யர்த்திக் கொள்வதற்கு உள்ளும் வெளியும் தொடர்ந்து போராடு கிறது. முதலாளிய சக்திகளின் வலைப் பின்னல்களில் போராட்டத்தின் வேர்கள் சிக்கிக் கிடக்கின்றன.மொழி, கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம் போன்ற தளங்களில் ஆதிக்க சக்திகள் பெரும் பலத்தால் அசுரத்தனமாய் வளர்ந்து நிற்கின்றன.

இலக்கியம்,கலை வடிவங்கள் புரட்சிகளை வழி நடத்தும் என்கிற நம்பிக்கையை இன்றைய ஊடகங்கள் அசைத்துப்பார்க் கின்றன. மக்களைச் சுற்றி மாய வலைகளைப் பின்னுகின்றன.

இந்த வடிவங்களில் மக்களின் கூட்டு உழைப்பு, கூட்டு முயற்சி, சமூக, எழுச்சி இவை முன்வைக்கப் படாமல், தனிமனித எண்ணம், உழைப்பு, தனிமனிதத் தன்மைகள் தான் காரணம் என்ற கதாநாயக மனப்பான்மை மக்களுக்குள் புகுத்தப்படுகிறது. அதனால் எல்லா சாத்தான்களாலும் சபிக்கப் பட்ட பொதுமக்கள் நம்மை நோக்கி தேவதூதன் வருவான் என கனவுகள் காண்கிறார்கள்; ஆனால் அவர்கள் இன்னும் பிறக்கவே இல்லை.

எந்த புத்தகங்கள் சந்தையில் விற்பனை என்று ஆராய்ந்து பார்த்தால், தனிமனித வளர்ச்சி, தனிமனித மேம்பாடு, 30 நாட்களில் கோடீஸ்வரன், 60 நாட்களில் பில்கேட்ஸ்.... இப்படி எங்கு திரும்பினாலும் தனிமனித முன்னேற்ற கருத்தரங்குகள், சுய முன்னேற்றப் பயிலரங்கங்கள்... ஒவ்வொரு தனிமனிதன் முன்னேறினால் நாடு முன்னேறும் என்ற புதிய பகவத் கீதைகள். இப்படி சமூகத்தின் பொதுத் தன்மையை ஆட்டுவிக்கிற கூட்டு வெற்றியை உரசிப்பார்க்கிற விஷயங்களை எப்போது நிறுத்தப் போகின்றன ஏகாதிபத்திய ஊடகங்கள்?

வீட்டின் வரவேற்பறைகளில் கலாச்சார சீரழிவின் விஷ விதைகளைத் தூவி மனித குலத்தை இருட்டை நோக்கி அழைத்துச் செல்லும் தொலைக்காட்சி ஊடகங்கள்; அழுகை, குமுறல், பொறாமை, ஆசை, கள்ளஉறவு, அவை குறித்த நியாய தர்மங்கள், பெண்களின் உழைப்புத் தன்மையைக் குறைத்து சமூக அழுக்குகளால் அவர்களை நிறைத்து நல்ல விஷயங்களை மறைத்து, ஆதிக்க சக்திகளின் வளர்ச்சிக்கு அவர்களை அடிமைப் படுத்தும் அவலங்கள்.....

சூரியப் பொழுதில் வீட்டின் வாசல்படிகளில் வீசிச் செல்லப்படும் காலை இதழ்களில் தொடங்கி, வார, மாத இதழ்கள் வரை.... ஆளும் வர்க்கத்தினருக்கு இவர்கள் அடிக்கும் ஜால்ராக்களின் சப்தம் காதைப் பிளக்கிறது. ஜனநாயத்தின் தூண்களாக விளங்கவேண்டிய பத்திரிகைகள் ஆளும் வர்க்கத்தின் ஆட்டாங்கல்லைப் போன்று மாறிய அவலங்கள் புரட்சிகர எண்ணங்களை, சமூக வளர்ச்சியின் தடை என்று மக்களுக்குச் சொல்கிறார்கள். போராட்ட உரிமைகளை நடைமுறை வாழ்வின் சிக்கல் என்று பிதற்றுகிறார்கள்; தொழிற் சங்கங்களின் உரிமைக் குரல்வளைகளை நசுக்குகிறார்கள். உரிமைக்குரலுக்கு வீசப்படும் பருக்கைச் சோறுகளை, கொடை வள்ளல்களின் முகங்களாகச் சித்தரிக்கிறார்கள். உழைப்பின் வேர்வையால் நிரம்பும் அரசாங்க கருவூலத்தின் வெள்ளிக் காசுகளை அள்ளி இறைத்து வாக்குப் பொறுக்குவதை, கர்ண பரம்பரைக் கதைகளாக கட்டியங் கூறுகிறார்கள்.

மனித இனத்தைத் துண்டாடும் ஜாதி, மத, இன, மொழி நெருப்புகளுக்கு நாள்தோறும் இவர்களால் நெய் ஊற்றப்படுகிறது.

எல்லா ஊடகங்களும் ஆன்மிகத்தை நிரப்புவதாக, பரப்புவதாக கங்கணம் கட்டி புறப்பட்டிருக்கின்றன. ஆயிரம் பிரேமானந்தாக்கள், நித்யானந்தாக்கள் வந்தாலும் ஏமாளித்தனத்தை, கோமாளித்தனத்தை பொது ஜனம் விடுவதாக இல்லை. அதனால் ஊடகம் தோறும் ஆன்மிக விற்பனை பல்வேறு ஆசாமிகளின் வடிவங்களில்.... மூடநம்பிக்கை வடிவங்கள் அழியாமல் புதுப்பிக்கப்படுகின்றன. சூரியக் குடும்பத்தால் பகுத்தறிவு இங்கே சிம்மாசனத்தில் கும்பகர்ணனாய் உறங்கிக் கிடக்கிறது. லட்சம் பெரியார்கள் சூரியனாய் உதித்து வந்தாலும் இந்த உறக்கம் எப்போது கலையப் போகிறது?

நுகர்வுக் கலாச்சாரத்தின் இரும்புப் பிடியில், இயந்திரத்தனமான வேகத்தில் மக்களின் ஒற்றுமை உணர்வைப் பிரித்து துண்டாடுவது, ஊடகங்களுக்கு எளிது. ‘கஞ்சி குடிப்பதற்கிலார்... அதற்கு என்ன காரணம் என்ற அறிவுமிலார்’ - என்ற பாரதியின் வரிகளாய் பொது ஜனத்தின் வாழ்க்கை.
மக்களுக்காக, மனித வரலாற்றை முன்னோக்கிச் செலுத்துவதற்காக, யுகப்புரட்சியை தோற்றுவிப் பதற்காகப் போராட வேண்டிய ஊடகங்கள். முதலீடு காக்க, முதலீடு திரட்ட லாபம் அடைய உண்மையான கௌரவ கீரிடத்தைக் கழற்றிவிட்டுப் பயணிக்கின்றனர்.

ஊடகங்களின் ஆதிக்க சக்தியை வேரறுக்க, தொழிலாளி வர்க்கம், ஓரணியில் திரண்டு, மக்களையும் திரட்டிப் போராடுவதன் மூலம்தான் எல்லோருக்கும் விடியும்.

Pin It