kamil zvelebil

                அயல்நாட்டில் பிறந்து, தமிழுக்கும் திராவிட இயலுக்கும் தொண்டாற்றிய சிறந்த அறிஞர்களில் ஒருவர் பேராசிரியர் முனைவர் கமில் வாக்லேவ் சுவெலபில்.

                அய்ரோப்பிய நாடான செக்கோலோவாகியாவின் ப்ரேக் என்னும் நகரில், 1927 நவம்பரில் 17-ல் பிறந்தார், கமில் சுவெலபில்; தந்தை கமில் சுவெலபில், தாயார் மரியம்மா ஆவார்.

                ப்ரேக் (Prague) நகரில் உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் (Charles University) 1946 முதல் 1952 வரை ஆறு ஆண்டுகள் பயின்றார்.  இந்திய இயல்,  ஆங்கில மொழி, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.  மேலும், சமஸ்கிருதம், ஆங்கிலம், தத்துவம் ஆகியவற்றில் ஆய்வு செய்து, முனைவர் (Ph.D.) பட்டத்தை 1952-ல்  தமது இருபத்தைந்தாவது வயதில் பெற்றார்.

                தமிழகத்திற்கு வருகை புரிந்து தமிழ்மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் கமில் சுவெலபில் நன்கு கற்றார்.  தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வரதராசனார் முதலிய தமிழறிஞர்களிடம் பயின்றார்.  திராவிட மொழி அறிவியலை ஆய்ந்து, 1959-ஆம் ஆண்டு இரண்டாவது முனைவர் பட்டத்தைப் பெற்றார். 

                திராவிட மொழிகளின் ஆய்வுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் பிரான்சிசு எல்லிசு, கால்டுவெல் முதலிய அறிஞர்கள்.  அவர்களையடுத்து திராவிட மொழி ஆய்வுகளை முன்னெடுத்துச் சென்ற அயல்நாட்டவர்கள் எமனோ, பர்ரோ (Burrow) முதலியோர்.  ஏமனோவிடம் பயிலும் வாய்ப்பை கமில் சுவெலபில் பெற்றார்.  தமது முன்னோர்களை அடியொற்றி, திராவிடமொழி இயலை மேம்படுத்தினார்.  அத்துடன் தமிழ் இலக்கியம், மரபு, பண்பாடு ஆகியவற்றையும் நன்கு கற்றறிந்தார்.  தமது எழுத்தின் மூலம் ஆய்வுகளை உலகம் அறிந்திடச் செய்தார்.  நூல்கள், கட்டுரைகள், திறனாய்வுகள், சிறந்த மொழிபெயர்ப்புகள் ஆகியன அவரது எழுத்துக்களில் அடங்கும்.

                ‘தமிழ் இலக்கியப் பேரகராதி’ (Lexicon of Tamil Literature), ‘திராவிட மொழிகள் ஓர் அறிமுகம்’ (Dravidian Linguistics: An Introduction), ‘தமிழ் இலக்கிய வரலாற்றுக்குத் துணையான ஆய்வுகள்’ (Companion Studies to the History of Tamil Literature), ‘தமிழ் செம்மொழி யாப்பிலக்கணம்’(Classical Tamil prosody), ‘நீலமலை இருளர்கள்’(The Irulas of the Blue mountains), ‘தென்னிந்தியத் தமிழ் இலக்கியத்தில் முருகனின் புன்னகை’(The Smile of Murugan: on Tamil Literature of South India), ‘திராவிட மொழி ஒலிப்பியல் ஒப்பீடு’ (Comparative Dravidian Phonology), ‘சித்தர்கள் தேடிய இறவாமை’ (Siddha Quest for Immortalits), ‘சிந்து நாகரிகத்தின் காலம், எழுத்துமுறை (Indus Age:  The writing system), ‘தமிழ் இலக்கிய வரலாறு’(History of Tamil Literature), ‘திருமுருகன்’ (Thirumurugan), ‘தமிழ் இலக்கியம்’ (Tamil Literature), ‘தமிழ் மொழியின் இலக்கண வரலாறு ஓர் அறிமுகம்’ (Introduction to the Historical Grammer of the Tamil Language), ‘எமது வாழ்க்கைக் கதை’ (The Story of my life), ‘தொல்காப்பியம் - சொல்லதிகாரம், ‘தமிழிலக்கிய அறிமுகம்’  (Introducing Tamil Literature) முதலிய இருபத்தைந்துக்கும் மேலான ஆய்வு நூல்களை படைத்தளித்துள்ளார்.

                செக்கோஸ்லோவாகியாவில் உள்ள கீழையியல் துறையில் (Oreintal Institute of the Czechoslovak Academy of Sciences) தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார்.  கிரேக்கம், இலத்தீன், ஜெர்மன், ஆங்கிலம், ருசியன், சமஸ்கிருதம், தமிழ் முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.  மேலும், மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலி, போலந்து மொழிகளையும் அறிவார்.

                செக்கோஸ்லாவாகிய நாட்டின் தூதரகத்தில் பணியாற்றிய ஒரு தமிழ் அன்பர் வழியாக தமிழ் கற்கத் தொடங்கிய கமில் சுவெலபில், வானொலி வழியாகவும், நூல்கள் வழியாகவும் தமிழ்படிக்கத் தொடங்கினார்.

                தென்னிந்தியாவிற்கு, குறிப்பாக சென்னைக்குக் களப்பணிக்காக பலமுறை வருகை புரிந்துள்ளார்.

                கமில் சுவெலபில் கற்கவும், கற்பிக்கவும் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்.  அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பல்கலைக் கழகத்தில் 1965-66-ம் ஆண்டுகளிலும், ஜெர்மனி கெய்டல்பெர்க் பல்கலைக் கழகத்தில் 1967-1968 ஆண்டுகளிலும்  வருகை தரும் பேராசிரியராகப் பணியாற்றினார்.   மேலும்,  டெல்லி,  சென்னை,  டோக்கியோ, பிலாடெல்பியா,  மாஸ்கோ,  லெனின் கிராட் முதலிய நகரங்களுக்குச் சென்று  கற்பிக்கும்  பணியில்  ஈடுபட்டார்.

                ப்ரேக்  நகரில்  உள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் 1968 ஆம் ஆண்டு  முதல் இணைப்பேராசிரியராகப்  பணிபுரிந்தார்.   பிரான்சில் 1970 ஆம் ஆண்டு  வருகைதறா பேராசிரியராகப்  பணிபுரிந்தார்.  லெய்டன் பல்கலைக் கழகத்திலும்  (ருniஎநசளவைல டிக டுநனைநn), நெதர்லாந்து , யூட்ரிச்  பல்கலைக் கழகத்திலும் (University of Utrech)  பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

                தமிழ்க் கடவுள்  எனக் கருதப்படும் ‘ முருகன் ‘ குறித்து  இவர் எழுதியுள்ள  ஆங்கில  நூலில் முருகக் கடவுள் குறித்த  பல செய்திகளை ஆய்வுக்கு  உட்படுத்தியுள்ளார்.

                தமிழ் யாப்புப் பற்றி  அறிஞர் சிதம்பரநாதன்  செட்டியார்  வழியாக  ஈடுபாடு  கொண்ட  கமில் சுவெலபில் தமிழ்  யாப்புப் பற்றி விரிவாக  ஆங்கிலத்தில் ஆய்வு  நூலை எழுதியுள்ளார்.  இவரது  யாப்பு  குறித்த  பல நூல்களை  முனைவர்  பொற்கோ மதிப்பீடு  செய்து  உள்ளார்.   ‘தமிழ்-சப்பானிய’-மொழி உறவு  குறித்து  பல முன்வைப்புகளை வழங்கியுள்ள  கமில் சுவெலபில், நீலகிரிப்  பகுதியில் இருளர் பேசும்  மொழிப் பற்றிய  ஆராய்ச்சி  மேற்கொண்டு  ஆய்வு  நூலை  வெளியிட்டுள்ளார்.

                திராவிட  மொழியியல்,  சங்க  இலக்கியம்  பற்றி  விரிவாக  ஆங்கிலத்தில்  பல நூல்களை  எழுதியுள்ளார்.   தமிழ் வழக்குச் சொற்கள் பற்றியும்  எழுதியுள்ளார்.

                ஐம்பது  ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட  மொழியியலை  ஆராய்ந்து,  “ மனித  இன வரலாற்றில்  திராவிடப் பண்பாடு  மிகத்   தொன்மையான   ஒன்று “  என்பதை  நிறுவியுள்ளார்.   மேலும், “ உலக  நாகரிகத்தின்  உயர்ந்த , அழியாத  கருவூலங்களில் ஒன்றாகத் தமிழர்களின் பண்பாடு  திகழ்கிறது  என்பதில்  அய்யமில்லை “ என அவர்  குறிப்பிட்டுள்ளார்.

                தமிழ் மொழி இலக்கியத்தையும்,  தமிழரின்  நாகரிகத்தையும்  இந்தியாவின்  பிற மாநில்  மக்களும்,  உலகில் உள்ள பிற மக்களும், அறிந்து  கொள்ள இவரது ஆங்கில ஆய்வ நூல்கள்  பெருமளவு  உதவியிருக்கின்றன.

                கமில் சுவெலபில், நீலமலை  மக்களின்  மொழியியல்,  திராவிடர்களின்  வேளாண்மைப் பரவல்,  தென்னிந்தியப் பண்பாடு மற்றும்  சமய  வரலாறு, இந்து மதம் , சமஸ்கிருதச் கடங்கு  நூல்கள்  முதலியவற்றைப் பற்றியும்  பல ஆய்வுக் கட்டுரைகளையும்,  நூல்களையும்  அளித்துள்ளார்.

                சுவெலபில்  எண்பதற்கு  எதையும்  சிறப்பாகச் செய்பவர், சரியாகச் செய்பவர், அழகாகக் செய்பவர் ‘  என்பது பொருளாகும் .  சைவசித்தாந்த  நூற்பதிப்புக் கழக ஆட்சியர் வ.சுப்பையா பிள்ளை  ‘நிரம்ப அழகியர் ‘  என்னும்  பெயரைக் கமில்  சுவெலபிலுக்குத் தமிழில்  சூட்டினார்.

                பேராசிரியர்  பணியிலிருந்து  1992 ஆம்  ஆண்டு  ஒய்வு  பெற்றார்.  பின்னர்,  பிரான்சு தலைநகர் பாரிசுக்கு  அருகில்  உள்ள  சிற்றூரில்  வாழ்ந்து  வந்தார்.   புற்று  நோய்  தாக்கி  2009 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாள்  மறைந்தார் அறிஞர் கமில் சுவெலபில்’!

                தமிழின் இனிமை, தமிழரின் உயர்மரபு  ஆகியவற்றை  எண்ணித்  தம்மை  ‘செவ்வியன்’  எனவும்  அழைத்துக் கொண்டவர் கமில்  சுவெலபில்.

                செக்கோஸ்லோவாகியா நாட்டில்  பிறந்து  தமிழுக்குச் சிறந்து  தொண்டாற்றிய  மொழியியல்  வல்லுநரானகவும் , தமிழ்,  தமிழர்  பற்றியும்  பிறமொழியினருக்கு அறிமுகம்  செய்து   வைத்தவருமான  கமில் சுவெலபில் பெயர்  திராவிட இயல்  வரலாற்றில் என்றும் நிலைத்து  நிற்கும் !

- பி.தயாளன்

Pin It