கொழும்பிலிருந்து வெளிவரும் முக்கிய தமிழ்த் தினசரிகள் நான்கு. அவை ‘தினகரன்’, ‘வீரகேசரி’, ‘தினக்குரல்’, ‘சுடரொளி’ தவிர யாழ்ப்பாணத்திலிருந்து ‘உதயன்’ என்றொரு நாளிதழும் வருகிறது. இவற்றுள் ‘தினகரன்’ அரசு சார்பு நாளிதழ். 90களின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட ‘தினக்குரல்’ ஈழத் தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளை உரத்து ஒலிக்கும் ஒரு நாளிதழ். யாழ்ப்பாணத்தி லிருந்தும் இதற்கொரு சிறப்புப் பதிப்பு உண்டு.

தினக்குரல் நாளிதழில் கடந்த 2004 ஏப்ரல் முதல் பிரதம ஆசிரியராகப் பணிபுரிகிற வீரசுத்தி தனபாலசிங்கம் இடதுசாரிப் பின்னணியுடைய ஒரு மூத்த பத்திரிகையாளர். இலங்கையின் புகழ் மிக்க பொதுவுடைமை இயக்கத் தலைவர்களாகிய நா.சண்முகதாசன் கார்த்திகேசன் மாஸ்டர், கே. டேனியலின் அரசியல் நண்பர்களில் ஒருவரான பீகிங் வானொலி சின்னத்தம்பி ஆகியோருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புப் பெற்றவர். 1977ல் ‘வீரகேசரி’ நாளிதழில் மெய்ப்புத் திருத்துனராகப் பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து இன்று ஒரு முக்கிய நாளிதழின் பிரதம ஆசிரியராக உள்ளார்.

2004 முதல் அவர் தினக்குரலில் தினந்தோறும் எழுதிய தலையங்கங் களின் மொத்த எண்ணிக்கை இதுவரை சுமார் 2180 ஐத் தாண்டலாம் எனத்தெரிகிறது. இவற்றுள் நூறு தலையங்கங்களை மட்டும் தேர்வு செய்து இன்று ‘ஊருக்கு... நல்லது செய்வேன்’ என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. பிழையின்றி வந்துள்ள தரமான பதிப்பு. போரசிரியர் கா.சிவத்தம்பி அவர் களும், ஓய்வு பெற்ற நீதியரசரும், அதிகாரங்களை நோக்கி உண்மை களை பேசத் தயங்காதவருமான க.வி. விக்னேஸ்வரன் அவர்களும் முன்னுரைகள் வழங்கியுள்ளனர்.

சிவத்தம்பி அவர்கள் முன்னுரைத்திருப்பதுபோல ஆசிரியத் தலையங்கங்கள் என்பன பத்திரிகை நிறுவனத்தின் அரசியலுக்குப் புறம்பின்றி, அதே நேரத்தில் ஆசிரியரின் எழுத்தாளு மையோடு வெளிவருபவை. நாட்டு நடப்புகள் குறித்து அரசியற் சமூகம் மற்றும் வெகுமக்களின் கருத்துகளைக் கோடி காட்டுபவை. குறிப்பாகப் பொதுவான இதழ்களாக நம்பப்படுவனவற்றின் கருத்துகளுக்கு இத்தகைய மரியாதை உண்டு.

போருக்குப் பிந்திய சூழலில் பாதிக்கப்பட்ட, இடம் பெயர்ந் திட்ட தமிழ் மக்களின் மறுவாழ்வு என்பது தவிர்த்து இன்று முதன்மைப்பட்டுள்ள, அல்லது முதன்மைப்பட வேண்டிய அடுத்த முக்கிய பிரச்சனை அரசியல் தீர்வு. இந்த அம்சத்தில் அரசு மட்டுமின்றி சிங்களக் கட்சிகள் அனைத்தும் எத்தகைய அலட்சியப் போக்குகள் கொண்டுள்ளன என்பதைத் தனபால சிங்கம் தொடர்ந்து கூர்மையான விமர்சனங்களோடு முன்வைக்கிறார்.

போர் முடிந்த கையோடு ‘இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி தேர்தல் முடிவுக்குப் பின் அரசியல் தீர்வு பற்றி முடிவெடுப்பதாக ராஜபக்ஷ கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, ‘‘அடுத்த ஜனாதிபதி தேர்தலை அரசியல் தீர்வு யோசனைகள் மீதான சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றக்கூடிய அளவுக்குத் தென்னிலங்கை அரசியல் தலை மைத்துவத்தில் எந்தப் பிரிவினரிடத் திலும் துணிவாற்றல் இல்லை.. எதைக் கொடுக்க வேண்டும். எதைக் கொடுக்ககூடாது என்பது எனக்குத் தெரியும். அவர்கள் (தமிழர்கள்) விரும்புகிற எல்லா வற்றையும் பெற முடியாது என்பதையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் உண்மையான அர்த்தம் அரசியல் தீர்வு என்பது இனிமேல் அரசாங்கத்தின் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அமையும் என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?’’ என தனபாலசிங்கம் அன்று (ஜூலை 8, 2009) கூறியதே இன்று உண்மையாக மாறியுள்ளது.

அரசியல் தீர்வு குறித்துப் பேசக்கூடிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி போன்றவை ‘‘தங்களது நிலைப்பாடு களை உரத்துப்பேசி வலியுறுத்தக் கூடிய அரசியல் வல்லமையைக் கொண்டவையாக இல்லை.’’ ஆனால் பேரினவாத சக்திகளோ, ‘‘அரசியல் தீர்வு குறித்தோ, அதிகாரப் பரவலாக்கம் குறித்தோ எந்தவித நடவடிக்கையும் தேவையில்லை என்று அரசாங்கத்துக்கு உரத்துச் சொல்லக்கூடிய அரசியல் துணிச்சலைக் கொண்டவையாக’’ உள்ளன. தேசிய சுதந்திர முன்னணியின் விமல் வீரவன்ச, ‘‘புலிகளை முல்லைத் தீவுக் கடற்கரையோரமாகத் தோற்கடித்த இராணு வத்தினர் அரசியல் தீர்வையும் அதிகாரப் பரவலாக் கலையும் சேர்த்தே புதைத்து’’விட்டதாகவும், ‘‘13வது அரசியல் திருத்தத்தை ஒரு போதும் நடைமுறைப் படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி தங்களுக்கு’’ வாக்குறுதி அளித்திருப்பதாகவும் கூறுகிறார். இவற்றைச் சுட்டிக்காட்டும் தனபாலசிங்கம், ‘‘விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு தேசிய இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண வேண்டிய அவசியம் இல்லாமற் போய்விட்டதா?’’ எனக் கேள்வி எழுப்புகிறார் (ஜூலை 7, 2009). புலிகள் இன்று தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அவை உருவானதற்குப் பின்புலமாக இருந்த இன ஒதுக்கல்களும் அரசியல் காரணங்களும் அப்படியே தான் உள்ளன என்பதையும் இதனைத் தென்னிலங்கை அரசியற் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் நூல் முழுவதும் தனபாலசிங்கம் வற்புறுத்திச் செல்கிறார்.

இனத்துவம் மற்றும் இனவெறி சார்ந்த அரசியலைப் பொதுவில் ஏற்காதவராயினும் இன்றைய இலங்கைச் சூழலில் தமிழர்கள் இனத்து அடையாளங்களுடன் அரசியல் புரிய வேண்டிய அவசியத்தை தினக்குரல் ஆசிரியரது உரைகள் வற்புறுத்துகின்றன. ஏற்கனவே கருணாவை ஸ்ரீலங்கா சுதந்திராக் கட்சியின் உறுப்பினராக்கியாயிற்று. டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியைச் சுய அடையாளத்தை அழித்து ராஜபக்ஷ கட்சியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வைத்ததோடு நிற்காமல் அவரையும் சுதந்திரா கட்சியில் சேர வேண்டும் என வற்புறுத்துவதைக் கண்டிக்கும் தனபால சிங்கம், ‘‘இனத்துவ அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு சிறுபான்மை இன மக்களை நிர்பந்தித்த வரலாற்றுக் காரணிகள் இல்லாமல் போய்விட்டதாக தென்னிலங்கை அரசியல் கட்சிகள் கருதுகின்றனவா? இலங்கையில் சிறுபான்மை இனங்கள் இப்போது இல்லை என்ற ஜனாதிபதி ராஜபக்ஷவின் கூற்றின் அர்த்தம் சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகளும் இல்லாமற் போய்விட்டன என்பதா?’’ என்கிற கேள்விகளை எழுப்புகிறார் (ஜூலை 22, 2009). ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன் சேகாவும் தமிழர் தேசியக் கூட்டணியின் சம்பந்தனும் ‘இரகசிய உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக ராஜபக்ஷ தேர்தல் பிரச்சாரம் செய்தபோதும், தமிழர்கள் தமது நலன்களை முன்னிட்டு யாருடனும் உடன்படிக்கை செய்து கொள்ளவும் உரிமையை இழந்து போனார்களா? ‘‘போரில் வெற்றி பெற்றவர்களின் நீதியைத் தவிர தமிழர்கள் இனிமேல் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதா?’’ என்கிற கேள்விகள் எழுப்புகிறார் (24 ஜனவரி 2010).

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும், எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட, தமிழர்களின் இனப்பிரச்சனை குறித்து தமது தேர்தல் அறிக்கைகளில் எதையும் குறிப்பிடாததை சுட்டிக்காட்டி போரின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள், அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்காக உறுதிப்பாட்டுடன் குரல் கொடுக்க கூடிய அரசியல் தலைமைத்துவம் அற்றவர்களாக இருக்கிறார்கள். இன்று இருக்கக்கூடிய தமிழ்கட்சிகளும் குழுக்களும் பழைய குரோதங்களை மறந்து கடந்த கால உரிமைப் போராட்டங்களில் இருந்து முறையான பாடத்தைக் கற்றுக்கொண்டு ஒன்றிணைந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கத் தயாராக வேண்டும்.... தமிழ் மக்கள் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தற்போது கொண்டிருப்பதாகக் கூறப்படும் அக்கறையற்ற போக்கைக் கைவிட்டு எதிர்கால அரசியல் பாதையை உருப்படியானதாக வகுப்பதற்கு வலுவான பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்தைத் தெரிவு செய்ய வேண்டும்’ எனவும் தனபால சிங்கம் அறிவுரைக்கத் தவறவில்லை.

தேர்தல் முடிவுகள் பற்றிக் கூற வரும்போது, ‘‘கதிரில் இருந்து உதிரும் நெல்மணிகள் போன்று பெருவாரியாகப் பிரிந்து தமிழ்க் கட்சிகளும், குழுக்களும் தேர்தலில் போட்டியிட்டமை தமிழ் மக்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது என்பதில் சந்கேமில்லை. குறைந்த சதவீதமான வாக்காளர்களே தேர்தல் பங்கேற்பில் அக்கறை காட்டியிருந்தால்கூட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தேர்தல் முடிவை நோக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்திய சக்திகள் மக்களால் அடியோடு நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதும், நடைமுறைச் சாத்தியமற்ற தீவிரவாத நிலைப்பாடுகளை இனிமேலும் ஏற்றுக் கொள்வதற்கு அவர்கள் எந்தவிதத்திலும் தயாரில்லை என்பதும் பிரகாசமாக வெளிக்காட்டப்பட்டிருக்கிறது’’ எனக் கருத்துரைப்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்க ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், பொருளாதார நெருக்கடிகள் குறித்த எதிர்கட்சிகளின் பிரச்சாரங்கள் முதலியன எடுபடாத அளவிற்குச் சிங்களப் பெருந் தேசிய உணர்வு தென்னிலங்கையில் கட்டவிழ்த்து விடப் பட்டிருப்பதையும் குறிப்பிடுகிறார்
(ஏப்ரல் 11, 2010).

ராஜபக்ஷ அரசின் போர்க் காலத்தில் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து புலம்பெயர்ந்த தமிழர்கள் பிரிட்டனில் கூட்டிய ‘உலகத் தமிழர் பேரவை’க் கூட்டத்தில் பிரிட்டிஷ் அமைச்சர்கள் கலந்து கொண்டதை எதிர்த்தும், ‘ஜி. எஸ்.பி.பிளஸ்’ வரிச்சலுகை நீடிப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள மனித உரிமைகள் அடிப்படையிலான நிபந்தனைகளைக் கண்டித்தும் ராஜபக்ஷ அரசு விடுக்கும் கண்டனங்களை விமர்சிக்கிற தனபாலசிங்கம், புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் தீவிரவாதத்தை ஆதரித்தவர்களாகக் கருதக் கூடாது எனவும், அவர்களின் அக்கறைகளில் உள்ள நியாயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும், அதேபோல ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூன் எழுப்பும் கேள்விகள் ஆகியவற்றில் போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்கத்திற்கான கூறுகள் பல உள்ளதைச் சுட்டிக் காட்டியும் அவர்களின் சார்பாக நின்று வாதிடுகிறார் (மார்ச் 1, 10, ஜூன் 27, 10)

தமிழர்கள் பகுதியில் ‘கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த உயர் பாதுகாப்பு விசயங்கள்’ தொடர்ந்து நிலைபெறும், தேவையானால் அவற்றை விரிவாக்குவதற்காக தனியார் நிலங்கள் சுவீகரிக்கப்படும் என்கிற அரசறிவிப்பு, தமிழர் பகுதியில் இராணுவமயம் அதிகரித்தல், யாழ்ப்பாணத்தில் வழமையிலுள்ள தேச வழமைச் சட்டத்திலுள்ள சொத்து தொடர்பான சில பாதுகாப்பு உரிமைகளை நீக்கும் வண்ணம் அதைத் திருத்துதல், இரு அரச கரும மொழிகளில் ஒன்றாக தமிழ் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் அது புறக்கணிக்கப்படுதல், வடக்கில் தென்னிலங்கையர் மேற்கொள்ளும் உல்லாசப் பயணங்களின் போது தமிழர்களின் கலாச்சாரச் சின்னங்கள் அவமதிக்கப்படுதல்... என்பன போன்ற தமிழர்களைப் பாதிக்கும் ஒவ்வொரு நடைமுறை களையும் கடுமமையாக விமர்சிக்க தனபால சிங்கத்தின் எழுதுகோல் தயங்குவதில்லை.

சிங்கள புத்திஜீவிகளான கலாநிதி, தயான் ஜெயதிலக, பேரா. ராஜீவ விஜேசிங்க, பேரா. நளின் டி சில்வா முதலானோரும் கூட போருக்குப் பிந்திய சூழலில் பேரினவாதிகளின் குரலுக்கு நியாயம் தேடுபவர்களாக மாறிப்போயுள்ளதையும் வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஷ்டி அரசு முதலான தமிழர்களின் மிக அடிப்படையான கோரிக்கைகளையும் கூட அவர்கள் மறுக்கத் தொடங்கியுள்ளதையும் கூர்மையான அவதானத்துடன் சுட்டிக் காட்டும் தனபால சிங்கம், தமிழர்களின் விட்டுக் கொடுக்க இயலாத அரசியல் அபிலாசைகளாகக் கீழ்க்கண்ட வற்றைச் சுட்டிக் காட்டுகிறார்:

‘‘... பாரம்பரியத் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே நிலத் தொடர்ச்சியான அதிகாரப் பரவலாக்கம் அலகாக இருக்க வேண்டும்; தமிழர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்களாக இருக்க வேண்டும். இணைந்த வடக்கு கிழக்கிற்கு கூடுதல்பட்ச அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும், தமிழர் பகுதியில் அரசாங்க அனுசரணையுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்; தமிழர் பகுதிகளின் குடிப்பரம்பலின் இன விகிதாச்சாரத்தை மாற்றியமைக்கும் நோக்குடனான திட்டங்கள் கைவிடப்பட வேண்டும்...’’

தமிழ்த் தீவிரவாத இயக்கங்களாலும், மிதவாதத் தலைவர்களாலும் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள் இவையே. இன்று தீவிரவாதம் வீழ்த்தப்பட்ட போதும் கோரிக்கைகள் அப்படியேதான் உள்ளன. இவற்றை வென்றெடுப்பதற்கான வீரிய மிக்க அரசியற் கழகம் இன்று தமிழர் மத்தியில் உருப்பெறவில்லை. ஆனால் இவற்றின் மிக அடிநாதமான அம்சங்களான சமஷ்டி அரசு உட்பட எதையும் அளிக்கத் தயாராக இல்லாத நிலை சிங்களச் சமூகத்தில் உருவாகியுள்ளது. எந்த அரசியல் தீர்வுக்கும் இன்று ராஜபக்ஷ தயாராக இல்லை. இந்தியாவோ, இல்லை உலக நாடுகளோ கூட அவ்வப்போது சிறிய அழுத்தங்களை இலங்கை அரசுக்கு கொடுத்தபோதும், சிங்கள அரசின் மனித உரிமைமீறல்களை கண்டிப்பதிலோ தமிழர்களின் உரிமைகளை பெற்றுத் தருவதிலோ உறுதியான தலையீட்டைச் செய்யத் தயாரில்லை. இந்தச் சூழலைப் புரிந்து கொண்ட ஒரு அரசியல்தான் இன்று தமிழ் மக்கள் மத்தியில் தேவை. தனபால சிங்கத்தின் ஆசிரிய உரைகளைப் படிக்கும் போது நமக்கு உருவாகும் சிந்தனை இதுவே.

இடதுசாரிப் பார்வை உடையவரான தனபால சிங்கம் உள்நாட்டு அரசியலில் இந்தியத் தலையீடு, உலக அரசியலிலும் பொருளாதாரத்திலும் சீனா, இந்தியா எனும் இரு பெரும் தென்னாசிய நாடுகளின் தலையீடு, நமது தெலுங்கானாப் பிரச்சனை உள்ளிட்ட உலக அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்கும் பாங்கும் குறிப்பிடத்தக்கது. ஈழ மக்களின் பிரச்சனைகளைத் தம் சொந்த அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்த தயங்காத தமிழக அரசியல் கட்சிகள், ஈழமண்ணுக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க இயலாத அவர்களின் கையாலாகாத் தனம் ஆகியன குறித்த அவரது அவதானங்களும் முக்கியமானவை. முழுக்க முழுக்க இனவாதத்திற்குப் பலியாகிப் போன ஜே.வி.பி. கட்சியை ஒரு இடதுசாரிக் கட்சியாகப் பல ஆண்டுகள் வரை ஏற்றுக் கொண்டிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அவர் விமர்சிக்கத் தவறவில்லை. எனினும் கோவையில் (2008) நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை அழைக்க மறுத்துள்ளதை அவர் பாராட்டவும் தயங்கவில்லை. அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஐதராபாத் மாநாட்டிற்கு (2008) ஜே.வி.பி.யை அழைத்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.

அஜித் சமரநாயக்க, டொமினிக் ஜீவா, கவிஞர் முருகையன், அப்துல்கலாம், பிடல் காஸ்ட்ரோ முத்தையா முரளீதரன், நீதியரசர் விக்னேஸ்வரன் குறித்த தனி நபர் மதிப்பீடுகளும் சுவாரசியமாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் உள்ளன.

ஒன்றை நாம் மறந்துவிடலாகாது. 2006-2009 கால கட்டத்தில் இலங்கையில் ஊடகத்துறையைச் சேர்ந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் தாக்கப்பட்டனர். நெருக்கடி நிலைப் பிரகடனம், கருப்புச் சட்டங்கள், பெரும்தேசிய இனவெறி, கருத்து மாறுபடுபவர்கள் கடத்திக் கொள்ளப்படுதல் இவற்றின் ஊடாக அரசையும் பெருந்தேசிய இனவெறியையும் விமர்சிக்கும் ஒரு இதழாளர் சந்திக்கும் நெருக்கடிகள் பாரதூரமானவை. இத்தனைக்கும் மத்தியில் எழுதப்பட்டவைதான் இவ் ஆசிரிய உரைகள்.

ஈழத் தமிழர்களின் பால் உண்மையான அக்கறையோடும் பரிவோடும் ஆனால் அதே நேரத்தில் உச்ச பட்சக் கோரிக்கைகளை மட்டுமே முன்வைப்பதன் ஊடாக ஈழத்தமிழர்களின் சமகால நெருக்கடிகள், அரசியல் விருப்பு வெறுப்புகள் ஆகியவற்றைப் பற்றிய அக்கறையின்மை மற்றும் புரிதலின்மையுடன் செயற்படும் நம்மவர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. தமிழ் பேசும் மக்களில் இன்னொரு முக்கியப் பிரிவினராகவும், மூன்றாவது தேசிய இனமாகத் தம்மை அடையாளம் காண்பவர்களுமாகிய முஸ்லிம்களின் நிலை குறித்து இந்நூலில் எதுவும் காணப்படாதது ஒரு மிகப் பெரிய குறை.

Pin It