வெளியார் ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடிவரும் மணிப்பூர் மக்கள், தற்போது அதிலொரு புதிய கட்டத்தை எட்டியுள்ளனர்.
கடந்த மார்ச் 17 அன்று, மணிப்பூருக்கு வருகை தருவோர், வாடகைதாரர்கள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவு _ - 2015 ((Manipur Regulation of Visitors, Tenants and Migrant Workers Bill, 2015 - MRVT & MW Bill) என்ற புதிய சட்டத்தை, மணிப்பூர் சட்டப்பேரவை நிறைவேற்றியது.
மணிப்பூரில் மிகை எண்ணிக்கையில் குடியேறியுள்ள வங்க தேசத்தவர்கள் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த அயலாருக்கு எதிராக, அம் மண்ணில் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அயலார் குடியேற்றத்தை மட்டுப்படுத்தும் வகையில், அருணாச்சலப் பிரதேசம் _- மிசோரம் _- நாகாலாந்து பகுதிகளில் உள்ள உள் அனுமதிச் சட்ட ((INNER LINE PERMIT) முறை, மணிப்பூருக்கும் வேண்டுமென்ற கோரிக்கையை முதன்மைப்படுத்தி, அங்கு போராட்டங்கள் எழுந்தன. 2012 சூன் மாதம், உள் அனுமதிச் சட்டத்திற்கான கூட்டுப் போராட்டக் குழு (Joint Committee on Inner Line Permit System - JCILPS)) ஏற்படுத்தப்பட்டது.
மணிப்பூரின் பழங்குடியின மக்கள் அமைப்புகள், மாணவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய சமூக அமைப்புகள், இக்கூட்டமைப்பில் இணைந்து, அரசுக்கு எதிரான நெருக்கடி தரும் போராட்டங்களை நடத்தினர்.
இதன் விளைவாக, இக்கோரிக்கை குறித்து ஆராய, மணிப்பூர் துணை முதல்வர் கெய்கம் கங்மெய் தலைமையில் ஓர் அனைத்துக் கட்சிக் குழுவினரை, மணிப்பூர் காங்கிரசு அரசு அமைத்தது. அக்குழு, அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், கல்வியாளர்கள், சட்டத் துறை வல்லுநர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துக் கருத்து கேட்டு, ஓர் அறிக்கையைத் தயாரித்தது. கடந்த 2014 திசம்பர் 11 - அன்று, மணிப்பூர் அரசிடம் அவ் அறிக்கை அளிக்கப்பட்டது.
இவ்வறிக்கையை ஆராய்ந்த மணிப்பூர் அரசு, அதனடிப்படையில் “மணிப்பூருக்கு வருகை தருவோர், வாடகைதாரர்கள் மற்றும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவு _- 2015” என்ற பெயரில், புதிய சட்டம் ஒன்றை தயாரித்தது.
இச்சட்டம், மணிப்பூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவில்லை என்றும், அயலாரைப் பாதுகாக்கும் வகையிலேயே இச்சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்துக் கட்சிக் குழுவினர் வழங்கிய அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் கூட இதில் இல்லை என்றும் கூறி, உள் அனுமதிச் சட்டத்திற்கானக் கூட்டுப் போராட்டக் குழு, தற்போது கடும் போராட் டங்களை நடத்தி வருகின்றது.
போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த 23.03.2015 அன்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார், மணிப்பூர் முதல்வர் இபோபி சிங். பா.ச.க.வும், மணிப்பூர் மக்கள் கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தன. கூட்டத்தின்போது, உள் அனுமதிச் சட்டத்திற்கான அனைத்துக் கட்சிக் குழுவினர் அளித்த பரிந்துரைகளுக்கும், தற்போது நிறைவேற்றப்படும் சட்டத்திற்குமுள்ள வேறுபாடுகளை, மணிப்பூர் அரசு வெளிப்படையாக முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
முன்வைக்கப்பட்டுள்ள இப்புதிய சட்டம், வெளியார், யார் என்பது குறித்து தெளிவான வரையறைகளை முன்வைக்கவில்லை. மணிப்பூர் உள் அனுமதிச் சட்டத் திற்கானக் கூட்டுப் போராட்டக் குழு, 1951ஆம் ஆண்டிற்குப் பிறகு மணிப்பூரில் குடியேறிய அனைவரையும் வெளியார் என வரையறுக்க வேண்டும் என உறுதியாக உள்ளது. ஆனால், இதை செய்ய மணிப்பூர் அரசு மறுத்து விட்டது. அது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்கிறது.
தற்போதுள்ள தொழிலாளர் நலத்துறையின் கீழ், இதற்கான அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் போராட்டக் குழுவின் கோரிக்கை. அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மண்ணின் மக்கள் கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு, அயலாருக்கு சாமரம் வீசும் இப்புதிய சட்டத்தைக் காங்கிரசு அரசு திரும்பப் பெற வேண்டும். மணிப்பூர் மண்ணின் மக்கள் கோரிக்கையை மதித்து புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
அயலார் ஆதிக்கத்திற்கு எதிரான மணிப்பூர் மக்களின் போராட்டம் வெல்லட்டும்!