க்கி வந்தாங்க. நா அங்கதான கட வச்சுருந்தீ. தமிழ்நாட்டுக் காரங்கறதால வீட்டுக்குப் போக வர பழக்கம் அப்புடி இஷ்டமாகி நிக்கா பண்ணியாச்சு...

அதெப்புடி அவ்வளவ் சுலவமா கலியாணம் பண்ணிக் குடுத்துட்டாங்களா?  இசுலாமானவுங்கங்கிற?

நம்முலும் சேந்துட்டம்ல...

ம்....?

நானும் மாறிக்கிட்டன்ல...

இஸ்லாத்துக்கா?

ஆமா சேட்டு... கலிமா சொல்லி கத்னா பண்ணி... வேகமாக சண்முகத்தின் கை அவன் அணிந்திருந்த முழுக்கால் ட்ரவுசரின் முக்கியமான பாகத்துக்குச் செல்லவும் சேட்டு பதறிப்போனான்.

டே... டே... வேணாம், வேணாம், நீ சொன்னா நா நம்பிக்கறேன்...

இல்ல சேட்டு கத்னான்னு சொன்னவுன்ன என்னமோ கை தானா அந்தப் பக்கம் போயிருது...

அதென்ன கத்னா கித்னான்டுக்குட்டு. நம்மூர் பாஷையில மார்க்க கல்யாணம்னு சொல்ரா...

அப்புடீ பழக்கமாயிருச்சு சேட்டு...

புள்ளக்கிப் பேரென்ன?

நர்கீஸ் ஸ்ஸ்...

பட்டாணியா? சண்முகம் முகம் மாறினான். சேட்டு அதற்கு அத்தனை அழுத்தம் கொடுத்துக் கேட்டிருக்கத் தேவையில்லை என்று கருதினான். திரும்பி நின்ற தன் பீவியைப் பார்த்துக் கொண்டான். பட்டாணி என்கிற வார்த்தை அவளைக் காயப்படுத்தியிருக்கக் கூடுமென நினைத்தான் பிறகு சுதாரித்தவாறு  உர்து ஸ்பீக்கிங் என்றான் படு ஸ்டைலாக ம்... உருதுதான.. அதுதேம் பட்டாணி.. தக்னி... சேட்டு மீண்டும் அவலமாக வார்த்தைகளை அழுத்தினான். அதில் வெளிப்பட்ட ஒவ்வாமை சண்மு கத்தை எரிச்சலுற வைத்தது. பொழுது முழுவதுமாக விடிந்திருந்தது. டவுன் பஸ் ஒரு சிறிய அலறலுடன் புறப்பட்டது. மளிகைக் கடைக்காரர் கள் சிறுவியாபாரிகளில் ஒரு சிலர் பஸ்ஸில் தூக்கக் கலக்கத்துடனும் மங்கிய முகங்களுடனும் அமர்ந்திருந்தனர். ஸ்டேஷனிலிருந்து அடி கொடுப்பதில் பிரசித்தி பெற்ற ரைட்டர் குமரவேல் வெளியேறி மப்ளரை தலைக்குக் கட்டிக்கொண்டு சைக்கிளில் அமர்ந்து குடியிருப்பை நோக்கிச் செலுத்தினார். குறுகிய சந்துகளிலிருந்து பால்காரர்கள் கேன் களுடன் வெளிப்பட்டனர். காகங்களும் பறவையினங்களும் கூவலு டன் மரங்களிலிருந்து விடைபெற்றன. நீண்ட தார்ச்சாலை பனி போர்த்தி ஈரப்பிசுபிசுப்புடனிருந்தது. முதல் பஸ்ஸைத் தவறவிட்ட சோகத்துடன் ஒருவர் டீக்கடைக்குள் தஞ்சம் புகுந்தார். நெஞ்சோடு கைகளை இறுகக் கட்டிக்கொண்டு குளியல் நிமித்தம் டெய்லர் யூசுப் ஆறு நோக்கி நடந்து கொண்டிருந்தார். பத்திர ஆபீஸ் திண்ணையில் யாரோ ஒருவர் சுருண்டு படுத்திருந்தது தெரிந்தது, தரையெங்கிலும் பஸ் டிக்கெட்டுகள், கரிந்த பீடித்துண்டுகள், தீக்குச்சிகள், வெற்றிலை எச்சில் கள் விரவிக்கிடந்தது. குருகுலத்தில் பிரார்த்தனை தொடங்கியதன் அடையாளமாக நல்லிணக்கப் பாடல்கள் ஒலிபரப்பாயின.

சண்முகம் பெருமாள்கோயிலிருக்கும் திசையை ஒருவிதமான பதைப்பு டன் பார்த்துக்கொண்டான். சேட்டு அந்த விவகாரத்தைக் குறித்து எதுவும் கேட்காதது அவனுக்கு சமாதானமாக இருந்தது. சேட்டு மட்டு மில்லை பெரும்பாலானவர்கள்  மறந்திருக்கக்கூடும். அதையே அவ னும் விரும்பினான். முகம் பார்த்தால் நினைவுக்கு வந்துவிடும் முக்கியத் துவம் வாய்ந்த சம்பவம்தான். கால இடைவெளிகள் நீளமாகவும், சண்முகத்தின் தோற்றம் வெகுவாக மாறுபட்டுமிருந்தது அவனுக்கே நல்லதாகப்போயிற்று. பட்டுப் பழகியவர்கள் கூர்ந்து கவனித்தால் கண்டுபிடித்து விடலாம்தான். ஆனால் போகிறபோக்கில் எவராலும் அடையாளங் காணமுடியாத அளவு சண்முகம் வளர்ந்திருந்தான். ஒடிசலான அவனுடைய பழைய உடல்வாகு முழுக்க மாறியிருந்தது. சதை போட்டு உருண்டு திரண்டிருந்தான். பம்பாய் பெரு நகரத்தின் நாகரீகக் களை சிகையிலும், உடையிலும் படிந்திருந்தது. மெல்லிய தாடி வளர்த்து அதைப் பாங்காக ஒதுக்கியிருந்தான். பெருமாள் கோயில் பூசாரியே எதிரில் வந்தாலும் ஆபத்தில்லை என்கிற அளவில் தான் நிலைமை இருந்தது.

என்ன இதெல்லாம் தூக்கிகீட்டு வர்றியா சேட்டு...? குரலை உச்ச ஸ்தாயிக்கு மாற்றி அதிகாரமாகப் போட்டான் பட்டாணி கிட்டாணி என்கிற இளப்பமெல்லாம் ஆகாது. நீ சுமப்பவன், நான் அதற்குரிய கூலியைக் கொடுப்பவன். மரியாதைக்கு நட என்னும் தொனி அதிலி ருந்தது. சேட்டுக்கு அது புரிந்தது. சாகும்வரை சுமக்கச் சபிக்கப்பட்ட வன். சுமந்துதான் தீரவேண்டம். வேண்டாம் போ என்று குதுபுதீனைப் போல அவனால் விடமுடியாது. விட்டால் ஐந்து ரூபாய் சுளையாகப் போய்விடும். ஐந்து ரூபாயைக் கொண்டு ஒரு நாளையே கடத்தலாம். இன்றைக்கெல்லாம் வேறு சுமைகளை எதிர்பார்த்து பஜாரில் கால் கடுக்கக் காத்திருக்கத் தேவையில்லை.

மீங்காரத் தெருவுக்குத்தானா? சேட்டு இயல்பாகத்தான் கேட்டுவைத் தான். சண்முகத்துக்கு அந்தக் கேள்வியும் ஏனோ படுத்தியது. மீண்டும் பைஜாமா அணிந்த தன் மனைவியைப் பார்த்துக் கொண்டான்.

வேற எங்க சக்கிலி தெருவுக்கா போவாங்க? என்ன சேட்டு தெரியாத மாதிரி கேக்குற?

அட கேட்டனப்பா, ஒனக்கென்ன பொசுக்குப் பொசுக்குன்டு கோவம் வருது?

செரி... செரி.. எடு.., சேட்டு அத்தனை சுமைகளையும் லாவகமாக இரு கைகளுக்குள் உரித்தாக்கிக்  கொண்டு நடக்கத் தொடங்கினான்.

நர்க்கி போலம் என்றான் துணையைப் பார்த்து. அவள் வந்து அவனின் கைக்குள் தன் கையைப் பிணைத்துக் கொள்ள இருவரும் நடந்தனர்.

ஊருக்குள்ள வரம்போது உடுப்ப மாத்தி ஒரு சீலயக்கீலயக் கட்டிக்கிட்டு வரலாம்ல. வெள்ளென வந்துட்டீங்க அதனால பரவாயில்ல, நல்ல பகல் நேரம்னா நாய் கொரைக்கிம்...

சேட்டு சாதாரணமாக சொல்லிக்கொண்டே சுமைகளுடன் நடந்தான். சண்முகத்துக்கு எரிச்சலான எரிச்சல். தன்னைத்ன் சொல்கிறான் என நர்கீசுக்கும் தெரிந்தது. இப்போதும் தர்ம சங்கடத்துடன் அவளைப் பார்த்தான் சண்முகம். அவள் கோபத்தை வெளிக்காட்டாமல் சூழ் நிலையை இயல்பாக்க முயற்சித்தாள். முன்னே சுமைகளுடன் நடக் கும் சேட்டுவைக் கைகாட்டி புட்டா என்றாள். புட்டா என்றால் உருது மொழியில் கிழவன் என அறிந்து வைத்திருந்ததால் அவனுக்கு அவளுடன் சேர்ந்து சிரிக்க வசதியாயிற்று. போஸ்ட் ஆபிஸ் கடந்து பொன்னானி வீடு, மைசூர் ஷேக் வீடு, நடந்து மாரியம்மன் கோவில் வந்துவிட்டது. கோவிலை எடுத்துக் கட்டி சிற்ப வேலைப்பாடுகள் செய்து வர்ணம் பூசி சுற்றுச் சுவரெழுப்பி நிறைய வேலைகள் நடந்திருந்தன. நவீனமாக்கப்பட்டிருந்த கோவிலை பிரமிப்புடன் பார்த்தான் சண்முகம். அத்தனை ஈர்ப்பில்லை அவனுக்கு. இது என்ன கோட்டை எல்லாம் எழுப்பி அம்மனை சிறை வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தான். வெட்டவெளியில் புழுதி மண் கலங்க ஆத்தா ரௌத்ரத்துடன் நின்றால் தனி அழகுதான். ஒற்றை அகல் விளக்கு மட்டும் எரியும். அதுவே பேரம்சம். எல்லாவற்றையும் உள்ளூர் தனவந்தர்கள் உபய விளம்பரத் துக்காக கலைத்து போட்டுவிட்டார்கள். கதவுக்கு நேராக நின்று அம்மனை ஒரு வினாடி பார்த்துவிடத் தோன்றியது. பைஜாமா அவனையே கண்காணித்தபடி வந்ததும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு எதிரே வானத்தை முட்டிக் கொண்டு நின்ற பள்ளிவாசல் மினார்கள் இரண்டையும் அவளுக்குக் காட்டினான். அதிசயித்து நின்று கவனித்தாள் நர்கீஸ்.

சுத்து வட்டாரத்துலயே ரெம்ப பேமஸான பள்ளிவாச. கட்டி நூறுவருஷத்துக்கு மேல ஆச்சு...

ம் ஹூம் ... ஆமா... இந்த பக்கம் பஜார் வரைக்கிம் அந்தப் பக்கம் தெக்குத் தெரு வரைக்கிம் பரவிக் கெடக்குது. பெரிய்ய பள்ளிவாச. உள்ளுக்குப் போய் பாத்தீன்னா ஆச்சரியப்படுவே... சலவக் கல்லால கட்டுனது. பெரிய்ய ஹவுஜ் இருக்குது. அதுல ஏகப்பட்ட மீனுங்க... கபுர்ஸ்தான் பாத்தீன்னா வனம் மாதிரி  இருக்கும். சின்ன வயிசில நானும் எஞ்சினேகிதன் நைனாவும் இந்த மினாருக்கு மேல போயிருக்கம் படியெல்லாம் இருக்குது...

சண்முகம் விதந்தோத நர்கீஸ் மீண்டும் மீண்டும் அந்த உயரமான மினார்களையே பார்த்து நின்றாள்.

ஜின்னு கல்லெடுத்துக் குடுத்து கட்டுன பள்ளிவாசலாக்கும் அவன் கூடுதல் தகவல் தந்தான். ஆனால் அதையே அவள் ரசிக்கவில்லை எனத் தெரிந்தது.

என்ன எந்தப் பள்ளிய எடுத்தாலும் ஜின்னு கட்டுனது ஜின்னு கட்டுனதுங்கறீங்க. தமிழ்நாட்டுல எந்தப் பள்ளி வாசலயும் மனுஷன் கட்டலபோல இருக்குதே... சண்முகம் அவளுடைய இந்த நேரடித் தாக்குதலை எதிர்பார்க்காததால் சுருண்டு போனான். மேற்கொண்டு பேசினால் எசகுபிசகாகி விடுமெனத் தோன்றியது. ஜின்னு கட்டிய பள்ளிவாசல் என்று சொன்னால் எல்லோரும் வாய் பிளந்து கேட்கிறவர் களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஜின்னை வசியப்படுத்தி மாய வேலைகள் செய்த காட்டிய ஹஜிரத்துகள் ஊரில் இருந்திருக்கிறார்கள். ஜின் என்றால் அந்த சொல்லுக்கு அஞ்சி கட்டுப்படுகிறவர்களைத்தான் சண்முகம் அறிந்திருக்கிறான். ஏனெனில் அது மறைவான சக்தி என்பது துலக்கம். முதல் முறையாக ஒரு மாற்றுக் குரலை தன் மனைவியிடமிருந்தே கேட்கவும் அவனுக்கு ஜின் இனத்தின் மீதே கேள்விகள் எழுந்தன. இதுவல்ல சந்தர்ப்பம் என்று முடிவு செய்து கொண்டவாறு அவளிடம் புன்னகைத்து வைத்தான். கிழக்குப் பக்க மாகத் திரும்பி இருவரும் மீங்காரத் தெருவுக்குள் நுழைந்தனர். சேட்டு  சுமைகளை இறக்கி வந்து எதிரில் நின்றான். நர்கிஸ் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள். சேட்டுவின் தலை குனிந்தே இருந்தது. சண்முகம் ஏற்கனவே எடுத்து மடித்து வைத்திருந்த ஐந்து ரூபாய்த் தாளை சேட்டின் கைகளில் திணித்தான். சண்முகத் துக்கு அவன்மேல் கோபமிருந்தது. ஆனால் அவனை சீண்டக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான். பால்யகாலப் பாசம். அரையணாக் களும் கொடிக்காப்புளியும சாகும் வரைக்கும் மறக்காத விஷயங்கள். சேட்டுவின் குதர்க்கமான பேச்சுகள் இந்த ஊருக்கானவை. குசும்பும் குதர்க்கமும் கிண்டலும் கேலியும் இந்த மனிதர்களின் அடையாளங்கள் என உணர்ந்திருந்தான் சண்முகம். எனவே சேட்டுவுக்கு விடை கொடுத்துவிட்டு நர்கீசுடன் பரவசமான மனநிலையில் தெருவுக்குள் இறங்கி நடந்தான்.

நாலு எட்டு வைத்தவுடன்  தெரு அப்படியேதானிருக்கிறது என்று உணர்ந்தான். அதே பழமை, அதே வீச்சம் மனிதர்களும் அதே அழுக்குப்படிந்த கொச்சையான மனிதர்கள்தான். ஒரே விளக்குக் கம்பம்தான் இன்னமும்.

- கீரனூர் ஜாகிர்ராஜா

Pin It