டிராட்ஸ்கி - என் வாழ்க்கை

1879 - ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 26-ஆம் நாள் தென் ருசியாவின் யனோவ்காவில் (டிராட்ஸ்கி) ‘லிவ் லியாண்டியேவிச் புரோன்ஸ்டின்’ பிறந்தார். இந்நூலில் போல்டாவா மாநிலத்தில் தாம் பிறந்த யூத நகரை விட்டு தென் உக்ரைனியக் கேர்சன் மாநிலத் திற்குத் தாம் வந்ததிலிருந்து, பள்ளிப், படிப்பு, கல்லூரி, அரசியல், சிறை, தப்பித்தல், வெளிநாட்டில் வசித்தல், மீண்டும் ருசியா திரும்புதல், 1905 ஆம் ஆண்டு புரட்சி, இரண்டாவது நாடு கடத்தல், போர், பிரான்ஸ், ஸ்பெயின், நியூயார்க் என நாடுவிட்டு நாடு செல்லல், அக்டோபர் புரட்சி, ஆட்சி அதிகாரம், உள்நாட்டுப் போர், இலெனினுடனான உறவு லெனின் இறப்பு, அதிகார மாற்றம், கட்சிக்குள் போராட்டம், நாடு கடத்தல், வெளியேற்றம், துருக்கியில் தங்கியது என்பதுவரை தன்வரலாற்றை டிராட்ஸ்கி நாற்பத்தைந்து இயல்களில் பதிவு செய்கிறார். ருசியாவில் இருந்து, ஜார் ஆட்சியை எதிர்த்துச் செயல்பட இயலாத நிலையில், புரட்சியாளர்கள் ஒன்றாக சைபீரியக் கொடுங்காட்டில் அல்லது வெளிநாட்டில் அலைப்புற்றனர். தன்னைவிட அகவையில் பத்தாண்டுகள் மூத்தவரும், அறிவாற்றலில், முந்தைய தலைமுறையின் செர்மானியக் காவுட்ஸ்கி, ருசியாவின் பிளக்கானோவ் போன்ற பேரறிஞர்களை விஞ்சி நின்றவருமான இலெனினை சைபீரியாவிலிருந்து தப்பிய டிராட்ஸ்கி இலண்டனில் சந்திக்கிறார். இலெனினைச் சந்தித்ததிலிருந்து இலெனின் மறைவு வரை, இருவரும் எவ்வாறு ‘மையப்படுத்தப்பட்ட கட்சி’ ஒன்றின் தேவையிலிருந்து ‘நிரந்தரப்புரட்சி’ வரை, தனித்தனியே அதேபோது ஒத்த கருத்துடன் சிந்தித்தனர் என்பதையும், இலெனின் மறைவுக்குப் பின், பிந்தையரின் ‘ஆட்சி அதிகாரத்திற்கான போராட்டம் வெறும் ஆளுமைகளின் சண்டை அல்ல; அது புதியதோர் அரசியல் அத்தியாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் - அக்டோபர் புரட்சிக்கான எதிர்வினை; கட்சியின் அதிகாரவர்க்கச் சதி’ என்று டிராட்ஸ்கி இந்நூலில் வரைந்து காட்டுகிறார்.

 

கிராம்ஷி - புரட்சியின் இலக்கணம்

“தளபதியே! இராணுவத் தன்மை வாய்ந்த எல்லா சர்வாதிகாரங்களும் இன்றோ நாளையோ தூக்கியெறியப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப் படும் என்பதை நம்புகிறேன். அது நிகழ்கையில் பாட்டாளி வர்க்கம், ஆளும் வர்க்கத்தை அகற்றி, அதிகாரக் கடிவாளங்களைக் கையில் எடுத்து, தேசத்தை மறு கட்டமைப்புச் செய்யும் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது”- இத்தாலிய பாசிச இராணுவ நீதிமன்றத்தில் வீர முழக்க மிட்ட மாபெரும் கம்யூனிஸ்ட் புரட்சியாளரும் மார்க்ஸியச் சிந்தனையாளருமான அந்தோனியோ கிராம்ஷியின் சொற்கள் இவை. அதனால்தான் பாசிச அரசாங்கம் கூறியது: “இந்த மூளையின் செயல்பாட்டை இருபதாண்டுகளுக்குத் தடுத்து நிறுத்த வேண்டும்”. ஈவிரக்கமற்ற தனிமைச் சிறை, கடுமையான தணிக்கை முறைகள், கொடூரமான நோய்கள் - அவரது கூரறிவின் முன் தோல்வி கண்டன: “எந்தச் சூழ்நிலையிலும் எனக்கு நேரிடக்கூடிய மிக மோசமான விஷயத்தையும் கற்பனை செய்து பார்த்து, அதன் மூலம் ஒவ்வொரு தடையையும் கடந்து வருவதற்காக என்னுள் தேங்கிக் கிடக்கும் மனோதிடம் அனைத்தையும் துணைக்கு அழைப்பேன். நான் ஒரு போதும் பிரமைகளை வளர்த்துக் கொள்ளாததால், ஏமாற்றம் அடைவதே இல்லை. என்னிடம் எப்போதுமே எல்லையில்லாப் பொறுமை என்னும் ஆயுதம் இருந்து வந்துள்ளது. ஆனால், இது சாத்வீகமான, ஓய்ந்த நிலையிலுள்ள பொறுமை அல்ல. மாறாக, விட்டுக்கொடுக்காத மனோ உறுதியுடன் இணைந்துள்ள பொறுமை”. கிராம்ஷியின் புரட்சிகர வாழ்க்கையையும் சிந்தனையையும் பத்தொன்பது பகுதிகளில் விரிவாக விளக்குகிறது இந்நூல்.

 

விடியல் பதிப்பகம்

88, இந்திரா கார்டன் 4வது வீதி, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் -\ 641 015 தொலை பேசி: 0422 \-2576772

Pin It