கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கு உலகமெங்கும் ஆதரவு இருப்பதாக அந்த மாநாட்டுக் குழுவினர் தெரிவித்து வரும் வேளையில், மாநாடு குறித்து தமிழகத்தின் முக்கிய எழுத்தாளர்களிடம் தொலைபேசி வாயிலாகக் கருத்து கேட்டோம். அதன் தொகுப்பு இங்கே தரப்பட்டுள்ளது.
எழுத்தாளர் மதிவண்ணன் (தலைவர், அருந்ததியர் உள் ஒதுக்கீடுப் போராட்டக் குழு): கடந்த ஆண்டு ஈழத்தில் நடைபெற்ற தமிழினப் படுகொலையில், சர்வதேச சமூகம் எப்படி வெறும் பார்வையாளராக இருந்ததோ அதே போல் தான் தமிழ்நாட்டில் இருந்த தமிழர்களும் குறிப்பிட்ட 5 சதவீத தமிழர்களைத் தவிர மற்றவர்கள் வெறும் பார்வையாளர்களாய்த் தான் இருந்தார்கள். இந்தியா இதில் ஒரு கூட்டாளியாகக் கூட இருந்தது. ஆனால் இந்தியாதான் இலங்கையின் ஒரே கூட்டாளியா என்று கேட்டால் ஒரே கூட்டாளி இல்லை என்பது வேறு விஷயம். போர் முடிந்த பின் சர்வதேச சமூகம் விழித்து எழுந்ததாய் சும்மாவது காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உயிருக்கு போராடியபோது வராமல் செத்த பின் வந்து விசாரணை செய்கிறேன் என்று சொல்லுவதே மிகத் தாமதம் என்றே நான் நினைக்கிறேன். ஆனால் எதுவும் செய்யாததைக் காட்டிலும் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என்பது ஈழ தமிழருக்கு உதவாவிட்டாலும், உலக மக்களுக்கு இதுபோல் நடவாமல் இருக்க உதுவும். அந்த அளவில் இலங்கை அரசை விசாரணை செய்வது நியாயமானது. அது தொடர்பான நடவடிக்கைகள் தான் இப்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
இப்போது இந்தச் சூழலில் இலங்கை அரசாங்கம் தன்னை நியாயவான் என்பது போலவும், போருக்குப் பின் இலங்கை அமைதியாக இருக்கிறது என்று காட்டிக் கொள்ளும் வகையிலும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் அங்கு நடந்த சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பெரும்பாலான திரைத்துறை நடிகர்கள் கூட விரும்பியோ, விரும்பாமலோ அங்கு போகாமல் தவிர்த்து விட்டார்கள். இதில் அவர்கள் போகவில்லை என்பதே முக்கியமான விசயம். இப்படி திரைத்துறை நடிகர்களிடம் இருந்த தன்மையும், ஈடுபாடு உணர்வும் நம் எழுத்தாளர்களிடம் இல்லை என்றால் அது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயம். எழுத்தாளர் மாநாடு நடத்த வேண்டுமென்றால் இலங்கையை விடவும் தமிழ்நாடு மிக வசதியான இடமாக இருக்கக்கூடும். ஏன் மலேசியாவில் கூட நடத்தலாம். அதில் ஒரு பிரச்சனையும் கிடையாது. இலங்கையை போர்க் குற்றத்திற்கு உட்படுத்துதல், தண்டனை பெற்றுத் தருதல் போன்றவைகள் குறித்து இந்த எழுத்தாளர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும். அப்போது அவர்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்று நாம் ஆராய்வதற்கோ, ஏற்றுக் கொள்வதற்கோ வசதியாக இருக்கும்.
எழுத்தாளர் அழகிய பெரியவன்: கொழும்புவில் நடக்கப் போவதாக அறிவித்து இருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு, மிக பகிரங்கமாக அப்பட்டமான மனித உரிமை மீறலை நடத்திய ராஜபக்சே அரசுக்குத் துணை போகும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. எங்கெல்லாம் அடக்குமுறைகள் இருக்கிறதோ, மனித உரிமைகள் மீறப்படுகிறதோ அங்கெல்லாம் அதை எதிர்க்க வேண்டிய கடமை கலைஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது. உலக அளவில் மனித உரிமை மீறல்களை எதிர்க்கிற விஷயத்தில் எழுத்தாளர்கள் முன் வரிசையில் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தான். அந்த அடிப்படையில் இந்த மாநாட்டை தமிழ் எழுத்தாளர்கள் புறக்கணிப்பது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
ஈழத்தில் எந்த மனித உரிமை மீறலும் நடபெறவில்லை என்று சொன்னால் ஏன் ஐ.நா அமைத்த தூதர் குழுவையும், சர்வதேசிய பத்திரிக்கையாளர்களையும் ராஜபக்சே அரசு அனுமதிக்க மறுக்கிறது? முகாம்களைப் பார்வையிடுவதற்கு ஏன் அனுமதிக்க மறுக்கப்படுகிறது? தமிழில் ஒரு சொல்வடை உண்டு "மடியில் கணம் இல்லாதவன் பயப்படத்தேவையில்லை" ஆனால் இங்கு அவர்கள் மடியில் கணம் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்கள் அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்ததாக தணிக்கை, தடையை மீறிய செய்திகள் உணர்த்துகின்றன. இப்படியாக ஒரு இன ஒடுக்குமுறைக்கு, இன அழிப்பிற்கு துணை போகக்கூடிய அந்த அரசின் தலைமையகத்தில் நடைபெற இருக்கிற மாநாட்டில் தமிழ் எழுத்தாளர்கள் பங்குபெறுவது என்பது ஒரு வகையில் இதையெல்லாம் அங்கீகரிக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். போராட்டக் குழுக்களை, புலிகளை ஒழித்துவிட்டதாக சொல்லுகிற ராஜபக்சே அரசு அதைக் கொண்டாடுகிற வகையில் கிளிநொச்சி வவுனியா போன்ற இடங்களில் வந்து தங்கள் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இது போல் தமிழ் மக்கள் வாழும் அனைத்து இடங்களிலும் கூட்டங்கள் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ் பகுதிகளில் இருக்கும் தமிழ் அடையாளங்கள் சிதைக்கப்படுகிறது என்றெல்லாம் நமக்கு செய்திகள் வருகின்றன. இதை எல்லாம் கேட்காமல் நியாயமாக அங்கு என்ன நடந்தது என்று வலியுறுத்தாமல் அவர்களுடைய குரலுக்கு ஒத்துப் போவது என்பது, அவர்களுடைய செயல்களை அங்கீகரிப்பதாகத்தான் இருக்கும். இலங்கை அரசு மீது வெளிப்படையான ஒரு விசாரணை நடந்து, அதன் போர்க்குற்றங்களுக்கு தண்டனை விதிக்கப்பட்ட பின்பு, இது மாதிரியான கூட்டங்கள் நடத்தும்போது பங்குபெறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் அதை விடுத்து எதையும் நிறைவேற்றாமல் நடத்தப்படும் இந்தக் கூட்டம் ஒரு கண்துடைப்பாகத்தான் அமையக் கூடும் என நான் நினைக்கிறேன். ஆகையால் ஒரு தமிழ் எழுத்தாளனாய் இதைப் புறக்கணிக்க வேண்டும் என்று வேண்டுகொள் விடுக்கிறேன்.
பேரா. ஹாஜா கனி, (பொதுச் செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்): எழுத்து என்பது ஆக்க சக்தி. அதனால்தான் அதை creativity என்றும், எழுத்தாளர்களை creative people என்றும் அழைக்கிறார்கள். அத்தகைய ஆக்க சக்திகளாக உலகில் புதியன படைக்க விரும்பும் எழுத்தாளர்கள் ஒருநாளும் அழிவு சக்திக்கு துணை போக முடியாது. இலங்கைப் பேரினவாத அரசு என்பது மிகப்பெரும் அழிவு சக்தி. அந்த அழிவு சக்தியின் நிழலில் ஒரு எழுத்தாளர் மாநாடு நடத்துவது என்பதே அதற்குத் துணைபோவது போலத்தான். எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு, சொந்த சகோதரர்களுக்கு எதிராக செயல்பட்ட விபீடணனை இப்போது இலக்கிய உலகிலும் பார்க்க முடிகிறது. இவர்கள் இலக்கிய ‘கருணா’க்கள். வாளின் முனையைவிட பேனாவின் முனை வலியது என்பது நாம் பள்ளியில் படித்தது. ஆனால் இலங்கை அரசு தன் மீது படிந்துவிட்ட இரத்தக் கறையை பேனாவின் மைக்கறையால் மறைத்துவிடலாம் என்று இலங்கை அரசு எதிர்பார்க்கிறது. அதனுடைய எதிர்பார்ப்பும் இழிவானது; அதற்கு இசைந்து போவது அதைவிடவும் இழிவானது.
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்: உலகம் முழுவதும் உள்ள தமிழ் எழுத்தாளர்கள் ஒரு இடத்தில் சந்திப்பது என்பது நல்ல செய்திதான். ஆனால் அந்த சந்திப்பு என்பது ஏன் கொழும்பில் நடைபெற வேண்டும்? அங்கு நடத்தப்படுவதன் நோக்கமென்ன? அங்கு என்ன பேசப் போகிறார்கள்? இலங்கையில் நடைபெற்ற இன அழிப்பு குறித்தோ, போர்க்குற்றங்கள் குறித்தோ பேச முடியுமா? அங்கு தடை செய்யப்பட்ட பத்திரிக்கைகள், கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் பேச முடியுமா? உலகமெங்கும் உள்ள எழுத்தாளர்கள் அதிக அக்கறை கொள்ளும் மனித உரிமைகள் பற்றி இலங்கையில் பேச முடியுமா? ஈழத்து இலக்கியத்தின் பெரும்பகுதி என்பது போர் குறித்தும், அதனால் ஏற்பட்ட துயரம் தோய்ந்த அகதி வாழ்க்கை குறித்தும் எழுதப்பட்டதுதானே! அந்த ஈழத்துப் போர் இலக்கியம் பற்றி நேர்மையாகப் பேச முடிகிற சூழல் அங்கு நிலவுகிறதா? மாநாட்டில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் தாங்கள் விரும்புகிற இடங்களுக்குச் சுதந்திரமாக செல்லும் உரிமை அங்கு இருக்கிறதா? இதற்கெல்லாம் இல்லை என்பதுதான் பதில் என்றால், அந்த மாநாடு ஏன் இலங்கையில் நடத்தப்பட வேண்டும்? நிச்சயமாக என்னால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது.
எழுத்தாளர் மாலதி மைத்ரி (ஆசிரியர், அணங்கு இதழ்): எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலேயும் சிலர் ஆதாயம் தேட முயற்சிப்பார்கள். எடுத்துக்காட்டாக பிரஞ்சுப் போராட்டத்தில், போராட்டத்திற்குப் பின் போராட்டத்தை ஆதரித்தவர்கள் எதிர்த்தவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஒரு அச்சு தொழிற்சாலை நிறுவனர் பிரஞ்சு போராட்டத்திற்கும் உதவி செய்திருக்கிறார்; ஜெர்மனிக்கும் உதவி செய்திருக்கிறார். ஜெர்மனி பிரஞ்சு மண்ணில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட பின் அந்த அச்சுத் தொழிற்சாலை நிறுவனரின் மகனுக்கு தன் தந்தை செய்த இந்த இழிசெயல் தெரிய வருகிறது. இதனால் அவன் அடையும் குற்றவுணர்ச்சியைத்தான் ஒரு திரைப்படமாக்கியிருந்தார்கள். திரைப்படத்தில் ஒவ்வொரு முறையும் சமூகம் அந்தப் பையனை 'நீ ஜெர்மனி படைகளுக்கு உதவிச் செய்தவனின் பிள்ளை' என்று சுட்டிக்காட்டும்போதெல்லாம் அவன் குற்றவுணர்ச்சி அடைவான். ஆனால் இத்தகைய குற்றவுணர்ச்சி நம் தமிழ் சமூகத்திற்கு இல்லாமல் போய்விட்டது.
இதேபோல் "My Father" என்ற ஒரு ஆஸ்திரேலியப் படம். அதில் நாசிப் படையில் உயர் அதிகாரியாய் இருந்த ஒருத்தர் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பி வருவார். அந்த உயர் அதிகாரி தன் உண்மை முகத்தை மறைத்து வாழ்ந்து கொண்டு இருக்கும்போது, அவரது உண்மை முகம் அறிந்த மகள் அவரை வெறுக்க ஆரம்பிப்பாள். இப்படி இரண்டாம் தலைமுறையிடம் இருக்கவேண்டிய Ethics, தன் மொழிக்கோ தன் இனத்திற்கோ தன் நாட்டிற்கோ எதிராக நிற்பவர்கள் இரத்த உறவுகள் என்றால் அதற்காக அவமானப்படுகிற ஒரு மனோநிலை ஐரோப்பிய சமூகத்திடம் இருக்கிறது. ஆனால் நம் தமிழ் சமூகத்துக்கு எப்போதுமே அரசு சார்பான மனோநிலைதான் இருக்கிறது.
விடுதலைக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் இங்கு அறிவாளிகளும் சரி, படைப்பாளிகளும் சரி, சாமானியர்களும் சரி எதையும் இழக்கத் தயாராக இல்லை. ஒரு படைப்பாளி என்பவன் எப்போதும் ஒரு தார்மீகப் பொறுப்போடும், அறத்தோடும் எந்த ஒரு மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் அவனுடைய குரலைப் பதிவு செய்ய வேண்டும் என்கிற வழக்கு ஒளிந்துபோய் தன்னுடைய சார்பு என்பது அரசு சார்ந்தாக மாறின மனோநிலை இன்றைக்கு தமிழர்களிடம் இருக்கிறது. இந்த மனோநிலை அடிமைத்தனத்தை விரும்புகிறதாக இருக்கிறது. எதையும் எதிர்க்கத் தேவைப்படும் வீரம் நம்மிடம் இல்லை என்று நினைக்கிறேன்.
தமிழ் எழுத்தாளர்கள் தங்களுடைய வசதி வாய்ப்புகள் எதையும் இழக்கத் தயாராகயில்லை. ஏனென்றால் நம்முடைய சமுகம் என்பது அறிவாளிகளையோ, படைப்பாளிகளையோ கலைஞர்களையோ மதிக்கக்கூடிய ஒரு சமுகம் கிடையாது. அரசு எதை நமக்குத் தருகிறதோ அதை அங்கீகாரமாக நாம் ஏற்றுக்கொள்கிறோம், கொண்டாடுகிறோம். ஒன்றும் இல்லாமல் இந்த சமுகத்தில் இருப்பதைக் காட்டிலும் அங்கீகாரத்துடன் அரசோடு போய் ஒட்டிக் கொள்ளலாம் என்பது பெரும்பாலான எழுத்தாளர்களிடம் இருக்கிறது. அந்த மனோநிலைதான் எவ்வளவு பெரிய மனித உரிமை மீறலோ, ஒடுக்குமுறையோ இனப்படுகொலையோ நடந்தாலும் அறிவுஜீவிகள் தங்களை அரசு சார்பாக வைத்துக் கொள்வதற்குக் காரணமாகும். அதுனுடைய தொடர்ச்சியாகத்தான் நான் இந்த சர்வதேச எழுத்தாளர்கள் மாநாட்டைப் பார்க்கின்றேன்.
சி.மகேந்திரன் (ஆசிரியர், தாமரை இதழ்): முருகபூபதி முன்பு ஒரு முறை இதுகுறித்து என்னிடம் பேசியிருந்தார். அப்போது அதில் எனக்குப் பெரிய மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் இலங்கையில் இப்போது மிகப்பெரிய ஒரு இனவழிப்பு நடந்துள்ள நிலையில் அங்கு நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள விருப்பமில்லை. நிச்சயமாக இந்த மாநாட்டில் நான் கலந்துகொள்ள மாட்டேன்.
சமூகவியல் ஆய்வாளர் தொ.பரமசிவன்: ஈழத்தமிழர்கள் உலகத்தில் உள்ள எல்லோராலும் கைவிடப்பட்ட மக்கள் திரளாக இருக்கிறார்கள். இப்போது அந்த ஊர் எழுத்தாளர்களும் கைவிடுகிறார்கள் என்பது மிகவும் கேவலமான ஒரு நிலை. அதற்கு நல்ல உதாரணம் சிவத்தம்பி ஐயா. பா.செயப்பிரகாசம் எழுதினாரே சிவதம்பி சின்னதம்பி ஆகிவிட்டார் என்று; அது இப்போது பலருக்கும் பொருந்துகிறது. சிவத்தம்பியின் வாரிசுகளாக சிலர் கிளம்பியிருக்கிறார்கள். கொழும்பு எழுத்தாளர்கள் மாநாட்டில் ஆதவன் தீட்சண்யா, அ.மார்க்ஸ் போன்றவர்கள் கலந்து கொண்டாலும் கலந்து கொள்வார்கள். பாரதி, பாரதிதாசன் பெயரை உச்சரிக்கக்கூட தகுதியில்லாதவர்கள் இவர்கள். ஈழத் தமிழ் எழுத்தாளர்களே இப்படியான ஒரு நிகழ்வை முன்னெடுக்கிறார்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம். இவர்கள் எல்லாம் இலக்கிய உருவம் கொண்ட கருணாக்கள்; டக்ளஸ் தேவானாந்தாக்கள். இந்த மாநாட்டை நடத்துபவர்களையும், அதில் கலந்து கொள்பவர்களையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இவர்களை சமுக விலக்கும் இலக்கிய விலக்கும் செய்வது தான் சரி. இவர்களது புத்தகங்களை வாங்கக் கூடாது.
எழுத்தாளர் கோவை ஞானி: கொழும்பில் மாநாடு நடத்துவது என்றால் அரசு நிபந்தனை உண்டு என்று கேள்விப்பட்டேன். அதாவது ராஜபக்சேவை விமர்சனம் பண்ணக்கூடாது, முள்ளி வாய்க்கால் போன்ற பிரச்சனைகளை பேசக்கூடாது. அப்படியென்றால் மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த உணர்வே இருக்கக் கூடாது. இலங்கை சிங்கள அரசு தமிழர்களுக்கு மிகப் பெரிய அழிவையை உண்டாக்கி இருக்கிறது என்று மனதில் எண்ணம் இருந்தாலும் கூட பேசக்கூடாது அல்லது பேச வேண்டுமானால் அரசுக்கு அனுசரணையான செய்திகளை மட்டும் பேச வேண்டும். அந்த மாதிரி பேசக்கூடியவர்களும் இருக்கிறார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிராக, ஈழ மக்கள் விடுதலைக்கு எதிராக பேசக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக இந்த மாநாட்டில் பங்கு கொள்வார்கள்.
அந்த மாநாட்டில் எதை முதன்மையாக எடுத்துக் கொண்டு பேசப்போகிறார்கள்? பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு, நிலம் முதலியவற்றை கொடுக்க வேண்டும், வாழ்வுரிமையைத் தர வேண்டும், மரியாதையைக் கொடுக்க வேண்டும். இன்னும் சிறையில் இருக்கிற மக்களை விடுதலை செய்ய வேண்டும். முடியுமானால் அவர்கள் மேல் இருக்கிற அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டு மானமுள்ள இனமாக அவர்களை வாழ விட வேண்டும். அவர்களுக்கு பூர்வீகம் என்பது வடக்கு கிழக்கு தான் அதனால் அங்கு ராணுவ முகாம்கள் அமைப்பதோ, சிங்கள குடியேற்றம் செய்வதோ அவர்களை மீண்டும் ஒடுக்கவதற்கோ அழிப்பதற்கோ எடுக்கப்படும் ஒரு முயற்சி தான். இதைப் பற்றி உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசக்கூடாது என்றால் அவர்கள் எந்த நோக்கத்தில் மாநாடு நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இது மறைமுகமாக ராஜபக்சேக்கு அனுசரணையான ஒரு மாநாடு தான். இது நடந்தால், 'தமிழ் எழுத்தாளர்களை ஒன்று திரட்டி நாங்கள் மாநாடு நடத்தியதாகவும், சிங்கள மொழி போல் தமிழ் மொழிக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்' என்று ராஜபக்சே செய்தி பரப்ப வாய்ப்பு இருக்கிறது.
எழுத்தாளர் பொன்னீலன் (கலை இலக்கியப் பெருமன்றம்): ஈழத்தமிழர்கள் கடுமையாக நசுக்கப்பட்டு இருக்கிறார்கள். இறந்தவர்களைவிட எஞ்சி இருக்கக்கூடியவர்களுடைய வாழ்க்கை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் எந்த உரிமைகளும் இல்லாத இடத்தில் எப்படி ஒரு மாநாடு நடத்த முடியும்? தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடந்தபோதே வருத்தப்பட்டோம். அப்படியிருக்க இலங்கையில் மாநாட்டை நடத்துவது என்பது கேலிக்கூத்து மாதிரி தெரிகிறது. இந்த மாநாடு ஈழப் பிரச்சனைகளை முன்னுக்குக் கொண்டுவருமா? என்னால் இந்த மாநாட்டில் கண்டிப்பாக கலந்து கொள்ள முடியாது. என்னுடைய சகோதரர்கள் பாதிக்கபட்டு இருக்கிறார்கள். அவர்களின் விடுதலைக்கோ, வாழ்வுக்கோ எதுவும் செய்யாமல் மாநாட்டிற்கோ, கூத்தாட்டதிற்கோ, கொண்டாட்டத்திற்கோ ஏற்பாடு செய்வது அவர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்ல என்னையும் அவமானப்படுத்துவதாகவே நான் நினைக்கிறேன்
எழுத்தாளர் ஓவியா: ராஜபக்சே இந்த நூற்றாண்டிலே ஒரு மிகக் கொடூரமான காரியத்தை செய்து முடித்துவிட்டார். தமிழின அழிப்பு என்பதில் இன்றைய காலக் கட்டத்தில் வெற்றி என்று கருதக்கூடிய நிலையை அடைந்து விட்டார்கள். ஆனால் அவர்கள் இழந்திருப்பது என்ன என்றால் சர்வதேச அளவில் அவர்களின் நன்மதிப்பு. அந்த நன்மதிப்பை செயற்கையாகவாது உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கூலிக்கு தமிழர்களைப் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் கலந்து கொள்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் இதற்கு விலை போகிறவர்கள் தான். அப்படி விலை போகிறவர்கள் மட்டும்தான் இப்படி ஈரமும் இரத்தமும் இன்னும் காயாத அந்த பூமியில் கால்மிதிக்க முடியும். இலங்கை அரசின் அழைப்பின் பெயரிலே அங்கே கால் மிதிக்கிற யாரும் இந்த சூழ்ச்சிக்கு விலை போனவர்கள் அல்லது பலியானவர்கள். பலியானவர்கள் என்று கூட சொல்ல முடியாது காரணம் சின்ன குழந்தைக்குக் கூட அங்கு நடந்த கொடூரங்கள் தெரியும். அப்படி இருக்கும்போது இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் மரியாதை தேடித் தருகிற வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்று சொன்னால் அந்த கொடூரத்தின் பங்காளிகளாக இவர்கள் போகிறார்கள், கலந்து கொள்கிறார்கள் என்பதே என் கருத்து.
இரத்தத்தால் கோப்பையைக் கழுவி விட்டு தேநீர் கொடுத்தால் நாம் குடிப்போமா? அதை குடிப்பதற்கு மனம் வருமா? இலங்கையில் எழுத்தாளர் மாநாடு நடத்துவதற்கும் நான் சொன்ன உதாரணத்திற்கும் என்ன வித்தியாசம்? நான் இனம், மொழி இந்த விடயங்கள் இல்லாத ஒரு உதாரணத்தை சொல்லிக் கேட்கிறேன். நம் கண் முன்னாடி கொலையைச் செய்துவிட்டு இரத்தத்தை கழுவிவிட்டு தேநீர் சாப்பிடலாம் என்று கூப்பிட்டால் நம்மால் போக முடியமா? அப்படிப் போனால் நம் பெயர் மனிதர்களா? இது தான் இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வி.
தொகுப்பு: கீற்று நந்தன்
தட்டச்சு: மோகன்