பிஜேபி அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், மிசோரம், மணிப்பூர் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அசாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதுடன், முற்றிலும் இணைய வசதியும் தடை செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி சேவைகள் கூட முடக்கப்பட்டுள்ளன. போராட்ட அலை ஓய்வதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாறாக வரும் நாட்கள் இன்னும் மோசமான சூழ்நிலையை நோக்கியே செல்லும் என்றுதான் தோன்றுகின்றது.
ஆனால் அசாம் மக்களின் இந்தப் போராட்டத்தை இடது சாரிகள் ஆதரிப்பது எந்த வகையிலும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. இந்த மசோதா தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கின்றது என்ற அடிப்படையில் அதை காங்கிரஸ், திமுக, இடது சாரிகள் எதிர்ப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் அசாம் மக்களின் போராட்டம் எந்தப் புள்ளியில் இருந்து தொடங்குகின்றது என்பது நன்றாகத் தெரிந்திருந்தே அதை ஆதரிப்பது - எவ்வித சித்தாந்த அரசியலும் கொண்டிராத கார்ப்ரேட் கட்சிகளுக்கும் , மார்க்கிய - லெனினிய சித்தாந்தத்தை உள்வாங்கிக் கொண்டிருப்பதாக பிரகடனம் செய்யும் இடதுசாரிகளுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.
இந்த மசோதா இந்துத்துவப் பார்வையில் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டு இருந்தாலும் (நிச்சயம் வலதுசாரி இந்துத்துவ வெறியர்கள் வேறு எப்படியும் கொண்டு வர மாட்டார்கள்), இதனால் தற்போதைக்கு ஏற்பட்டுள்ள நன்மை என்பது பல ஆண்டுகளாக நாடற்றவர்களாக இருந்த மக்களுக்கு குடியுரிமை கிடைத்திருக்கின்றது என்பதுதான். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு அதாவது சீக்கியர்கள், கிறித்தவர்கள், பார்சிகள், ஜெயின் மற்றும் புத்த மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்தப் புதிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது அசாமை பூர்வீகமாகக் கொண்டவர்கள் எதிர்ப்பதற்கான காரணம், அவர்கள் அந்த மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வந்தேறிகளாகவும், தங்கள் பிழைப்பைக் கெடுக்க வந்தவர்களாகவும் கருதுவதுதான்.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் எந்தவித மத அரசியலும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் முஸ்லிம்களை மட்டுமே அசாமை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று போராடவில்லை. இந்துக்கள் உள்ளிட்ட அனைவருமே வெளியேற வேண்டும் என்று போராடுகின்றார்கள். ஏறக்குறைய இது ‘மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பு' என்ற கோட்பாடு போன்றது. 'அசாம் மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும், அங்கு சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டினர், வங்க தேசத்தவர் உட்பட அனைவருமே வெளியேற்றப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்கப்பட்ட அசாம் கண பரிசத் கட்சி, அசாம் மாநிலத்தில் இருமுறை ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கின்றது என்பதைப் பார்க்கும் போது, அசாம் மக்கள் இந்தப் பிரச்சினையில் காட்டும் கடுமையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
1971இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போர் மற்றும் வங்க தேச விடுதலைப் போர் போன்றவற்றின்போது இவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறி இருக்கின்றனர். அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. ஆனால் அசாம் உள்ளிட்ட பல்வேறு வட கிழக்கு மாநில மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், 1971 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் புதுப்பிக்கும் பணிகள் உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின் படி நடைபெற்று, அதன் இறுதிப் பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, சட்ட விரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்க தேசத்தவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று அம்மாநிலத்தில் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்கள் நினைத்த நிலையில், தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்க தேசத்திலிருந்து அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறிய முஸ்லிம் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த மசோதா நிச்சயம் திட்டமிட்டு முஸ்லிம்களையும், தமிழர்களையும் புறக்கணிக்கின்றது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இங்கே பல தசாப்தங்களாக வாழும் ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைக்கின்றோம். அவர்களை இந்த மண்ணின் மக்களாக ஏற்றுக் கொள்ளத் தயராக இருக்கின்றோம். அவர்களுடம் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம். ஆனால் வட கிழக்கு மாநில மக்கள் தயாராக இல்லை. ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையானது அவர்கள் தமிழர்கள் என்பதாக இல்லாமல், அவர்கள் போரால் பாதிக்கப்பட்ட, பெளத்த வெறியர்களால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தேசிய இன மக்கள் என்ற அடிப்படையில்தான். இந்தக் கண்ணோட்டத்தில் இருந்தே நாம் குடியுரிமைத் திருத்த மசோதாவை அணுக வேண்டும்.
போராலும், வன்முறையாலும், ஒடுக்குமுறையாலும் பாதிக்கப்பட்ட மக்கள் எந்த தேசிய இனத்தைச் சார்ந்த மக்களாக இருந்தாலும், அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்கள் நாகரிகமாக, சுய கெளரவத்துடன் வாழ எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் எந்த நாட்டில் இருந்து எந்தப் பிரச்சினைக்காக வந்தார்களோ, அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டவுடன் அவர்கள் விருப்பப்பட்டால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குச் சென்று வாழ உதவ வேண்டும். இல்லை என்றால் அவர்கள் குறிப்பட்ட ஆண்டுகள் இந்த மண்ணிலேயே வாழ்ந்திருந்தால், அந்த மக்கள் விரும்பினால், அவர்களுக்குக் குடியுரிமை வழங்கி அவர்களை இந்த நாட்டின் மக்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அசாம் மக்கள் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக இந்த மண்ணில் வாழும் மக்களை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். அவர்கள் இந்துக்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் அவர்கள் வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார்கள். இது அடிப்படையில் தவறானது ஆகும்.
தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் இந்த மசோதாவால் இந்தியக் குடியுரிமை பெற 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது திருத்தப்பட்டு ஆறு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடற்றவர்களாக இருந்த மக்களுக்கு குடியுரிமை கிடைக்க வழி ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் பிஜேபியின் முஸ்லிம் மற்றும் தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வே அவர்களை இந்த மசோதாவை மத அடிப்படையில் கொண்டு வரத் தூண்டியுள்ளது. இந்த மசோதா மத அடிப்படையில் கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால் நிச்சயம் இது ஒரு சிறந்த மசோதாவாக இருந்திருக்கும். ஆனால் சங்கிகளால் அப்படியான ஒன்றை கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது என்பதுதான் உண்மை.
ஆனால் பிஜேபி என்ன நோக்கத்திற்காக இதைக் கொண்டு வந்ததோ அதற்கு எதிரான விளைவுகள்தான் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இந்துக்களின் ஓட்டு வங்கி கிடைக்கும் என்ற நப்பாசையில் இதை மத ரீதியாகக் கொண்டுவந்த பிஜேபி, மதத்தைவிட ‘மண்ணின் மைந்தர்கள் கொள்கை’ வலுவானது என்பதை தற்போது கள நிலவரத்தின் மூலம் உணர்ந்துள்ளது. இன உணர்வுகள் மேலோங்கும் போது, அது சாதி, மத, மொழி உணர்வுளை அடித்துச் சென்று விடுகின்றது. ஆனால் தூண்டி விடப்படும் இன உணர்வுகளால் காரியம் சாதித்துக் கொள்ளப்பட்டவுடன், அதைத் தூண்டிவிட்ட கும்பல்கள் தங்களை யார் தூண்டி விட்டார்களோ அந்த ஆளும் வர்க்கத்திடம் சரணடைந்து மீண்டும் மக்களைப் பிரிக்கும் சாதிய, மதவாத அரசியலை முன்னெடுக்கின்றன.
எனவே இந்த மசோதா பிற்போக்குத்தனமாக கொண்டு வரப்பட்டு இருப்பதால் அதை நிச்சயம் எதிர்க்க வேண்டும். அதே சமயம் அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநில மக்களின் போராட்டத்திற்கு நிச்சயம் நாம் ஆதரவு தந்துவிடக் கூடாது. அப்படி கொடுக்கப்படும் பட்சத்தில் அகதிகள் மீதான நம்முடைய பார்வையும், வலதுசாரிகளின் பார்வையும் ஒன்றாக ஆகி விடும்.
- செ.கார்கி